உலகம் எப்போதும் தனித்துவமானவர்களையே நினைவில் கொள்கிறது. சராசரிகளை சரித்திரம் தனது குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று கொண்டே இருக்கிறது. இலட்சிய உறுதியும், அசாத்திய பொறுமையும்,கடும் உழைப்பும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற தனித்துவமான ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மை கதையே .. தி வாக்.. (The walk )
அவன் பெயர் பிலிப்பி பெடிட். தெருக்களில் நாம் ஒரு காலத்தில் இயல்பாக பார்த்த அந்தரத்தில் கட்டப்பட்ட கம்பிகளில் நடக்கும் வித்தைக்காரன். அதை ஒரு கலையாக அவன் கற்கிறான். பல தடைகள். பல அவமானங்கள். கடும் முன்னேற்பாடுகள்..இவைகளுக்கு பிறகு அவனது கனவான நியூயார்க் நகரத்தில் இருக்கிற டுவின் டவருக்கு இடையே இருக்கிற தொலைவை கம்பி கட்டி அதன் மேல் நடப்பதை நிறைவேற்றுகிறான்.
கம்பி மேல் நடப்பதை விட.. அதற்கான முன் தயாரிப்புகளையே இப்படம் பெரிதும் பேசுகிறது. சட்டப்படி அனுமதி பெறாத நிலையில்.. அந்த சாகசம் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள் , பிலிப்பின் அசாத்திய உணர்ச்சி என….நம் விழிகளை மூட மறந்து போகிற காட்சிகளை உருவாக்கி வைத்திருப்பதுதான் இப்படம் உண்மையாக செய்யும் மேஜிக்.
ஒரு வெற்றிக்கு பின்னால் இருக்கும் வலி,வேதனை, காயங்கள் என்கிற எதிர்மறைகளுக்கு நிகராக கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, தன்னிலை துறத்தல் போன்ற பல நேர்மறைகளும் இருக்கின்றன என்பதை இப்படம் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
ஏதோ சில தடைகளால், தொந்தரவுகளால் நம் அல்லலுற்று ஆற்றாமை கொண்டு நிம்மதி இழக்கும் தருணங்களில்…இப்படிப்பட்ட திரைபடங்கள் நம் மனதிற்குள் ஊடுருவி நமக்கான பாதையை காட்டுகின்றன.
வலி மறந்து வழி பிறக்கிறது.
என் மனநிலை அறிந்து..சரியான படத்தை…அல்ல.. பாடத்தை பரிந்துரைத்த தம்பி லிங்கதுரைக்கு நன்றி.