“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”
-சாதத் ஹசன் மண்ட்டோ.
மண்ட்டோ என்ற இப் பெயரினை நான் முதன் முதலாக கேள்விப்பட்ட இடம் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. எழுத்தாளரும், என் நண்பருமான அம்மாசத்திரம் சரவணன் திருமண நிகழ்வின் போதுதான் இப்பெயரினை நான் முதலில் கேட்டேன் . திருமணத்தின் முதல் நாளின் மாலையில் சரவணன் தனது சிறுகதை தொகுப்பினை வெளியிடும் நிகழ்வினை வைத்திருந்தார். சரவணன் தமிழ்நாட்டின் நவீன எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பராக இருப்பவர். அதனால் அவரின் திருமண நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள் . அந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள எஸ் .ராமகிருஷ்ணன், அ.மார்கஸ், கோணங்கி, பொதியவெற்பன் போன்ற பல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். மாலையில் நடந்த அந்த சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் அ.மார்க்ஸ் இனி தமிழக எழுத்தாளர்கள் மண்ட்டோவினை பின்பற்ற வேண்டும் எனவும்,புதுமைப்பித்தனையே பிடித்து தொழுது கொண்டிருக்க கூடாது, திருமணம் போன்ற நிறுவனங்கள் தகர்க்கப்பட வேண்டும் எனவும், அப்பா, அம்மா, மனைவி போன்ற குடும்ப உறவுகளில் எவ்வித புனிதமும் இல்லை எனவும் வயதான பெற்றோரை கவனிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கான விருப்பம் எனவும் பேசினார்.திருமணத்திற்கு வந்திருந்த பெண்கள் இதையெல்லாம் கேட்டு நெளிந்துக் கொண்டிருந்தனர். புதுமைப்பித்தனின் வெறியரான பொதிய வெற்பனுக்கு இது தாங்கவில்லை. துள்ளி துடிக்க எழுந்து பதில் சொல்ல முயன்றார். ஆனால் அ.மாவிற்கு முன்பே பேசியிருந்த பொதியினால் மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பில்லை. அடுத்ததாக பேச வந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
எஸ்.ராமகிருஷ்ணன் ஆகச்சிறந்த பேச்சாளரில்லை. ஆனால் நாம் அறிந்திராத தகவல்களையும்,சுவாரசியங்களையும் கலந்து அடித்து பிரித்து மேய்வதில் வல்லவர். ஒரு அவையை எப்படி தன்னகப்படுத்துவது என்ற வித்தை புரிந்தவர் எஸ்.ரா. அதனால் மிக எளிதாக குடும்ப உறவுகளின் மேன்மையை பற்றி பேசி பெண்களிடம் கைத் தட்டல் அள்ளிக் கொண்டு போனார் எஸ்.ரா.பிறகு மண்ட்டோவினையும்..புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு அவர் பேசினார். புதுமைப்பித்தனின் வாழ்வியலும், சமூகச் சூழலும் நமக்கு நெருக்கமானவை என்றும் மண்ட்டோ போல எதனையும் சிதைக்க நம் பண்பாட்டு விழுமியங்களில் இடமில்லை எனவும், நம் உறவுகளில் நிலவும் சகிப்பும், பகிர்வுமே நம்மை நிம்மதியாக வாழ வைக்கிறது எனவும் பேசி அந்த அரங்கினில் புதுமைப்பித்தனை உச்சியில் வைத்து பொதியவெற்பனை துள்ளிக் குதிக்க வைத்தார் எஸ்.ரா.
விழா முடிந்து எஸ்.ராவுடன் நான் காரில் வருகையில் மண்ட்டோ அந்தளவு நமக்கு அந்நியப்பட்டவரா என்று கேட்டேன். அதற்கு மண்ட்டோவினை படியுங்கள் . அதனை வெறுப்பதும், நேசிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் மண்ட்டோவினை படிக்காமல் இருக்காதீர்கள் என்றார்.
அந்த நாளில் தான் மண்ட்டோ என்னுள் நுழைந்தார். நான் ஒரு முறை திருமணத்திற்காக கோவைக்கு சென்ற போது சென்னையில் இருந்து வரும் என் நண்பன் ஒட்டக்கூத்தனை மண்ட்டோ படைப்புகள் நூலினை வாங்கி வரச்சொல்லியிருந்தேன். நான் வருவதற்கு முதல் நாள் வந்திருந்த அவனிடம் மண்ட்டோ படைப்புகள் இருந்ததை எழுத்தாளர் பாமரன் பார்த்து விட்டார். அந்த புத்தகமும் எனக்கு கிடைக்காமல் போயிற்று. கடைசியாக சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் மண்ட்டோ படைப்புகள் எனது வசமானது.
மண்ட்டோ என்ற சாதத் ஹசன் மண்ட்டோ 1912 –ல் லூதியானாவில் இருக்கும் சம்ப்ராலாவில் பிறந்தார். இந்திய –பாகிஸ்தான் பிரிவினையில் மண்ட்டோ பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தார். தனது 43 ஆம் வயதில் 1955-ல் லாகூரில் காலமானார். மண்ட்டோவின் படைப்புகள் பெரும்பாலும் பிரிவினைத் துயரங்களை பேசுகின்றன. மேலும் விளிம்பு நிலை மக்கள்,விலை மாதர்கள் தான் அவரது கதைகளின் கதை மாந்தர்கள். ஓவ்வொரு படைப்பும் அதிர்ச்சிகளின் வெடிப்பில் முடிந்தது. எளிய வாசகர்கள் மண்ட்டோவினை அணுக அஞ்சுவதும் இதனால் தான். தான் வாழும் காலத்தில் தன் படைப்புகளால் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் மண்ட்டோ சந்தித்தார். அவரது எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும், அதிர்ச்சி மதிப்பீடுகளை தருவதற்காகவே புனைவினை மேற்கொள்கிறார் எனவும் விமர்சிக்கப் பட்டன. ஆனால் மண்ட்டோவினை நாம் அவ்வாறெல்லாம் மிக எளிமையாக ஒதுக்கித் தள்ளி கடந்து விட முடியாது. அவரது எழுத்துக்கள் மிகவும் ஆபாசம் என்றால்..அவர் மிக எளிமையாக சொல்கிறார்…ஆம் . உண்மைதான் மிக ஆபாசமானது என்று. இதுதான் மண்ட்டோ.
சிக்கனமான சொற்களின் ஊடாகவே ஒரு படைப்பிற்கான அனைத்து வழிகளையும் திறந்து வைத்தவர் மண்ட்டோ.மண்ட்டோவின் எழுத்துக்கள் உண்மைக்கு அருகில் நிற்பவை அல்ல. மாறாக உண்மையாகவே நிற்பவை. இதுதான் பிற்போக்குவாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனையாக இருந்தது. மண்ட்டோ தனது எழுத்துக்களால் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டார். சமூகத்தின் உயரிய சின்னமான மதத்தினை அவர் தன் எழுத்துக்கள் ஊடாக மிகவும் எள்ளலான முறையில் கேள்விக்கு உட்படுத்தியது மதவாதிகளை எரிச்சல் ஊட்டியது.
ஓய்வு நேரம் எனப் பெயரிடப்பட்ட அவரது சொற்றோவியம் ஒன்று.
“ ஏய்..
அவன் இன்னும் சாகவில்லை..
அவனிடம் இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது”
“என்னால் முடியவில்லை.
எனக்கு அசதியாக இருக்கிறது”
இந்த சொற்றோவியத்தினை ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திய ரத்த வாடையினை உணர்வீர்கள்.
துணிச்சலான செயல் எனப் பெயரிடப்பட்ட மற்றுமொரு சொற்றோவியம் ஒன்று.
“ அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாமே தீ வைக்கப்பட்டு எரிந்துப் போனது. –ஒரே ஒரு கடை தப்பித்தது.
அந்த கடையின் அறிவிப்புப் பலகையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது .
“கட்டிடங்கள் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் இங்கு விற்கப்படும்”
பிரிவினைக் கால கலகப் பூமியை அப்படியே நகலெடுத்து உண்மையாக யாரால் இப்படி எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால் மண்ட்டோ மட்டுமே தேறுகிறார்.
நினைவோடைப் பகுதியில் முகமது அலி ஜின்னாவினைப் பற்றி மண்ட்டோ எழுதியுள்ள பத்தி மிகவும் தனித்துவமானது. ஒரு படைப்பாளன் ஒரு ஆளுமையை அருகிலிருந்து உள்வாங்கி, அதை அப்படியே தன் படைப்பில் உருவாக்கி வாசகர் முன் உயிரூட்டி காட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் மண்ட்டோவின் எழுத்துக்கள் மிக எளிதாக அதை சாதித்தன. மேலும் நர்கீஸ் பற்றியும் , நூர்ஜகான் பற்றியும், அசோக்குமார் பற்றியும் மிக நெருக்கமான விவரணைகள் நமக்கு மண்ட்டோவின் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன.
மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.
மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையான சொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிப் பெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.
( மண்ட்டோ படைப்புகள் : தமிழில் – ராமாநுஜம் – வெளியீடு – புலம்- பக்கங்கள் 615 விலை: ரூ.375/-)