ஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் அதே கண்கள் (1967).

ஆனால் நவீனகால சினிமா அறிவியலுடன் நேரடியாக தொடர்புடைய காரணியாக மாறி இருப்பதால் திரைக்கதைகள் கடுமையான உழைப்பை கோரி வருகின்றன.

செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, ஹேக் செய்வது, மனிதனை கட்டுப்படுத்தும் அறிவியலை மனிதன் தன் அறிவால் கட்டுப்படுத்துவது ..போன்ற பல யுத்திகளை தனது திரைக்கதையில் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அப்படி ஒரு முயற்சிதான் இமைக்கா நொடிகள். உண்மையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இம் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகின்ற திரைப்படம். திரைக்கதையின் சுவாரசியத்தால் அந்த மூன்று மணி நேரத்தை மிக எளிதாக இயக்குனர் கடக்க வைத்திருக்கிறார். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு திரை அரங்கம் நிரம்பி வழிகிற காட்சி இமைக்கா நொடிகளில் தான் நான் காண நேர்ந்தது.

சமூகத்தில் உயர்வான பொருளாதார வசதியோடு இருக்கின்ற ஹை க்ளாஸ் குடும்பத்தின் வாரிசுகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் எல்லா பெற்றோர்களிடமும் 2 கோடி கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு கொலையும் செய்து விடுகிறான். அடுக்கடுக்காக நிகழும் இந்த கொலையை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் உச்சநட்சத்திரம் நயன்தாரா. இந்தப் படம் அவருக்கானது. ஏறக்குறைய அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அவரது தம்பியான அதர்வா. இந்த இருவரையும் தாண்டி படம் முழுக்க ஆக்கிரமிப்பது வில்லனாக வருகின்ற புகழ்பெற்ற இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப். படத்தில் இருக்கின்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா இப்படத்தில் தன்னை மிகவும் மெருகேற்றி இருப்பது ஆச்சரியமான ஒன்று. வில்லன் விடுக்கிற சவால்களை கதையின் நாயகி எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறார். பலமுறை அதில் தோற்கிறார். வில்லனுக்கும் நயன்தாராவுக்கும் நடக்கிற அந்த கழுதைப்புலி -சிங்கம் உரையாடல் மிக சுவாரசியமாக இருந்தது. சின்ன சின்ன அசைவுகளிலும் வில்லன் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார் ‌. நயன்தாரா தமிழ்நாட்டின் ஏஞ்சலினா ஜூலி. அதை நிரூபித்தும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவில் நெகிழ்ந்து உருகுவது அழகாக இருக்கிறது. ஏறக்குறைய அனைவருமே சரிசமமான பங்கு இருப்பது போன்ற திரைக்கதை வடிவமைப்பு இயக்குனரின் திறமை.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். ஆனாலும் அனுராக் காஷ்யப், நயன்தாரா ,அதர்வா ஆகியோர் தங்களது மேம்பட்ட திறமையால் இமைக்கா நொடிகளை இமைக்காமல் பார்க்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் இரவு நேர காட்சிகளில் தான் யார் என காட்டியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இரண்டு பாடல்களில் தெரிகிறார். வேகமெடுத்து ஓடும் திரைக்கதையால் படத்தின் குறைகள் எதுவும் அதிகம் உறுத்தாமல் கவனித்துக் கொண்டது இயக்குனரின் திறமையே.. பாராட்டுக்கள் அஜய்.

இப்படத்தின் தயாரிப்பில் என் தம்பிகள் அருண்குமாரும் அரவிந்தும் பங்கு பெற்றிருக்கிறார்கள். அருமைக்குரிய சகோதரர் விஜய் சார் இப்படத்தினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். படம் வெற்றியடைந்து விட்டது. புன்னகை தவழ இருக்கிற அந்த முகங்களை காண விரைவில் சென்னைக்கு செல்ல வேண்டும்.

இமைக்கா நொடிகள் குடும்பத்துடன் ஒரு மாலையை பொழுதுபோக்காக , விறுவிறுப்பாக கழிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்ற திரைப்படம் .

அவசியம் காணுங்கள்.