.
⚫
இந்தப் புத்தக கண்காட்சியில் நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாங்க தமிழின் வசீகரமான இளம் எழுத்தாளுமைகள் அன்புத்தம்பிகள் லட்சுமி சரவணகுமார் , அகர முதலவன் உதவி செய்தார்கள். நூல்வனம் அரங்கில் மொழிபெயர்ப்பு நூல்களின் தொகுப்பு ஒன்றினை வாங்கித் தந்தார்கள்.
அதில் முதல் புத்தகமான “கடவுளின் இறுதியாத்திரை” – தமிழில் அசதா என்ற தொகுப்பு. பிரபல அயல் நாட்டு எழுத்தாளர்களின் நேர்காணல்கள். அதில் முதல் கட்டுரையான “கடவுளின் இறுதியாத்திரை” என்ற நாவலை எழுதிய எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான ஏ என் வில்சன் அவர்களை இஸ்ரத் சையத் நேர்காணல் செய்தது. கடவுள் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் மதம் என்கின்ற நிறுவனத்தைப் பற்றியும் நுட்பமான கேள்விகளும், அதற்கு வில்சன் தருகிற பதில்களும் வியக்க வைக்கின்றன.ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டிலேயே அறிவியல் துணையோடு கடவுள் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் , இனியும் கடவுள் தேவையா என்கிற கேள்வியும், ஏன் கடவுள் இன்னமும் தேவைப்படுகிறார் என்கிற பதிலும் மிக சுவாரஸ்யமானவை.
டார்வினின் பரிணாமக் கொள்கைதான் கடவுள் இருத்தலை ஏறக்குறைய கேள்விக்குறியாக்கியது எனக் கூறும் வில்சன், 13 ஆம் நூற்றாண்டிலேயே உலகம் உருவாக கணக்கற்ற கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றும், பைபிளின் படி கண்டிப்பாக ஆறு நாட்களில் உலகத்தை படைத்திருக்க முடியாது என்றும் கண்டுபிடித்து விட்டார்கள் என்றும் விவரிக்கின்ற அவர் , இயற்கையிடம் எந்தத் திட்டமான நோக்கமும் இல்லை, இயற்கைக்கு எந்த உயிரின் மீது தனிப்பட்டக் கரிசனம் கிடையாது, கடவுள் மனிதன் மீது அளவற்ற வாஞ்சைக் கொண்டிருக்கும் பட்சத்தில் ஏன் மிகப்பெரியக் குளவிகளை அவர் படைக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு எதிர்வினையாக “சரியான அர்த்தத்தில் ஒரு கவிஞன்” என்ற தலைப்பில் கவிஞர் ஸ்பீக் நியூ ஹெர்பர்ட் அவர்களின் நேர்காணலில் “கடவுளே இல்லை என்று சொல்வதைக் காட்டிலும், கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்வதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் அதிகம் என பாஸ்கல் சொன்னது சரிதான் எனத் தோன்றுகிறது.” என்று தெரிவிப்பது மனதிற்கு ஏனோ நெருக்கமாக இருந்தது.
எல்லாவற்றையும் தொலைத்து விட்டு எதில்தான் நிற்கப் போகிறோம் என்கிற கேள்வி எப்போதுமே எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும். கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அதையெல்லாம் தாண்டி நாம் பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது என்பது தான் கவிஞர் ஹெர்பட்டின் கருத்து. ஏனெனில் மனித வாழ்க்கை சாவதை காட்டிலும் கொடுமையானது. நெருக்கடி மிகுந்தது.துயரும் விரக்தியும் சூழும் வாழ்க்கை பெரும்பாலும் மரணத்தை தப்பித்தலுக்கான பெருவழியாக நிர்ணயித்து விடுகின்றன.
கடந்த இரண்டு தினங்களாக Netflix தளத்தில் சமீபத்தில் Peter Berg இயக்கத்தில் வெளியாகி உள்ள” American Primeval” என்ற சீரிஸ் பார்த்தேன். வெஸ்டர்ன் கிளாசிக் வகை என்றாலும் வழக்கமான Cowboy கிளிஷே எதுவும் இல்லாமல் மிகுந்த தரமான முறையில் படமாக்கப்பட்டு நம்மை பிரமிக்க வைத்தது.
தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.செவ்விந்தியர்களின் பூர்வீக நிலமான அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆக்கிரமிக்க தொடங்கிய தொடக்க காலத்தில் அவர்களுக்குள் இருந்த மத, அரசியல், குழு பிரச்சனை மற்றும் செவ்விந்தியர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை இதற்கு ஊடாக ஒரு கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தன் மகனோடு கணவனை தேடி தப்பித்து ஓடும் ஒரு பெண்ணின் கதை என பல்வேறு அடுக்குகளில் எதிர்பாராமல் நிகழும் மரணங்களை பற்றி தீவிரமாக அந்தத் தொடர் ஆய்வு செய்திருந்தது.
தொடர் முழுக்க மரணம் ஒரு ஊதுபத்தியின் புகைச்சுருள் போல மேலெழும்பி தவழ்ந்துக் கொண்டே இருந்தது.எதற்கோ பிறந்து எங்கேயோ வாழ்ந்து எங்கேயோ மரணம் அடையும் மனித வாழ்க்கையில் முடிவில் எதற்கும் அர்த்தம் இல்லை என்பதும், இந்தக் குறுகிய கால மனித வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டு வெறுப்பும் வன்மமும் பேராசையும் நிரம்பிய மனிதன் இயற்கையின் அழைப்பான மரணத்திற்கு முன்னால் ஒன்றுமே இல்லாதவனாக கையறு நிலையில் முடிவதுதான் இயற்கையின் செய்தி.
எல்லாக் கடவுளும் கைவிடுகின்ற பொழுதில் கைவிடாத ஒரே ஒரு விஷயம், எதையும் எதிர்பார்க்காத எப்போதாவது வாய்க்கிற சக மனிதனின் எளிய அன்பு தான் என்பதை இந்தத் தொடர் உதிரத்தின் சுவையோடு, பனிக்காலத்து ஊதற்காற்று ஓசையோடு , நகரமயமாகாத அமெரிக்காவின் தொல்குடி நிலவியல் காட்சிகளோடு படமாக்கப்பட்டு நம்மைக் கவர்கிறது.
“மனிதன் ஆகப்பெரும் சல்லிப் பயல்” என்கிறார் மறைந்த எழுத்தாளுமை ஜி.நாகராஜன். எல்லாவித குறைகளோடும் உருவாகியுள்ள மனிதன் தன்னைப் போலவே தனது பிம்பமாக கடவுளையும் உருவாக்கி அதில் நிறை தேடி அலைகிறான். அந்த அலைகழிப்பை காட்சிமொழி வடிவத்திலும், எழுத்து வடிவத்திலும் காணும் போது நாம் இன்னும் நமக்குள்ளாக ஆழ்ந்து சிந்திக்க தொடங்குகிறோம்.
அப்படி உள்ளுக்குள் ஆழ்ந்து சிந்திப்பதை தான் மிக எளிமையாக ஓஷோ “பிரார்த்தனை” என்கிறார். அதற்கு கடவுள் கூட தேவை இல்லை என்கிறார்.
அந்த வகையில், நல்ல புத்தகங்களையும் நல்ல திரைப்பட ஆக்கங்களையும் தேடித் தேடி வாசிப்பதும்/ பார்ப்பதும் ஒரு வகை பிரார்த்தனைதான்.
❤️
மறுமொழி இடவும்