உச்ச நட்சத்திரங்கள் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழகத்தில் நாம் தரிசிக்கும் அதே மாறா காட்சிதான். மழைக்காலங்களில் மின்னிடுகிற சுடு வெயில் பொழுதொன்றில்.. அத் திரையரங்கின் முன் திரண்டியிருக்கிற ரசிகர் கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று கையில் பால்பாக்கெட்டுகளோடு நாலைந்து பேர் ’தலைவா’ என கத்திக் கொண்டு ஒடி வருகிறார்கள். “சர சர” வென்று அந்த கட் அவுட் மூங்கில்களில் ஏறி தங்களது தலைவர் முகத்தில் பாக்கெட் பாலை பீய்ச்சி அடிக்கிறார்கள். இதற்கு நடுவே திரையரங்கு வாசலில் இருந்து ஒரு சத்தம். டிக்கெட் கொடுங்கறாங்கடோய்…. அனைத்து கூட்டமும் குறுகிய அத்திரையரங்கு வாசலை நோக்கி நெறுக்கி தள்ளுகிறார்கள். திரையரங்குள்ளும் அந்த ரசிகர்களின் ஆட்டம் தொடர்கிறது. திரைப்படம் தொடங்கியவுடன் திரையில் மின்னும் SUPER STAR என்னும் எழுத்துக்களை கண்டவுடன் திரையரங்கமே இடிந்து விழும் அளவிற்கு கூச்சல்..பிறகு முதல் பாடலின் போது காரில் இருந்து இறங்கும் தங்கள் தலைவரின் முகமே தெரியாத அளவிற்கு பேப்பரை கிழித்து எறிந்து உச்சத்தை தொடும் இந்த ரசிகர்கள் ..அடுத்தடுத்த காட்சிகளில் அமைதியாகிறார்கள். திரைப்படத்தின் இடைவெளிகளில் கூடும் இந்த ரசிகர்கள் ”இனிமே தாம்பா படமே” போன்ற வார்த்தைகளில் ஆசுவாசம் கொள்கிறார்கள். மீண்டும் திரைப்படம் ஓடி முடிவடைகிறது. ஏறக்குறைய 3 மணி நேர கனவு கலைந்த துயர்கொண்டு அமைதியும், சோர்வுமாக கலையும் அந்த ரசிகர்களை பார்த்து நமக்குள் எழுகிற கேள்வி..
ரஜினியின் யுகம் முடிவடைந்து விட்டதா…?
70களின் பிற்பகுதியில் இருந்து தொடங்கிய திரைப்படம் காண்போரின் ரசிக அலைவரிசை 2010க்கு பிறகு மாறி இருக்கிறதோ என சமீப காலமாக வெற்றியடையும் பல திரைப்படங்கள் சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இக்கால திரைப்படங்களுக்கு கதாநாயக,கதாநாயகி பிம்பங்கள் தேவையில்லை. பாடல்கள் கூட வேண்டாம். பின்ணணி இசையை முன்ணனி இசையாக போட்டுக் கொள்ளலாம். பறந்து,எழுந்து, துடித்து, அடிக்கும் பரபர சண்டைக் காட்சிகள் தேவையில்லை. உதடுகள் பிரியும் அளவிற்கு உதிரும் புன்னகையை வர வைத்தால் அதை காமெடி காட்சியாக கருதி விடலாம். சொல்லப் போனால் கதையே தேவையில்லை என்பதை கதை திரைக்கதை வசனம் இயக்கம் காட்டி விட்டது. பயமுறுத்த வேண்டிய பேய் படங்களும் காமெடிப்படங்களாக சிரிக்கின்றன.
ஏற்கனவே வழமையாக காலங்காலமாக திரைப்படங்கள் மூலம் திரையாசிரியர்கள் நிறுவி இருக்கிற பிம்பங்களினை கலைத்துப் போடுதலை..பிம்பங்களை அழித்தலைத்தான் சமீபத்திய வெற்றி படங்களின் கதையாக விரிகிறது இக்காலம் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு மிக கடின காலம் தான்.
சத்தம் போட்டு புள்ளி விபர வசனம் பேசி, ஒற்றைக்காலை ஊனி , மற்றொரு காலால் வில்லனை உதைத்து,பொதுமக்கள் சூழ விஜயகாந்த் கதாநாயகனாக நடந்து வந்த காலங்களில் கொண்டாடிய ரசிகர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மலையூர் மம்பட்டியான் என வெள்ளி விழா கொண்டாடிய ஒரு திரைப்படம் மீண்டும் ரீ மேக்கான போது வாங்க ஆளில்லை. ஒரு காலத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் ஆக்ஷன் கிங் அவதிக்கு உள்ளாகிறார் . ஒரு காலத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக தொடர்ச்சியாக அளித்த இயக்குனர் விக்கிரமனின் அடுத்த படம் என்ன என்பது யாருக்கும் தெரியாது . இயக்குனர் பாரதிராஜாவின் அண்மைப்படம் அன்னக்கொடி வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தடமிழந்தது. மணிரத்தினத்தின் இராவணன் படம் தோற்கிறது. அக்காலக்கட்டத்தின் மாபெரும் நட்சத்திரங்களான பிரபும், சத்தியராஜீம் கிடைக்கிற கதாபாத்திரங்களில் தங்களை பொருத்திக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது.
இக்காலக்கட்டத்தில் தான் ரஜினிகாந்தின் லிங்கா வெளி வருகிறது. பெரும்பாலும் 35 மேல் வயதாகி விட்ட ஒரு தலைமுறை ரசிகர் கூட்டத்தை இத்தனை ஆண்டு காலம் தக்க வைப்பதே ஒரு சாதனைதான். அதனால் தான் ஒரு ரஜினி படத்தின் வெளியீட்டிற்கு முன் வழக்கமாக எழும்பும் ரஜினியை அரசியலுக்கு அழைத்தல்கள் இப்பட ஒலிப்பேழை வெளியீட்டின் போதும் நடந்தது. இம்முறை ரஜினியை இயக்குனர்கள் அமீர்,சேரன் ஆகியோர் அரசியலுக்கு அழைத்தனர். இயக்குனர் சேரன் காந்திக்கு பிறகு ரஜினிதான் என போட்டுத்தாக்கினார். ”இன்னும் எத்தனை நாளுக்குய்யா ஒரே ஆளையே அரசியலுக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க” என எரிந்து விழுந்தார் இயக்குனர் பாரதிராஜா. ரஜினிதான் வந்து தமிழ்நாட்டை காப்பாத்த வேண்டும் என்கிற அவசியமில்லை என்று குரல் எழுப்பினார் நாம் தமிழர் சீமான்.
இப்படி ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டின் போதும் அரசியல் சார்ந்த சர்ச்சைகள் ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது வழமை. பாட்சா பட வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சு,முத்து திரைப்படத்தில் அந்த நாடக காட்சி, அருணாசலம்,பாபா திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள், என அனைத்து ரஜினி படங்களும் ரஜினியை அரசியலுக்கு அழைப்பு விடுப்பவனாகவே அமைந்தன. இவையெல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கும் போதெல்லாம் திட்டமிட்டு தான் இது போன்ற காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா என்கிற சந்தேகம் எளிய பார்வையாளனுக்கு பிறப்பது எளிது.
அவ்வகையில் லிங்கா ஒரு வழக்கமான ரஜினி படமா என்றால் ஆம்/இல்லை என்கிற ஒற்றைப் பதிலை சொல்ல முடியாத குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர்.கே.எஸ்.ரவிக்குமார். பெரும் செல்வந்தர் ஒருவர் தனது செல்வத்தை எல்லாம் மக்களுக்கு வாரி வழங்கி விட்டு எதுவுமற்ற ..ஏறக்குறைய ஒரு துறவு மனநிலையில் வாழ்வது போன்ற காட்சிகளை திட்டமிட்டு/திட்டமிடாமல் தொடர்ச்சியாக தன் படங்களில் இடம் பெற செய்கிற ரஜினிகாந்த் லிங்கா பட ஒலிப்பேழை வெளியீட்டின் போது தன் இளைய மகளுக்கு புதிதாக ஏதும் சம்பாதிக்க வேண்டாம். தான் சம்பாதித்தை பாதுகாத்தாலே போதும் என அறிவுரை வழங்கியது காட்சியியல் முரண்.
முல்லை பெரியாற்று அணையை கட்டிய பென்னிக்குயிக் அவர்களின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இது என லிங்காவை யாரும் பாராட்டி விடக் கூடாது (?) என்பதில் இயக்குனர் மிக கவனம் கொண்டிருக்கிறார். ஏனெனில் அயல் நாட்டில் பிறந்தாலும் ஒரு பகுதி மக்களின் பசியை,வறுமையை, வாழ்வியல் தேவையை உணர்ந்தவர் பெருமகன் பென்னிக்குயிக் .கடலில் கலந்து வீணாகும் தண்ணீர் மக்களின் வயிற்றில் நீராக,சோறாக சேரட்டும் என சிந்தித்த பென்னிக்குயிக் முல்லை பெரியாறு அணையை கட்ட தனது செல்வங்கள் அனைத்தும் இழந்தார் என்பது தியாக வரலாறு. அந்த வரலாற்றின் துளிகளை ரஜினி என்கிற உச்ச நட்சத்திரத்திற்கு ஏற்றாற் போல் மாற்றியமைப்பதில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கடுமையான குழப்பங்கள் .
ஒரு உச்சநட்சத்திரமாக விளங்குகின்ற ஒருவரின் 60 வயதிற்கு மேற்பட்ட அவரது திரைப்பட முயற்சிகள் எப்படிப்பட்ட விமர்சனங்களை எழுப்பும் என்பதை ரஜினி அறியாதவரல்ல. ரஜினியை போலவே இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் தன் வயதிற்குரிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. ரஜினிகாந்தை விட வயதில் இளையவர்களான அவரது சக நட்சத்திரங்களான விஜயகுமார்,பிரபு,சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் தந்தையாக, தாத்தாவாக நடிக்கத் தொடங்கி விட்டனர். தெலுங்கில் உச்ச நட்சத்திரமான என் டி ஆர் தீவிர அரசியல் பிரவேசத்திற்கு பிறகு 1984க்கு பிறகு மீண்டும் 1991 –ல் பிரும்மரிஷி விஸ்வாமித்ராவில் கதாநாயகனாகவே நடிக்க வந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . ஆனாலும் தமிழகத்தின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் தனது சக நட்த்திரமான சத்ருகன் சின்ஹா வின் மகள் சோனாக்ஷி சின்காவோடு கதாநாயகனாக நடிப்பது என்பது மிகு நம்பிக்கைதான்.
இரு வேடங்கள். ஒருவர் திருடன்.மற்றொருவர் மக்கள் மனங்கவர்ந்த மாமனிதர் என்கிற சிறு முடிச்சியை (Knot) வைத்துக்கொண்டு, பென்னிக்குயிக் கதையை நகல்.. எடுத்து மன்னிக்க ..இப்பொதெல்லாம் இன்ஸ்ப்ரேஷன் தான் , ரஜினிக்கென்று வழமையாக கிளிஷேக்களை கொண்டு திரைமொழி படைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். சந்தானம் மற்றும் இளைய நடிகர்களோடு ஒரு மேக்கப் ரஜினியை உலவ வைத்தால் போதும் இளமையான ரஜினியை உருவாக்கி விடலாம் என்று ரவிக்குமார் நினைத்திருக்கிறார் போலும். அம்முயற்சியில் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளாரா என்பது கேள்விதான். சில குளோசப் காட்சிகள்,நடன அசைவுகள்,வழக்கமான ரஜினிக்கென்று வசப்பட்டிருக்கிற துறுதுறுப்பின்மை போன்ற காட்சிகளில் தான் ரஜினியின் உண்மை வயதை நாம் உணர்கிறோம். ஆனால் இதையெல்லாம் தாண்டி தனது வயதை காட்டிக் கொள்ளாமல், கடுமையான நோய் பாதிப்புகளிலிருந்து மீண்டு தன்னால் இன்னமும் எல்லாம் முடியும் என நடித்திருக்கிற ரஜினியின் தன்னம்பிக்கை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. அது இத்தனைக் காலம் தன் பின்னால் திரண்டிருக்கிற தனது ரசிகர்கள் மீது அவர் கொண்டிருக்கிற நம்பிக்கை எனவும் கொள்ளலாம்.
திருடனாக இருக்கிற லிங்கா தனது தாத்தாவான ராஜா லிங்கேஸ்வரன் மீது அதிருப்தியில் இருக்கிறார். அனுஷ்கா மூலமாக சோலையூர் கிராமத்திற்கு செல்லும் லிங்கா தனது தாத்தா கட்டிய அணை பற்றிய வரலாற்றினை அறிகிறார். அந்த அணைக்காக தனது தாத்தா தனது பதவி,அதிகாரம் ,சொத்து என அனைத்தையும் இழந்து சமையல்காரனாக மாறிப்போன கதையை கேட்டு நெகிழ்கிறார். சம காலத்தில் அணைக்கு உள்ளூர் எம்.பி மூலம் ஏற்படும் அபாயத்தை பைக்கில் சீறி,பலூனில் பறந்து, வெடிக்குண்டை தண்ணீரில் வெடிக்க வைத்து தடுக்கிறார். வழக்கமாக இறுதிக்காட்சியில் வரும் போலீஸ் காரராய் கே.எஸ் ரவிக்குமார் வர,அவரோடு அனுஷ்காவையும் அழைத்துக் கொண்டு விசாரணைக்காக (?) செல்கிறார். இதுதான் கதை. ரஜினி படத்திற்கே உரிய வேகமான கதையோட்டம் படத்தில் இல்லை. ரஜினியை பறக்க,தாவ வைக்க உதவுகிற கிராபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவாக எடுபடவில்லை.
படத்தில் நிறைய காலத்தகவல் குழப்பங்கள். இரயிலில் கொள்ளையடிக்கும் வரும் தீவிரவாதியை பார்த்து நீ சுபாஷ் சந்திர போஸ் படையில் சேர் என்பது போல அறிவுறுத்துவது காலக் குழப்பத்தை காட்டுகிறது. 1939 களில் சுபாஷ் சந்திர போஸ் ஆயுத போராட்டத்தினை தொடங்கவில்லை . 1939 ஆகஸ்ட் வரை காங்கிரசின் தலைவராகவே சுபாஷ் சந்திரபோஸ் விளங்கினார். அதே போல 1939 களில் ரஜினி இரயிலில் படித்து வருகிற ஜோசப் காம்பெல் எழுதிய A hero with thousand faces என்ற புத்தகம் 1949ல் தான் பதிக்கப் பட்ட நூலாகும்.
மேலும் ரஜினிகாந்த் ஆங்கிலேய அதிகாரிகளிடம் இந்திய பெருமிதம் பேசும் 1939 காலங்களில் ஏறக்குறைய அனைத்து ஜமீன் தார்களும், குறு நில மன்னர்களும் ஆங்கிலேயர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு ,பிரிட்டிஷ் மகாராணி விசுவாசம் உடையவர்களாக மாற்றப்பட்டிருந்தார்கள் . தன்னிச்சையாக ஒரு அணை கட்டும் அளவிற்கு ஒரு இந்தியரை பிரிட்டிஷ் வல்லாதிக்கம் அனுமதிக்குமா என்பதும், தேசியக் கொடியோடு சாதி,மத பேதமற்று இந்தியராய் ஒரு அணை கட்டுமானப்பணியில் இணைய அனுமதிக்குமா என்பதெல்லாம் ரஜினி படங்களுக்கே உரிய கேட்கக் கூடாத கேள்விகள்.
சந்தானத்தின் ஸ்பாட் (spot ) காமெடியும்,அணை உருவாக்கமும், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலும் நேர்த்தியும் திரைப்படத்தில் முக்கிய அம்சங்கள் .ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோர்ப்பில் இது மற்றொரு படம் அவ்வளவே.
ஒரு உச்ச நட்சத்திரம் தன்னை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பாடுகளை ஏற்கனவே தமிழ்சினிமா எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நட்சத்திரங்கள் வாயிலாக உணர்ந்திருக்கிறது . மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தோடு எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனதும், படையப்பா திரைப்படத்தில் சிறு வேடத்தில் சிவாஜி கணேசன் வந்து போனதும் திட்டமிட்டு நடந்தவை அல்ல. பிரபு,சிவக்குமார் நடித்த உறுதிமொழி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது அதனை பார்க்கச்சென்ற சிவாஜி கெஸ்டா வந்திருக்கேண்டா என்று கலங்கிய சிவாஜியை நீங்க நடிச்சி முடிச்ச தாண்ணே இப்ப நாங்க நடிச்சிகிட்டு இருக்கோம் என ஆற்றுப்படுத்தியாக நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இது போல் அல்லாது ..கதையின் நாயகனாகவே தொடர விரும்பும் ரஜினி தான் இத்தனை ஆண்டு காலமும் உழைத்து நிறுவி இருக்கிற இளமையும்,துள்ளலும் ,வேகமும் நிரம்பிய தனது நாயக பிம்பத்தை..தனது முயற்சிகளாலேயே சிதைத்து விடும் அபாயம் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைதான் லிங்கா திரைப்படம் அவருக்கு உணர்த்தியிருக்கும்.
அவரது சம கால நண்பர் கமல்ஹாசன் சமீப படங்களில் மரங்களை சுற்றி பாட்டு பாடி வருவதை நிறுத்தி விட்டு ஏதோ வித்தியாசமாக செய்துவிட உழைத்துக்கொண்டு இருப்பதும் ரஜினி அறியாதது அல்ல. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரோஜர் மூர்,மார்கன் ப்ரீமென் போன்றவர்கள் இன்றளவும் உச்சத்தில் தொடர்வதற்கான சாத்தியங்களில் இருக்கிறார்கள். அவர்கள் செய்வது மேக்கப் மேன் உள்ளீட்ட எவரையும் நம்பாமல்,கிராபிக்ஸ் உள்ளீட்ட எதையும் நம்பாமல் அவர்களாவே வருவது. தனக்குள் இயல்பாக ஊறி இருக்கிற கலை அம்சத்தை மீட்டெடுத்து தக்கவைப்பதுதான் ஒரு கலைஞனின் வாழ்நாள் பணி. முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் என தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினி என்கிற கலைஞனின் கலையம்சம் கேள்விக்குபட்டதல்ல.
ஆனால் காலமும்,லிங்கா போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் ரஜினி என்கிற கலைஞனின் கலையம்ச உணர்வினை கேள்விக்குட்படுத்தி விடுகிற அபாயம் இருக்கிறது.
அந்த அபாயத்திற்கு பயந்து தான் மகேந்திரன் ,பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் ஒரு கண் அசைவிலேயே கலை நுண் உணர்வினை நிறுவிய ரஜினிகாந்த் இப்படி லிங்காவில் பலூனில் எல்லாம் பறக்க வேண்டி உள்ளது.
இப்படி சிரமங்களெல்லாம் படாமல் ரஜினிகாந்த் தனது வயது, தனது பிம்பம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கலைஅம்சம் சுடரும் ஒரு முழுமையான கலைஞனாய் வெளிபட உதவும் ஒரு படைப்பாளிதான் ரஜினிகாந்தின் இன்றைய தேவை.
-மணி செந்தில்