பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 8 of 15

நாம் தமிழர் -அவதூற்று சேற்றினால் அழிக்க முடியா இன நலனுக்கான எழில்மிகு காவியம்.

தமிழ்ச் சமூகத்தின் ஓர்மைக்கு எப்போதும் சாதி ஒரு மாபெரும் தடையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே தான் சாதி முரண்களை திராவிடம் கடுமையாக பாதுகாத்து தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதை இன அழிவு காலங்களில் நுட்பமாக கவனித்த தமிழின இளைஞர்கள் இனி சாதியை துறந்த தமிழர்களின் பெரும் திரள் அரசியலே தமிழ்த்தேசிய அரசியல் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொண்டு தான் நாம் தமிழர் என்கின்ற ஒரு மாபெரும் அமைப்பைத் தொடங்கினோம்.

ஆனால் கால ஓட்டத்தில் எங்களோடு அவர்களாகவே வந்து இணைந்த சிலர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப.. தழைக்க விரும்பிய தமிழ்த்தேசிய கருத்தியலை தங்களது சாதிய உணர்வுகளுக்கு ஏற்ப வளைக்க விரும்பினர். ஆனால் தொடர்ச்சியாக நாம் தமிழர் தனது மேடைகளில் இந்துமத ஆதிக்கங்களுக்கு எதிராக.. சாதி முரண்களுக்கு எதிராக தீவிரமாக முழங்கி வந்தது. இதனால் கடும் எரிச்சலுற்ற அந்த குறிப்பிட்ட கூட்டம் சாதி எதிர்ப்பு கருத்தியலில் தீவிரமாக செயல்படுகிறவர்களை கடுமையாக ஏசி மிரட்டியது.

சாதியை பார்த்து தான் தமிழர்கள் யார் என்று கண்டறிய வேண்டும் என இந்த மனநிலை தவறிய கூட்டம் சுயசாதிப் பித்தம் தலைக்கேறி உளரத் தொடங்க.. சாதியை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் இளையோர்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் எதிர்வினை செய்தார்கள். சாதி உணர்விற்கு எதிரான இளையோர் கூட்டம் நாம் தமிழர் என திரளத் தொடங்கியதை சகிக்க முடியாமல் மாறுபட்டு கருத்து தெரிவிப்பவர்களை எல்லாம் தெலுங்கர் என்றும் வந்தேறி என்றும் பட்டம் கட்டியது இந்த கூட்டம் தான் . (என்னையெல்லாம் சவுராஷ்டிரா (?) ஆகிட்டாங்க)

யார் எதை எழுதினாலும் பேசினாலும் சாதி சான்றிதழை கேட்பதை தமிழ்த் தேசியம் என இவர்கள் வரையறுத்துக் கொண்டதுதான் உச்சபட்ச காமெடி. யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் எந்த சாதியின் சான்றிதழையும் சில ஆயிரங்களில் பெற முடிகிற ஊழல் நிர்வாகச் சூழலில்.. அதுதான் இவர்களுக்கு உச்சபட்ச ஆவணம்.

இவர்களுக்கு யாரையும் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவர்களால் முடியாது. எல்லா விவரங்களும் போகிறபோக்கில் அடித்து விடப்படுவது தான். எதிர்த்து எழுதினால் அவர் தெலுங்கர் வடுக வந்தேறி சௌராஷ்டிரா இன்னும் பல. மீறி கேட்டால் சாதி சான்றிதழ் காட்டு என மிரட்டல்.

வந்தேறி என்ற சொல்லை நாம் தமிழர் பயன்படுத்தாத சூழலில் நாம் தமிழர் போர்வையில் இந்த கூட்டம் செய்த வேலைகளால் பல விமர்சனங்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

ஒரு கட்டத்தில்.. இந்த கூட்டத்தின் தவளைக் குரல்களை நாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நிலையில்.. அந்தக் கூட்டம் ஒருவழியாக கலைந்து அந்தந்த சாதி சார்ந்த அரசியல் கட்சிகளை ஆதரிக்க பிரிந்துவிட்டது.

இந்தக் கூட்டத்தைப் பற்றி என்னைப் போன்றவர்கள் தொடக்கத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் தீவிரமாக எச்சரித்து வந்தோம். அண்ணன் சீமான் அவர்கள் இதை அறிந்து ஒவ்வொரு மேடையிலும் சாதி முரண்களுக்கு எதிரான தனது நெருப்புக் கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்து வந்தார். ஆனாலும் சில நாம் தமிழர் தம்பிகள் ஆர்வக் கோளாறினால் இந்தக் கூட்டத்தின் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிப்பது, பகிர்வது போன்ற வேலைகளை பின் விளைவுகள் தெரியாமல் செய்து வந்தனர்.

சமீபகாலமாக அமைதியாக இருப்பது போல காட்சியளித்த இந்த கூட்டம் தேர்தல் காலத்தில் தன்னெழுச்சியாக நிகழ்ந்த நாம் தமிழர் கட்சியின் மாபெரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தாங்கள் ஆதரித்து வருகிற என்பது சாதி சார்ந்த அரசியல் அமைப்புகள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்.. எங்களைப் பற்றிய அவதூறுகளை மீண்டும் பரப்பத் தொடங்கினர். அதில் ஒன்றுதான் கடந்த இரண்டு நாட்களாக பரப்பப்படும் அந்த அலைபேசி குரல் பதிவு.

அதில் பேசுகின்ற நபர் இந்தக் கூட்டத்தில் ஒருவர். அவரோடு உரையாடுகிற எம் அமைப்பை சேர்ந்த எங்கள் தம்பியிடம் வேண்டுமென்றே சீண்டி ஆபாச சொற்கள் மூலம் உரையாடலை தொடங்கி அதை பதிவு செய்து பொது வெளியில் வெளியிட்டிருக்கிற அந்த குறிப்பிட்ட நபர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.

இழிவான குணங்களோடும் வக்கிர மனநிலையோடும் உலா வருகின்ற இதுபோன்ற நபர்களோடு எவ்வித தொடர்பும் நம் உறவுகள் வைத்துக் கொள்ளக்கூடாது என பல முறை நாங்கள் எச்சரித்தும் சிலர் அவர்களோடு வைத்திருந்த தொடர்பினால்தான் இன்றைய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் எப்போதும் நமக்கு எதிரானவர்கள் என்பதை நமது உறவுகள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் சாதி நிலைகளை ஆதரிக்கிறவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை விரும்பாதவர்கள். தங்களின் சாதி பெருமித உணர்விற்காக சாதியை மறுத்து கூடுகின்ற நாம் தமிழர் என்கின்ற இந்த இளையோர் அமைப்பினை தகர்க்க எதையும் செய்வார்கள்.

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால்..நம்மால் அதிகம் காயம்பட்டு உள்ள திராவிடக் கூட்டம் இந்த அலைபேசி உரையாடலை பரப்புவதில் காட்டுகிற ஆர்வம் தான். மதுரை திமுக பகிரி குழுமததி்ல் மிகப் பெரிய ஆதாரம் போல இந்த அலைப்பேசி உரையாடல் பரப்பப்பட்டு வருவதை எங்கள் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். முற்போக்கு வெங்காயங்களுக்கு, ராட்சசன் திகில் பரிசுப்பொட்டிகளுக்கு இதைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டிருக்கிற பரசவம் கொஞ்ச நஞ்சமல்ல.

சாதி முரண்களைக் களையக் கூடாது என்பதில் திராவிடமும் வறட்டு சாதி தேசியமும் ஒரே அலைவரிசையில் ஒன்றாக நிற்கிறது ‌. சாதி சார்ந்த அரசியல் அமைப்புகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகின்றன.

அரசியலில் நம் எதிரிகள் கூட பேசத் தயங்கும் வசவுச் சொற்களை மிக எளிதாக இந்த வறட்டு சாதி தேசியவாத கூட்டம் கையாளுகிறது என்றால்.. இந்தக் கூட்டம் நம்மீது கொண்டிருக்கின்ற வன்மத்தின் அளவு குறித்து நமது உறவுகள் சிந்திக்க வேண்டும்.

இரண்டு நபர்கள் பேசிக்கொள்ளும் ஒரு சாதாரண வசவு உரையாடல் என்பது எல்லா அமைப்புகளுக்கு உள்ளும் புறமும் நடக்க கூடியது. இதையெல்லாம் ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு ஒரு அமைப்பினை வீழ்த்திவிடலாம் என கருதுபவர்களை காணும்போது தான் எங்களின் வளர்ச்சி எங்களுக்குப் புரிகிறது.

இடுப்பை பிடித்து கிள்ளியவர்கள், ரோட்டு பக்கமாக வரச்சொன்னவர்கள் , டோக்கன் போட்டு ஓட்டு கேட்டவர்கள், போன்றவர்களெல்லாம் ஏதோ மகத்தான ஆதாரம் கிடைத்து விட்டதாக மகிழ்ந்து கொண்டாடுவது எங்கள் மீதான அளவுக்கதிகமான அச்சம் என்பதனை உணர்கிறோம்.

அந்த அச்சத்தின் அளவு உயர உயர நாங்கள் வளர்கிறோம்.

நாம் தமிழர்.

அவர்கள் வருகிறார்கள்..

கொளுத்தும் வெயில் மழை போல ஒரு திரவமாக ஊற்றிக் கொண்டிருக்கிறது. எங்கள் வாகனம் அப்போதுதான் அந்த ஊருக்குள் நுழைகிறது. என் முன்னால் தான் என் தம்பிகள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கையில் துண்டறிக்கைகளோடு கழுத்தில் பச்சை துண்டுகளோடு கடந்த சில நாட்களாகவே அவர்கள் அவ்வாறு அலைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கடை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நான் பேசத் தொடங்கினேன். எனது பக்கத்தில் எங்களது வேட்பாளர் சகோதரி சுபாஷினி அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் பேசிக்கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது எதிரே அதிமுக பிரச்சார வாகனம் ஒன்று வந்தது. அது எங்களுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டு அந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட நடனப் பெண்கள் உரத்து ஒலித்த எம்ஜிஆர் பட பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட தொடங்கினார்கள்.

ஒரு பக்கம் நாங்கள் மீத்தேன் திட்டத்தைப் பற்றியும், நிலத்தடி நீர் குறைகிற அபாயத்தை பற்றியும், மோடியின் உலகமயம் பன்னாட்டு வர்த்தக அரசியல் பற்றியும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற பொழுதில் அருகிலேயே எங்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒலித்த அந்தப் பாடலால் கூடி நின்ற மக்கள் சற்றே தடுமாற தொடங்கினார்கள்.

சிறிது நேரத்தில் நாங்கள் அந்த கடை வீதியை விட்டு அகன்றோம். என்னோடு பிரச்சாரத்துக்கு வந்திருந்த இளைஞர்கள் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக மௌனத்திருந்தார்கள். காலையிலிருந்து அலைந்து வியர்த்திருந்து கருத்திருந்த அவர்களது முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.

முதன்முதலாக இந்த சமூகத்தை பற்றி எனக்கு மாபெரும் பயம் ஏற்பட்டது. இப்படி மக்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் ஏமாற்றும் போது நமது உண்மைகள் எல்லாம் சென்று சேருமா… என்கின்ற அச்சம். நாங்கள் எல்லோருமே ஒரு மாதிரியான வெறுப்புணர்வில் வாகனத்தில் அமைதியாக நின்றிருந்தோம்.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தம்பி சிவமாலன் சிறுவனுக்கும் இளைஞனுக்கும் நடுவில் இருக்கின்ற வயதுடையவன். இந்த மௌனம் அவனுக்கு ஏதோ செய்திருக்கும் போல..
சட்டென சுதாரித்து… எங்களது வேட்பாளர் அருமை சகோதரி சுபாஷினி க்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள். புதியதோர் உலகம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம் என்று உரத்தக்குரலில் முழங்கத் தொடங்கினான் . அங்கிருந்த மற்ற இளைஞர்களும் அந்த சம்பவத்தை சட்டென மறந்துவிட்டு அடுத்த நொடிகளுக்குள் ஒரு பறவை போல பறந்து சென்று விட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் சீமானின் தம்பிகள்.

அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்கள் தான். ஆனாலும் ஒவ்வொருவரும் இலட்சிய ஆவேசம் நிரம்பிய தனித்தனி பொன்நிறத் துகள்களால் உருவாக்கப்பட்டவர்கள்.
இதை ஒரு சாதாரண தேர்தல் களமாக எண்ணிவிட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த எந்த ஒரு இளைஞனும் விரும்புவதில்லை. உண்மையில் அவர்களுக்கு அது ஒரு மிகப் பெரிய பாலைவன பயணம் தான். எவ்வித பொருளாதார பின்புலமுமற்று, சாதி மத அடையாளங்களை துறந்து விட்டு.. கடும் உழைப்பினையும் வியர்வையினையும் கோருகிற வெப்பக்கால அனல் காற்றில் பயணிக்கிற பணி. ஆனாலும் எதையும் அவர்கள் இலகுவாகவே எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை அவர்கள் அண்ணனிடமிருந்து எடுத்துக் கொண்டு விட்டார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டருக்கு மேலாக பயணிக்க வேண்டும். பதினைந்து கிலோமீட்டருக்கு மேலாக நடக்க வேண்டும். குறுகிய சாலைகள், ஓய்வெடுக்க முடியாத பயண அவசரம்,அறிமுகமற்ற மனிதர்கள், ஒரு மாதிரியான உள்ளுக்குள் வியப்பும் அதே சமயத்தில் வெளியே அலட்சிய சிரிப்போடும் கடக்கிற எதிர்க்கட்சியினர், வெயில் காலத்தின் மதியப்பொழுதுகளில் ஆளரவமற்ற வீதிகள் மூடிக்கிடக்கும் கதவுகள் என கடுமையான சோர்வினை உண்டாக்கும் அனுபவங்களை அந்த இளைஞர்கள் சந்தித்தார்கள். இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயச் சூழலுக்குள் அந்த இளைஞர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு ஆன்மாவும் இத்தனை காலமாக இந்த நிலம் அழிந்த கதையை அறிந்திருந்தது.

அவர்கள் மிக எளிமையானவர்கள். மற்ற கட்சியினரைப் போல குடித்துவிட்டும் பிரியாணி சாப்பிட்டுவிட்டும் செரிப்பதற்காக பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் அல்ல. அவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது ஒவ்வொரு தனிநபரின் கடமை என உணர்ந்திருக்கிறார்கள். இறுதிவரை உழைத்துப் பார்ப்பது என்ற உறுதியோடு நிற்கிற அவர்களைப் போன்ற இளைஞர்களை இந்த அரசியல் களம் சமீபமாக சந்திக்கவில்லை.

அனைத்திற்கும் பதில்களை அவர்கள் பெற்றிருந்தார்கள். எல்லாவித துரோகங்களுக்கும் அவர்கள் முகம் கொடுக்க பழகியிருந்தார்கள். எந்த சூழ்நிலைகளுக்கும் அவர்கள் தயாராகவே வந்திருந்தார்கள். சிற்சில சலுகைகளை காட்டி அவர்களை மலினப்படுத்த எவராலும் முடியாது. துண்டறிக்கைகள் வழங்கும் ஒவ்வொருவரையும் தன் வாக்காக மாற்றிட சில உண்மைகளை பேசிட அவர்கள் தேர்ந்திருந்தார்கள்.

அவர்களை யாராலும் அலட்சியப்படுத்த முடியாது. ஒரு அசாதாரண கனவை நிறைவேற்றிட சாதாரண எளிய கரங்கள் கை கோர்த்திருப்பது உண்மையில் எதிரிகளை கொஞ்சம் பயமுறுத்தி தான் வைத்திருக்கிறது. அதனால்தான் அவர்களை எந்த ஊடகமும் காட்டுவதில்லை. எந்தவிதமான கணிப்பிலும் அவர்களை இணைப்பதில்லை. சொல்லப்போனால் அவர்கள் சின்னம் கூட வாக்கு எந்திரத்தில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட சூழலில்.. அதிகார நிலைகளால் அனைத்து விதத்திலும் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்கள் அவர்கள். ஆனாலும் எளிய மக்களுக்கு நெருக்கத்தில் அவர்களே நின்றார்கள்.

இதில் அவர்கள் வெற்றி அடையலாம். தோல்வியடையலாம். ஆனாலும் புதிய சரித்திரத்தை அவர்களின் கரங்கள் தான் எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை எதிரியும் தன் தொண்டைக்குழிக்குள் தான் விழுங்கும் அச்ச மிடறினால் உறுதிப் படுத்திக் கொள்கிறான்.

இந்த மண் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தப் புதிய இளைஞர்களின் பாதச் சுவடுகளால் சிலிர்த்துக் கொள்கிறது. அந்தப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறது.

உங்கள் வீதிகளுக்கும் அவர்கள் வருவார்கள் உறவுகளே..

ஒருமுறை அவர்களை கவனித்துப் பாருங்கள்.

என்ன ஆச்சரியம்..

அவர்களுக்குப் பின்னாலோ.. அல்லது முன்னாலோ நீங்களும் நடக்கக் கூடும்.

இதோ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்..

மதிப்பிற்குரிய சு.ப.உதயகுமார் அவர்களுக்கு..

 

 

மதிப்பிற்குரிய ஐயா சுப உதயகுமார் அவர்களின் பதிவை பார்த்தேன்.

அது அவருடைய கருத்து என்ற வகையில் கண்டுகொள்ளாமல் கடந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனாலும் எங்களை நோக்கிய குறிப்பிட்ட வகை முரண்களோடு நுட்ப விமர்சனங்களை முன்வைத்து இருப்பதால் பதில் சொல்ல வேண்டியதாகி விடுகிறது.

முதலில் அவர் திமுக-காங்கிரசு கூட்டணி வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்பது அவருடைய விருப்பம். அவருடைய சொந்த விருப்பத்தை எங்கள் மீதான வன்ம விமர்சனங்களோடு நியாயப்படுத்த விரும்புவதில்தான் எங்களுக்கு சிக்கல்.

உதயகுமார் போன்ற மக்கள் நலனுக்காக போராடியவர்கள் திமுக போன்ற காங்கிரஸ் போன்ற மக்கள் நலன் எதிர்ப்பு அமைப்புகளுக்கு திடீரென(?) வாக்குக் கேட்க துணியும் போது ஏற்படும் தடுமாற்றங்களே எங்கள் மீதான விமர்சனமாக மாறுகிறது என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் புலிகளோடு எங்களை ஒப்பிட்டு பேசியதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைப் புலிகள் மக்களுக்காக ஆயுதம் தரித்து ஈழமண்ணில் உயிரை கொடையாகக் கொடுத்து போராடிக் கொண்டிருந்த சம காலத்தில் பல்வேறு இயக்கங்கள் அவர்களோடு களத்தில் நின்றாலும், புலிகள் மட்டுமே சமரசமில்லாமல் இறுதிவரை போராடியவர்கள். அந்த வகையில் அரசியல் ரீதியான எந்தவித சமரசத்திற்கும் நாங்கள் ஆட்பட விரும்பாத காரணங்கள் கூட எங்களது அரசியல் முன்னுதாரணங்களாக நாங்கள் கொள்கிற விடுதலைப்புலிகளை முன்னத்தி ஏராக கொண்டு அமைகிறது. இந்த சமரசமற்றத்தன்மை கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிற மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எல்லாம் விருப்ப வேட்பாளராக ஆதரிக்கிற சு.ப.உதயகுமாருக்கு தர்மச்சங்கடமாக இருக்கக்கூடும் என்பது எங்களுக்கு புரியாமலில்லை. ஆனாலும் அதை நியாயப்படுத்த துணிகிற உதயகுமார் எங்கள் மீது எதற்காக கல்லெறிய வேண்டும்.. எனவேதான் அவரது பதிவிற்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் நாங்கள்.

ஐயா உதய குமார் அவர்களே..

அரசியலில் எவரும் தனிநபர் இல்லை. தனி நபர் மீது தனிப்பட்ட விருப்பம் கொள்ள அரசியல் ஒன்றும் தனிநபர்கள் சார்ந்து இயங்குகிற அமைப்பு இல்லை. தனிநபர்கள் உள்ளடக்கிய ஒரு அமைப்பின் செயல்பாடுகளில் தனிநபர்களுக்கு பங்கு இருக்கிறது.அந்தப் பங்கினை அந்த தனிநபர்கள் மறுக்கும் பட்சத்தில்.. அரசியலில் அவர்களுக்கு இடமில்லை. திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கும் தாங்கள் தனிநபர் விருப்பம் என சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த தப்பித்துப் பிழைக்கும் செயலை விட… நேரடியாக ஆதரித்து விட்டுப் போவது மேலானது.

மற்றபடி அன்பான சர்வாதிகாரம் என்பது சக தோழமை இயக்கங்களின் மீது நாங்கள் செலுத்துகிற விவகாரம் அல்ல. அது எங்களது ஆட்சி முறைமையில் செலுத்த விரும்புகிற மக்கள் நலன் சார்ந்த யுக்தி. மற்ற எந்த அமைப்பினையும் அழித்து நாங்கள் எழவில்லை. நாங்கள் எழுவது தமிழகத்தின் ஈடு இணையற்ற கேடுகளாக விளங்குகின்ற திராவிட-தேசிய கட்சிகளின் வீழ்ச்சியில் என்பது தங்களுக்கு நன்கு புரியும்.

தங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை புரிகிறது. திருமணமான மறு நாள் இடிந்தகரை போராட்டத்திற்கு வருகை தந்து அங்குள்ள மக்களிடம் வாழ்த்தினை கோரி நின்ற சீமான் தங்களுக்கு விருப்பம் இல்லாதவராக ஆன பின்னர் கனிமொழி விருப்பமுடையவராக மாறத்தானே செய்வார்..

நாடு முழுக்க இடிந்தகரை கூடங்குளம் அணு உலைக்காக போராடி வழக்குகள் பெற்று கைதான நாம் தமிழர் கட்சி உங்களுக்கு விருப்பம் இல்லாத அமைப்பாக இருப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. நீங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளர்கள் சார்ந்த திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் எத்தனை இடங்களில் இடிந்தகரை காக போராடி நின்றன என்பதைப் பற்றி இப்போதைக்கு சிந்திக்க முடியாத “உயரத்தில்”(?) தாங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அணு உலைக்கு ஆதரவான கட்சிகளின் வேட்பாளர்கள் உங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களாக மாறி விட்ட பின்னர் அந்த இடத்தில் எங்களையும் பொருத்திக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. இந்த மக்களை சுரண்டுவதில் மற்ற எல்லா குழுமங்களையும் விட முன்னால் நிற்பது தங்கள் விருப்பத்திற்குரிய வேட்பாளர் கனிமொழி சார்ந்திருக்கிற திமுக குழுமம் தான். அங்கே நின்று ஆதரித்துக் கொண்டு எங்களுக்கான காரணத்தை தேடுவதென்பது அர்த்தமற்றது.

எங்களை சாதி மத அடையாள அரசியலுக்குள் தந்திரமாக தாங்கள் அடைக்க விரும்புவது தங்களின் புது நண்பர்களுக்கு தாங்கள் செய்யும் மறு பயனாக இருந்துவிட்டுப் போகட்டும்.

நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் மிக எளிதானவை. தேர்தலுக்காக அல்லது சில காரணங்களுக்காக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு நிலைப்பாடுகள் மாற்றிக் கொள்கிற பிழைப்புவாத அரசியல் கட்சி தன்மைகளுக்கு தங்களையும் பொருத்திக் கொண்டு விட்டீர்கள் என்கிற நிலையில்.. உங்களை நீங்களே நியாயப்படுத்தி கொள்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எங்கள் மீது கல்லெறியும் உங்களது மறு பயன் யுக்திகளுக்காக மட்டுமே நாங்கள் எதிர்வினை செய்ய விரும்புகிறோம்.

திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற முதலாளித்துவ பொருளியல் அமைப்புகளின் வெற்றியே தங்களைப் போன்றவர்களை தன் வயப்படுத்தி.. சமரசங்களுக்கு ஆட்படுத்தி வீழ்த்தி முடிப்பது தான்.

அந்த வகையில் வீழ்ந்து விட்டீர்கள். அந்த இடிந்தகரை கடற்கரையில் காவல்துறையிடம் உதிரம் சிந்திய அந்த எளிய பெண்களின் மனசாட்சியிடம் தற்போது தோற்று இறந்திருக்கிற தங்களின் நம்பகத்தன்மையை ஒரு போதும் இனி உயிர்ப்பிக்க முடியாது என்கின்ற நிலைமைதான் உங்களின் வீழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

மீண்டும் உயிர்பிக்கவே முடியாத நம்பகத் தன்மையையும், மனசாட்சியையும் இழந்து விட்ட நீங்கள்..

இனி யாரை ஆதரித்தால் என்ன.. எதிர்த்தால் எங்களுக்கு என்ன..???

ஆனால் இறுதியாக தோன்றுவது இதுதான்..

அனைத்தையும் சரியாக அடையாளம் காட்டி விடுகிற காலம்தான் எவ்வளவு உயர்ந்தது..???

மணி செந்தில்.

(மேலே இடிந்தகரை என்ற ஊரில்.. திருமணமான மறுநாள் சீமான் என்ற மனிதன் தனது மனைவியோடு சென்று அங்கு போராடிக்கொண்டிருந்த மக்களின் வாழ்த்துக்களை கோரி நின்று பெற்ற காட்சி..)

இடைத்தேர்தல் பிரச்சாரம்/ மணி செந்தில் கல கல பேச்சு/ திருவாரூர்

[youtube]https://www.youtube.com/watch?v=MXAwCL3kDwA&feature=share[/youtube]

எல்லா படிக்கட்டுகளும் ஏறுவதற்காக அல்ல..

[youtube]https://www.youtube.com/watch?v=8k7UufYdlZc&feature=youtu.be&fbclid=IwAR3oSNGKuGUgr82umcMOGlj7KVfBK7hV1xr5iHomzuly_xD_8aeSzRm9yM8[/youtube]

அந்த உயரமான படிகளை பார்க்கும்போது ஏறிட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அருகிலிருந்த தம்பி செந்தில் நாதனிடம் எனக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேன். எப்போதும் என்னை போன்ற நபர்களுக்கு படிக்கட்டுகள் மிகவும் ஆபத்தானவை. படிக்கட்டுகள் இல்லாத ஒரு உலகம் எங்கேனும் இருக்குமாயின் அங்கே போய் அமைதியாக வாழ்ந்து விட வேண்டும் என உள்ளுக்குள் ஆழ்ந்த ஆசை.

என் திருமணத்தின் போது கூட திருமண மண்டபத்தில் இருந்த படிகட்டுகளில் முதல் நாளே சென்று ஏறி இறங்கி பயிற்சி எடுத்துக் கொண்டு தான் திருமணத்திற்கு சென்றேன். எந்த இடத்திற்கு போனாலும் என் கண்கள் தேடுவது அங்கே இருக்கின்ற படிக்கட்டுகளின் உயரத்தை தான்.

வெளிநாடுகள் என்னை போன்றவர்களுக்கு கருணை செய்கின்ற நிலங்களாக எனக்குத் தெரிகின்றன.வெளிநாட்டு பயணத்தின் போது நான் எங்கேயும் படிக்கட்டுகளை அதிகம் எதிர் நோக்கவில்லை. நடக்க முடியாதவர்களுக்கு.. முதியவர்களுக்கு உகந்த வகையில் கட்டிடங்களை அலுவலகங்களை விமான ரயில் நிலையங்களை அமைப்பதில் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிடம் இதுபோன்ற கருணையையோ அக்கறையையோ நாம் எதிர்பார்க்க முடியாது.

நாம் தமிழருக்கு வந்த பின்னர் … என் தம்பிகளின் தோள்கள் எனக்கு படிக்கட்டுகளை கடக்க உதவும் சிறகுகளாக மாறின. என்னோடு நெருங்கிப் பழகும் அனைவரின் தோள்களிலும் நான் பயணித்திருக்கிறேன். அண்ணன் சீமான் ,அண்ணன் ஹீமாயூன் போன்ற வயதில் மூத்தவர்கள் கூட நான் எங்கேயும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமும் தாய்மையும் கொண்டிருப்பதை நான் நெகிழ்ந்து அனுபவித்து இருக்கிறேன்.

சமீபத்தில் மைத்துனர் அருள்மொழித் தேவன் திருமண நிகழ்வின் போது கூட அண்ணன் சீமான் அவர்கள் கூட்டத்திற்கு நடுவே நான் தடுமாறி விடக் கூடாது என்பதற்காக என்னை இறுகி பிடித்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

என் தம்பிகள் பலர் என்னை சுமந்து திரிந்திருக்கிறார்கள். வனங்களில் வெளிநாடுகளில், சுற்றுலாத் தலங்களில் நடக்கமுடியாத தொலைதூரங்களில் ஏறமுடியாத படிக்கட்டுகளில் என் தம்பிகள் என்னை தூக்க தயார் ஆகி விடுவார்கள்.அவர்களில் சிலர் மிகவும் புகழ் பெற்றவர்கள். அவர்களைக் காண பலர் காத்திருப்பார்கள். புகைப்படம் எடுக்க நின்று கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் என்னை கவனமாக அழைத்து வருவதில் மிகத் தீவிரமாக இருப்பதை நான் பல நேரம் அறிந்து என் இடையூறை எண்ணி நொந்திருக்கிறேன். அவர்களின் பெயரை எல்லாம் சொல்லி விட தோன்றுகிறது தான். ஆனாலும் சொல்லிவிட முடியாத அளவிற்கு நிறைந்திருக்கிற அவர்களது பெயர்களில் ஏதேனும் ஒன்றை நான் தவற விட்டுவிடக் கூடாது என்கின்ற கவனம் எனக்கு இருக்கிறது.

மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுகிற அரசியல் களத்தை என் வாழ்வின் முக்கிய அங்கமாக நான் தேர்ந்தெடுத்தது குறித்து நான் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதற்கு காரணம் என் தம்பிகளும், என் அண்ணன்களும்.. என் மைத்துனரும்.

ஆனாலும் வாழ்வின் ஓட்டத்தில் எந்தக் கணக்கும் பிசகி விடக்கூடியது தானே.. அன்றும் அப்படித்தான் நடந்தது. ஒரத்தநாட்டில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்.. பேசுவதற்காக தம்பிகள் உதவியோடு நான் மேடை படியேறும்போது… நான் பிடித்திருந்த தம்பியின் கை வேர்வையால் நனைந்திருந்தது. வேர்வை வழுக்கி படியில் கீழே விழுந்து விட்டேன். தம்பிகள் துரைமுருகன் செந்தில்நாதன் கரிகாலன் சரவணன் இராசமோகன் உள்ளிட்ட பலர் ஓடி வந்து என்னை தாங்கிப் பிடித்தனர். பிறகு எழுந்து மேடையேறி பேசி விட்டும் வந்து விட்டேன். அப்போது வலி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. இரவு வீட்டிற்கு வந்த பிறகுதான் முதுகிலே கடுமையான வலி ஏற்பட்டது. நேற்றைய தினம் முழுக்க அதற்கான சிகிச்சை, வலி தொந்தரவு என பொழுது கழிந்து விட்டது.

இதுபோன்ற தருணங்கள் நம் வாழ்வில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருப்பேன். தேர்தல் நேரம். கட்சிக்கு என்னால் முடிந்த உழைப்பை நேர்மையாக செய்து விடவேண்டிய தருணம். இந்த நேரத்தில் இதுபோன்ற தடுமாற்றங்களை நான் எதிர் கொள்ளக் கூடாது தான். என்னை விட கடுமையாக உடல் நலம் பாதித்தவர்கள் நடக்க முடியாதவர்கள் கூட எப்படியாவது இந்த இன நல அரசியல் வெல்ல உழைத்துக் கொண்டிருக்கும் போது.. நான் வலியை காரணம் காட்டி ஓய்வெடுத்து விடக்கூடாது. இது போன்ற பதிவுகள் உங்கள் மனதில் என் குறித்து ஏதேனும் அனுதாபத்தினை ஏற்படுத்தினால் நான் தோல்வியுற்றவனாக உணர்வேன். பல்வேறு சங்கடங்களுக்கு மத்தியில் போராடும் ஒரு தலைமுறையின் வாதையை பற்றியே நான் உங்களோடு மனதார உரையாட விரும்புகிறேன்.

தம்பி குடவாசல் மணிகண்டனை நினைத்துக் கொண்டேன். அதேபோல அதிராம்பட்டினத்தில் இருக்கிற என்னுயிர் சகோதரனை நினைத்துக்கொண்டேன். இன்னும் பலர் நினைவுக்கு வந்தார்கள். ஊருக்கு ஊராக பல்வேறு உடல் குறைகளோடு உழைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்களை விட நான் உயர்ந்தவன் அல்ல.

முதுகு வலி குறைந்தது போல தோன்றுகிறது. இன்று மாலை மீண்டும் களத்திற்கு திரும்பி விடுவேன்.

நாங்கள் தடுமாறலாம்.
கீழே விழலாம். அது ஒரு பொருட்டே அல்ல.

ஆனாலும் எம் தமிழ்ச்சமூகம் நிமிர வேண்டும்.

மறதியால் அழிக்க இயலா நினைவின் தழும்பு .

 

அண்ணன் சீமான் மீது பல முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும் பல அறிஞர் பெருமக்களிடம் தோ

 

ன்றி இருக்கிற ஒவ்வாமை குறித்து பல இளம் தலைமுறையினருக்கு வியப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இதில் பெரும்பாலும் பெரியாரிஸ்டுகள் நிறைய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எதனால் சீமானை வெறுக்கிறோம் என்பதற்கான எந்தவிதமான நேர்மையான பதிலும் அவர்களிடத்தில் கிடையாது.

நான் அறிந்த வரையில் இந்த பெரியாரிஸ்டுகள் மத்தியிலிருந்து ஒருவர் 2009 இன அழிவிற்கு பிறகு அடைந்த மற்றும் அடைகிற மக்கள் செல்வாக்கே இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

நான் மதித்த எனக்குத் தெரிந்த ஒரு பெரியாரிஸ்ட் அண்ணன் இருக்கிறார். அந்தக் காலத்தில் சீமான் திரைப்படம் எடுத்துக்கொண்டு பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய மேடைகளில் பேசிக் கொண்டிருக்கின்ற ஒரு சாதாரண பேச்சாளர் அவ்வளவே.

2009 இன அழிவு காலத்தில் அந்த மதிப்பிற்குரிய அண்ணன் தான் இந்த திமுகவும் அதிமுகவும் கொண்டிருக்கிற அரசியல் அதிகாரம் நம்மைப்போன்ற எளியவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நம்மைப் போன்றகளிடம் இந்த அரசியல் அதிகாரம் கிடைக்கும் போதுதான் இன அழிவு, மொழி அழிவு, நம் நில அழிவு ஆகியவற்றை தடுக்க முடியும் என்று என்னைப் போன்ற எண்ணற்ற தம்பிகளிடம் வாதாடினார். சொல்லப்போனால் அன்றைய ஆட்சி காலத்தில் இருந்த திமுகவை அழிப்பதே தன் லட்சியம் என்றெல்லாம் வாதாடினார். அதனால்தான் அண்ணன் சீமான் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் நாம் தமிழரை ஒரு அரசியல் அமைப்பாக உருவாக்க திட்டமிட்டு தொடங்கினோம்.

மேலும் 2009 காலத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வெளிப்படையாக பல பெரியாரிய அமைப்புகள் தீர்மானம் இயற்றி அண்ணா திமுகவிற்கு ஆதரவு அளித்தன என்பதும் பலரும் அறியாத வரலாற்று உண்மை.

இன்று அதே பல பெரியாரிய அமைப்புகள்தான் திராவிடத்தை காக்க திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து நிலைப்பாடு எடுத்திருப்பதை காணும்போது வேடிக்கையாக இருக்கிறது.

2009 இன அழிவு காலத்தில் எங்களைப் போன்ற தமிழுணர்வாளர்களும் பெரியாரிய அமைப்புகளின் தோழர்களும் ஈழத்தில் நடைபெற்ற வந்த இனப்படுகொலை காணொளி காட்சிகளை குறுந்தகடுகளாக எடுத்துக்கொண்டு வீதிவீதியாக அலைந்தபோது இதே திமுக தனது காவல்துறையை வைத்துக்கொண்டு எங்களை விரட்டி விரட்டி வேட்டையாடியதை பெரியாரிய தோழர்கள் எப்படி மறந்து போனார்கள் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியம். அக்காலகட்டத்தில் இன அழிவை அதன் பாதிப்பை கொடூரத்தை மக்களிடையே பிரச்சாரம் செய்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக பல பெரியாரிய தமிழ் உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குகள் திமுகவால் தொடுக்கப்பட்டது பலர் சிறை பட்டார்கள் என்பதை நமது அண்ணன்மார்கள் மறந்துவிட்டது இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது.

சரி. அது அவர்களது மறதி நோயாக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் திராவிடத்தை காக்கத்தான் சமூக நீதியை காக்க தான் நாங்கள் திமுகவை ஆதரிக்கிறோம் என்று சொல்வது எப்படிப்பட்ட நிலைப்பாடு என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இனத்தின் அழிவை விட திராவிடக் கோட்பாடு எந்த வகையில் உயர்ந்தது என்று யாரேனும் விளக்கினால் நலம். திராவிடத்தை காக்க இனத்தை அழித்த காங்கிரசோடு கைகோர்க்க முடிகிறது என்றால்… எந்த இனத்திற்காக ..யாருக்காக.. திராவிடம் என்பதை இளையோர் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.

நம் அண்ணன்மார்கள் பலருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. காலம் அனைத்தையும் மறக்கடித்து இருக்கும்.நாம் பேசிய எழுதிய அனைத்தையும் அனைவரும் மறந்திருப்பார்கள். எளிதாக பல்டி அடித்து நாம் ஏற்கனவே எழுதிய, பேசிய ஒன்றுக்கு எதிராக தற்போது பேசியும், எழுதியும் விடலாம் என்கின்ற பலத்த நம்பிக்கை இருக்கிறது.

மேலும் அவர்களுக்கும் பசிக்கும் இல்லையா..??

வளரும் நாம் தமிழரை பார்த்து எதிர்த்து எகிறி ஏதாவது உளறினால் தான் இதுவரை உழைத்த உழைப்பிற்கும் இனி பிழைக்க வேண்டிய பிழைப்பிற்கும் ஏதாவது கிடைக்கும் இல்லையா..??

பாவம் அவர்கள்.

இன்னும் நினைவிலும், கனவிலும் ,உதிரத்திலும், இன அழிவை ஆழ்ந்த கோபமாக சிவப்பேறிய விழியிலும் சுமந்து திரிகிற ஒரு தலைமுறை அவர்களுக்கும் தெரியாமல் உருவாகிவிட்டது.

அந்தத் தலைமுறை இன்னும் நூறாண்டு அல்ல.. அதற்கும் மேலாக .. இனம் அழிந்ததை தாங்கள் பார்க்க நேரிட்ட அவலத்தை.. அந்த நிமிடங்களில் மனதில் முளைத்த வன்மத்தை.. தாயக விடுதலை தாகத்தை ஆறாமல் தங்கள் வழித்தோன்றல்களிடம் எடுத்துச் சொல்லிக் கடத்திக்கொண்டே கால வீதிகளில் விதைகளாய் தூவும். இது உறுதி.

மணி செந்தில்.

யாருக்கு உங்கள் ஓட்டு..?

நேற்றைய தினம் தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு கலந்தாய்வு நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாங்கள் அனைவரும் எங்கள் கருத்துக்கள் அனைத்தையும் சொல்லி முடித்த பிறகு இறுதியாக பேச வந்தார் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பெரு மதிப்பிற்குரிய ஐயா கிருஷ்ணகுமார் அவர்கள்.

அய்யா கிருஷ்ணகுமார் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளர். தமிழ் பெரும்புலவர் அம்மாபேட்டை தமிழ் சேரனார் அவர்களது இளைய மைந்தர். வள்ளலார் வழி வாழ்ந்து வருகின்ற சுத்த சன்மார்க்க நெறியாளர். மொழிப்பற்றும் இலக்கியச் செழுமையும் ஒன்றோடு ஒன்று இணைந்து தழைத்த பெரும் குடும்பத்தின் பெருமைமிகு வாரிசு.

அவரோடு பலமுறை நான் உரையாடியிருக்கிறேன். மொழியின் ஆழ அகலத்தை தன் இலக்கிய அறிவு கரங்களால் நீந்தி கடக்க அவர் துணிந்திருப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். வள்ளலாரின் மரணமில்லாப் பெருவாழ்வு என்கின்ற கருத்துருவை மிக ஆழமாக கற்றவர். திருவாசகமாகவோ,தேவராப்பாடல்களோ, திருவருட்பா பாடல்களோ.. பழந்தமிழ் இலக்கியங்களில் எதைப்பற்றி கேட்டாலும் ஆதாரப்பூர்வமாக இலக்கியச்சுவை குறையாமல் நயமாக எடுத்துரைப்பதில் அவர் ஒரு மேதை.

அப்படிப்பட்ட பெருமகன்தான் அந்தத் தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் இறுதியாக பேச வந்தார்.

எதற்காக தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்தது‌ என்கின்ற காரணத்தை பேசத் தொடங்கியவர்.. சொற்களின் மரணம் குறித்து பேசத் தொடங்கினார்.
நம்மொழி ஒவ்வொரு சொல்லாக இழந்து கொண்டிருப்பதை மிக ஆழமாக வேதனையான தன் மொழியில் அவர் இயல்பாக எடுத்துரைக்கும்போது கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது.

நம்மொழி கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்று அண்ணன் சீமான் பல்வேறு கூட்டங்களில் ஏற்கனவே எடுத்துரைப்பதை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் ஐயா அவர்கள் சில சொற்களை குறிப்பிட்டு அது அதனுடைய வேர்த் தன்மையை இழந்து இழந்து கொண்டிருக்கிறது என்றார். சிறு குழந்தைகளுக்கு மயில் என்ற சொல் தெரியவில்லை பீகாக்(Peacock) என்றுதான் புரிகிறது என்று சொன்னபோது உண்மையில் அச்சமாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக அவர் வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது மேலும் சில சொற்களைப் பற்றி விவாதித்தார். குறிப்பாக நாற்றம் என்ற சொல். நாற்றம் என்பது நறுமணம் என்ற பொருளுடையது. ஆனால் இன்று அது தன்னுடைய வேர் தன்மையை இழந்து வேறு பொருள் தருவதை நம் இயல்பு வாழ்க்கையில் நாம் அறிந்திருக்கிறோம்.

இவ்வாறாக பேசிக் கொண்டு போனவர்.. இந்த மொழியை மீட்டெடுக்க யாராவது வர மாட்டார்களா என்று எண்ணி காத்திருந்தபோதுதான் வந்தவர் சீமான். அதனாலேயே அவர் பின்னால் நான் நிற்கிறேன் என்றார்.

சொற்களின் மரணத்தை கண்டு அரசியலுக்கு வந்த ஒருவரும்.. இந்த மொழி சாகாமல் இருக்க அரசியலை கூட ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிற ஒருவரும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கட்சியும் பல வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி இருக்கின்றன. ஆனால் சொற்களுக்காக மொழிக்காக நிற்கிற ஒரு வேட்பாளரை இந்த தேர்தல் களத்தில் யாரும் காண்பதரிது.

ஐயா கிருஷ்ணகுமார் வீட்டில் அவருடைய தகப்பனார் முதுபெரும் தமிழ் புலவர் தமிழ் சேரனார் அவர்களது புகைப்படம் இருந்தது. சாதாரணமாக இறந்தவர்களுக்கு பூ பால் பழம் வைத்து படைப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவரது வீட்டில் அவரது புகைப்படத்திற்கு முன்னால் திருவாசகம் திருவருட்பா போன்ற பல நூல்கள் வைத்து படைக்கப்பட்டு வருவது வியப்பாகவும் நெகழ்ச்சியாகவும் இருந்தது.

இப்படித்தான் எங்களது ஒவ்வொரு வேட்பாளரும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தேர்தல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு புறம்..

சொற்களின் மரணங்களுக்காக.. ஆறுகளின் அழிவிற்காக.. விதை நெல்லின் மீட்பிற்காக.. பறவைகளின் மரணங்களுக்கு நியாயம் கேட்பதற்காக.. இயற்கை அழிவினை சகித்துக் கொள்ளாமல் நீதி கேட்பதற்காக..

மண்ணின் பூர்வக்குடிகள் இந்த தேர்தல் களத்தில் ஆழ் மன துயரங்களோடு நிற்கிறார்கள்..

மறுபுறம் ..

கொள்ளையடித்ததை காப்பாற்ற.. ஊழல் செய்து இம்மண்ணின் சுரண்ட.. எதிர்காலம் ஒன்று இருப்பததையே மறந்து நிகழ்காலத்திலேயே இந்த நிலத்தை அழித்து முடிக்க…

கொலைக்கார கொள்ளைக்காரக் கூட்டம்
மக்களை ஏய்த்து சுரண்டி பிழைக்க மீண்டும் நிற்கிறார்கள்.

யாருக்கு உங்கள் ஓட்டு..??

ஏனெனில் அவர் ..


——————————–

அது ஒரு வெறும் உரையாடல்.

தன் கட்சியை சேர்ந்தவரிடம் அவர் பேசுகிறார்.

யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று பேசிக்கொள்கிறார்கள்.

தலைமைக்கு கட்டுப்பட கோருவதும், கண்டிப்பதும் அரசியல் அமைப்புகளில் மிக இயல்பாக நடைபெறுகிற ஒன்று.

அதை ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டு ஏதோ எதிர்மறைச் செய்தி போல பரப்பவதிலிருந்து..

அவர் குறித்து தவறான பிம்பத்தினை பரப்ப வேண்டும் என்கிற தவிப்பு பலருக்கும் இருப்பது புரிகிறது.

பல தவறானவைகளுக்கு அவர் பெரும் ஆபத்தாக திகழ்கிறார் என்பதும் புரிகிறது.

ஏன் இந்த கடுமையான வெறுப்புணர்ச்சி..

அவர் குறித்த பயம்தான்..

அலைஅலையாய் பரவ காத்திருக்கும் அவரது ஆவேச பரப்புரையை நினைத்து
எழும் அச்சம் தான்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

எதிரிகள் பயப்பட அவர் வாழ்கிறார்.

அவர்கள் அச்சத்தில் இவர் பற்றிய ஏதாவது கிடைக்காதா என தேடித் திரிகிறார்கள். அவர்கள் கனவில் கூட ஆழ்ந்த அச்சமாய்,நடுக்கமாய் அவர் உறைந்திருக்கிறார்.

அவருடைய அண்ணன் குறித்தும் இவ்வாறுதான் பல செய்திகளைப் பரப்பி பார்த்தார்கள்.

பயங்கரவாதி தீவிரவாதி முரட்டுத்தனமானவர் பிறரோடு உடன்படாது தனித்து நிற்கிற சர்வாதிகாரி என்றெல்லாம் பட்டம்கட்டி பார்த்தார்கள்.

அவருடைய அண்ணன் சமரசமில்லாது இதேபோல்தான் தனித்து கம்பீரமாக நின்றார்.

அவருக்குப் பிறகு பயம் ஏற்பட்டது இவரை பார்த்துதான்.

அவர்களின் அந்த அச்சம் நியாயமானது. தகுதியானது.

வரலாற்றில் சரியான ஒருவனை அவர்கள் மீண்டும் சந்தித்து விட்டார்கள்.

அதனால்தான் பதட்டம். இது போன்ற பரப்புரை.

ஆனால் இதற்க்கெல்லாம் அசருகிற ஆளா அவர்..

27 வல்லாதிக்க நாடுகள் ஒன்றாக எதிர்த்த போதும் தனி ஒருவனாக எதிர்கொண்ட ஒரு மாபெரும் வீரனின் தம்பி அல்லவா..

இது போன்ற சில்லறை சப்தங்களால் சினம் கொண்ட அவரது சொற்களை அணை கட்ட முடியாது.

இதுபோன்ற அவதூற்று சருகுகளின் ஓசைகள் அவரது இலட்சிய காலடிகளை தடுத்துவிட முடியாது.

ஏறி மிதித்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்.

ஏனெனில் அவர்..எதிரிகளை இன்னமும் உறங்க விடாமல் உறுத்திக் கொண்டிருக்கிற பிரபாகரனின் தம்பி.

எதிரிகள் அச்சமுற வாழ்கின்ற அவரது வாழ்வென்பது..

நம் எல்லாராலும் ரசிக்கப்பட வேண்டியது கொண்டாடப்பட வேண்டியது.

அதில் உள்ள ஒரு செய்தியை ஆழமாக நாம் கற்க வேண்டியது.

எதிரி பயப்பட வாழ்.

சீமான்- எதிரிகளின் கனவில் உறையும் அச்சம்.

மணி செந்தில்.

பேரன்பின் அற்புதன் -பயஸ் அண்ணா


_—–+-++++++++++++++++++++++++++++

“இரவு ஒரு பசித்த ஓநாய்.
நாடோடி போகுமிடமெல்லாம் அது அவனை தொடர்கிறது.
பிசாசுகளுக்காக எல்லைகளைத் திறந்து விடுகிறது.
வில்லோ மரக்காடு இன்னும் காற்றைத் தழுவுகிறது

இருமுறை சாவதற்கு நாம் என்ன குற்றம் செய்தோம்?
வாழ்க்கையில் ஒருமுறை செய்தோம்.
சாவில் மறுமுறை செத்தோம்.”

மஹ்மூத் தர்வீஷ்
தமிழில் எம்.ஏ.நுஃமான்.
+———-

நீண்ட நேரமாக அந்த கதவுகளுக்கு முன்னால் நான் காத்திருக்கிறேன். வெளியே பரபரப்பான ஒரு உலகம். யாருக்கும் எதைப்பற்றியும் பேசிக் கொள்ளவோ பகிர்ந்து கொள்ளவோ எதுவும் இல்லை. சொல்லப்போனால் அந்த இடம் ஒரு தனித்த தீவாக வெளி உலக வெளிச்சங்களில் இருந்து அன்னியப்பட்ட ஒரு இடமாக காட்சியளித்தது.

சொல்லப்போனால் அது இருள் சூழ்ந்த ஒரு வனம். விடியல் எப்போதும் நிகழாத ஒரு நிலம். நிலவு ஒருபோதும் வராத பாலை. கொடும் அதிகாரத்திற்கு இரையாகிப் போன நடைபிணங்கள் வாழ்கிற மாபெரும் சுடுகாடு.

அந்த இருண்மை வெளியில் தான் ஒரு விடுதலைச் சூரியன் விலங்கு பூட்டப்பட்டு 28 வருடங்களாக அடைபட்டுக் கிடக்கிறது.

.

கதவு திறக்கிறது. சிகப்பு குறுக்கு பட்டை அணிந்த ஒரு காக்கிச்சட்டை அலுவலர் என்னை உள்ளே செல்லலாம் என அனுமதிக்கிறார். அதற்கு முன் எனக்கு பலமுறை சோதனைகள். நான் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே இருக்கிற சிறை அலுவலர் முன்னால் காத்திருக்க வைக்கப் படுகிறேன். நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போது இப்படி இரண்டு மணி நேரங்கள் காத்திருப்பது என்பது ஒரு வழமையான ஒன்று தான்.ஆனாலும் அந்த இரண்டு மணி நேரம் என்பது எனக்கென்னவோ இரண்டு யுகங்களாக காட்சியளிக்கும். உண்மையில் காத்திருப்பு என்பது உலகின் ஆதி மனித துயர்களில் ஒன்று. பசிக்காக, மழைக்காக ,வெயிலுக்காக ,
எல்லாம் வல்ல இயற்கையின் கருணைக்காக, நீருக்காக, நிலத்திற்காக, கசிந்துருகும் காதலுக்காக என மனிதன் ஏதோ ஒன்றுக்காக எப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறான். அப்படித்தான் அந்த சிறைக்குள்ளும் சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள் 28 வருடங்களாக.

வருடங்கள் என்பன நாட்கணக்கில் கணக்கிடப்படுவது அல்ல. 28 வருடங்களை தாண்டியும் மிக நீண்ட துயர் பொழுதுகளை அவர்கள் அனுபவித்து விட்டார்கள். அவர்கள் ஏறாத மன்றங்கள் இல்லை. எந்த மன்றத்திலும் அவர்களின் நீதி எடுபடவில்லை. அவர்களது எல்லாவித பிரார்த்தனைகளையும் கேட்ட எவருக்கும் செவிகள் இல்லை.
.

இவ்வாறாக என் சிந்தனை பல்வேறு புள்ளிகளில் பறந்து திரிய ‌.. திடீரென ஒரு சிறு சத்தம் கேட்டது. ஒரு வெடிச்சிரிப்பு .
தம்பி என்ற ஒரு குரல். அண்ணன் பயஸ் வந்து விட்டார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்ட ஏழு தமிழர்களில் அண்ணன்கள் பயஸ் மற்றும் பேரறிவாளனோடு மட்டும் எனக்கு கொஞ்சம் நெருக்கம் அதிகம்.
குறிப்பாக அண்ணன் பயசின் வாழ்க்கை வரலாற்று நூலான விடுதலைக்கு விலங்கு எழுதும் பொழுதுகளில் நான் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டிய தேவை அவரோடு என்னை மிக நெருங்க வைத்தது. அவர் ஒரு மிகச்சிறந்த ஓவியர். மிகுந்த நம்பிக்கையாளர். ஆனாலும் இந்த நீண்ட சிறைவாசம் அவரது நம்பிக்கைகளை தகர்க்கத் தொடங்கியதை நான் சமீபகாலமாக உணர்ந்து வருகிறேன்.
.
சிறை திரைப்படங்களில் நீங்கள் பார்ப்பது போல அல்ல. சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியாக கொல்லத் தொடங்கும். அதுவும் 28 வருடங்களாக விடுதலை எப்போது என்பதை அறியாத புதிர் வாழ்க்கையில் வாழ்கின்ற அவர்களுக்கு சிறை ஒரு மாபெரும் கொடுமை. வேளைக்கு வேளை அட்டவணை உணவு. சீருடை வாழ்க்கை. எந்த அறிவியல் முன்னேற்றத்தையும் இயல்பான வாழ்க்கையையும் உணரமுடியாத தனிமை தீவின் துயர்ப் பொழுதுகள், நீண்டகாலமாக சிறையிலிருந்து வருவதால் ஏற்படும் மனச்சோர்வினால் உண்டான உடலியல் சிக்கல் .. அவர்களது வாழ்க்கை யாராலும் வாழ முடியாத வாழக்கூடாத மாபெரும் சித்திரவதை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்ப காலகட்டங்களில் சிபிஐ அலுவலகமான மல்லிகையில் வைத்து அதிகம் சித்திரவதை செய்யப்பட்ட நபர் ராபர்ட் பயஸ். தலைகீழாக தொங்க வைத்து அடிப்பது, இரண்டு கால்களையும் எவ்வளவு விரிக்க முடியுமோ விரித்து நேர்கோட்டில் வைத்து முதுகிலேயே லத்தியால் அடிப்பது, என அவர் பட்ட சித்திரவதைகளை கேட்கக்கூட நம்மால் முடியாது. அந்த சித்திரவதைகள் நாம் வாழ்கின்ற நாகரீகமான வாழ்க்கை என்கின்ற இலக்கணங்களை கேள்விக்குறியாக்கி விடுகிறவை.

ஆனால் இத்தனை துயரங்களையும் தாண்டி அண்ணன் ராபர்ட் பயஸ் நம்பிக்கையோடு பார்ப்பவர்களிடமெல்லாம் உற்சாகத்தோடு பேசியும் பழகி வருகிற ஒரு அற்புதன். நான் துவண்டு போன காலங்களிலெல்லாம் என் தோள்களில் கையைப் போட்டு இறுக்கிப் பிடித்து நம்பிக்கையை என்னுள் நங்கூரமாய் விதைத்த நாயகன்.

தம்பி இடும்பாவனம் கார்த்திக் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் இருந்தபோது அவரோடு பழகியதை நொடிக்கு நொடி கண்கலங்க விவரித்துக் கொண்டே இருக்கிறான். வேலூர் சிறையில் அண்ணன் சீமான் இந்த ஐந்து பேரோடு சிறையிலிருந்த பொழுதுகளை இன்னும் மறக்க முடியாமல் நெடுஞ்சாலை பயணங்களில் எங்களோடு பகிர்ந்து கொண்டே இருக்கிறார். விடுதலைக்கு விலங்கு எழுதிய காலங்களில் நான் பயஸ் அண்ணனின் வாழ்க்கையை உள்வாங்கிய பொழுதுகளை இன்னும் என்னால் கடக்க முடியாமல் கண்ணீரோடு காத்திருக்கிறேன்.

இப்படி பழகிய எவராலும் மறக்கமுடியாத கடக்க முடியாத பேரன்பின் அற்புதன் தான் பயஸ் அண்ணா.

பயஸ் அண்ணா நல்ல வாசிப்பாளர். சமீபத்தில்கூட சிறைக்குப் போன ஒரு தம்பியிடம் வேள்பாரி வாங்கச்சொல்லி என்னிடம் தகவல் சொல்ல அனுப்பியிருக்கிறார். கடந்த முறை நான் பார்த்தபோது அவருக்கு வரலாற்று புதினங்களாக தேர்வு செய்து எடுத்துக்கொண்டு அளித்தேன். அவர் எனக்கு ஈழத்து விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதை தொகுப்பு ஒன்றினை பரிசாக அளித்தார்.
.

அவரைப் போன்ற மனிதர்கள் சிறைக்குள் சித்திரவதை படுவதென்பது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாத வலி. எத்தனையோ நீதிமன்றங்களை கடந்து, இறுதியில் ஒரு ஆளுநரின் கையெழுத்திற்காக காத்து கிடப்பது என்பது இந்த 28 வருடங்களின் துயரங்களைத் ஆண்டிலும் மாபெரும் பெருந்துயர். 28 வருடங்களாக ஒரு முழு இரவில் மூடாத அவரது இமைகள் ஒரு விடுதலை நாளில் நிம்மதியான ஒரு உறக்கத்திற்காக மூட வேண்டும். அவருக்காக என்னைப் போன்ற தம்பிகளின் இல்லங்கள்.. அவரை பெரியப்பா என்று சொந்தம் கொண்டாட என் மகன்களை போன்ற பல உள்ளங்கள் காத்துக்கிடக்கின்றன.
.
இன்று அவருக்கு பிறந்தநாள்.
அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவோ நமக்கெல்லாம் எந்த தகுதியும் கிடையாது. சொல்லப்போனால் நாம் எல்லாம் பட்ட கடனை அந்த சில மனிதர்கள் கொடும் சிறைவாசத்தால் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
ஒவ்வொரு சந்திப்பிலும் விடைபெற்றுக் கொள்ளும் போது விடுதலைப் பற்றிய சில செய்திகளை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவரும் நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்வார். ஆனால் சமீப சில நாட்களாக அந்த நம்பிக்கை அவரிடமிருந்து நகர்ந்துகொண்டே போவதென்பது எனக்கெல்லாம் மாபெரும் வலியாக இருக்கிறது.

கடைசியாகப் பார்த்த சந்திப்பிலும்.. அடுத்த முறை வெளியே சந்திப்போம் என நான் சொல்லிய போது சட்டென அந்தக் கண்கள் கலங்கியதை கண்டேன்.

என்னை இறுக்கி அணைத்து போய் வா தம்பி என்றார்.

நானும் கலங்கியவாறே வெளியேறிவிட்டேன்.
.
இந்த நொடி வரை அவரது நம்பிக்கையை துளித்துளியாய்
தகர்த்து கொண்டிருப்பதற்காக
கண் கலங்கி தலைகுனிந்து அவர் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். அந்தக் குற்ற உணர்வு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் வேண்டும். அந்த குற்ற உணர்வுதான் அவனை போராடத் தூண்டும்.
.
எழுவர் விடுதலை இனத்தின் விடுதலை.
.
அண்ணன் பயஸ் அவர்களுக்கு.. நீங்கள் விடுதலையானப் பொழுதொன்றில் இந்தப் பதிவை உங்களிடம் நான் நேரடியாக படித்துக் காட்டுவேன்.
அடுத்த வருடம் உங்கள் பிறந்த நாளை உங்களோடு நாங்கள் சூழ நிகழ்த்திக் காட்டுவோம். விடுதலை கனவோடு நகரும் இறுதி பிறந்த நாளாக இந்நாள் அமையட்டும் அண்ணா. வாழ்த்துகள்.

கனவு மெய்ப்படும் விடுதலை நாளுக்காக காத்திருக்கும் உங்கள் தம்பி..

மணி செந்தில்.

தமிழன் தொலைக்காட்சி பேட்டி

[youtube]https://www.youtube.com/watch?v=i3p_5TTsZKM[/youtube]

 

[youtube]https://www.youtube.com/watch?v=ZgU3whHEbrE[/youtube]

Page 8 of 15

Powered by WordPress & Theme by Anders Norén