DSC_0513

 

எவரிடமும் யாசகம் பெறுவதல்ல அறிவு. சிலர் நினைப்பது போல தந்திரத்திலோ..குறுக்கு வழியிலோ பெற்று விடுதல்ல தகுதி. உலகின் விழிகள் உறங்கும் போது மூடா இமைகளை கொண்டு புத்தகங்களுக்குள் தன்னைத் தொலைக்கிற பயிற்சி.. நீண்ட பயணங்கள்.. ஒவ்வொன்றையும் பதிவு செய்ய சிறு வயது முதல் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி பார்த்து… படைப்பில் கரைகிற உளவியல்..

சிறு வயது முதல் உடன் பயணிக்கிற உடல் குறைபாடுகளை வைத்துக் கொண்டு வெல்ல துடிக்கிற உத்வேகம்.

உளராமல்,,தளராமல் வார்த்தைகளை விரயமாக்குகிற எவற்றிலிருந்தும் தள்ளி நின்று தியானம் போல மெளனிப்பது..

யாரிடமும் என்ன பேச வேண்டும் என்கிற அடிப்படை அறிவு. சொல் புத்தி கேட்டாலும்..அதிலுள்ள அரசியலையும்,உண்மைத் தன்மையையும் ஆராயாமல் ஏற்கிற சுய புத்தியை அழிப்பது…

இவையெல்லாம் ஒரு நொடியில் முளைப்பதல்ல.. கடும் உழைப்பினால், ஏற்படுகிற பயிற்சி..

இரவு பகல் பாராது உழைப்பினால் ஏற்படுகிற தன் ஊக்கத்தினால் விளைகிற முயற்சி.

எத்தனை முறை சரிந்தாலும்…நிமிர்கிற தெம்பு இருப்பதால் தான்.. சரிவுகளையும்,அழிவுகளையும் பயிற்சியானதாக பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் அவன் சரிவிற்காக காத்திருங்கள்.

அந்நேரத்தில் அவன் தன் நிமிர்விற்காக உழைத்து விட்டு போகிறான்…

நீங்கள் அடைக்கத்துடிக்கும் சிற்சில கதவுகளைத் தாண்டி ஆயிரம் வாசல்களை கொண்டிருக்கும் அவனது பயணம் முடிவிலியானது.

இதை கூட சொல்லாமல் செய்யலாம் தான்.

அடுத்தவனின் சரிவில்..அழிவில் தன் வாழ்க்கையை தேடுபவனை பார்த்து இப்போதும் பரிதாபம் தான் கொள்ள தோணுகிறது. ஒரு இறுதி பரிவுப் போல..

அணி சேர்த்தோ..புறம் பேசியோ வெல்ல முடிவதற்கு அவன் உங்களில் ஒருவன் அல்ல.

ஆயிரத்தில் ஒருவன்.

அணுஅணுவாய் பார்த்து அவனாய் செதுக்கி உருவாக்கிக் கொண்ட அவனது வாழ்க்கையை அழிக்க யாராலும் முடியாது.

உங்கள் வாழ்க்கையை உருவாக்க உழையுங்கள். உங்களுக்காக .. உங்கள் தகுதிகளுக்காக உழையுங்கள்.

நீங்கள் எல்லாம் வெல்லக்கூடிய.. அவனை தோற்கடிக்க கூடிய இடத்தில் அவனில்லை.

மற்றபடி..பொல்லாதவன் படத்தில் சொல்வது போல்…

அவனை எல்லாம் அப்படியே விட்டணும்..

ஏனெனில்… அவன் ஆகாயம் போல் வாழ்பவன்..