🌑

அடங்கா நதிப் போல ஓடிக் கொண்டிருக்கின்ற காலத்தை ஒரு மாய விசைப் புள்ளியில் தடுத்து நிறுத்துகிற வல்லமை இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டும் தான் உண்டு. ஒன்று புத்தகங்கள். மற்றொன்று திரைப்படங்கள்.

நல்ல புத்தகங்களை, நல்ல திரைப்படங்களை தேடி கண்டுபிடிப்போரை நான் கவனித்து இருக்கிறேன். எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணனை சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தை அல்லது ஒரு திரைப்படத்தை அவர் பரிந்துரை செய்து கொண்டே இருப்பது அவரது தன்னியல்புகளில் ஒன்றாக இருப்பதை நினைத்து வியந்து இருக்கிறேன்.

அதேபோல் அண்ணன் சீமான்.

இறுகியத் தன்மை உள்ள அரசியல் தோற்றம் கொண்ட அவருக்கு இருக்கின்ற இலக்கியத் தாகமும், கலை முகமும் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குபவை.
அரசியலுக்கு அப்பாற்பட்டு எழும் உரையாடல்களில் அவர் என்னிடத்தில் புத்தகங்களைப் பற்றியும், திரைப்படங்களைப் பற்றியும் பேசுவது தான் அதிகம். அதேபோல் நல்லத் திரைப்படங்களை பரிந்துரைத்து அதை நாம் தவற விடாமல் பார்த்திருக்கிறோமா என்பதையும் உறுதி செய்துக் கொள்கிற அவரது பேரன்பு அக்கறை தனித்துவமானது.

கடந்த இரண்டு நாட்களாக அண்ணன் சீமான் அலைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு திரைப்படம். அதை நான் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆழமான விருப்பம். இதை அவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற மனிதர் அல்ல. முன்பொரு முறை ஞானவேலின் ” ஜெய் பீம்” திரைப்படத்திற்கும், அதேபோல பா ரஞ்சித்தின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்திற்கும் இதே போல் அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. இந்த முறையும் அதுதான் எனக்கு நடந்தது.
எப்போது எடுத்தாலும் “படத்தைப் பார்த்து விட்டாயா..” என்பதுதான் முதல் கேள்வி.

அப்படி அவர் நான் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் என பரிந்துரைத்தது இரா. சரவணன் இயக்கத்தில், வெளிவந்துள்ள “நந்தன்”.

படம் தொடக்கத்திலேயே ” இந்தக் காலத்திலும் இப்படி நடக்குமா என யாராவது நினைத்தீர்களானால், வாருங்கள் உங்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன்.” என்கிற அறிவிப்பிலேயே ஏதோ மிக முக்கியமான ஒன்றை படம் பேசப்போகிறது என்பதை அறிவித்து விடுகிறார் சரவணன். குறிப்பாக படத்தின் முதல் காட்சியிலேயே காட்டப்படும் செருப்புகளின் நெருக்கக் காட்சி ( Closeup Shot) காட்ட முனையும் குறியீட்டு தளங்கள் ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்துபவை.

சாதியைப் போல் இந்த பெருநிலத்தில் மிக ஆழமாக வேரூன்றிய ஒன்று வேறு எதுவும் இல்லை. ஒவ்வொருவர் மனதுக்குள்ளாகவும் , மரபணுவிலும் ஊடுருவி வாழ்விலும், பண்பாட்டிலும், மொழியிலும், உணவிலும் , உடையிலும் இரண்டற கலந்துவிட்ட கொடும் மனநோயாக சாதி இன்றளவும் இருக்கிறது என்பதைத்தான் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக வலியோடும், அதே சமயத்தில் பார்ப்பவரை உணர வைத்து திருத்தும் உணர்வோடும் பேசி முடிக்கின்றான் ‘நந்தன்’.

” தனக்கு கீழாக ஒருவன் இருக்க வேண்டும் என்கிற மனித உளவியலை அடிப்படையாகக் கொண்டு வர்ணாசிரம தர்மம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தான் அது இத்தனை நூற்றாண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.

கூழ்பானை என்ற அம்பேத்குமார் என்கின்ற கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்திருக்கிற சசிக்குமார் தன் கலை வாழ்வின் மிக முக்கியமான பத்திரமாக இதை உணர்ந்திருப்பார். கதையின் நாயகியாக வரும் சுருதி பெரியசாமி கணவனின் சுயமரியாதையை காப்பாற்றும் துணையாக கண்களால் பேசி நெகிழ வைக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஒவ்வொரு அசைவிலும் சாதித் திமிர் தாண்டவமாடுவது படத்தை வலிமைப்படுத்துகிறது.

ஒரு சிறிய கதை தான். ஆனால் அது தரும் வலி மிக ஆழமானது. இந்த மண்ணின் தொன்மக்குடி மக்கள் சாதியின் பெயரால் இந்தக் காலத்திலும் அடிமையாக நடத்தப்படுவதையும், நசுக்கப்படுவதையும் நினைத்து காண்போரை காட்சிகள் மூலம் கலங்க வைக்கிறார் சரவணன். ஊராட்சித் தலைவராக சுதந்திர தினத்தில் கொடியேற்ற வரும் அம்பேத்குமார் தனது உறவினர்களுக்கு முன்னால் படுகின்ற அவமானத்தை திரைமொழியில் மிக நேர்த்தியாக நிகழ்த்தி அந்த அவமானம் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்பட்டதாக உணர வைப்பதில் சரவணன் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் அறிவிப்பு பலகையில் எழுதப்படும் காட்சி. தன் கணவனின் பெயர் மீது அடிக்கப்பட்ட சாணியை தன் புடவையால் ஆங்காரத்தோடு துடைக்கின்ற சுருதியின் உடற்மொழியும், வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் மிக முக்கியமானவை.

நிறைய நுட்பமான காட்சிகள். நாற்காலியை நோக்கி நகரத் துடிக்கும் அம்பேத்குமாரை, வேலைக்கு ஏவும் கோப்புலிங்கம் சாதி வழியாக எப்படி அதிகாரம் கட்டமைக்கப்படுகிறது, கடத்தப்படுகிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம். இதுதான் திரை மொழிக்கான வலிமை. நாம் எழுத்தில் பக்கம் பக்கமாக எழுதி வடிப்பதை ஒரே ஒரு எளிய காட்சி மூலம், உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்ற அதிகாரத்தின் வடிவமான நாற்காலியை ஏக்கமாக பார்க்கின்ற அம்பேத்குமாரின் விழிகள் மூலமாக உணர்த்துவது என்பது வலியின் அழகியல்.

நம்மைப் போன்ற சக மனிதனை இழிவாகப் பார்க்கின்ற சாதி உணர்ச்சியை சாகடிக்காமல் இங்கே எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சுயசாதி பெருமிதம் என்கின்ற கொடிய மனநோயை உள்ளுக்குள்ளாக வைத்து கழுத்து அறுத்து சாகடிக்க வேண்டிய சிந்தனையை “நந்தன்” தருகிறான்.

அதேபோல் படத்தின் இறுதிக் காட்சி. இது போன்ற படங்களை முடிக்கும்போது இயக்குனர் கையில் இருக்கின்ற எல்லாவிதமான சாத்தியங்களையும் அவர் பயன்படுத்தி பார்த்திருப்பார். ஆனால் முடிவு என்பது ஏதோ ஒன்றின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதில் சரவணன் காட்டியிருக்கக் கூடிய கவனம் உண்மையில் அற்புதமானது.

இதுபோன்று படத்தில் நிறைய அற்புதத் தருணங்கள் இருக்கின்றன. படத்தின் காட்சி அமைப்புகளை, கதை ஓட்டங்களை நான் விரிவாக இதில் எழுதவில்லை. அதை ஒவ்வொரு பார்வையாளரும் பார்த்து உணர்ந்து நெகிழ்ந்து அனுபவிக்க வேண்டிய பேரனுபவம்.

படத்தில் குறைகளே இல்லையா என்கிற கேள்வி இந்த பதிவை படிக்கின்ற உங்களுக்கு எழலாம். எத்தனையோ ஆடம்பர ஆட்டங்களை, கொஞ்சமும் சமூக உணர்ச்சி இல்லாத பிரம்மாண்ட குப்பைகளை, கலை அழுக்குகளை, எல்லாம் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ” நந்தன்” கொண்டிருக்கின்ற மிகச்சிறிய குறைகள் , இந்தக் கலை வடிவத்தின் உயர்ந்த மேன்மையான நோக்கங்களால் இல்லாமல் போய்விடுகின்றன.

நந்தன் மிக முக்கியமான ஒரு திரைப்படம். அவசியம் அனைவரும் காணுங்கள்.

அன்பு நண்பர் இயக்குனர் சரவணன் அவர்களுக்கு எனது பேரன்புத் தழுவல்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் அவர் எடுத்திருந்தாலும் இதுதான் அவருக்கான கதவாக நான் பார்க்கின்றேன்.

அவருக்கான ராஜபாட்டை தொடங்கி விட்டதாகவே நான் உணர்கிறேன்.

எப்போதும் சிறப்பானதை எனக்கு பரிந்துரைக்கும் என் அண்ணன் சீமானுக்கு அன்பு முத்தங்கள்.

❣️

நெகிழ்வுடன்,
மணி செந்தில்.