பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரை மொழி

மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.

கோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான்.

.

எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தினை அளிப்பதாக இருந்திருக்கின்றன. வாசகன் மனநிலையை தக்க வைத்து நகர்த்திச் செல்லும் புதினப் படைப்பாளியின் உத்திகள் அப்படியே திரைக்கதை ஆசிரியருக்கும் பொருந்தவன அல்ல. புதினத்தினை திரைமொழியாக்கும் போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிக் கொள்வது என்பது சவாலான காரியம் . சவாலினை எதிர்க்கொண்டு துணிந்து களம் இறங்கியுள்ள வ.கெளதமனை நாம் மனதார பாராட்டலாம்.

.

தொன்ம கதையொன்றின் நம்பிக்கையிலிருந்து கதை புறப்படுகிறது . தொன்ம கதை விவரிப்பிற்கு பயன்படுத்தப் பட்ட ஒவியங்களின் நேர்த்தியில் இருந்தே படம் நம்மை ஆக்கிரமிக்க துவங்குகிறது. சகோதர –சகோதரி பாசத்தினை காலங்காலமாக நாம் திரைப்படங்களில் சந்தித்து வருகிறோம். எத்தனை முறை நம் முகத்தினை கண்ணாடியில் நாம் பார்த்தாலும் அலுக்காதததை போல…நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ..மீண்டும் பல்வேறு கோணங்களில் இருந்து தரிசிக்கும் போது ஆர்வமடைகிறோம். இன்றளவும் பாசமலர் நம்மை கண் கலங்கத்தான் வைக்கிறது. அதே போலத்தான் மகிழ்ச்சியும். கொண்டாடி வளர்த்த பெண் புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகி திண்டாடிப் போகையில் அவளது உயிருக்குயிரான சகோதரன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் திரைக்கதையின் ஒரு வரி .

.

விழிகளை குளிர வைக்கும் பசுமை நிறைந்த நாகர்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது திரையை அழகாக்குகிறது . பசுமையாய் விரிந்து கிடக்கும் இயற்கையை ஒளிப்பதிவாளர் அப்படியே அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் படிமமும் இயற்கையின் அழகோடு படமாக்கப் பட்டிருப்பது அழகு. சகோதரியின் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்கும் கதையின் நாயகனாக இயக்குனர் கெளதமன். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் போது ஏற்படும் படபடப்பு அதிசயமாக கெளதமனிடம் காணமுடியவில்லை. அதீதமாக உணரப்பட்டு விடக் கூடிய சோகக் காட்சிகளில் கூட அளவாகவே உணர வைத்திருக்கும் கெளதமனின் சாமர்த்தியம் நமக்குப் புரிகிறது. தன் உயரத்தினை புரிந்துக் கொண்டு நேர்த்தியாக கெளதமன் செயல்பட்டிருப்பது நம்மை கவருகிறது. சாதீய இறுக்கங்களினால் காயப்படுத்தப்படும் பாத்திரமாக செந்தமிழன் சீமான் வருகிறார். சீமானின் பெருங்கோபமும் ,பேரன்பும் வெளிபடும் வகையில் அவரது கதாபாத்திரம் மிளிர்கிறது . கோபம் மிகுந்த காட்சிகளில் சீமானின் ஆவேசம் அடங்க மறுக்காமல் பிறீடுவதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். சமூக இழிவுகளை துடைத்தெறிய துடிக்கும் சீமான் தன் நண்பனிடம் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய்..மிக தெளிவாய் துணிவுடன் ஒரு நொடியில் முன் வைக்கும் கோரிக்கை நம்மை கைத்தட்ட வைக்கிறது . மற்ற படங்களில் ஒப்பிடுகையில் அஞ்சலியின் கவர்ச்சி சற்றே அதிகம் என்றாலும் அவரின் விதவிதமான முக பாவனைகள் அழகு.

.

நம் வாழ்க்கையில் நாம் பெண்களுக்கென அளித்துள்ள இடத்தினை எதனாலும் அளவிட முடியாது. பெண்களை சார்ந்தே சமூகம் இயங்கிறது. ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்துள்ள சங்கிலி பிடியில் இருந்து பெண் விடுதலைப் பெற எத்தனை விதமான போராட்டங்களை …அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது..? .. கதாநாயகனின் சகோதரி மேல் அவரது கணவன் நிகழ்த்தும் மூர்க்கமான வன்முறையில் இருந்து விடுதலைப் பெற சாவினையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை முயற்சியினை காரணங்காட்டி நிரந்தரமாக அவளது பெற்றோர் வீட்டிற்கே துரத்தி விடுகின்றான் கணவன் . எதனால் தான் தண்டிக்கப்படுகிறோம் என தெரியாத நம் வீட்டின் பெண்கள் போலவே அவளும் இருக்கிறாள். தன் சகோதரிக்காக காதலையும் இழந்து நிற்கும் கதாநாயகனிடம் அவனது புரட்சிகரமான தீர்வினை அறியும் அவனது முன்னாள் காதலி தற்போது வேறு ஒருவரின் மனைவியாக வரும் அஞ்சலி “ எல்லாம் முன்னரே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் “ என வலியோடு சொல்லும் போது நம் சொந்த வாழ்க்கையை அப்படியே ஒரு நொடிக்குள் மீள் பார்வை பார்த்து விடுகிறோம்.குறிப்பாக கதாநாயகனின் தந்தை தன் மகளின் திருமணத்திற்காக விற்று விடப்போகும் நிலத்தில் ..காற்றிலாடும் பசும் நெற்கதிர்களை கட்டி அணைத்தவாறே கண்கலங்கும் காட்சி கவிதை . கண்கலங்கி விட்டேன்.

.

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி அண்ணன் எழுதிய ‘உச்சுக் கொட்ட’ என்ற பாடலும் வைரமுத்து எழுதிய ‘ ஊத்துத் தண்ணி ஆத்தோட ‘ என்ற பாடலும் சிறப்பாக இருக்கின்றன. படத்தொகுப்பும் , ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.

.

படத்தில் குறைகளே இல்லையா என்றால்…நுட்பமான குறைகள் இருக்கின்றன. பிரகாஷ்ராஜினை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகனின் தங்கை திருமணம் ஒரு போட்டோ மூலமாகவும், சட்டென வந்துப் போகும் ஒரு வசனம் மூலம் வந்துப் போவது சற்று குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. கால மாற்றங்களை காட்சிமயப்படுத்துதலில் சற்று குழப்பங்கள். விடுங்கள். இப் படத்தின் திரைமொழி முன் வைக்கும் அரசியல் இக் குறைகளை காணாமல் அடித்து விடுகிறது . இறுதி காட்சியில் சீமானின் மகனாக வரும் ‘ பிரபாகரன்’ இயக்குனரின் மாறா இனப் பற்றை காட்டுகிறது. சாதிக்காக துடிக்காமல் …சாதிக்க துடியுங்கள் என்றும்..ஓடாத மானும்..போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் மிதமான குரலில் அழுத்தமாக உரைத்து படத்தினை முடித்து வைக்கிறார் சீமான்.

.

வ.கெளதமன் என்ற இளம் படைப்பாளி ஒரு வாழ்க்கையை திரைப்படமாக நுட்பமான காட்சிகளால் உருவாக்கி நம் முன்னால் வைத்திருக்கிறார். சாதீயத்தினை உடைக்க துணியும் புரட்சிக்கரமான கதை இது. ஆடம்பரங்கள் இல்லாமல் ..ஒரு எளிய திரைமொழி மூலம் ஒரு வலிமையான கருத்தினை முன் வைக்கிறார் கெளதமன். நம் வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கேடு கெட்ட குப்பைகளை திரைப்படங்களாக்கி திரையரங்குகளை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தும் ‘தந்திரன்ங்களுக்கு’ மத்தியில் ‘மகிழ்ச்சி’ நம்மை ஆறுதல் படுத்துகிறது.

.

மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி பண்பாட்டு சிதைவிற்குள்ளாகி இருக்கும் நம் தமிழினம் மரபு சார்ந்த வாழ்க்கையை முன் வைக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலமாக தன்னைத் தானெ மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளை துவங்கும் என நம்பலாம். இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எண்ணற்ற குடும்பங்கள் சிதைவுறும் இக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சி திரைப்படம் நம் முன்னால் நிறுவ முயலும் பாசமும் … அது எழுப்பும் உணர்வும் மிக முக்கியமானவை.நெகிழச் செய்பவை.

தலைமுறைகளை தாண்டியும் பசுமையும் ,பாசமும் நிறைந்த வாழ்க்கை ஈரத்தோடு இன்னும் சாரம் குறையாமல் இருக்கின்றது என்பதை கணிணித் திரைகளில் உலகினை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வாழ்வியல் பாடமாக மகிழ்ச்சி திரைப்படம் இருக்கிறது. இனப்பற்று மிக்க படைப்பாளியான கெளதமனும்..படத்தினை தயாரித்த அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணனும் வரவேற்கப் பட வேண்டியவர்கள். வரவேற்கிறோம்.

.

மகிழ்ச்சி .வெல்லும்

வென்றாக வேண்டும்.

மகிழ்ச்சி.

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.

தமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.

கால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.

அண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

நாம் தமிழர்.

நன்றி.
தங்கள்

மணி .செந்தில்

.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .

பழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. மற்றபடி மனோஜ், பத்மபிரியா, கனிகா ,சுமன் என விரிவான நட்சத்திர கூட்டம் மலையாள மண்ணிற்கே உரிய மிகை இல்லாத நடிப்பில் மிளிர்கிறார்கள். இசை நம் இளையராஜா. குன்றத்து எனத் தொடங்கும் அந்த பாடலின் இசை மெய்க்குள் புகுந்து மனதை மயக்கச் செய்கிறது.பின்னணி இசையிலும் இளையராஜா தான் மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மலையாள பண்பாட்டினை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி இருப்பது திரைமொழியின் இயல்பான நகர்விற்கு உதவுகிறது. எளிய ஆங்கில வசனங்கள் பல வருகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக அக்காட்சிகளில் மட்டும் தமிழில் உதவி தலைப்பு (sub-title) பதித்து இருக்கலாம்.

பழசிராஜா கதை மிக எளிமையான ,நமக்கு ஏற்கனவே பழக்கமான கட்டபொம்மன் கதைதான். வரி கொடுக்க மறுக்கும் கேரள வர்ம பழசிராஜாவினை தனது சர்வாதிகார பலத்தினால் அடக்க துடிக்கிறது ஆங்கில ஏகாதிபத்தியம். அதை எதிர்த்து பழசிராஜாவும், அவரது ஈடு இணையற்ற படையினரும் போராடி வீரமரணம் எய்கின்றனர். காட்டிக் கொடுக்க இன துரோகியாக சுமன் கதாபாத்திரம்.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். மக்களை நினைக்கும் தலைவன். அவரின் விசுவாசமான தளபதிகள். காட்டிக் கொடுக்க துரோகி. மண்டியிடாத வீரம் உடைய தலைவன் மக்களை தன்னை விட்டு போக சொல்லி வலியுறுத்தும் போதும் , அந்த அடர்ந்த காட்டின் நடுவே உணர்வின் ஊற்றாய் தலைவன் திகழ்வதை காணும் போதும் நமக்கு ஈழம் நினைவிற்கு வராமல் இருக்கமுடியாது.
உலகம் முழுக்க ஏதோ பகுதியில் சிந்தி சிதறிக் கிடக்கிற நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஈழம் என்ற வலியையும் , நம் தலைவர் பிரபாகரன் குறித்த பெருமிதத்தினையும் சுமந்தே வாழ்கிறோம். எதிரியாக வரும் ஆங்கில அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விருந்து உபசரித்து அனுப்பும் காட்சியில், பிடிபட்ட சிங்கள வீரர்களை கண்ணியமாக நடத்திய நம் தலைவரின் கண்ணியம் தெரிகிறது. இப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. எந்த விஷயமும் எனக்கு நம் தேசிய தலைவர் குறித்த பெருமிதத்துடன் தான் நகர்கிறது. அச்சமயங்களில் நான் கண் கலங்கி விடுகிறேன். பழசிராஜா திரைப்படத்தில் அழகியலுக்காகவும், கதாபாத்திர வலுவிற்காகவும் புனைவு இருக்கலாம். ஆனால் சமகாலத்தில் நம் தேசிய தலைவர் எவ்விதமான மிகைப் படுத்தலும் இல்லாமல் இயல்பாகவே அறம் காக்கும் சான்றோனாய் வாழ்வது உண்மையில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமைதான். பழசிராஜா திரைப்படத்தில் பெண்கள் போரிடுகிறார்கள். கடைசி நொடி வரை நம்பிக்கை இழக்காமல் தியாகம் செய்ய தயங்காமல் தளபதிகள் போர் புரிகின்றார்கள் .இவை அத்தனைக்கும் நம்மிடத்தில் மாவீரர்களாய், கரும்புலிகளாய், பெண் புலிகளாய் வாழ்ந்த நம் ரத்த உறவுகள் உதாரணமாக இருக்கிறார்கள். மலையாள மண்ணிற்காக இரண்டு நூற்றாண்டு முன்னால் இருந்த ஒரு வீர வரலாற்றை திரைப்படமாக எடுத்த்திருக்கிறார்கள். எங்களின் போராளிகளோ சம காலத்து சாட்சிகளாக ,எங்களின் பெருமைமிகு அடையாளங்களாக , எங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த வேட்கையாக உறைந்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கான தேசம் தமிழீழ தேசம். அதை நாங்கள் எந்த விலைக் கொடுத்தாவது , எங்கள் மாவீரர்களின் நினைவுகளோடு அடைந்தே தீருவோம்.
மற்ற படி பழசிராஜா – ஒரு தமிழனுக்கு ஈழம் குறித்த உணர்வினையும், வலியினையும், தலைவர் குறித்த பெருமிதத்தினையும் அளிக்கும் திரைப்பட அனுபவமாக கண் முன்னால் விரிகிறது.
கடைசியாக ஒன்று: முதல்வர் கருணாநிதி இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு மம்முட்டியை பாராட்டினாராம். இது தான் எனக்கு ஆச்சர்யம். குற்ற உணர்ச்சி அல்லவா வந்திருக்க வேண்டும்?

பேராண்மை -புனைவின் அரசியல்

சமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் கதாநாயகனின் கதாபாத்திரம் திரையில் ஏதாவது ஒரு காட்சியில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தனது குரலை பதிவு செய்யும் என ஆவலாய் நாம் அமர்ந்திருந்தால்…ஏமாற்றம் தான் .மேலும் இந்தியக் கொடிக்காவும், நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கவும், துப்பாக்கி தூக்கி தாக்கவும் அர்ஜீனும், விஜயகாந்தும் போதும். அதற்கு அரசு இயந்திரங்களால் சூறையாடப்படும் ஆதி சமூகத்தின் வன மனிதன் தேவை இல்லை. வகுப்பறையில் மார்க்சிய கூறுகளை எளிமையாக விளக்கும் கதாநாயகன் காட்டின் நடுவே அதிகார மையத்தின் சின்னமாக இருக்கும் இந்திய நாட்டிற்கு உயிரைக் கொடுப்பதாக சூளுரைப்பதும், சாதீய ஒடுக்குமுறையினை சகித்துக் கொண்டு மெளனித்திருப்பதும் முரண்களே.. தேசிய இனங்களின் விழிப்பு நிலை சமீப காலமாக உச்ச நிலைக்கு விரையும் இக்காலக் கட்டத்தில் பேராண்மை நிறுவ விரும்புவது எவற்றை..?
1.இந்திய ஏவுகணையை தகர்ப்பதற்காக காடு மலை ஏரி என கண்ணன் தேவன் டீக்காக அலையும் பி.டி.உஷாவினை போல அலையும் சர்வதேச கூலிப்படைக்கு எதிராக போராட விளிம்பு நிலை மனிதர்களும் தயாராக வேண்டும்- தங்களுக்கு எதிராக நாடும், அதன் ராணுவ,காவல் கட்டமைப்பு இயந்திரங்களும் நிகழ்த்தும் வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அவர்களும் நாட்டினை காக்க போராட வேண்டும் என்று ஜனநாதன் சொல்ல வருகிறாரா?
2. ஆதி வனத் தமிழின பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறையை விட இந்திய தேசியம் உயர்வானது என்று கதாநாயகன் மெளனமாக சகித்திருப்பதும், அதை காக்க போராடுவதும், இந்தியா எனும் பெருமிதத்திற்கு முன்னால் எளிய மக்களின் மீதான சாதீய, அரசு வன்முறை எதிர்வினை புரியத் தக்கதல்ல என்பதனை இறுதிக் காட்சி வரை உறுதி செய்வதன் மூலம் மக்களை விட அரசின் எல்லையற்ற அதிகாரம் ( THE KING CAN DO NO WRONG) என்பதை ஜனநாதன் நிறுவ முயல்கிறாரா.?

தெளிவில்லாத திரைமொழியும், அது நிறுவ முயலும் தத்துவமாக இருக்கும் இந்திய தேசிய உணர்வு காட்சிகளும் நம்மை மிகவும் சோர்விற்கு உள்ளாக்குகின்றன.. உன்னைப் போல் ஒருவன் ஒரு இந்திய பார்ப்பன இந்துத்வா குரலாய் ஒலித்தது..பேராண்மை இந்திய தேசிய மேலாதிக்கத்தினை எளிய மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறைகளை மெளனமாக கடப்பது போன்ற வழிமுறைகள் மூலம் நிறுவ முயல்கிறது. முன்னதை விட பின்னது மிகவும் அபாயகரமானதொன்றாக நான் உணர்கிறேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் ,ஆணிவேர்,கோவில் பட்டி வீரலட்சுமி ஆதிக்க எதிர்ப்புணர்வு போன்ற படங்களுக்கான இந்திய தேசியத்தின் உரத்த, சாசக மறுமொழியாக பேராண்மை இருக்கின்றது.

இயற்கை, ஈ போன்ற படங்களை வைத்து பேராண்மையை கடக்க முடியாது. தமிழ் மொழி கல்வி பயின்ற கதாநாயகிக்கு மட்டும் அந்த ஆதி இளைஞன் மீது காதல் வருவதாக சித்தரிப்பது போற்றத் தக்கது என்றால் அந்த கதாநாயகியும் மற்ற ஆங்கில கல்வி பயின்ற மேல்சாதி,மேல் வர்க்க தோழிகளுக்கு கட்டுப்பட்டவளாக காட்டப்படுவது சலிப்பை தருகிறது. தமிழ் மொழி பயின்றவள் என்றால் திரை மொழியில் பலவீனமான ஒரு கதாபாத்திரமாக சித்தரிப்பது பல படங்களில் தொடர்வது போல இதிலும் தொடர்கின்றது. மற்றப் படி என்.சி.சி மாணவிகளுக்கு ஏவுகணை தொழிற்நுட்பமும், அதி நவீன இயந்திர துப்பாக்கிகளும் கைவரக் கொடுக்கும் கல்வி நம் நாட்டில் எங்கே இருக்கிறது.., அதி பாதுகாப்பு உடைய ஒரு இடத்தின் அருகில் மிக எளிதாக மற்றொரு ஏவுகணையை நிறுவுவது ….போன்ற துளைகள் நிரம்பிய திரைமொழியில் பேராண்மை வடிவேல் கண்கலங்க பேசும் ஒரு வசனத்திலும், உடல் ஊனமுற்ற அந்த ஆதி மனிதன் தன் கைகளால் நடந்து தாக்க முயல்கிற மூர்க்கத்திலும் – நின்று விட போராடுகிறது.

பிழைகள் அற்ற திரைமொழி சாத்தியமில்லைதான்.. ஆனால் பேராண்மை சாத்தியப்படுத்த முயலும் எதிர்வினையற்ற சாதீய, அரசு இயந்திரங்களின் வன்முறை காட்சிகள் மறுக்கவே இயலா பிழைகள் தான்.

நன்றி: தோழர்.விஷ்ணுபுரம் சரவணன்

Page 4 of 4

Powered by WordPress & Theme by Anders Norén