????
ஒரு அசலான போர்க்களத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்கிறது.
ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கின்ற இந்த போரில் அரசியல் மாண்புகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு விட்டன.
ஜனநாயகம் என்ற பச்சைக் குழந்தை துடிக்க துடிக்க ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கழுத்தறுக்கப்பட்டு ஈரோட்டு கிழக்குத் தொகுதியின் வீதிகளில் கொலை செய்யப்பட்டு விட்டது. ஆடு மாடுகளை பட்டித் தொட்டியில் அடைப்பது போல மக்களை லாரிகளில் ஏற்றி வந்து மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற எந்தக் கட்சியும் ஓட்டு கேட்க முடியாத ஜனநாயக படுகொலையை திமுக காங்கிரஸ் கூட்டணி நிகழ்த்தி இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக இதற்குப் போட்டி போட முயன்று அதிகாரம் இல்லாத காரணத்தினால் வாக்கிற்கு பணம் மட்டும் கொடுத்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறது.
நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது ஆளும் திமுக கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. கொலை வெறி தாக்குதலில் சிக்குண்ட அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்களால் காப்பாற்றப்பட்டு தற்சமயம் மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு இந்த நொடி வரை தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற நிலையிலிருந்து திமுக அரசின் அதிகார ஆதிக்கத்தின் உச்ச கொடூரத்தை புரிந்து கொள்ளலாம். வழக்கறிஞர் என்ற முறைமையில் நான் அனைத்து காவல்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டுக் கூட இன்னும் நீதி கிடைத்த பாடில்லை.
ஆனாலும் சீமானின் தம்பி தங்கைகள் இதற்கெல்லாம் சோர்ந்து போகிறவர்கள் அல்ல. நேற்றைய முன் தினம் எங்கள் அண்ணன் அன்பு தென்னரசன் தாக்கப்பட்டதற்கு
பதிலடியாக பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்ற பிரம்மாண்டமான புலிக்கொடி பேரணியை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று மாலையில் ஏறக்குறைய 5 மணி நேரம் நாம் தமிழர் கட்சி நடத்தியது. ஏறக்குறைய எதிர்க்கட்சியான அண்ணா திமுக போட்டியிலிருந்து விலகி விட்ட இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் களத்தில் திமுகவின் அதிகார பலத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.
நாளைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் பிரச்சாரத்திற்கு வருகின்ற நிலையில், உண்மையான எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது.
எப்பேர்ப்பட்ட மோசமான உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர ஈரோட்டுக் கிழக்கு தொகுதிக்கு வந்து பாருங்கள். அண்ணன் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுங்கட்சியின் பண பலத்தினால் அதிகார ஆட்டத்தினால் நட்ட நடு வீதியில் கொளுத்தப்படுகின்ற காட்சியை நீங்கள் கண்ணால் காணலாம்.
எந்த வீட்டிலும் வாக்காளர்கள் இல்லை. வாக்காளர்களை எல்லாம் கடத்திச் சென்று திமுக காங்கிரஸ் கூட்டணி மண்டபங்களில் அடைத்து வைத்து இருக்கிறது. பிறகு தேர்தல் ஆணையம் என்ற ஒன்று என்ன செய்கிறது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.
அது ஆளுங்கட்சிக்கு பக்கபலமான வாத்தியமாக செயல்பட்டுக் கொண்டு அதிகார ஆணவத்தை மீறி ஓட்டு கேட்கின்ற நாம் தமிழர் கட்சியை முடக்குகிற வேலையை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டு எஜமான விசுவாசம் காட்டிக் கொண்டு நிற்கிறது.
இதற்கு நடுவில் எளிய இளைஞர்கள் சீமானின் தம்பி தங்கைகள் தங்குவதற்கு கூட இடமில்லாமல், உணவு கூட சரியாக உண்ணாமல் இலட்சிய வெறி கொண்டு சாலைகளில் அலை அலையாய் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். பணம் அதிகாரம் அரசியல் என முற்றிலுமான சீர்குலைந்து போன உலகில் கொள்கை கூட்டமாய் உலா வருகின்ற சீமானின் தம்பி தங்கைகள் விழிகள் உறங்கா சிவப்பைக் கொண்டு கனலேறி கிடக்கிறது.
சீனப் புரட்சியாளன் மாவோ மக்களை அணி திரட்டி மாபெரும் நடை பயணத்தை நடத்தியது போல இந்த வரலாற்று வீதியில் ஒரு புரட்சிகர படையணியை உருவாக்கி அண்ணன் சீமான் சகல விதமான சர்வாதிகாரத்திற்கும் எதிராக போரிட்டு வருகிறார்.
ஒரு நாளும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பெருகின்ற மக்கள் ஆதரவு ஆளும் திமுக கட்சியை பயத்தில் ஆழ்த்தி இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் இறுதியாக அவதூறு பிரச்சாரத்தை எளிய மக்களை தூண்டிவிட்டு முன்னெடுக்க முயன்று தோற்று இருக்கிறார்கள். பேசாத ஒன்றை பேசியதாக சொல்லி ஆளும் திமுகவினர் நடத்திய நாடகங்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு விட்டன.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால்..
ஜனநாயக ரீதியில் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வென்றுவிட்டார்.
இலட்சிய பற்றுறுதி
கொண்ட அவரைப் போன்ற ஒருவரை திமுக தன் வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறது.
????
ஈரோடு கிழக்கு மண்ணில் இருந்து ..
மணி செந்தில்.
மறுமொழி இடவும்