பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 7 of 8

மொழியை அருந்துபவன்..

 

3c69758c7da7fdb64651dff52fe2c007நமது உரையாடலின்
சொல் உதிர்தலில்
நமக்கான கவிதையை
நாம் தேடிய போதுதான்..

நீ உரையாடலை நிறுத்தி
மெளனமானாய்…

அடங்கா பசியை
அடர்த்தியாய்
சுமக்கும்
ஆடு ஒன்றாய்
எனை பார்த்து

ஆதி வனத்தின்
பசும் தழைகளாய்
எனை
மேய்ந்து விட்டு
போயேன்

என்று
உன் விழிகளால்
என்னிடம்
சொன்னாய்


இல்லை
இல்லை

மழைக்கால
சுடு தேநீரை
ஒரே மடக்கில்
குடித்து விடும்
வித்தை
நான் அறியேன்..

இது மீன் பிடிக்கும்
வேலை..

தூண்டிலுக்கும்
மீனுக்குமான
புரிதலில்..

ஏதோ

ஒரு தருணத்தில்
தூண்டில்
கனக்கும்..

மீன் சிக்கும்..

என்றேன் நான்..

உடனே
அவள்
என் தலை கோதி
சொன்னாள்..

நீதான் எனது
மொழியென….

காயங்களால் ஆனவன்.

14232482_182494872175389_8100183791492522624_n

அங்கே..
அவரவர்
ஆன்ம
விருப்பத்தின்
ரகசிய கணக்குகள்
மீன்களாய் அலைகின்றன

என
சொற்களின்
குளத்தில்
குளித்தவன்
சொல்லி விட்டு
போனான்.

அனல் மேவிய
சொற்களும்..
நிச்சயமற்ற
காலக்
கணக்குகளின்
அமில மழையும்..
கனவுப் பூக்கள்
ஒளிர்கிற
என் ஏதேன்
தோட்டத்தை
அப்போதுதான்
அழித்து முடித்து
இருந்தன..

காரிருளாய்
மேனி முழுக்க
துயர இருட்டு
அப்பிய
பொழுதொன்றில்..

உதிரம் கசிந்த
விழிகளோடு..
நானும்..
அவரும்..
மட்டுமே அறிந்த
மொழி ஒன்றில்
சொன்னார்..
கடவுள்.

..ஆகவே..
மகனே..
நீ காயங்களால்
ஆனவன்.

கணங்களின் கதை

 

14485021_188947611530115_2749357017552220995_n

கோப்பை ஏந்தியிருக்கும்
கரத்தின் சிறு நடுக்கத்தில்
சற்றே சிந்தும்
ஒரு துளி தேநீர்..

யாருடனோ
பேசுதலின் போது..
சொற்களின் ஊடே
கசியும் மெளனம்..

மழை நனைக்கும்
பொழுதில்
விழி மூடி
வானை நோக்கி
தலை உயர்த்தும்
கணங்கள்…

எங்கிருந்தோ
கரையும் பாடலில்
தலையணை
நனைய முகம்
சிவந்து கிடக்கும்
நடு நிசிப் பொழுது..

இப்படி..
இப்படி..

ஏதேனும் நொடிகள்
வாய்த்து விடுகின்றன..

சொல்ல
முடியாதவற்றை..
நமக்குள்ளே
சொல்லிக் கொள்ள..

உறைந்த உயிரை
நாமே கிள்ளிக் கொள்ள..

.**** சுயபுராணம்


overcome-yourself-fyodor-dostoyevsky-daily-quotes-sayings-pictures

மீண்டும் மீண்டும்
என்னை பிரசவிக்கும்
எனது மொழி..

வற்றா வளத்தோடு
குன்றாப் பெருமை
மணக்கும் எனது
சொல்..

எப்போதும் காண்பவர்
முகத்தில் கண்ணீரையும்,
புன்னகையையும்
ஒரே நேரத்தில்
சிந்த வைக்கும் எனது
எழுத்து..

இத்தனை வருடங்களில்
இரவு பகலாக
விழித்து..
வாசித்து..
ரசித்து..
உழைத்து..
எனக்கு நானே
கனவுகளை உளியாக்கி
செதுக்கிக் கொண்ட
தன்னம்பிக்கை
சுடர் விடும்
ஒரு வாழ்க்கை..

என்றெல்லாம்
பேசிட என்னிடம்
ஏதேனும்
இருந்தாலும்…

துளித்துளியாய்
சேமித்து பெருமழையென
பொழிய எனக்குள்
ஒரு மழை இருக்கிறது..

விழி நீர் கசிய
உயிர் உருகி ஓடிட
கதைகள் சொல்ல
எனக்குள்
நிலவொளியில்
சேமித்த ஒரு
இரவு இருக்கிறது.

பரவசப்படுத்தும்
கவிதைகளோடு
காலார நடந்திட
எனக்குள் பனிப்பூக்கள்
நிரம்பிய பூங்காவோடு
ஒரு பொன் மாலைப்
பொழுது இருக்கிறது..

ரகசிய கனவுகள்
மினுக்கும்
நீல விழி தேவதை
மிதக்கும்
தங்க மீன்கள்
உலவுகிற
பாசி படர்ந்த
பெருங்குளமும்
எனக்குள் உண்டு.

தேவ கரங்கள் தொட்டுத்
துடைக்க உதிரமாய்
பெருகுகிற
தீராத்துயரமும்..

சாத்தானின் முற்றத்தில்
முடிவிலியாய்
கொண்டாடி மகிழ
வற்றா புன்னகைகளும்..

என்னிடம் இருப்பதாக
மதுப் போதையில்
உளறிய
கனவுலகவாசி
ஒருவன் கைக்குலுக்கிப்
போனான்.

அவனிடம் மறுமொழி
கூற என்னிடம்
சொற்கள் ஏதுமில்லை
அப்போது..

பக்கத்தில் தேநீர்
அருந்திய வண்ணம்
சிரித்துக் கொண்டே
கடவுள் சொன்னார்

அது தான் நீ இருக்கிறாயே..

சொல்லப்படுகிற சொற்களற்ற கதை.

14900327_208444706247072_1276150418681769516_n
காதிற்கு பின்னால்
வழியும்
ஒரு வியர்வைத்துளி
சொல்லக்கூடும்
இப்போது
என்ன நிகழும் என..

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
நீயும் நானும்..

செல்லும் ரயிலில்
இருந்தவாறே..
மெளனித்து கிடக்கிற
என் ரயில் பெட்டி அசைகிறது
என நீ நினைப்பது
உனக்கான ஆறுதல்
என எனக்கு புரிகிறது..

நிகழ்தகவுகளாய்
வர்ணம்
மாறிய மனதின் மொழியை
ஒரு போதும் பேச முயற்சிக்காதே..

ஏனெனில் உண்மைகள்
பொய்களை விட
மோசமானவை.
கருணையற்றவை.

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
நீ காத்திருப்பது
புரிகிறது.

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உன் உதடுகள்
இன்னும் தயாராகவில்லை
போலும்..

ஈரப்படுத்திக் மெதுவாய்
கனைத்துக் கொள்கிறாய்..

நான் தயாராகத்தான்
இருக்கிறேன்.

விஷம் தோய்ந்த
ஈட்டி முன்னால்
இதயம் துடித்துக்
கொண்டே இருப்பது
கொஞ்சம் அசெளகரியம்தான்..

சீக்கிரம் குத்தி விடு.

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நீயோ..நானோ..

அந்த பரிதவிப்பு
நம் இருவருக்குமே
இருப்பதுதான்..
எனக்கான இறுதி ஆறுதல்..

கலங்கும் விழிகளில்
தூரத்து கானலாய்
தெரிகிறது.

என்னையும் மீறி
கொப்புளிக்க
துடிக்கும்
நாமாக இருந்த
பொழுதுகளின்
நினைவுகள்..

தப்பித்தவறி
அவை சொற்களாக
மாறக்கூடும் என
அஞ்சாதே..
.
மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
அச்சொற்கள் உண்மையின்
கயிற்றினால் இறுக்கி
கட்டப்பட்டு விட்டன..

இனி..

நீ தாராளமாக
எதையும்
சொல்லலாம்.

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிற இந்த
இமைக்காத பொழுதில்..

சில
பெருமூச்செறிதல்களோடும்..
ஆழ்நிலை தியான
கவனத்தோடு இயற்றப்பட்ட
சில நொடி மெளனத்தோடும்.

நீ சொல்ல வருகின்ற
காரணங்களுக்காக
அன்றி
வேறு எதற்காகவோ
கசிகிற கண்ணீர்த்
துளிகளோடும்..

நீ சொல்லத் தொடங்கு..

நானும் இதை முதன்
முறை கேட்பது போல்
கேட்கத் தொடங்குகிறேன்..

-மணி செந்தில்

 

 

ஏமாற்றப் பிம்பம்.

cropped-anonymous-15061.jpg
எப்போதும்…
ஆர்வமாய்
தொடங்கி
ஏமாற்றப்
பிம்பத்தில்
ஆழ உறைகிறது..
 
ஞாயிறு
நாளொன்றின்
துயர் கவ்வும்
முடிவு.
 
– =

தனித்தலைகிற தழுவல்கள்…

11987113_10208016904569164_8236167518369065881_n

சொற்கள் குவிக்கப்பட்டிருந்த

அந்த நிலா முற்றத்தில்

நான் தனித்திருந்தேன்

எனக்கு ஆக பிடித்தவனுக்காக..

விழி இழந்தவனின்

விரல் நுனி போல

தேர்ந்த சொற்களின்

பதம் பார்த்து

நினைவின்

அடர்பாசி மாலை

ஒன்றினை சூட்ட

ஒளி உமிழும் கரங்களோடு

காத்திருந்தேன். .

அடுக்கடுக்காய் தடுக்கிற

நினைவின் மடிப்புகளில்

சதா கலைந்துக்

கொண்டே இருந்தேன்

ஒரு வித சங்கடத்தோடு..

என்னை கண்டு

வாரி அணைக்கிற

அவனது புன்னகையும்..

தோள் தழுவி பூரிக்கின்ற

அவனது ஈர விழி அசைவுகளும்..

பழகிய அடவுகளாய்

என் மெளனச் சருகின்

விலா முறிய

என்னை சுற்றி

நடனமிடும் போது…

நான் எனக்குள்ளாக

சொல்லிக் கொண்டேன்..

பாக்கியா…

சொற்களின் சேகரத்தில்..

காலங்களின் கலையா மடிப்புகளில்..

அடர் வனத்தில் தனித்தலையும்

காற்றின் மகரந்த வாசனைகளில்…

விடிப்பொழுதில்

நதிக்கரையில் ஈர மணலில்

படுத்திருக்கும்

நிலாக்கால வெண் சுடர்களில்..

இப்படி

எதிலும் மிஞ்சியிருக்கும்

உங்களுக்கென

தனித்திருக்கும்

எனது அன்பும் ,தழுவல்களும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இளையராஜாவின் பியானோ..

எப்போதும்
மின்னிக் கொண்டிருந்த
அந்த நதிக்கரையில்
நட்சத்திரங்கள்
தரை இறங்கி
கிறங்கிக் கிடந்தன..

துடித்துக்
கொண்டிருந்த
நீரைப் போர்த்திக்
கிடந்த நிலவு
கூழாங்கற்களை
தழுவிக் கொண்டது…

ஒரு கவிதை
தன்னைத் தானே
மடல் விரித்து
எழுதத் தொடங்கிய
அக்கணத்தில் தான்,,,

அந்த
பின்னிரவில்…

இளையராஜா
பியானோ
வாசிக்கத்
தொடங்கி
இருந்தார்….

 

கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்


2013-10-31T092629Z_1799413014_GM1E9AV1BWA01_RTRMADP_3_PHILIPPINES

 

எம் முகத்தில்
நீ காறி உமிழ்ந்த
அந்த
மஞ்சள்
எச்சிலுக்கு
மற்றொரு பெயர்
உண்டென்றாய்…

எம் செவியில்
நீ உரக்கச்
சொல்லிப்போன
அவமானச் சொற்களின்
பின்னால்
மகத்தான
உரிமை ஒன்று
மறைந்து கிடக்குதென்றாய்..

எம் கண்களை நோண்டியெடுத்து
உன் கால்களுக்கு கீழே போட்டு
நசுக்கி…
அதில் கசிந்த
உதிரத்தில் தான்

உன் மஞ்சள்
எழுத்திற்கான
மை தயாரித்தாய்..

உதிர சிவப்பேறிய
எம் விடுதலைக்கான பக்கங்களில்
உன் மஞ்சள் புத்தியை
பூசி விட்டு போனதைதான்
உன் ஆக்கத்திற்கான
ஊக்கமென்றாய்..

கல்குதிரையேறி
நீ கடக்க முயன்ற
குருதிப் புனலில்
அகப்பட்ட சடலங்களில்
நெளியும் புழுக்களை
தின்பதை தான்
உன் பசியாறல்
என பகிரங்கப்படுத்தினாய்..

……………….

இருண்டுக் கிடந்த
பேரிருள் நிலத்தில்
மின்னிட்ட
ஒரு சுடரின்
திசைவழி கண்டு
விழித்தெழ கூட
எமக்கு அனுமதி இல்லை.

ஆனால்

விடுதலை தாகத்தில்
உலர்ந்த எம் உதடுகளை
நனைக்க வந்த
பெருமழையினை
அது வானின் மூத்திரம்
என வசைபாட
உனக்கு வாய்ப்பு உண்டு..
………………

திறந்த எம் விழிகளை
நோண்டிப் போடும்..
எழுந்த எம் கரத்தினை
முறித்துப் போடும்…
உன் சொல் விளையாட்டிற்கு
இறுதியாய்
கருத்துரிமை என பெயர் சூட்டினாய்.

கல்குதிரையேறி வந்த
சதிகார சம்ராட்டிற்கு
எம் மண்டையோடுகளை
கொண்டு
இராஜப்பாட்டை அமைக்க
உரிமை உண்டெனில்…

எம் துயர் இருட்டை
நக்கி பிழைக்கும்
அந்த எழுத்தை
எரித்துப் போடுதலும்..

எம்மை உருக்குலைத்துப்
போட வந்த அந்த விரல்களை
உடைத்துப் போடுதலும்

எமக்கான கருத்துரிமைதான்..

– மணி செந்தில்

மரம் வெட்டிகள் சொன்ன கதை..

07-1428394570-andhra-encounter43

 

பால்யத்தின்
பாடப்புத்தகங்களிலும்,
தேவதைக் கதைகளிலும்
சட்டென சந்தித்திட
இயலும் சாதாரண
மரம் வெட்டிகள்தான்
நாங்களும்..

தங்கக்கோடாலியை
எடுத்து தருகிற
தேவதையை
யாரோ கற்பழித்து
போட்ட தினத்தில் தான்…

அடிவயிற்றுப்
பசித்தீக்காக
நாங்கள் வெயில்
அலையும் வனத்தில்
நின்று கொண்டிருந்தோம்..

எம் காதோரம்
பெருகுகிற வியர்வைத்
துளிகளுக்குள்
வீட்டில் பூனை உறங்குகிற
எம் வீட்டு அடுப்படிக்
கதைகள் ஒளிந்திருக்கின்றன…

புன்னகை மறந்த எம்
உதடுகளில்
பசித்திருக்கும்
எம் குழந்தைகள்
உதிர்க்கும்
நடுநிசி முனகல்களின்
சாயல் படிந்திருக்கின்றன…

கனவுகளில் கூட
அச்சம் துறக்க மறக்கிற
நிலைக்குத்திய
விழிகளுக்கு சொந்தக்காரர்கள்
நாங்கள்…

அப்படித்தான்
அன்றும்
நீண்டது முடியத்துடிக்கிற
பயணமொன்றின்
இறுதி ஊர்வலம்..

அன்றுதான்…
காற்றின் துடுப்புகளை
முறித்துப்போட்டு
எங்களை நோக்கி
முன்னேறிய துப்பாக்கி
ரவைகளை நாங்கள் சந்தித்தோம்..

உடனே ஏதாவது சொல்லி
துப்பாக்கி சீறலில்
கருணை கசிகிறதா
என கணத்தில் கணக்கிட்டோம்..

நாங்கள் இந்தியர்கள்
என்றோம்.

இல்லாத முகவரியை
சுமக்கிற அடையாளமற்ற
அஞ்சலட்டைகள்
என்றன துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் திராவிடர்கள்
என்றோம்..

உங்களை வைத்து
பிழைப்பதற்காக
எங்கள் எஜமானர்கள்
செய்து வைத்து வைத்த
நூற்றாண்டு மோசடி
என்று நகைத்தன
துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் மனிதர்கள்
என்றோம்..

உயருகிற அதிகார முனைகள்
என்றுமே மனிதர்களை
தின்றுதான் பசியாறுகின்றன
என்று தர்க்கம் உரைத்தன
துப்பாக்கி ரவைகள்..

இறுதியாக
சொன்னோம்….
நாங்கள் தமிழர்கள் என…

உயிருள்ள சடலங்கள்
உயிரற்று விழுவதால்
எழப்போவது
எதுவுமில்லை..
என்று காறி உமிழ்ந்த
படியே
சீறி துளைத்தன
ரவைகள்…

 

Page 7 of 8

Powered by WordPress & Theme by Anders Norén