வாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது. எவரோடு எவர் பிணைக்கப்படுவர் …பிரிக்கப்படுவர் என்று தெரியாத வாழ்வின் பொல்லாத பகடை ஆட்டத்தில் தான் நானும்,அவரும் அறிமுகமானோம். 2006-07 காலக்கட்டம். அப்போது அவர் புகழ்ப்பெற்ற எழுத்தாளர். அவரது நவீன நாடகங்கள் மூலமாகவும்,எழுத்துக்கள் மூலமாகவும் தமிழுலகம் தெரிந்த ஆளுமையாக உருவான அக்காலக் கட்டத்தில் தான் அவர் ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் என்கிற தொடரை எழுதத் தொடங்கினார். பரவலான வாசகர் வரவேற்பை பெற்ற அத்தொடரில் ஒருமுறை பெரியார்-அண்ணா குறித்து ஒப்பீடு செய்து பெரியார் அரசியலில் தோற்றார்,அண்ணா வென்றார் என ஒப்பீடு செய்து எழுதினார்.
இணைய உலகம் தமிழகத்தில் அறிமுகமற்ற காலக்கட்டம். அண்ணன் அறிவுமதி என்கிற பல்கலைகழகத்தின் பயிற்சி மாணவனாக பயின்றுக் கொண்டிருந்த நான் தம்பி இயக்குனர் முரளி மனோகர் உதவியோடு ஞாநியின் எழுத்துக்களில் தெரியும் ஆரிய மனம் என்ற தலைப்பில் பெரியாரை இழிவுப்படுத்தியதாக குற்றம் சாட்டி ஞாநியை நேரடியாக தாக்கி ஒரு விவாதக்கட்டுரையை எழுதினேன். அதை ஞாநியின் ஆதரவாளர்கள் உருவாக்கி வைத்திருந்த ஞாநி தி ரைட்டர் என்கிற ஆர்குட் பக்கத்தில் வெளியிட்டேன். நாலாப்புறமும் ஞாநியின் ஆதரவாளர்கள் எனக்கு எதிராக பெரும் விவாதத்தை தொடங்கினர். சமூக வலைதளங்களில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோ
மிகப்பெரிய ஆரிய பார்ப்பனீய இந்துத்துவ எதிர்ப்புணர்ச்சியோடு நாங்கள் அந்த விவாதங்களில் பங்கேற்றோம். இந்த விவாதம் நடந்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஞாநி அதே தொடரில்.. கலைஞர்.மு.கருணாநிதிக்கு வயதாகி விட்டது. அவர் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும் என எழுதப் போக… மேலும் நாங்கள் உக்கிரமானோம். ஈழப்போர் உக்கிரமாக நடந்துக்கொண்டு இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு செயலாளர் அண்ணன் தமிழ்ச்செல்வன் சிங்களனின் குண்டு வீச்சினால் கொல்லப்படுகிறார். அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் கவிதை ஒன்றை வெளியிட்டார். நாங்கள் கலைஞரை உச்சியில் வைத்து ஞாநியை தாக்கி எழுதி விவாதித்து கொண்டிருந்தோம். முதன்முறையாக எங்களது விவாதம் அண்ணன் அறிவுமதி அவர்களால் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அப்போதைய முதல்வர் கருணாநிதி யின் பார்வைக்கும் சென்று விட..அவரே என்னை அழைத்து நமது பிள்ளைகள் ஆரிய ஆதிக்கத்தை உடைத்து இணைய தளத்திலும் நுழைந்து விட்டதாக வாழ்த்தினார். பிறகு தம்பி என்னாரெஸ் பெரியார் மூலமாக திக தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் திடலுக்கு எம்மை அழைத்து வாழ்த்த..பெரும் உற்சாகமானோம். அய்யா சுப.வீ ,அண்ணன் திருமா,அண்ணன் சீமான் ,கொளத்தூர் மணி, எழுத்தாளர் பாமரன் போன்றோர் இந்த விவாதத்தையும், எங்களையும் பொது வெளிக்கு அறிமுகப்படுத்தினர். அதே உற்சாகத்தில் நாங்கள் ஆர்குட்டில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுமத்தை உருவாக்கினோம்.இணைய வெளி சார்ந்து முதன் முறையாக ஒரு கலந்தாய்வுக்கூட்டத்தை சென்னை கோல்டன் பீச்சில் நடத்தினோம். அக்கலந்துரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,அண்ணன் அறிவுமதி,பாமரன்,அண்ணன் சீமான்,பேரா.சுப.வீ போன்ற ஆளுமைகள் கலந்துக் கொண்டனர்.
இவ்வளவிற்கும் காரணமான ஞாநி எங்களோடு விவாதித்துக் கொண்டே தான் சொல்ல வந்தவற்றை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தார். இறுதியில் நாங்களும் சமரசமாகாமல் தொடரவே..ஒரு கட்டத்தில் இனி எங்களோடு விவாதிக்கப் போவதில்லை எனவும்,சமூக வலைதளங்களில் இனி வரப்போவதில்லை என அறிவித்து விட்டு அமைதியானார். அய்யா சுப.வீ அவர்களை தாக்கி குங்குமம் இதழில் அவர் எழுதிய பத்திக்கும் நான் கடும் எதிர்வினை ஆற்றி இருந்த போதிலும்..ஒரு திருமணத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்த போது வாங்க..செந்தில் என அழைத்து என்னை இறுக அணைத்துக் கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டு இருந்ததாலேயே எதிரியாக நினைக்க தேவை இல்லை என அவர் கொண்டிருந்த புரிதல் ….அவர் மீதான எம் மதிப்பை அதிகரிக்கச் செய்தது.
திமுக தலைமை குறித்து அவர் வைத்திருந்த விமர்சனங்கள் காலப்போக்கில் உண்மையானப் பொழுதும்,அவற்றை நானே விமர்சித்து எழுதிய போதும்.. அவர் நான் அன்றே சொன்னேன் இல்லையா என்பது போல் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.
ஒரு முறை அவரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டு இருந்த போது..நாங்கள் அந்த விவாதத்தில் தோற்று விட்டோம் என இன்று உணர்கிறேன் என்று தணிந்தக்குரலில் வருத்தமாக சொன்னேன்.
இல்லை..இல்லை.. நீங்கள் தோற்கவில்லை.தீவிரமாக இயங்கிய உங்களைப் போன்றோரை தனது செயல்பாடுகளால்..இழந்த கருணாநிதி தான் தோற்றார் என்றார் அவர். மேலும்…அது போன்ற கற்றுக்கொள்கிற…நாகரீக புரிதலுடன் கூடிய விவாதம் அதற்கு பிறகு சமூக வலைதளங்களில் எங்கும் நடக்க வில்லை எனவும் அதற்கான இடமே இல்லை எனவும் வருந்தினார்.
அவரை எதிர்த்து எழுதிய நாங்கள்..அதன் மூலமாக பொது வெளிக்கு அறிமுகமாகி வெவ்வேறு அமைப்புகளில் மதிப்பார்ந்த இடங்களில் இன்று இருக்கிறோம்.
எதிர்க்கவும்..எதிர்க்கப்பட
நமக்கும் இடமில்லை என்பதுதான் ஞாநி சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்ற செய்தி.
போய் வாருங்கள் ஞாநி. நான் எழுதுகிற எழுத்துக்களில் எல்லாம்..நான் விரும்பியோ..விரும்பாமலோ நீங்கள் நினைவுக்கூரப்படுவீர்கள்.
அவ்வகையில்..நீங்கள் தான் அன்று வென்றீர்கள்.
மணி செந்தில்
15.01.2018.