3513-ilaiyaraja-issue317421980
தேவ தீண்டல்களால் உயிர் வாழ்பவனின்நன்றிக் குறிப்பு இது.
 
…..
 
புகழ்ப் பெற்ற டைட்டானிக் படத்தில் வரும் அந்த சில நிமிடக் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. கப்பல் முழ்கி கொண்டிருக்கும் அந்த துயர வேளையில்..அந்த வயலின் இசை கலைஞர்கள் தங்கள் இசையை நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சி உலகத்தையே உலுக்கிப் போட்டது. ஆனால் தமிழர்களோ ஒரு சிறிய புன்னகையோடு அந்த காட்சியை எளிதில் கடந்தார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு இசைக்கலைஞனை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள்.
 
சகல விதமான மனித பாடுகளில் சிக்கித்தவிக்கும் அவர்களை ஏதோ ஒரு தேனீர் கடையில் உதிரும் இசையால், சட்டென கடக்கும் வீட்டின் சன்னல் ஒன்றில் இருந்து கேட்கும் இசையால்.. மனமும், குணமும் புத்தாடை அணிந்துக் கொள்ளும் திருவிழா பொழுதொன்றில்.. கண்கள் கலக்க ஏதுவாக கசியும் இசையால், பரபர என ஓடிக்கொண்டிருக்கும் புன்னகை தேக்கும் முகங்கள் திரியும் கல்யாண வீடுகளில் இருந்து ஒலிக்கும் இசையால் .. இன்னும் பல இடங்களில்..பல பொழுதுகளில்
 
24 மணி நேரமும்.. தன் இசை நுணுக்கங்களால் மீட்கும் மீட்பரை அவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆக்கி வைத்திருந்தார்கள்…
 
தனது இசை வடிவ தீண்டல்களால்.. உள்ளுக்குள் உயிரை சுரக்க வைத்திருப்பவரை தம் சம காலத்து இசையாளனாய் அவர்கள் பெற்றிருந்தார்கள்..
………………………………….
 
அவமானங்களை சகித்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஆக மகத்தான கலை. நம் முன்னால் வைக்கப்படும் எளிய சாப்பாட்டு தட்டின் ஒலி கூட இதயத்தை கீறி இருக்கிற அனுபவங்களை நாம் அனைவருமே பெற்றிருக்கிறோம். அனைத்தையும் இழந்து கையறு நிலையில் கழுத்தினை அறுத்துக் கொள்ள தூண்டும் மோசமான அனுபவங்களை நம் விழிகளில் இன்னமும் கண்ணீராய் தேக்கி இருக்கிறோம். போதும்டா எல்லாம் .. இது வாழ்க்கையடா மயிறு… என தோணும் தருணமொன்றில் நம் முன்னால் தோன்றும் குழந்தையின் புன்னகைப் போல
ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கிறது..
 
அவரது இசை .. துளித் துளியாய்… அமிர்தமாய்..
——————————————-
 
எளிய எம் பெண்களை தேவதைகளாக.. துருத்திய பல்லோடும், கருத்த மேனியோடும், தடுமாறிய வார்த்தைகளோடும், வரலாற்றின் வீதியில் தடம் மாறிய வாழ்க்கையோடும் தலைமுறை தலைமுறையாக பிறந்த எம் இனத்தின் ஆண்களை கதாநாயகர்களாக…
உளவியலாய் தனது இசைத் தீண்டல்களால் உருவாக்கி..
எம் மனதில் ஆழ்ந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையை தனது தேவ கரங்களால் நீக்கி…
 
இசை இசையாய் வழியும் தன் வண்ணத்தூரிகையின் மூலம் மானுட வாழ்வின் சகல விதமான அர்த்தங்களையும் வரைந்துக் கொண்டே செல்கிறார் அவர்.
 
————————————————–
புன்னகைக்கும், சிரிப்பிற்கும் உள்ள மெல்லிய வேறுபாட்டினை.. நாணம் மலரும் ஆண்களின் விழிகளை… தனிமையின் அர்த்தத்தை, மாலைப் பொழுதின் அழுத்தத்தை ..கண்ணீரின் கனத்தை என அனைத்தையும் புத்தியில் சிந்தித்து..கைகளால் எழுதிய இசைக்குறிப்புகளால் உணர வைத்தது மட்டுமா.. அவரது சாதனை..?
 
இல்லை..இல்லை..
 
இன்னமும் என்னைப் போன்றோர் துயர வாழ்வின் அழுத்தம் தாங்காமல் கழுத்தினை இறுக்கிக் கொள்ளாமலும்.. மனநிலை தடுமாறாமலும்.. பாதுகாத்து. இயல்பில் வாழ வைக்கிற அதிசயங்களை வெறும் இசைத் துணுக்குகள் என்று யாரும் அர்த்தப்படுத்த முடியாமல் பிரமித்து இருக்க வைத்திருப்பதே அவரது சாதனை..
——————————————–
 
வாழ்வென்ற கண்ணாடி மீது படரும் கசப்பு பனித்திரையை தனது நுட்ப இசை வருடல்களால் நீக்கும்
 
இசைஞானி இளையராஜா…
 
என்பது வெறும் பெயரல்ல..
 
எங்கள் தலைமுறை வாழ்க்கை.
 
அவர் பிறந்ததால் ..நாங்கள் உயிர் வாழ்கிறோம்.
 
இனிய வாழ்த்துக்கள்.. ஆழ்மன நன்றியோடும். காரணமேயன்றி கலங்கும் விழிகளோடும்..
 
-மணி செந்தில்