அந்த தத்தளிக்கும்
கைகளை
விட்டுவிடுங்கள்..
இறுதி நம்பிக்கை
தீர்ந்த உச்சக் குரலோடு
முழ்கித் தொலைக்கட்டும்.
பொங்கும் கடலலைகளை
விழி அசையா வெறித்த
பார்வையோடு பார்த்திருக்கும்
அவர்களை விரைவாக கடந்துப்
போங்கள்..
காத்திருந்து கடற்கரை
மணலோடு மணலாய்
மறையட்டும்..
ஒதுங்கும் உடல்களை
ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.
குண்டடி காயங்களோடு
கரை சேர்ந்தவைகளையே
எளிதாய் கடந்தோம்.
அலையோடு அலையாக
அழுகி மக்கட்டும்..
ஆர்ப்பரிக்கும் அந்த
கோப முழக்கங்களை
அலட்சியப்படுத்துங்கள்…
அடுத்த தேர்தலில்
ஐநூறு ரூபாய் சேர்த்துக்
கொடுத்து விடலாம்..
சுழன்றடித்த புயலில்
சிக்கி சின்னா
பின்னமாகி
உதிர்ந்த சருகாய்
உலகின் ஏதோ ஒரு
மூலையில் ஒதுங்கும்
தமிழனின் உடலம்
கண்டு பதறாதீர்கள்…
அவனுக்குதான்..
யாதும் ஊரே
யாவரும் கேளிர்..
அதனால்தான்..
அவனுக்கென
ஊருமில்லை..
கேளிராய் கேட்க
நாதியுமில்லை..
விடுங்கள்..
தமிழக மீனவனைப்
பற்றி இந்த வரிகள்
படிக்க நீங்கள்
செலவழித்து இருக்கிற
நொடிகளே போதுமானது..
ஏனெனில்..
அடுத்த நொடியில்
நீங்கள் கவலைப்பட..
விசால்,தீபா,தொப்பி,
கமல், ரஜினி என
நிறைய இருக்கின்றன..
விவாதங்கள் தொடர்கின்றன.
போய் வரிசையில் நில்லுங்கள்.