பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 1 of 16

நடந்தது இதுவரை நடக்காதது…

————————————————-

( 2025 ஈரோடு இடைத்தேர்தல் முடிவின் அசலான குறுக்குவெட்டுத் தோற்றம்)

எப்போதும் தேர்தல் களம் என்பது கொள்கையற்ற சுயநலப் பிழைப்புவாதிகளுக்கு அது தான் சுரண்டுகிற மற்றுமொரு வாய்ப்பு .ஆனால் கொள்கைப் பற்றுறுதி என்ற கனவின் தணலோடு நிற்கிறவர்களுக்கு தேர்தல் களம் என்பது கருணையற்ற வேட்டைக்களம்தான்.

ஏனெனில் நாம் தமிழர் அரசியலை விரும்பி ஏற்ற கூட்டமல்ல. அவர்கள் அதிகாரத்தைத் தேடி அலைபவர்களும் அல்ல. அவர்கள் இன அழிவின் வலியால் வீதிக்கு வந்தவர்கள். மலிந்த ஜனநாயகத்தின் துருவேறிய ஈட்டி முனைகளுக்கு முன்னால் எதனையும் இழக்கத் துணிந்து இலட்சிய இன்முகத்தோடு நிற்பவர்கள்.

தேர்தல் வணிகம் ஆகிவிட்ட நிலையில்,பெரும்பாலும் தகுதி வாய்ந்த கொள்கைவாதிகள் தேர்தல் களத்தை தவிர்த்துப் போவதற்கு மிக முக்கியமான காரணம்.. அது கோருகின்ற அளவற்ற உழைப்பும், இறுதியில் அடைகிற துளியும் நியாயமற்ற முடிவும்தான்.

ஆனால் இதில் அண்ணன் சீமான் வித்தியாசமாக யோசித்தார். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுவது. அதுவும் தனித்து போட்டியிடுவது. இளம் தமிழ்த் தேசியர்கள் தேர்தல் என்ற அந்த வேட்டைக்காட்டில் தனித்து திரிந்து, வேட்டையாடப் பழகிப் பழகி இறுதியில் புலியாகவே மாற்றுகிற நம்பிக்கை வித்தை அது .

உண்மையில் ஈரோடு இடைத்தேர்தலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஒன்று தெரியும். நேற்றைய இரவில் எந்த திராவிட ஆதரவாளர்களாலும் நிம்மதியாக தூங்கியிருக்க முடியாது. அவர்களது மகத்தான நம்பிக்கையை அண்ணன் சீமான் உடைத்ததோடு மட்டுமல்லாமல், இனி அந்த நம்பிக்கையை யாரும் சுமக்க முடியாத அளவிற்கு ‘தேவையற்றச் சுமையாக’ மாற்றியதுதான் அவர் செய்ததிலேயே மகத்தான “சம்பவம்”.

எங்களை ஒவ்வொரு நொடியும் எதிர்ப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஏறக்குறைய எல்லா கட்சியினரும் ஒன்றாக நிற்கும் நிலை, மறுபக்கம் எங்கள் கட்சியிலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள் என்கிற தோற்றம்‌ ,

மறுபுறம் அண்ணன் தலைவரை சந்திக்கவே இல்லை என்கிற அவதூறு, அதற்கு ஆதரவாக திராவிடக் கூட்டம் உலகம் தழுவி செய்த ஊடறுப்பு வேலைகள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் எல்லாவற்றிலும் தடை, அனைத்திலும் போராட்டம், ஓட்டு கேட்க செல்லும் இடங்களில் எல்லாம் கூலிப்படைகளை வைத்துக்கொண்டு செய்த தடுப்பு வேலைகள் என நாற்புறமும் பகைச் சூழ்ந்து நிற்கும் களத்தில் அண்ணன் சீமான் அனைத்திற்கும் முகம் கொடுத்து தனித்து நின்றார்.

அவரை வன்மத்தோடு அழுத்தினார்கள்.

அவர் தண்ணீரில் அழுத்தப்பட்ட பந்தாய் மாறினார். எதிரிகள் அழுத்த அழுத்த அவர் எகிறிக் கொண்டு பாய்ந்தார். சிறு தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தவரை ஊதி ஊதி காட்டுத் தீயாய் மாற்றினார்கள். அவர் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினார்.

அந்த சவாலை அவர் விரும்பி ஏற்றார். பிரச்சாரம் முடிவடையும் முந்தைய நாள் இரவில் அவர் எங்களிடத்தில் அழுத்தமாக ஒன்று சொன்னார். ” எது நடந்தாலும் இதுவரை நடக்காத ஒன்றுதான் இனி நடக்கும்” என. நடந்தேவிட்டது.

கிடைத்திருக்கும் 24,182 வாக்குகளும் அதிமுக பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு‌ அளித்த வாக்குகள் என அறிவாலயத்தில் கூலி வாங்கிக் கொண்டு கூவுகிறவர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொண்டு சமாதானம் அடையலாம்.

உண்மை வேறு மாதிரியானது. 25% அதிமுக / பாஜக Core கட்சிக்காரர்கள் எப்போதும் நாம் தமிழரை விரும்பாதவர்கள்.அவர்கள் திமுகவிற்கும் ஓட்டு போட முடியாமல் நோட்டாவில் குத்தினார்கள். மீதம் 75% diluted கட்சிக்காரர்களை ஆளுங்கட்சி ஒட்டுமொத்தமாக எளிதாக விலைக்கு வாங்கியது.

பிறகு நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகள்… அண்ணன் சீமானின் அனல் தெறிக்கும் பிரச்சாரத்திற்கு கிடைத்த வாக்குகள்.திராவிடம் vs தமிழ்த் தேசியம் என்று கிளம்பிய விவாதத்தால் ஈர்க்கப்பட்ட முதல் தலைமுறை இளைஞர்களின் வாக்குகள். திமுகவின் திறமையற்ற ஊழல் மலிந்த ஆட்சி முறைக்கு எதிராக ஒற்றை மனிதனாய் கலகம் செய்யும் சீமானின் ஆளுமைக்கு கிடைத்த வாக்குகள்.

மற்றக் கணக்குகள் அவரவர் கற்பனைக்கு ஏற்றது‌. ஒரு இடைத் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கின்ற ஆளுங்கட்சியை, எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல், பொருளாதார/சாதியப் பின்புலம் இல்லாமல், ஒரு எளியப் பெண் வேட்பாளரை முன்னிறுத்தி, துணிவுடன் கூட்டணி இல்லாமல், தேர்தலை எதிர்கொண்டு, ஏறக்குறைய 25 ஆயிரம் வாக்குகளை ஒரு எளிய கட்சி பெறுகிறது என்றால்.. அது வலுவான ஆளுங்கட்சி முழுமையாக அடைந்திருக்கிற தோல்வி. இனி வரப்போகிற தோல்விகளுக்கெல்லாம் எழுதப்பட்டிருக்கிற முன்னெழுத்து.

நோட்டாவை விட நாம் தமிழர் கட்சி குறைந்து வாக்கு வாங்கி விட வேண்டும் என கணக்கு போட்டு நோட்டு கொடுத்த ஆளுங்கட்சி தனது உள்ளார்ந்த விருப்பத்தில் தோற்றுப் போனது அதன் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி.

கூடுதலாக எல்லாவற்றிலும் மிக முக்கியமான சுவாரசியமான விஷயம் எதுவென்றால்.. இந்தத் தேர்தலில் பெரியார் ஒரு காரணி அல்ல என்ற உண்மை புலப்பட்டதுதான். நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகளுக்கும் பெரியார் ஒரு காரணி அல்ல, திமுக வாங்கிய வாக்குகளுக்கும் பெரியார் ஒரு காரணி (Factor ) அல்ல. திமுக வாங்கிய வாக்குகள் பெரியார் தாத்தாவால் அல்ல, காந்தி தாத்தாவால் என்கிற சமூக வலைத்தள மீம்ஸ்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஈரோட்டு மக்கள் அதைத்தான் காட்டியிருக்கிறார்கள்.

ஏறக்குறைய 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட ஈரோட்டில் பதிவானது என்னவோ ஒரு லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் மட்டுமே. 66 சதவீதம் வாக்குகளில் திமுக பெற்றிருக்கும் வாக்குகளை விட, தேர்தலில் வாக்களிக்காமல் இருந்த மற்றும் திமுகவுக்கு எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகளுக்கு வாக்களித்து இருக்கின்ற, நோட்டாவில் வாக்களித்திருக்கின்ற என இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம். உண்மையான ஜனநாயகப் போரில் ஆளுங்கட்சியான திமுக தோற்றுவிட்டது. அதை மறைக்கத்தான் யாரும் டெப்பாசிட் வாங்கவில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சில சுவாரசியமான காட்சிகளும் நடந்தன.

பெரியாரை முன்வைத்து உங்களால் ஓட்டு வாங்க முடியுமா என அண்ணன் சீமான் போகிறப் போக்கில் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பெரியாரிய அமைப்புகள் இந்த தேர்தல் களத்தினைத் தங்களுக்கான சவாலாக எடுத்துக்கொண்டு , பெரியாரை சீமான் திட்டுகிறார்/ புறக்கணிக்கிறார் /விமர்சிக்கிறார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, ‌ பெரியாரை முன்னிறுத்தி, ஈரோட்டு மண்ணில் வெண்ணிலா என்ற வேட்பாளரை 32 அமைப்புகள் சார்பாக நிறுத்தி, பெற்ற வாக்குகள் 222. உண்மையில் இதுதான் ஈரோட்டில் பெரியார் கொண்டிருக்கின்ற செல்வாக்கா என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பப்போவதில்லை.உண்மையில் பெரியாருக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை.ஏற்கனவே சொன்னது போல அவர் ஒரு Factor இல்லை என்று பெரியாரிய அமைப்புகளே செய்து கொண்ட சுயச் சோதனையின் பதில்தான் இது.

திமுக வழக்கம் போல 2026 தேர்தலையும் இப்படி அணுகி விட முடியாது என்பதை உணர்த்தும் முடிவு தான் இது. அதே சமயத்தில் நாம் தமிழர் தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு மேலெழும்ப முடியும் என்பதற்கான நம்பிக்கையை தன் தம்பிகளுக்கு/ தங்கைகளுக்கு மீண்டும் ஒருமுறை வழங்கி அண்ணன் சீமான் அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக.. எங்கள் வேட்பாளர் அக்கா சீதாலட்சுமியை அருகில் பார்த்தபோது, காயம் பட்ட புலிப் போல கடுமையான களைப்போடு இருந்தாலும் ஆவேசத்தோடு களத்தில் நின்றார்.

சந்திரகுமார் சட்டமன்றத்தில் போய் மேசையை தட்டுவதை தாண்டி எதுவும் பேசப் போவதில்லை. ஆனால் அக்கா சீதாலட்சுமி போய் இருந்தால்…. அவரது அனல் மொழியில் சட்டமன்றம் தகித்திருக்கும். ஈரோட்டின் தலையெழுத்து மாறி இருக்கும். வெறும் சீதாலட்சுமி அல்ல அவர். சளைக்காத கடும் உழைப்பின் அடையாளம்.

நாம் தமிழர் கட்சியை எதிர்த்துப் பேசும் எல்லோருக்கும் ஒரு உண்மை தெரியும். எல்லா விமர்சனங்களையும் தாண்டி அந்தக் கட்சி நிற்கிறது என்று சொன்னால் அதன் உள்ளார்ந்த ஆற்றல் தான். இறுதிவரை மரபு ரீதியான போரிலேயே நிலைத்தவர்களிடத்தில் இருந்து நாங்கள் அடைந்தது.

அது தலைவர் தன் தம்பிக்கு தந்தது. அந்தத் தம்பி தன் தம்பிகளுக்கு தங்கைகளுக்கு தருவது.

“300” திரைப்படத்தில் ஸ்பார்ட்டன் நகரத்துச் சிறுவர்களை இளம் வயதிலேயே காட்டில் விட்டு விடுவார்கள். உறைய வைக்கும் குளிர், கொடும் பசி, உயிர்த் தின்ன அலையும் விலங்குகள்,வாழவே முடியாத நிலை என எல்லாச் சவால்களுக்கு முகம் கொடுத்து பிழைத்து வரும்போது

அவர்கள் வீரர்களாக திரும்புவார்கள்.

அப்படித்தான் இந்த ஜனநாயகக் காட்டில் நாங்கள் நுழைந்த போது இளம் சிறுவர்கள். ஆனால் இன்றோ..

திராவிடத் தலைநகருக்கே சென்று “திராவிட அரசனை” எங்கள் வினாக்களின் கூர்முனையில் நிறுத்தி, சுற்றி பாய்ந்த நரிக் கூட்டத்தை சம்பவம் செய்துவிட்டு, நாங்கள் நிற்கையில்.. நாங்கள் தோற்றாலும் பெருமிதமாக உணர்கிறோம்.

நாங்கள்தான் அந்த 300 பருத்தி வீரர்கள்.

இறுதியாக..

எங்களை வழிநடத்தும் எம் “King leonidas” ஆன அண்ணன் சீமான் அடிக்கடி சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

” நாங்கள் நிரூபிப்பதற்காக போராடுபவர்கள் அல்ல. போராடுவதால் நிரூபிக்கப்பட்டவர்கள்.”

தொடர்ந்து நிரூபிப்போம்.

⚫

மணி செந்தில் .

உயிரற்ற பொய்களும்.. உறைந்திருக்கும் உண்மைகளும்..

(கொஞ்சம் பெரிய பதிவு.. சில வரலாற்று உண்மைகளுக்காக..)

2006 முதல் 2009 வரையிலான காலக்கட்டம். நாங்கள் ஆர்க்குட் இணையதளத்தில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுவை வைத்து இயங்கிக் கொண்டிருந்தோம். அதன் முதல் வருடாந்திரக் கூட்டம் சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை நான் தலைமையேற்று நடத்த ஐயா சுபவீ, அண்ணன் அறிவுமதி, எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன், தோழர் பாமரன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

மறுவருடக் கூட்டத்தில் அண்ணன் சீமான் உரையாற்றினார். இதற்கு நடுவில் அண்ணன் அறிவுமதி மூலம் அண்ணன் சீமான் எனக்கு நெருக்கமாகி இருந்த காலகட்டம் அது. அப்போது சில மாதங்கள் அண்ணன் சீமானோடு எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை. அவர் நாட்டிலேயே இல்லை என்றெல்லாம் தகவல். நீண்ட நாள் கழித்துதான் அண்ணன் சீமான் என் தொடர்புக்கு வந்தார்.அப்போது தோழர் மகேந்திரன் அவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகரத் துணைச் செயலாளர் மற்றும் ‌ கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பணிபுரிந்து வந்தேன்.

அப்போது உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தில் இருந்து நாங்கள் பிரிந்து “இணையத் தமிழர் இயக்கம்” என்பதை உருவாக்கி பணிபுரிய தொடங்கியிருந்தோம். என்னோடு தோழர்கள் கோவை யுவன் பிரபாகரன், விஷ்ணுபுரம் சரவணன், அப்போது சேனா பானா என்று அழைக்கப்பட்ட இப்போது நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிற எனது மைத்துனர் பாக்கியராசன், இப்போது திமுகவில் இருக்கும் டான் அசோக், நண்பன் ஒட்டக்கூத்தன் என பலரும் அதில் இயங்கினோம்.

நீண்ட நாட்கள் கழித்து அண்ணன் சீமான் தொடர்புக்கு வந்த போது மிக முக்கியமான செய்திகள் இருக்கிறது தம்பி.. நேரில் சந்திப்போம் என சொல்லி இருந்தார். இதற்கு நடுவே மாவீரன் முத்துக்குமார் தற்கொடை, அடுத்தடுத்த அண்ணன் சீமான் அவர்களின் கைது என நாட்கள் கழிய அண்ணனை நான் பாண்டிச்சேரி சிறையில் தான் நேரில் சந்திக்க நேர்ந்தது.அப்போது நான் அண்ணன் சீமான் அவர்களின் சிறை தண்டனையை எதிர்த்து எழுதிய “கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று” என்கிற கட்டுரையை தோழர் மகேந்திரன் அவர்கள் தாமரை இதழின் அட்டைப்படக் கட்டுரையாக கொண்டு வந்தார்.

அண்ணன் சீமான் வெளியே வந்த போது போர்ச்சூழல் அங்கே இறுகி இருந்தது. இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குனர்களை வைத்துக்கொண்டு காங்கிரசை பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்காக பெரும் பிரச்சார பயணத்தில் கும்பகோணத்தில் “இணையத் தமிழர் இயக்கம்” சார்பாக கும்பகோணம் மகாமகக் குளத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் ஐயரை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் எழுச்சி உரையாற்றினார்.

அப்போதெல்லாம் கொளத்தூர் மணி அவர்கள், அண்ணன் அறிவுமதி அவர்கள், ஐயா சுபவீ அவர்கள் அண்ணன் சீமானோடு மிக நெருங்கிய உறவு. இவர்கள் சந்திக்கும் பல தருணங்களில் நான் உடன் இருக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அப்போது எல்லா தருணங்களிலும் அண்ணன் சீமான் தன்னுடைய ஈழப் பயணம் அனுபவங்களை முக்கியமாக தலைவரைப் பார்த்து வந்ததைத்தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அதுவெல்லாம் பொய் என்றால் இவர்கள் அங்கேயே மறுத்து பேசி இருக்கலாம். சொல்லப்போனால் பெரியார் திக மேடைகளில் அண்ணன் சீமான் பேசும் போதெல்லாம் தனது ஈழப் பயணத்தின் அனுபவங்களைப் பற்றியும், தலைவரை சந்தித்து வந்தது பற்றியும் உணர்வுபூர்வமாக பேசுவார். அப்போதும் கூட மறுத்திருக்கலாம். அப்போது அருகில் இருந்து கைதட்டி மகிழ்ந்தவர்கள் இப்போது அவர் தலைவரையே சந்திக்கவில்லை என்றெல்லாம் பேசுவது அவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பதை உலகிற்கு காட்டுகிறது.

மறைந்த இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் தலைவரோடு நிகழ்ந்த சந்திப்பு குறித்தும் அப்போது தலைவர் தந்த பணிகளைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தபோது கொடியைப் பற்றி பேச்சு வந்தது. இயக்குனர் மணிவண்ணன் தலைவர் அண்ணன் சீமான் அவர்களுக்கு அளித்த பணிகளை செய்ய தலைவரின் கொடியை சில மாறுதல்கள் மட்டும் செய்து நாம் பயன்படுத்துவோம் என்றார். அந்த சந்திப்பில் தலைவரோடு நடந்த சந்திப்பில் நிகழ்ந்த பல செய்திகளை அண்ணன் சீமான் எடுத்துரைக்க அருகில் இன்று அண்ணன் சீமான் சொல்வதை எல்லாம் மறுக்கின்ற பலரும் இருந்தார்கள். நானும் அருகில் இருந்தேன். முதல் கொடி அறிவிப்பு மாநாடு தஞ்சையில் நானும், தஞ்சையின் மூத்த வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களும் திலகர் திடலில் நடத்தினோம். சோழர்களின் கொடி புலிக்கொடி என்பதால் கொடி அறிமுகத்திற்கு தஞ்சை தேர்வு செய்யப்பட்டது.

நாம் தமிழர் இயக்கமாக இருந்த காலத்தில் இருந்த கொடி சிறிது சிறிதாக சில மாற்றங்கள் அடைந்து இன்று இருக்கின்ற இறுதி நிலையை அடைந்தது.

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலைவரின் எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. தலைவரே ஆன்மப் பலமாக இருந்து அதை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் உறுதியாக உணர்ந்துதான் நான் பெருமிதத்தோடு அண்ணன் சீமானுடன் நிற்கிறேன்.

முதலில் சந்திக்கவே இல்லை என்றார்கள். பின்னர் திரைப்படங்களைப் பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றார்கள். பிறகு ஐந்து நிமிடம் தான் பார்த்தார் என்றார்கள். பிறகு புகைப்படம் மட்டும் தான் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார் என்றார்கள். பிறகு அந்த புகைப்படம் பொய்யானது என்றார்கள். இப்போது வடிவமைத்து கொடுத்தது நான் தான் என்று யாரையோ பேச வைக்கிறார்கள்.

அண்ணன் சீமான் தலைவரை சந்தித்ததை பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எத்தனையோ இயக்கத்தின் மூத்தவர்கள் சொல்ல நான் எல்லாம் கேட்டிருக்கிறேன். சொல்லப்போனால் தலைவர் சந்திப்பில் நடந்த பலவற்றை அண்ணன் சீமான் இதுவரை சொல்லவில்லை. இன்னும் வெளியிடாத பல புகைப்படங்கள் அதற்கு ஆதாரமாக இருக்கின்றன. அதில் சிலவற்றை நானே பார்த்திருக்கிறேன்.

தலைவரை சந்திக்காத ஒருவரை பற்றி தன் இறுதி நொடியில் அண்ணன் சூசை பேச வேண்டிய அவசியம் இல்லை. “சீமான் கிட்ட சொல்லுங்கோ.. அவரிடம் தான் விட்டுப் போறோம்..” என்கிற அவரது குரல் இன்னும் இந்த காற்றில் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அண்ணன் சீமானின் ஈழப் பயணம் எந்த நேரத்தில் எப்பேர்பட்ட தருணத்தில் நடந்தது, அதில் என்னென்ன பேசப்பட்டது, அவர் எவரையெல்லாம் சந்தித்தார் என்பது அண்ணன் சீமானோடு அப்போது இருந்த எனக்கு உட்பட எல்லோருக்கும் தெரியும்.

இப்போது தரம் தாழ்ந்து பேசும் பெரியவர் கொளத்தூர் மணி அவர்கள் இதையெல்லாம் பொய் என்று சொல்லி இனிமேலும் மறுக்கக்கூடும். மீசையை தவிர வேறு எதையும் நிமிர்த்தாத சுபவீ அண்ணா அறிவாலயத்து திண்ணைக்காக இவற்றையெல்லாம் தவறு என தர்க்கம் செய்யக்கூடும்.

இன்னும் நான் பெயர் சொல்லவே கூசுகின்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதற்கெல்லாம் ஜால்ரா அடித்து கதைகள் கட்டக்கூடும்.

உண்மைகள் தெரிந்தவர்கள் எல்லோரும் உயிருடன் தான் இருக்கிறோம். கவனம்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இதுவெல்லாம் ஏன் பேசப்படுகிறது என்றால் கடந்த பத்து நாட்களாக அண்ணன் சீமான் அடித்த அடி அப்படி.

புதைக்குழியில் ஆழப் புதைக்கப்பட்ட அக்காலத்து விடுதலை இதழ்கள் ஒவ்வொன்றாய் வெளிவர… திராவிடக் கூடாரம் நடுக்கம் அடைந்து அவதூற்றுப் பொய்களை “பெரியாரைக் காப்பாற்ற பெரியவர்கள் துணையோடு” அழைத்து வந்திருக்கிறது.

பொய்களுக்குத்தான் விளம்பரம் தேவை.உண்மைகளுக்கு எந்த வெளிச்சமும் தேவையில்லை. காலப் புழுதிகளை, அவதூற்றுப் புயல்களை தாண்டி கம்பீரமாக நிற்க உண்மைக்கு எப்போதுமே வலிமை உண்டு.

என்னிடம் என் மனச்சான்று அறிய எளிமையான உண்மைகள் இரண்டு உண்டு.

அவன் மன்னாதி மன்னன்.

இவன் மாசற்ற அண்ணன்.

⚫

பெரியார் பிம்பச் சிதைவும், திராவிடப் பதட்டமும்.

“வரலாறு கொடியது. எப்போதும் புனித பிம்பங்களை உடைத்துக் கொண்டே அது நகர்வது. ” என நேற்று என்னிடம் பெரியார் கருத்துக்கள் பற்றி சமகாலத்தில் நிகழ்கிற வாத/ பிரதிவாதங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த ஒரு மூத்த இயற்பியல் பேராசிரியர் சொன்னார்.ஏனெனில் புனித பிம்பங்கள் நிரந்தரமானவை அல்ல. எல்லா காலத்திலும் அவற்றின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் புனித பிம்பங்கள் அந்த நிலையில் இருந்து அகற்றப்பட்டு வேறு நிலையில் நகர்த்தப்படுகின்றன.

எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியது என எந்த தத்துவமும் இல்லை. அதற்கு பெரியார் கருத்துக்களும் விதிவிலக்கல்ல என்று சொன்னால் நாம் ஆரிய அடிமைகளாக காட்டப்படுவோம், “பிஜேபியின் B டீம்” ஆக கட்டமைக்கப்பட்டு விடுவோம் என்கிற அறிவுப்பரப்பில் திராவிட ஆதரவாளர்களால் எப்போதும் விடுக்கப்படுகிற மிரட்டலை அண்ணன் சீமான் அடித்து நொறுக்கி விட்டார்.ஏனெனில் இங்கே காலங்காலமாக பெரியார் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஏதேனும் குரல் எழுந்தால் அந்தக் குரல் ஆரியத்தின் குரல்/ ஆர் எஸ் எஸ்ஸின் குரல் என கூக்குரலிட்டு‌,தொண்டை குரல்வளை நெறிக்கப்படுகின்ற காட்சிகள் தான் இதுவரை நடைபெற்று இருக்கின்றன. தமிழக வரலாற்றில் இன்று அண்ணன் சீமான் பெரியாரின் கருத்துக்கள் மற்றும் திராவிட ஆதரவு நிலைகளை நோக்கி எழுப்பி இருக்கிற எதிர்க்குரலை நேர்மையாக எதிர்கொள்ளும் துணிச்சலற்று, சாலைகளில் கட்டப்பட்டு இருக்கின்ற நாம் தமிழர் கட்சி கொடிகளை அறுப்பது, ஆபாசச் சுவரொட்டிகளை ஒட்டுவது என மும்முரம் காட்டுகிற பெரியார் ஆதரவாளர்களின் நிலை மிக பரிதாபகரமானது.

இந்திய வரலாற்றில் எண்ணற்ற பெருந்தலைவர்கள் விமர்சனங்களால் மறுவாசிப்புக்கு/ மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காந்தி குறித்தும் நேரு குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் இது போன்ற விமர்சனங்கள் வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் யாரும் பெரியார் ஆதரவாளர்கள் போல பதட்டம் அடைவதில்லை. சமீபத்தில் கூட ஜவகர்லால் நேரு, எட்வினா மவுண்ட்பேட்டன் பிரபவிற்கு எழுதிய கடிதங்களை குறித்து வட இந்தியாவில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் இவ்வளவு பதட்டங்கள் நிறைந்தது அல்ல. சொல்லப்போனால் அது ஜவகர் மற்றும் எட்வினா என்கின்றதனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்தது.‌அந்த மீறலை கூட உரையாடல்களாக, விவாதங்களாக வடக்கர்கள் வைத்துக் கொண்டார்கள்.இதுதான் பெரியாரின் கருத்துக்களுக்கு நிகழ்கிறது.

பெரியார் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாவது பெரியார் ஆதரவாளர்களால் தாங்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் “கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று சொன்ன பெரியாரை கடவுள் ஆக்கிவிட்டு, பெரியார் தந்த புத்தி போதும் என்ற அகங்காரத்தில், உன்மத்த வெறியில், எதிர்க்கருத்து கொண்டவர்களைத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள் எப்போதும் இருப்பவைதான். ஆனால் பதட்டத்தின் அளவு எப்போதும் இல்லாதது. பிம்பங்களாக மாற்றப்பட்டவர்களின் அடையாளங்களுக்கு எதிராக எதிர்வினைகள் நிகழ்ந்து கொண்டே இருப்பது என்பது இயற்கை. இதில் எவரும் பதட்டமடையவோ வன்முறை வெறிக் கொள்ளவோ எதுவும் இல்லை.பெரியார் ஆதரவாளர்களை, அதிதீவிர பெரியார் எதிர்ப்பாளர்களாக மாற்றியது பெரியாரைப் பற்றி திட்டமிட்டு புனையப்பட்ட மிகை பிம்பமும், காலத்திற்கு ஒவ்வாத முரண்பாட்டு மூட்டையான பெரியாரின் கொள்கைகளும், பெரியார்/ திராவிட ஆதரவாளர்களின் “சகல வியாதிகளுக்கும் மருந்தாக பெரியாரை” மாற்றி வழிபட்ட தொழுகிற மனநிலையும் தான்.

பெரியாரைப் பற்றி அண்ணன் சீமான் முதல் முதலாக விமர்சனம் வைப்பவர் அல்ல. இதற்கு முன்னால் பெரியாரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சமகாலத்தில் தீவிர தமிழ்த் தேசிய தளங்களிலிருந்து எப்போதும் பெரியாரைப் பற்றி விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார் மிக நீண்டகால அரசியல் வாழ்வைக் கொண்டவர். அவரது தத்துவம் என எதையும் நிலை நிறுத்த முடியாத முரணான/ சீரற்ற அரசியல் நடவடிக்கைகளை உடையவர். காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்து காங்கிரசை எதிர்ப்பதற்காக முதல் மொழிப்போரை ஆதரித்த பெரியார், அதே காங்கிரசை ஆதரிப்பதற்காக, இரண்டாம் மொழிப்போரை எதிர்த்தார். மொழிப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களை “காலிகள்” என்று அழைத்தார். ஏனெனில் அவருக்கு மொழி பற்றி எந்த அபிமானமும் கிடையாது.அதனால்தான் தமிழ் காட்டுமிராண்டி மொழியானது. சனியன் ஆனது. முதல் குடியரசு இதழ் 02-05-1925 தொடங்கும் போது “ஈசன் அருளால்” தொடங்கியுள்ள பெரியார், 1-1-1962 ல் எழுதிய விடுதலை கட்டுரையில் “10 வயதில் இருந்து தான் நாத்திகன்” என கூறியுள்ளார். முதல் குடியரசு இதழை தொடங்கும் போது அவருக்கு வயது 46. ( ஆதாரம் முருகு ராசாங்கம் எழுதிய பெரியாரும் குடியரசும்).1925 ஆம் வருடம் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த சர் பி.டி. தியாகராயர் இறந்தபோது “அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார். ராமசாமி நாயக்கர் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் தனக்கான சாதிப் பெயரை 1927 ஆம் வருடம் தான் நீக்கினார்.ஆதிக்க எதிர்ப்பு என்கிற நிலையில் வெண்மணி படுகொலையில் பெரியார் முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவாக தான் நின்றார்.

காங்கிரசு கட்சி கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டத்தைப் போல ஒரு காத்திரமான போராட்டத்தை பெரியார் ஏன் தமிழ்நாட்டில் முன்னெடுக்கவில்லை என்பது கேள்விக்குரியது. குடியரசு முத்திரைக்கு கீழாக பாரதியாரின் வரிகள் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள்” என இடம் பெற்றிருந்தது. 1930க்கு பிறகாக பாரதியாரை பெரியார் நிராகரித்தார். அண்ணா மனமுவந்து ஏற்றுக் கொண்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்புத் தினமாக அறிவித்தார்.நாத்திகம்/ சாதி எதிர்ப்பு/ இந்திய எதிர்ப்பு/ இந்தி எதிர்ப்பு -ஆதரவு என்பதெல்லாம் பெரியாருக்கு காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம் என்றால்,இதே கருத்து மாற்றம் பட்டறிவு மூலம் அண்ணன் சீமானுக்கு நிகழும் போது ஏன் வலிக்கிறது என்பதுதான் நமது கேள்வி.

பெரியாரின் நிலைப்பாடுகள் காலந் தோறும் மாறி வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் தத்துவார்த்த ரீதியில் அமையாமல் அந்தந்த சூழ்நிலைகளுக்கு தகுந்தாற் போல்/ நபர்களுக்கு தகுந்தாற் போல் பெரியார் என்ற தனி மனிதனின் எண்ணத்திற்கும் முடிவுக்கும் ஏற்றாற் போல் அமைந்தன.பெரியார் வாழும் காலத்திலேயே அண்ணல் தங்கோ, கி ஆ பெ விசுவநாதம், ம.பொ.சி போன்ற தமிழினத் தலைவர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.இறுதிக்காலத்தில் தன் பாடல்களில் திராவிடத்தை நீக்கிய பாரதிதாசனோடு முரண்பட்டார் என்றெல்லாம் தகவல்கள் உண்டு.

அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு நூல் என் கைகளுக்கு கிடைத்த காலத்தில் நான் தீவிர பெரியார் ஆதரவாளன்.பிறகு அ. மார்க்ஸ் அந்தப் புத்தகத்திற்கான எதிர்வினை கட்டுரைகளை ஒரு நூலாக்கி இருந்தார். “குணா பாசிசத்தின் வடிவம்” என்று நினைக்கிறேன். அதன் பிறகு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கின்ற ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் தாய் மண் இதழில் வெளியிட்ட கட்டுரைகள் பெரியார் குறித்து மீண்டும் விவாதப் பொருளாக மாறின. பிறகு பெரியார் குறித்து விமர்சனங்களோடு எண்ணற்ற புத்தகங்கள் காலம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதில் தமிழ்த் தேசிய தத்துவப் பேராசான் ஐயா பெ.மணியரசன் எழுதிய பெரியாருக்கு பின் பெரியார் , திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா..?, வெண்மணித் தீ வெளிச்சத்தில் காங்கிரசு கம்யூனிஸ்ட் திராவிட அரசியல், வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய “தமிழ்நாடு தமிழருக்கே! ,” வழக்கறிஞர் குப்பன் எழுதிய தமிழரின் இனப் பகை ஈவேரா, சுப்பு எழுதிய திராவிட மாயை, சடகோபன் எழுதிய ஆரிய திராவிட மாயை, முருகு ராசாங்கம் எழுதிய “பெரியாரின் முதல் குடியரசு இதழ் கிடைத்துவிட்டது” போன்ற பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக பெரியார் இடைநிலை சாதிகளுக்கு மட்டும்தான் ஆதரவாளர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அல்ல என்கிற நிலைப்பாட்டில் ஏராளமான நூல்கள் தாழ்த்தப்பட்டோர் பார்வை நிலையில் இருந்து எழுதப்பட்டு பெரியாரின் எழுத்துக்கள் மறுவாசிப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன.

பெரியார் மறைவுக்குப் பின்பு “பெரியாரின் கொள்கைகளை குழித் தோண்டிப் புதைத்த திராவிடர் கழகம்” என வே ஆனைமுத்து எழுதிய புத்தகமும் இருக்கிறது.

தமிழ்த் தேசியம் எதிர் திராவிடம் என வரும்போது திராவிடத்தின் வாளாகவும் திராவிடத்தின் கேடயமாகவும் பெரியாரே புனித பிம்பமாக முன்னிறுத்தப்படுகிறார்.எனவே காலங்காலமாக தமிழ்த் தேசியவாதிகளால் பெரியார் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். மேலும் தேசிய இனம், தேசம் ,மொழி, நிலப்பரப்பு போன்ற எதிலும் பெரியார் விருப்பம் கொண்டவர் அல்ல. எனவே தமிழர் இன உரிமைகளுக்கான கருத்தியலின் அரசியல் வடிவமான “தமிழ்த் தேசிய அரசியல்” பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானது தான்.‌

தமிழ்த் தேசியம் என்கின்ற இன விடுதலை அரசியல் பயணத்தில் நிற்பவர்களுக்கு திராவிடம் என்பது மிகப்பெரிய தடையாக எழும்போது, பெரியார் நிலைகள் தாக்கப்படுவது இயல்பானது. மேலும் பெரியாரை தமிழ் இன அறிவுலகத்தின் உச்சமாக வைத்து வழிபடும் அந்த வழிபாட்டு மனநிலை தான் அதிகாரத்தின் வழியாக ‌பொது புத்தியாக மாறி இன்று பெரும் ஆபத்தாக மாறி நிற்கிறது.எனவே அண்ணன் சீமான் எழுப்பி உள்ள பெரியார் குறித்த விமர்சனங்களை சார்ந்து திராவிடக் கூடாரங்களில் எழும் வரையறையற்ற பதட்டம் அவர்களது கருத்தியல் வறட்சியை காட்டுகிறது.

மேலும் பெரியார் புத்தகங்களை முன்வைத்து நிகழும் இந்த உரையாடலில் சான்றுகளைத் தேடி இரு தரப்பும் தேடி அலைந்துக் கொண்டு இருக்கையில், அதை நாட்டுடைமை ஆக்காமல் தனி உடைமையாக வைத்திருப்பது குறித்து திராவிட ஆதரவாளர்கள் பேச மறுப்பதன் உண்மை பொருள் என்னவெனில்.. பெரியார் கருத்துக்கள் பல, இன்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு, ஒன்றுக்கொன்று முரண்பட்டு, அவரது பிம்பத்தை அவரே சிதைக்கின்ற வகையில் அமைந்திருப்பது தான்.

இது பெரியார் மறுவாசிப்புக்கு/ விமர்சனங்களுக்கு உள்ளாகிற‌, புனித பிம்பம் உடைகிற காலம். பெரியார் மட்டுமல்ல , காலம் என்கிற மாமலைக்கு முன்னால் எல்லாப் பெரிய மனிதர்களும் அணு அளவைத் தாண்டிலும் சிறியவர்களே.

அண்ணன்- பேரன்பின்அதியுச்ச உணர்வெழுச்சி

❤️

ஒரு ஆட்டால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் படைக்கு நான் அஞ்சவில்லை, ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆடுகளின் படைக்கு நான் அஞ்சுகிறேன்.

–மாவீரன் அலெக்சாண்டர்.

ஏனெனில் அந்த ஒற்றைச் சிங்கம் எளிய ஆடுகளை தன் போலவே மாற்றும் வலிமை கொண்டது. அப்படித்தான் ஆடுகளாய் திராவிட- தேசிய அரசியல் /திரைக் கவர்ச்சி/ சாதி /மத அடிமை என அறிவிலிகளாய் திரிந்த ஒரு தொன்ம இனத்தின் ஆட்டுக் கூட்டத்தை புலிக் கூட்டமாக மாற்றிய ஒரு சிங்கத்தின் வாழ்வில் இருந்து சாட்சியாய் நான் வாழ்ந்து பார்த்த சில சம்பவங்கள்.

**
அந்த இரவும் அந்தப் பயணமும் மிக நீண்டவை. ஏறக்குறைய தமிழ்நாட்டின் குறுக்கே நாங்கள் கடந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு விடுதியில் இடம் கிடைத்தவுடன் எல்லோரும் உச்சகட்ட களைப்பில் உறங்க சென்றோம். பின்னிரவில் ஏதோ ஒரு விழிப்பில் விழித்து பார்த்த போது… அருகே இருந்த அண்ணன் ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.

“என்ன அண்ணா.. தூங்கலையா..?” என கேட்டேன்.

“நான் தூங்கிட்டா யார் படிக்கிறது..?” என கேட்டார். பிறகு அவரே “நீ தூங்கு ‌. உனக்கும் சேர்த்து அண்ணன் படிக்கிறேன்.!” என மெலிதாக சிரித்துக் கொண்டே சொன்னார்.

உண்மையில் நாங்கள் அன்று தூங்கிக் கொண்டுதான் இருந்தோம். அண்ணன் எங்களுக்கும் சேர்த்து படித்துக் கொண்டிருந்தார். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறார்.

மறுநாள் கூட்டத்தில் மழை பெய்தது. மழையைத் தாண்டி தமிழ் தான் வலிமையாக கொட்டி தீர்த்தது என கண்டோர்/ நனைந்தோர் சொன்னார்கள்.

**
ஏழு தமிழர் சிறையில் இருந்த காலம் அது. மூவர் தூக்கு கயிற்றுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கிற்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை. அதற்கான எல்லா பணிகளையும் முன்நின்று செய்தவர் அண்ணன். எங்களை எல்லாம் ஆளுக்கு ஒரு பணி கொடுத்து இரவு பகல் பாராது அவர்தான் இயக்கிக் கொண்டிருந்தார். அந்தக் கடைசி பத்து இரவுகளும் அவர் தூங்கவில்லை என்பதை உடன் இருந்த நாங்கள் அனைவரும் அறிவோம்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தூக்கிற்கு தடை போட்டு தீர்மானம். எல்லா தலைவர்களும் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தார்கள். தான்தான் முயற்சி செய்தேன் என்றும் தன்னுடைய இயக்கம்தான் போராடியது என்று அவரவர் அந்த வெற்றியை தன்னுடைய வெற்றியாக பதிவு செய்து கொண்டிருந்த வேளையில்…

அண்ணன் தம்பிகளோடு தனியே நடந்து வந்து கொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஓடிச்சென்று அவரிடம் கருத்து கேட்டார்கள். அவருக்கு கண்கள் கலங்கி இருந்தன. மற்ற தலைவர்களைப் போல இல்லாமல் அவர் தன்னுடைய கட்சியை, தான் அந்த வழக்கிற்காக செய்து கொண்டிருந்த பணிகளை பற்றி எல்லாம் பதிவு செய்யாமல்.. அந்த நொடியில்
தூக்கு மேடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த முருகன் சாந்தன் பேரறிவாளன் என்கிற மூன்று தம்பிகளின் அண்ணனாக அவர் மாறிப் போனார்.

” என் தம்பிகளின் தூக்கு கயிறு அறுக்க உதவிய அனைவருக்கும் நன்றி. தங்கை செங்கொடியின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. அங்கையர்கண்ணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தங்கைகள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு செல்கிறேன்.” என சொல்லிவிட்டு கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டே அவர் அங்கிருந்து கடந்து சென்றார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில்.. “அண்ணா..! இந்த வழக்கிற்காக நாம் எவ்வளவோ செய்து இருக்கிறோம்.. ஏன் அதை ஊடகங்களிடம் நீங்கள் வெளிப்படுத்தவில்லை..? ” என சற்றே குமறுலுடன் நான் கேட்க…
என்னை உற்றுப் பார்த்தவாறு அவர் சொன்னார். ” மற்றவர்களுக்கு அது அரசியல். எனக்கு உயிர் வாதை. என் தம்பிகள் தூக்குக்கயிருக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது என் கட்சிக்காகவோ என் எதிர்காலத்திற்காகவோ நான் பேச முடியாது. தம்பிகளை இழக்க முடியாத ஒரு அண்ணனாக மட்டும் தான் என்னால் சிந்திக்க முடியும்..” என்றார். இதுதான் அவர்.

**
தங்கை அனிதா நீட் என்ற கொடுமையால் கொலை செய்யப்பட்டு விட்டாள். அவளது உடலுக்கு முன்னால் அண்ணன் சீமான் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அண்ணன் திருமாவளவன் அங்கு வந்தார். கூட்டம் அதிகமாக அண்ணன் சீமான், அண்ணன் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தில் அமர வைக்கப்பட்டார்கள்.
அப்போது தங்கை அனிதாவின் மரணத்தை மிக எளிதாக கடக்க முடியாது, இதை முன் வைத்து நீட்டிற்கான போராட்டத்தை நாம் கூர்மைப்படுத்துவோம் என அண்ணன் சீமான் விசிக தலைவர் திருமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணன் திருமாவிடம் காவல்துறை தொடர்ச்சியாக நிர்பந்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது. இப்போது உடல் அடக்கத்தை பார்ப்போம், பிறகு போராட்டத்தை முன்னெடுப்போம் என சொன்னதில் அண்ணன் சீமானுக்கு மாற்று கருத்து இருந்தது. இல்லை அண்ணா.. நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமென சீமான் அண்ணன் மீண்டும் வலியுறுத்த, அதற்குள் திமுக தலைவர்கள் வரத் தொடங்க, இறுதி ஊர்வலம் வலுக்கட்டாயமாக தொடங்கப்பட்டது.

நாங்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்த பொழுதில்.. முன்னிருக்கையில் உள்ளம் முழுக்க கொந்தளிப்போடு கண்கலங்க அமர்ந்திருந்த அவர் “படிக்கணும்னு நினைச்ச தங்கச்சி செத்துட்டா.கோர்ட்டு அரசியல் என எல்லோரும் சேர்ந்து கொன்னுட்டாங்க. எதுவுமே இல்லாத இந்த ஊர்ல பிறந்து படிச்சி யாரும் வாங்க முடியாத மதிப்பெண் வாங்கிய பிறகும் கூட அவ மருத்துவராக முடியாம சாகுறானா , நாமெல்லாம் வெறும் பிணம் தாண்டா. பாழப்போன இந்த நிலத்துல எதுவும் முளைக்காதுடா..” என ஆற்றாமையால் கொந்தளித்தார்.

பிறகு ஆழமாக யோசித்து விட்டு “நமக்கு அதிகாரம் என்று ஒன்று கிடைக்கும் காலத்தில்.. இந்த நீட்டு போன்ற அநீதிகளை ஒழித்து, கல்வியையும் மருத்துவத்தையும் முழுமையாக இலவசமாக மாற்றி, தங்கை அனிதா பெயரில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட வேண்டும்..” என்றார். அதில் நம்ம வீட்டுப் பிள்ளைங்க எல்லோரும் படிக்க வேண்டும்.” என்றும் சொன்னார்.

அவரது கனவுகள் விரிந்து கொண்டே போயின. அந்த மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும், மக்களுக்கு எப்படிப்பட்ட உலகத் தரம் கொண்ட மருத்துவம் வழங்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லிக் கொண்டே வர விடியத் தொடங்கியிருந்தது.

அப்போதும் அவர் படிக்க முடியாமல் இறந்து போன ஒரு தங்கையின் அண்ணனாகதான் பரிதவித்துக் கொண்டிருந்தார். எல்லா சூழ்நிலைகளிலும் அவரிடம் தாய்மை போல சுரப்பது ” அண்ணன்” என்கிற
பேரன்பின் அதியுச்ச உணர்வெழுச்சிதான்.

எல்லாவற்றையும் இழந்து கடைசியில் உயிரையும் இழக்க துணிகிற ஒரு கூட்டத்திற்கு, “அண்ணன்” என்கின்ற அவரை விட்டால் அழுவதற்கு கூட நாதியில்லை.


இலட்சிய வேட்கை நிறைந்த அவரது கனவுகள் வற்றா ஊற்றை போன்றவை. ஒவ்வொரு நொடியும் அலையடித்துக் கொண்டிருக்கும் கடல் போல அவரது முயற்சிகள் மீண்டும் மீண்டும் தமிழரின் இதயக்கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கின்றன.

நூற்றாண்டுக் கண்ட பிழைப்புவாத திராவிடத்தை , இப்போதுதான் தளிர்கொண்டு தழைக்கும் தமிழ்த் தேசியம் கொண்டு அவர் வீழ்த்தத்தான் போகிறார். திராவிடத்தை பற்றி சிந்திக்கும் எவரும் இனி தமிழ் தேசியத்தைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது என்கிற நிலையை ஏற்படுத்திய அதி மனிதன் அண்ணன் சீமான் மட்டுமே.

அவர் காலத்திலேயே அவர் வெல்வார்.
அந்தக் காலத்தையும் அவரே உருவாக்குவார். ஏனெனில் காலமும் அவர்தான்.களமும் அவர்தான்.

அவர் நிழல் பிடித்துப் பின் தொடர்வது மட்டுமே நம் கடமை. அதுவே பெருமை.

எம் தமிழினத்து ஒற்றை மன்னன் காட்டிய என் அண்ணன் சீமான் அவர்களுக்கு.. மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

கொள்கைத்தலைவன்_சீமான்

❤️

கொள்கை சார்ந்த எதிர்ப்பும் ஆதரவும்..

விஜய் அரசியலுக்கு வருவதாக சொன்ன போது அவரை வாழ்த்தி தம்பி என அழைத்து மகிழ்ந்தவர் அண்ணன் சீமான். பல்வேறு சமயங்களில் அவருக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் விஜய்க்காக குரல் கொடுத்து நின்றவர் அண்ணன் சீமான். அது அவரது பேரன்பு.

ஆனால் தனது முதல் கொள்கைப் பிரகடன மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் கொள்கைக் குழப்பம் செய்ய ஆரம்பித்தபோது அண்ணன் சீமானின் நிலைப்பாடு மாறத் தொடங்குகிறது. சம்பந்தமே இல்லாமல் அண்ணன் சீமானை சீண்டி வார்த்தைகள் விட்டது விஜய் தான். தன் மீது அன்பு கொண்டு நிற்பவரை பொது மேடையில் தேவையில்லாமல் பேசி எதிரியாக்கிக் கொண்டவர் விஜய்தான்.கூட்டம் கூடிய ஒரே காரணத்தால் நிதானம் தவறி விஜய் செய்த வரலாற்றுப் பிழை அது. பறக்கும் விமானத்தை பார்க்க கூட பத்து லட்சம் மக்கள் கூடிய ஊர் இது. கூட்டத்திற்காக கொள்கையை மாற்றி குழப்பம் செய்யும்போது அது எதிர்க்கப்படத்தான் செய்யும்.

ஒருவரின் கொள்கை நிலைப்பாடுகள் தான் எதிரியா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

எதிரிக் கட்சியாக இருந்த போதும் சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எதிர்த்து கிளம்பிய வட இந்தியா அரசியல் தலைவர்களுக்கு எதிராக தம்பி உதயநிதி பேசியது தவறில்லை என அண்ணன் சீமான் ஆதரவுக் குரல் கொடுத்தார். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் கன்னடர்களால் அவமானப்படுத்தப்பட்ட போது அதை எதிர்த்து முதல் கண்டன குரல் தமிழ்நாட்டில் எழுப்பியதும் அண்ணன் சீமான் தான்.

இதற்கு முன்பாக பெரியார் சிலையை அவமானப்படுத்திய போதும், இடிப்பேன் என எச்.ராஜா பேசிய போதும் அதைக் கடுமையாக எதிர்த்துப் பேசியது அண்ணன் சீமான் தான்.

அதேபோல ஆளுநர் ரவி தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு மாநில அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்து கண்டனம் தெரிவித்ததும் ஆளுநர் வீட்டை பூட்டு போட்டு முடக்க வேண்டும் என தெரிவித்ததும் அண்ணன் சீமான் தான்.

அண்ணன் சீமான் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்.கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்தே ஆதரவும் / எதிர்ப்பும். நபர்கள் சார்ந்து அல்ல. அதனால்தான் அண்ணன் சீமானால் விஜய் அன்று ஆதரிக்கப்பட்டார். இன்று எதிர்க்கப்படுகிறார்.

கடந்த 14 வருடங்களாக “தமிழ்த் தேசியம்” என்கிற மண்ணின் மைந்தர்களுக்கான அரசியல் கருத்துருவை வெகுசனமாக்கி, அதை வீதிக்கு வீதி தனது வீரிய முழக்கங்களால் எடுத்துச் சென்று சேர்த்து, இனம் அழிந்தபோது, நம் உரிமைகள் களவாடப்பட்ட போது, திராவிடம் செய்த துரோகங்களை தமிழகம் எங்கும் ஆயிரக்கணக்கான கூட்டங்களில், ஆயிரக்கணக்கான மணி நேரங்களில், தன் அடி வயிற்றுக் குரலில் இருந்து பேசி , இந்த மண்ணுக்கான ஒரு மாற்று அரசியலை உருவாக்கி, திராவிடத்திற்கு எதிரான ஒன்றாக நிலை நிறுத்தும் போது, “மாற்று அரசியல்” என்பதெல்லாம் பொய் எனவும், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று எனவும் விஜய் குழப்படி வேலை செய்யும் போது அதை அண்ணன் சீமான் வேடிக்கை பார்த்துக்கொண்டு ஆதரித்தால் தான் தவறு.

அதில் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் பெற்ற தாய் தந்தையாக கூட இருந்தாலும் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை.இங்கே யார் மீதும் தனிப்பட்ட முரண் இல்லை.

ஆனால் எங்களிடம் நாங்கள் அழிந்த கதை ஒன்று ரத்தமும் சதையுமாக இருக்கிறது. எங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கள் கண் முன்பாக திராவிடத்தாலும், இந்தியத்தாலும் வீழ்த்தப்பட்ட வரலாறு எங்களுக்குள் வலித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது கனிம வளங்கள், எங்களது உரிமைகள், என அனைத்தையும் எடுத்துக் கொடுத்து விற்கிற மோசடித்தனத்தை திராவிடமும் இந்தியமும் கூட்டு சேர்ந்து செய்யும் போது இந்த மண்ணில் பிறந்தவர்களாகிய நாங்கள் அதை எதிர்த்து நிற்க வேண்டியதை எங்களது பிறப்பின் கடமையாக நாங்கள் கருதுகிறோம்.

அதை திசை மாற்ற எவர் வந்தாலும் சரிதான். அவர்கள் எங்களுக்கு பகைதான்.எனவேதான் “தமிழ்த் தேசியம்” என்பதை பிழைப்பு வாத திராவிடத்திற்கு எதிராகவும், சுரண்டல் முதலாளித்துவ இந்தியத்திற்கு எதிராகவும் நாங்கள் முன்வைக்கிறோம். எம் தத்துவத்தை யார் பலவீனப்படுத்தவோ அல்லது வீழ்த்தவோ முயன்றாலும் அவர்கள் எங்கள் எதிரிகள் தான்.

எம் தத்துவத்தை எதிர்த்து அல்லது குழப்பி வீழ்த்த யார் வந்தாலும் சரிதான். எதிர்க்கத்தான் செய்வோம். வலிமையாக அடிக்கத்தான் செய்வோம். அது வலிக்கத்தான் செய்யும்.

எசப்பாட்டுஅல்ல.நிசப்பாட்டு.

🔴

தமிழன் என்றேன்.
திராவிடன் என்றாய்.

எப்படி என்றேன்.

மொழிக்குடும்பம்
என கால்டுவெல்
சொன்னார் என
கர்வமாக சொன்னாய்.

அப்புறம்
கன்னடன் ஏன்
தமிழ் எழுத்துகளை
அழிக்கிறான்
என்று எளிமையாக
கேட்டேன்.

ஆவேசமாக..
தமிழன் என்றால்
பார்ப்பனர்கள்
வந்துவிடுவார்கள்
என அலறினாய்.

திராவிடம்
என்பதே
தென்னிந்திய
பார்ப்பனர்களை
குறிக்கும் தானே..!
என நிமிர்ந்தேன்.

திராவிட
இயக்கத்திற்கே
பார்ப்பனர்கள்
தலைமை
தாங்கினார்களே..?
என நடுங்கும்
உன் விழிகளை
பார்த்து
அடுக்கடுக்காய்
வினாக்களை
தொடுத்தேன்.

தமிழன் என்றால்
சாதி பிரிப்பான்
என சாதித்தாய்.
திராவிடன்
எதை பார்த்து
தமிழனை பிரிக்கிறான்
என கண் சிவந்தேன்.

சாதி பார்த்து
சீட்டு கொடுத்ததும்,
சாதி கட்சிக்கு
நோட்டு கொடுத்ததும்
திராவிடன் தானே
என மோதினேன்.

திராவிடம் என்பது
இனம் என்று இறுமினாய்.
அதை ஏன்
தமிழ்நாட்டை
தவிர வேறு
எங்கும்
சொல்ல முடியவில்லை
என உறுமினேன்.

நாம்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
நாட்டால் இந்தியன்
மழுப்பினாய்.

அதெப்படி
ஒருவனுக்கு
நாடும் இனமும்
மொழியும்
வெவ்வேறாக
இருக்கும் ?
என உன்
சட்டையை
பிடித்தேன்.

கருப்பும்
சிவப்புமாக
ஏதோ
மயக்கப் பொடியை
ஊதினாய்.

ஜெய் ஜக்கம்மா
ஜெய் ஶ்ரீராம்
என கத்திவிட்டு
அதோ ஒடுகிறாய்.

ஊராருக்கு
ஒரு சொல்
சொல்வேன்.

ஓடும் அவனை
யாரும் பிடிக்காதீர்கள்.

🔴

தமிழர் நல் திருநாடு

திராவிடன் என்பது ஒரு இனம் இல்லை. அதற்கென பொதுவான மொழி இல்லை. வரையறுக்கப்பட்ட நிலம் இல்லை. பொதுவான பொருளாதார வாழ்க்கை இல்லை. திராவிடன் எல்லோரும் ஓரினம் என சொல்ல தமிழ்நாட்டைத் தவிர பிற ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் யாரும் இல்லை..

எனவே தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் திராவிடம் என்றால்…
அது அநீதி தானே..

எங்கள் அடையாளத்தை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்.. தமிழர்கள் நாங்கள் திராவிடர்கள் என்று எங்களை ஏன் இனம் மாற்றிக் கொள்ள வேண்டும்…??

திராவிடம் என்பது தமிழ்ச் சொல் அல்ல.

திராவிடம் எங்களை இந்துக்கள் என்கிறது. தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்லர்.

திராவிடம் ஆரியர்களை கோவிலுக்குள் வைத்து விட்டு எங்களை கோவிலுக்கு போகாதே என்கிறது.

தமிழர்கள் நாங்களோ “கோவில் கட்டியதும் நாங்கள்தான்.. உள்ளே இருக்கும் சாமியும் எங்களுடையது தான்..” என்கிறோம்.

திராவிடம் தமிழ் மொழியின் தொன்மத்தை மறுக்கிறது. எங்களது கீழடி ஆதிச்சநல்லூர் போன்ற பண்பாட்டு விழுமியங்களை திராவிட பண்பாடு என மாற்றி எங்கள் அடையாளங்களை எங்களிடமிருந்து திருடுகிறது.

மற்ற திராவிட மொழிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் திராவிடம் செல்லுபடியாகாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமையாக திராவிடம் நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் எங்கள் மீது நடத்தப்படும் பண்பாட்டு தாக்குதலாக, வரலாற்றுப் படையெடுப்பாக கருதி முழுமூச்சாக எதிர்க்கிறோம்.

இதில் ஒளிவு மறைவிற்கு ஒன்றும் இல்லை. அதற்காகவே “நாம் தமிழர்” என்ற பெயரில் நாங்கள் அரசியல் களத்திற்கு வந்தோம்.

இனி எம் மண்ணின் பூர்வ குடிமக்கள் “நாங்கள் தமிழர்கள்- திராவிடர்கள் அல்லர்” என எழுச்சிக் கொள்வதை எந்த திராவிட சதியாலும் வீழ்த்தி விட முடியாது.

கம்பீரமாக
தலைநிமிர்ந்து சொல்வேன்.

நான் தமிழன்.
பிறப்பாலும் இனத்தாலும்
நான் தமிழன்.
திராவிடன் அல்ல.

என் நாடு தமிழ்நாடு.
திராவிட நாடு அல்ல.

என் தாய்மொழி தமிழ்.
என் இனம் தமிழினம்.

தமிழ் இனம் என்பது
ஒரு தேசிய இனம்.

மொழியால், நிலத்தால்,
பொதுவான பண்பாட்டினால்,
பொதுவான பொருளாதார அமைப்பால்,
வரலாற்றின் போக்கில் தமிழர்களாகிய
எங்களுக்கு ஏற்பட்டுள்ள ‘ஓரினம்’ என்கிற உளவியலால்..

நாங்கள் தமிழர்கள்.

ஒருபோதும் நாங்கள் திராவிடர்கள் அல்லர்.

திராவிடம் என்பது பூர்வகுடிகளான தமிழர்களாகிய எங்கள் மீது நடத்தப்பட்ட வலுக்கட்டாயத் திணிப்பு. பொய்மையான வரலாற்று திரிபு. எம் மண்ணை பிறமொழியாளர்கள் ஆள்வதற்கும் , எம்மை சுரண்டுவதற்குமான குரூர சதி.

ஆரியத்திற்கு எதிரான தமிழர்களின் போரில் ஆரியத்திற்கு ஆதரவான திசைத்திருப்பல்தான் திராவிடம்.

திராவிடத்தை அதன் அடையாளத்தை இம் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் நாங்கள் மறுக்கிறோம் . வலிமையாக உறுதியாக எதிர்க்கிறோம்.

எங்களுக்காக உழைப்பவர்கள்..

அண்ணன் சீமானுடன் நிற்பதும், அவரது நகர்வுகளை கவனிப்பதும், அவ்வளவு சுவாரசியமாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் அறிவாலய அடிமைகளையும்,ரூ 200 உபீஸ்களையும் அவர் கதற விடுவதை காணும் போது.. “இதற்குத்தானே காத்திருந்தோம் பாலகுமாரா‌‌..” என்பது போல பார்க்க அவ்வளவு பரவசமாக இருக்கிறது.

யாராவது நாம் தமிழர் கட்சியில் இருந்து நீங்கி விட மாட்டார்களா என அறிவாலய அடிமை ஊடகங்கள் அலைவதை காணும் போது.. ‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷ் தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை காட்டுவதற்காக எதிரி அணியிடம் வேண்டுமென்று அவுட்டாகி வெளியே செல்லும்போது ஒரு ‘கெத்து’ காண்பிப்பாரே.. அதுபோல. நேற்று கூட எங்களது விக்கிரவாண்டி வேட்பாளர் தங்கை அபிநயா காமெடிக்காக ஒரு பதிவை போட அவசர அவசரமாக அதை பிளாஷ் நியூஸ் ஆக போட்டு ஊடகங்கள் “பல்பு” வாங்கிய கதையை பார்க்கும் போது.. ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் எங்களது உயரம் எங்களுக்கே தெரிந்தது.

ஒவ்வொரு பதிவிலும் வந்து தாறுமாறாக மன நோயாளிகள் போல திட்டிக் கொண்டிருக்கும் திராவிடத் திருவாளர்களின் பல உண்மை /போலி ஐடிகளின் பரிதாப நிலையை பார்க்கும் போது.. ஒருவேளை சோறை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத நிலைக்கு அவர்களை ஆக்கி வைத்திருக்கும் அண்ணன் சீமான்தான், அந்தப் பரிதாப ஜீவன்களை தான் நினைத்தது போல் எல்லாம் “இயக்கிக்” கொண்டிருக்கிறார் என நினைக்கும் போது கொஞ்சம் திமிராக இருக்கிறது.

ஒரு ஆளுங்கட்சியின் ஐடி விங் தன் முழு நேரப் பணியாக எங்கள் ஆடியோக்களை வெளியிடுவது, எங்களை உளவு பார்ப்பது,எங்களில் யார் கட்சிக்குள் இருக்கிறார்/ வெளியே போகிறார் என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டே இருப்பது என 24×7 ஒரே பணிக்குள் அவர்களை ஆழ்த்தி வைக்கிற அண்ணன் சீமானின் ஆளுமை ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் சில “ஐடி”கள் எங்களுக்காகவே உழைத்து, எங்களுக்காக / எங்களை பிரதானப்படுத்தி கதை எழுதி, ஆடியோக்களை ஒட்டு கேட்டு, அதை ஒட்டி பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிட்டு, கட்டுரை வரைந்து,மாடாய் உழைத்து, ஓடாக தேய்ந்தவை. மக்கள் எங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பதிவு மேல் பதிவாக போட்டு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்ற அவர்கள்தான் நாங்கள் மறக்கக்கூடாத “நித்தியானந்தாக்கள்”.

வெகு நாட்களுக்கு முன், ஏறக்குறைய கட்சித் தொடங்கிய காலக்கட்டத்தில் அண்ணன் சீமான் சொன்னார் . இதுவரை “கருணாநிதி வாழ்க..!, கருணாநிதி ஒழிக..!” என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல். இனி “சீமான் வாழ்க..! சீமான் ஒழிக..! என்பதுதான் இனி வரும் அரசியல்..” என்றார். இப்போது எக்ஸ்/ முகநூல் தளத்தை பார்க்கும் போது அதை அவர் அடைந்து விட்டார்.

அவர் திட்டமிட்டு ஒவ்வொரு நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அறிவாலய அடிமைகளுக்கான வேலைத் திட்டம் வழங்குவதற்காக பயன்படுத்துகிறார். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் போதுமானது. மற்றதை திராவிட திருவாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இவ்வளவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு என எந்த ஊடகமும் இல்லை. இப்போதெல்லாம் நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் ஊடகங்களே இல்லை. கொஞ்சம் youtube பக்கங்களை பாருங்கள்.tumbnail ல் அண்ணன் சீமான் படம் இருந்தால் அந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு பரப்பப்படுகிறது. அங்கும் அவர்தான் பார்வையாளர்களை ஈர்க்கும் பெரும் சக்தி. இது எங்களால் மட்டும் நிகழ்ந்த அதிசயம் அல்ல. இதில் பெருமளவிற்கு எங்களது “நெஞ்சிற்கினிய எதிரிகளான‌” அறிவாலய அடிமைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அண்ணன் இன்று சாம்சங் தொழிலாளர்களை சந்திப்பார். அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திப்பார். போகிற போக்கில் நாலே நாலு கேள்வி.அவ்வளவுதான்.உடனே
உபீஸ் எல்லாம் கதறிக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

நாம் என்ன பேச வேண்டும் என்பதை நம் எதிரி தீர்மானிப்பது எத்தகைய பலவீனமான நிலை..?? அதைத்தான் பரிதாபத்திற்குரிய திராவிடத் திருவாளர்கள் தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்த் தேசியம் என்றால் யாருக்கும் தெரியாது. திராவிடர் தான் தமிழர் என நினைத்துக் கொண்டு நான் உட்பட பலரும் அலைந்த காலகட்டம் அது.

அதுவெல்லாம் இல்லை என்று நூற்றாண்டுகளாய் கட்டப்பட்ட திராவிடக் கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டே அண்ணன் கம்பீரமாக நிற்கிறான் பார்…

அதற்காகவே நாங்கள் அண்ணன் சீமானுடன் நிற்கிறோம்.

இதில் முக்கியமானது என்னவென்றால்..எங்களோடு, எங்களை விளம்பரப்படுத்த, எங்களுக்காக உழைக்க , தினந்தோறும் பதிவு பதிவாய் போட்டு ஊடகமில்லாத எங்களை பரப்பி விட எங்களுக்கு எதிரே நிற்பதாக நினைத்துக் கொண்டு ஒரு கூட்டம் ‘அப்பாவியாக’ நிற்கிறதே…

அதை நினைக்கும் போது அதுவே “கெத்து தான்..”😉

🟥

மணி செந்தில்.

காலம் உணர்த்தும் கணக்குகள்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திமுகவை தவிர அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில்.. திமுகவின் ஐடி விங் புத்திசாலித்தனமாக(?) வேலை பார்க்கிறோம் என்ற பெயரில் ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி திமுகவின் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, இவர்களின் எஜமானர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அண்ணன் மகன் பேச்சைக் கேட்டு அப்பிரண்டிசுகளை வேலைக்கு வைத்த பெயிண்டர் நேசமணி கதையாகி கந்தலாகிவிட்டது திமுக.

வரலாற்றில் அம்பேத்கரியம் எதிர் திராவிடம் என்கின்ற நிலை புதிதானதல்ல. ஏற்கனவே தாய் மண் இதழிலும், நிறப்பிரிகை இதழிலும் விடுதலை சிறுத்தைகளின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் திராவிடத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் முன்வைத்த கூர்மையான விமர்சனங்கள் 90 களின் இறுதியில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தின.அம்பேத்கரியத்தை, அவர் முன்வைத்த பௌத்தத்தை முழுமையாகப் பின்பற்றும் இளைஞர்களுக்கு பெரியார் ஒருபோதும் ஆதர்சம் அல்ல. குறிப்பாக திமுகவின் பண்ணையார்தனமான சந்தர்ப்பவாத உயர் சாதி இந்து அரசியல் அம்பேத்கரிய இளைஞர்களுக்கு உவப்பானதும் அல்ல. அரசியல் சமரசங்கள் மிகுந்த விடுதலை சிறுத்தைகள்- திமுக உறவு கொள்கைவாத அம்பேத்கரிய இளைஞர்களால் விரும்பக் கூடியதும் அல்ல. அவர்களைத் தான் ஆர்ம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித் போன்றவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். காலங் காலமாய் திமுக தாழ்த்தப்பட்டோரை ஒரு வாக்கு வங்கியாக பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்து “இதுவெல்லாம் நாங்கள் போட்ட பிச்சை” முதலாளிப் பேச்சு பேசுவதை படித்த அம்பேத்கரிய இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பில் தான் உயர் சாதி மேட்டிமை மனோபாவம் கொண்ட திராவிட அரசியல்வாதிகளிடம் அடிமைகளாய் இருப்பதை விட, தனது சண்டைக்காரனாக இருந்தாலும், சக மனிதனாக இருக்கிற வன்னியர்களிடம் சமரசமாக போய்விடலாம் என எண்ணி ஆர்ம்ஸ்ட்ராங் போன்றவர்கள் ஒற்றுமை குறித்தெல்லாம் பேசினார்கள்.

அதை நுட்பமாக உணர்ந்த திமுக ஐடி விங் இப்போது படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பற்றி அவதூறுகள் பரப்புவதையும், படுகொலை பற்றி கேள்வி எழுப்புகின்ற இயக்குனர் ரஞ்சித்தை வசவுகள் பாடுவதையும் தீவிரமாக செய்கிறார்கள். தங்கள் கட்சியை /ஆட்சியைப் பற்றி யாரும் எந்தப் பிரச்சனையிலும் எதிர்த்து பேசி விடக்கூடாது, விமர்சனங்கள் செய்து விடக் கூடாது என்பதில்
மூர்க்கமாக இருக்கும் திமுகவின் ஐடி விங் ஒன்று போதும். திமுகவின் சரிவிற்கு.

அரசியலில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாத முக்கிய பகுதி. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அவரது இடத்தில் ஏன் சமாதி வைக்க அனுமதி மறுக்கிறீர்கள் எனக் கேட்டால் உரிய காரணங்களோடு விதிகளோ சட்டங்களோ ஏதேனும் இருந்தால் அதன் அடிப்படையில் பதில் சொல்ல அறிவு வேண்டும். ஆம்ஸ்ட்ராங் யார் தெரியுமா என்று அவதூறு பரப்ப ஆரம்பித்தால்.. கருணாநிதிக்கு எப்படி மெரினா கடற்கரையில் கல்லறை என்று எல்லோரும் பேச தொடங்குவார்கள். அப்படித்தான் சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் கிளம்பின.
சொந்தக் கூரையின் மீதே கொள்ளி வைக்கிற கூட்டமாக திமுக ஐடி விங் மாறி இருக்கிறது . கூடுதலாக திமுகவிற்கு ‘காரண காரியத்தோடு’ அதிகம் சொம்படித்த பலருக்குதான் இதில் தர்ம சங்கடம். இந்த சமயத்தில் திருமுருகன் காந்தி போன்றோர் ” திமுக ஐடி விங்” பதிவுகளை “ஒரு சிலரது” எனக் குறுக்கிக் கட்டி சமாதானப்படுத்த முயல்வது பரிதாப நகைச்சுவை.

திமுக தன் ஆட்சி காலத்தில் தனக்கான ஆதரவாளர்களை இழந்துக் கொண்டே போவதும், அதை தீவிரமாக ஆதரித்த பலருக்கும் தர்ம சங்கடத்தை எல்லாம் தாண்டி இப்போது கடும் நெருக்கடிகள் ஏற்படுவதும் நீண்ட காலமாக அரசியல் களங்களில் திமுகவைப் பற்றி காலம் காலமாக எச்சரித்து வரும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்னும் காலம் நிறைய உணர்த்தும் தோழர்களே..

நாங்கள் காத்திருக்கிறோம்.

🌑

மணி செந்தில்.
www.manisenthil.com

அம்பேத்கரின் ராஜினாமா.

அம்பேத்கரின் ராஜினாமா.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி சில கருத்துக்களை பேசியிருந்ததை கண்டோம். குறிப்பாக அம்பேத்கர் அவர்களின் ராஜினாமா.

பிரதமர் மோடி ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போதே நாம் கவனமாகி விட வேண்டும். ஏனெனில் அதில் பொய்யும் வரலாற்று திரிபுகளும் கலந்து அக்கருத்தை உண்மை என நிறுவி விடுகிற மோடியின் துடிப்பு மிக ஆபத்தானது.

குறிப்பாக மோடி வழியாக இந்துத்துவ இயக்கங்கள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். திருவள்ளுவருக்கு பட்டை பூசி காவி உடை மாட்டியதில் தொடங்கி வள்ளலாரை இந்து மத சின்னங்களோடு அடையாளப்படுத்துவதில் வரையிலான அடையாளச் சிக்கல்களை அண்ணல் அம்பேத்கருக்கும் ஏற்படுத்தும் இந்துத்துவ சதிகளில் தமிழர்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தின் எதிரியாக தன்னை நிறுவிக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுக்க சனாதன தர்மத்திற்கு எதிராக ஒரு மாபெரும் போரை நிகழ்த்தியவர். இந்து மதத்தின் ஆன்மாவாக கருதப்படும் மனுதர்மத்தை எரித்தவர். நான் ஒரு இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என கம்பீரமாக முழங்கி அதன்படியே பௌத்தத்தை தழுவியவர்.

காங்கிரசை அம்பேத்கர் எதிர்த்தார். ஏனெனில் காங்கிரஸ் உயர்சாதி இந்துக்களுக்கான கட்சியாக இருந்தது. முதன் முதலாக மும்பையில் அண்ணல் அம்பேத்கர் காந்தியடிகளை சந்தித்தபோது இந்த நாட்டில் வாழ்கின்ற தீண்டப்படாத மக்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க காங்கிரஸ் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது என கூற அதனால் என்ன பயன் என மறு கேள்வி கேட்டு காந்தியை திணறடித்தார் அண்ணல் அம்பேத்கர். இந்து முஸ்லிம் பிரச்சனையை விட தீண்டாமை ஒழிப்பு தான் தனக்கு முக்கியம் என அம்பேத்கரிடம் ஒத்துக் கொண்ட காந்தியை அம்பேத்கர் என்றுமே நம்பியதில்லை. இவ்வாறாக காங்கிரஸ் மீதான எதிர்ப்பு நிலையை அம்பேத்கர் எடுத்திருந்தார். அது முழுக்க முழுக்க இந்து சனாதன தத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு.

காந்தியடிகளின் சனாதன ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க பேராற்றலாக நின்றார். காந்தியடிகள் இந்திய பெரு நிலத்தின் அறிவிக்கப்படாத மன்னர். எல்லோராலும் வாழும் காலத்திலேயே வழங்கப்பட்ட மனிதப் புனிதர். ஆனால் அண்ணல் அம்பேத்கர் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர். இருவரும் வரலாற்றில் எதிர் எதிர் புள்ளிகளாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுமதிப்பு கொண்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் அமைச்சரவை உருவாகும் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தன் அமைச்சரவையில் இணைக்க நேரு எடுத்த முடிவை காந்தி மனதார பாராட்டினர்.

முஸ்லிம் லீக் உதவினால் இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் அந்த குழுவில் இடம் பெற்ற அனைவரையும் விட கடுமையாக உழைத்தார். உலக அரசியலமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும் என விரும்பினார். சமூகத்தின் எல்லாருக்குமான உரிமைகளை காக்கின்ற அரசமைப்பாக அது திகழ வேண்டும் என விரும்பி அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார்.

சட்ட அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏற்கனவே இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி புதிய இந்துமத சட்டத்தினை இயற்றிட அண்ணல் அம்பேத்கர் முயன்றார். ஏற்கனவே இருந்த இந்து மத சட்டத்தின்படி விதவை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல்வேறு பிற்போக்கு தனங்களோடு இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக புதிய இந்து மத சட்டத்தினை அண்ணல் அம்பேத்கர் இயற்ற தொடங்கினார்.

அப்போது தான் திருமணம் செய்ய நினைத்த டாக்டர் கபீர் என்று அழைக்கப்பட்ட சவீதா அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கூட புதிய இந்து மத சட்ட தொகுப்பை எழுதி வருகிற செய்தியை குறிப்பிடுகிறார். தான் திருமணம் செய்து கொள்ள ஏற்படும் காலதாமதத்தை பற்றி தன் வருங்கால இணையரான, பிராமண சாதியை சேர்ந்த சவிதாவிற்கு கடிதங்கள் எழுதும் அம்பேத்கர் தற்போது இருக்கின்ற இந்து மத சட்டத்தின்படி தனது திருமணம் அங்கீகரிக்கப்படாது என்றும் புதிய இந்து மத சட்டம் விரைவில் ஏற்றப்பட்டவுடன் தனது சாதி மறுப்பு திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு விடும் என்றும் அந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார். இல்லையேல் சிறப்பு திருமண சட்டத்தின் படி தான் திருமணம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் குறைபட்டு கொள்கிறார்.

அப்படி அவர் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு உருவாக்கிய புதிய இந்து மத சட்டத் தொகுப்பினை பாராளுமன்றத்தில் அவரால் சட்டமாக்க முடியவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு கருத்துக்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்து மத சனாதன ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. நாத்திகரான நேரு இதில் நடுநிலைமை வகுத்ததை அண்ணல் அம்பேத்கர் விரும்பவில்லை. தனது தனிப்பட்ட தோல்வியாக இதை உணர்ந்த அண்ணல் அம்பேத்கர் இனியும் சட்ட அமைச்சர் பதவியில் இருப்பது பலனில்லை என உணர்ந்து தன் பதவியை 1951இல் ராஜினாமா செய்தார்.

இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு கூட இந்து மத சனாதன எதிர்ப்புணர்ச்சியின் மாபெரும் விளைவாகத்தான் ஏற்பட்டது என்பதை மோடி மறைத்து காங்கிரசுக்கும் அம்பேத்காருக்கும் பொத்தம் பொதுவாக சண்டை என காட்டுவது மோடியின் மோசடி வித்தை.

Page 1 of 16

Powered by WordPress & Theme by Anders Norén