பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: துளிகள் Page 1 of 3

துளி -26 Photograph -hindi- தயக்கங்களின் பேரழகு.

 

நீ நடக்கும் பாதையில்
எனது சொற்கள்
மஞ்சள் நிறப்
பூக்களாய் உதிர்ந்து
கிடக்கின்றன.

உன்
மௌனம் ஒரு
வண்ணத்துப்
பூச்சியாய் மாறி
என் தோளின் மீது
அமர்ந்து விட்டு
செல்கிறது.

உன்னைக் காணும்
கணப்பொழுது
என்னுடைய
நிகழ்காலத்தை
வெள்ளை
பனிக்கட்டியாய்
உறைய வைக்கிறது.

உறைந்துவிட்ட
காலத்தை
உலர வைக்க
மீண்டும்
உன்னைத்தான்
தேடி வர
வேண்டியிருக்கிறது.

ஒருமுறை பார்த்துவிட்டு போ.

சலசலத்து ஓடும் வாழ்வின் நதி எதையும் கடத்தி விட்டு போகும் கரைத்துவிட்டு போக்கும் வல்லமை கொண்டது. அதன் குரூர வேக ஓட்டத்தில் அன்பினால் பூத்த எளிய கணங்கள் கரை ஒதுங்கி.. நனைந்த செம்பருத்திப்பூ வாய் சிவந்து கிடக்கின்றன.‌

என்னுள் மலர்ந்திருக்கும் உன் மீதான நேசத்தை எப்படி சொல்வேன்.. ஒரு வயலின் கொடு. வாசித்துக் காட்டுகிறேன். ஒரு தூரிகை கொடு.
வரைந்து காட்டுகிறேன். சில சொற்களைக் கொடு. முன்னும் பின்னுமாக கோர்த்து முற்றுப்பெறாத கவிதை ஒன்றை எழுதி காட்டுகிறேன்.

இல்லையேல் தகிக்கிற உனது நிராகரிப்பினை என் மீது சில வெற்றுப் பார்வைகள் மூலம் காட்டி விட்டுப் போ.
அதே நாளின் அந்தியில் என் கண்ணீரால் ஒரு பெரும் மழை என உன் ஜன்னலுக்கு வெளியே பெய்து விட்டுப் போகிறேன்.

ஏதோ சில பொழுதுகளை மறக்க தீராத் துயரத்தோடு சகிக்க முடியாத பாவனை வாழ்வொன்றை வாழ்ந்துதான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த முகமூடி வாழ்க்கையில்.. நாம் கண்டடைகிற மகிழ்ச்சி சோகம் பசி தூக்கம் என அனைத்துமே.. இறந்து போன காலம் ஒன்றின் இறக்கமுடியா வலி ஒன்றின்
தகிப்பே.

இந்த பாவனை வாழ்வில்.. ஏதோ ஒரு நொடியின் சலனத்தில் கேட்டு விடுகிற ஒரு இசை பாடல்.. ஆழமான ஒரு நினைவை.. காய்ந்திருக்கும் பாலையில் ஒற்றை மழைத்துளியால் நிகழும் ஒரு துளிர்ப்பைப் போல .. சட்டென்று ஒரு நினைவின் துளிர்ப்பை நிகழ்த்தி விட முடிகிறது.

இந்தப் பெரும் அபாயத்திற்கு மத்தியில் தான் நிகழ்தகவாய் இந்த அபத்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உதிர்ந்து திரியும் சொற்களை விட.. உதிராமல் உயிர் ஆழத்தில் சேகரித்து வைத்திருக்கும் நேச மௌனத்தை சுமந்து திரியும் இருவரைப் பற்றிதான் இத்திரைப்படம் பேசுகிறது.

அவர்களை நீங்கள் எங்கும் பார்க்கலாம் என்பதுதான் இந்த திரைப்படத்தின் பலம். சொல்லப்போனால் அவர்களை உங்களுக்குள்ளேயே பார்க்கலாம். சிறு சிறு தயக்கங்களால் தங்கள் இதயங்களை கீறிக் கொள்ளும் அவர்கள் நமக்குள்ளும் ஒளிந்திருக்கிறார்கள்.

ஒரு பறவையின் சிறகடிப்பு போல..பெரு வலையில் சிக்கிக் கொண்ட ஒற்றை மீனைப் போல ‌… பார்த்துவிட்டு பின்பு நெடுநேரம் உறுத்திக்கொண்டே இருக்கிறது இத்திரைப்படம்.இத்திரைப்படம் கண்ட பிறகு காணும் யாவரும் மௌனித்து எதையோ சிந்தித்தவாறே அமைதியாக அமர வைப்பதுதான் இந்தத் திரைக்கதையின் வலிமை.

முற்றுப்பெறாத கவிதை போல.. சின்ன அதிர்வினை மனதிற்குள் சுமத்தி விட்டு போகும் அந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி.. எதனாலும் விவரிக்க முடியா மௌனத்தின் பேரழகு.

இயல்பை மீறியதொரு அழகு எங்கும் இல்லை. செயற்கையான எந்த பூச்சுகளும் இல்லாத இயல்பின் மொழியில்.. பார்க்கப் பார்க்க .. ஆச்சரியப்பட வைக்கின்ற இத்திரைப்படத்தின் பெயர்.

போட்டோகிராப். (Photograph)

அமேசான் பிரைம் வீடியோ வில் காணக் கிடைக்கிறது. நவாசுதீன் சித்திக் என்கின்ற மாபெரும் கலைஞனின் அசலான நடிப்பில் உறைந்திருக்கும் மௌனங்களின் வலி மொழியை பேசுகிற இத்திரைப்படம்.. நுட்பமான உணர்வுகளை உணரும் பேறுபெற்றோர் காணவேண்டிய அற்புத அனுபவம்.

மற்றதை திரையில் காணுங்கள். அதுவே அந்த அற்புதத் திரைமொழிக்கு செய்யும் மரியாதை.

பரவசத்துடன் பரிந்துரைத்து சிலிர்க்க வைத்த என் சீடன் Dhuruvan Selvamani Somu க்கு நன்றி.

துளி-22

விலங்கம்ச மிச்சங்கள்..
—————————————–

அந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம் ..இந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்வோம்.. என்றெல்லாம் முழங்குவது சமூக அறிவு சிறிதும் அற்ற ஒரு கேடுகெட்ட மூர்க்கத்தனமான மூடத்தனம் என்பது ஒரு புறம்..

தான் நினைத்தால் எளிதில் களவாட முடிகிற கடைச்சரக்காக ஒரு பெண்ணை நினைப்பது என்பது அனைத்திலும் காட்டிலும் ஆகப்பெரும் அயோக்கியத்தனம்.

இந்த அயோக்கியத் தனம் தான்.. ஒரு பெண் மீது ஆசிட் ஊற்ற வைக்கிற, கழுத்தை கொலை செய்ய வைக்கிற நோயாக மாறுகிறது.

இவன் நினைத்தால் போதும். ஒரு பெண்ணை திருமணம் செய்து விடலாம் என்கிற சிந்தனை கொடுங்கோன்மையான ஆணாதிக்க வன்முறை உணர்வின் தொடர்ச்சி.

முதலில் பெண் என்பவள் நம் சக மனுஷி. சக பாலின் மீது நேசம் ஏற்பட்டு ஈர்க்கப்படுவதென்பது உலகத்து இயற்கை. அது காதலாக மாறும் புள்ளியில் மற்றவருடைய விருப்பம் என்பது மிக முக்கியமானது. ஒரே அலைவரிசையில் பொருந்தும் விருப்பங்கள் திருமணம் வரை நீள்கிறது. அவ்வாறு திருமணம் வரை நிகழ்கின்ற அந்த உறவு வாழ்நாள் வரை மதிப்பு மிகு தோழமையாக.. சகல உணர்ச்சிகளும் கண்டுகொள்ளப்படுகிற மாசற்ற அக்கறையாக தொடரும் பட்சத்தில் தான் அந்த காதல் பரிபூரணத்துவம் அடைகிறது. இதில் சாதி மதம் போன்ற சமூக முரண்கள் குறுக்கிடும் போது ஏற்படும் தடைகள் தகர்க்கப்பட வேண்டியவை.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நினைத்த உடனேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட இயலும் என்கிற ஒரு இளைஞன் சிந்தனை சாதி ஒழிப்பிற்கான புரட்சி முழக்கம் அல்ல.

அது முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட மூர்க்கமான மனநோய்.

இதுபோன்ற மூர்க்க மனநோய்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் படத்தை உபயோகிப்பது என்பது அபத்தமானது . ஆபத்தானதும் கூட.

சாதி மறுத்து சாதி வேண்டாம் என திருமணம் செய்தவர்கள் இன்ன சாதி பெண்ணை தான் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டு காதலிப்பதில்லை. அவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டால் அது காதல் அல்ல . அது மாபெரும் சமூகத் தீங்கு. நிகழும்
சாதி ஆணவக் படுகொலைகளுக்கு இணையான மாபெரும் கொடுமை ‌.
பெண்ணையும் வீட்டில் இருக்கிற அண்டா ,குண்டா போல ஒரு சொத்தாக ,பார்க்கிற ஆணாதிக்க வல்லாண்மை உணர்ச்சி.

இதுபோன்ற முட்டாள்தனமான மூர்க்கத்தனமான முழக்கங்கள் முன்வைக்கும் எதுவும் சாதி மறுப்பும் அல்ல. சாதி ஒழிப்பும் அல்ல.

மனநல மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை தர வேண்டிய தீவிரமான மன நோய்.

முதலில் பெண்ணை களவாட முடிகிற பொருளாகப் பார்க்காமல் சக உயிரியாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. நம்மைப் போன்ற சக உயிரியை தோழமையாக,சகாவாக நினைக்காமல் களவாட நினைப்பதும் ஆக்கிரமிக்க நினைப்பதும் இருப்பதிலேயே ஆகப் பெரும் தீங்கு என்பதை குழந்தையில் இருந்து நாம் கற்பிக்க வேண்டும்.

இதுபோன்ற காணொளிகள் நாம் இன்னும் நாகரீகத்தின் எல்லையை கூட தொடவில்லை என்பதையும்,
விலங்கம்சத்தின் மிச்சத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

முதலில் பெண்ணை சக மனுஷியாக பார்க்க,பழக கற்போம்.
புரட்சி,புண்ணாக்கு எல்லாம் பிறகு பேசலாம்.

துளி-21

 

 

இடப்பிறழ்வு மொழி..
———————————–

பிரிவின்
இருள் நிழல்கள்
நம் வசந்தகால
முற்றத்தின் மேல்
போர்த்த முனையும்
இப்பொழுதை
முற்பொழுதொன்றின்
பேரன்பின்
மழைச்சாரல்
நனைக்க முயல்கிறது.

உனக்கென நீ
கோர்த்துக் கொண்ட
காரணச் சங்கிலிகளை
உன் கழுத்தில்
அணிந்துக் கொண்டு
கீழ்த்திசை நோக்கி நடக்க
தொடங்குகிறாய்..

ஒரு நள்ளிரவின்
அழுகுரல் போல
நம் பிரிவு
சுருதி பேதம்
காணாத தன்னியல்பாய்
நிகழத் தொடங்குகிறது.

நம் நேச வீணையின்
அறுந்து விட்ட
தந்திகள்
எங்கிருந்தோ வரும்
காற்றின் விரல்களால்
தீண்டப்பட்டு
அதிரத்தான் செய்கிறது.

தனிமையின் சுடர்
நினைவுகளின்
நிராதரவான
பக்கங்களை
ஒளியூட்டுகிறது.

வெறித்த
பார்வைகளோடும்
விழி நீர்
சிமிட்டல்களோடும்
வெற்றுச் சுவர்
மீதேறி
உறைகின்றன
விழிகள்..

பசுமையேறிய
பெருவனத்தில்
இலையுதிர்
பொழுதொன்றின்
நுழைவு போல
காலதிசை மாற்றமிது
என என்னால் நம்ப
முடியவில்லை.

ஆயினும்..
எனக்குள் நானே
உறுதிப்படுத்திக்
கொள்கிறேன்..

சகி..

நமக்கென ஒரு
நிலாக்காலம்
இருந்தது.

துளி-20

 

வைகோ -சரிந்த அரண்மனையின்
பாசிப் படர்ந்த விதானம்
——————————————————–

ஒரு காலத்தில் பாராளுமன்றத்தை நடுநடுங்க வைத்தவர் அவர்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக நின்று மோதியவர்.எந்த ஒரு வரலாற்றையும் புள்ளிவிவரத்தோடு விவரித்து நினைவாற்றலால் வியக்க வைத்தவர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டுவிழாவில் இசை நுட்பங்களை பற்றி, தமிழர் இசை பற்றி இவர் பேசிய காலங்களை நினைக்கும் போது காலம் தான் எவ்வளவு கொடிய அரக்கன் என நினைக்கத் தோன்றுகிறது.

உண்மையில் இன்றைய வைகோவின் நிலைமை பரிதாபகரமானது. பாராளுமன்றத்தில் பெரும் பெரும் விவாதங்களை எல்லாம் எதிர்கொண்ட வைகோவால் ஒரு சாதாரண தொலைக்காட்சி நெறியாளரை எதிர்கொள்ள முடியாமல் போனது என்பது வரலாற்றில் நாம் காணுகின்ற அபத்தக் காட்சி..

கழுத்தைப் பிடித்து ஸ்டாலின் வெளியே தள்ளினாலும், அவர் காலைப்பிடித்து கதறுகின்ற வைகோவின் நிலைமை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் வந்துவிடக்கூடாது. அவரின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. அவரை தவிர.

கொள்கையில் உறுதி ,அரசியலில் நேர்மை ,பொதுவாழ்வில் தூய்மை என்றெல்லாம் தொடங்கிய வைகோ யாரை எதிர்த்து அரசியல் கட்சியைத் தொடங்கினாரோ அவரை நம்பியே பிழைக்க வேண்டிய பரிதாப நிலை.

இந்தப் பரிதாப நிலையும் இந்த கேவலமும் வைகோவுக்கு மிக எளிதாக ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூட அவமானங்கள் ஏற்படவில்லை. தொடர்ச்சியான அவரது அரசியலின் சமரசங்கள், பிழையான முடிவுகள் , சுயநலமான பித்தலாட்டக்கார நடிப்பு அரசியல் இதுவே அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரையாக போனது.

அவரது ஆவேசம் ,கோப உணர்ச்சி , எல்லாம் காமெடியாக பார்க்கப்படுவதை அவர் இன்னும் உணரவில்லை என்பதையே இன்றைய புதிய தலைமுறையின் அக்னிப்பரிட்சை பேட்டி காட்டுகிறது. குறிப்பாக நாம் தமிழர் மீது அவர் காட்டும் ஒவ்வாமை அவருக்கே எதிர்மறையாக மாறிப்போய் என்பதுதான் காலத்தின் கோலம்.

ஏனெனில் காலம் என்பது மிக விசித்திரமானது. ஒரு காலத்தில் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகள் இன்னொரு காலத்தில் எவராலோ முறியடிக்கப்பட போகிறது என்கின்ற நிதானம் வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கிறது. இது நிரந்தரம்.. நம்மை மிஞ்ச ஆள் இல்லை.. என்றெல்லாம் எவரேனும் கனவு கண்டால் எதிரே வரும் சிறுவன் சின்ன இடைவெளியில் நம்மை மிஞ்சி சென்று விடுவான் என்பதற்கு வைகோவின் வாழ்க்கை ஒரு சரியான உதாரணம்.

நாம் தமிழரை வைகோ எதிர்க்க எதிர்க்க.. வைகோ பரிதாபமாக அம்பலப்பட்டு கொண்டே போகிறார். இந்த மாவீரர் நாளில் தஞ்சையில் மிக எழுச்சியாக நாம் தமிழர் கட்சி மாவீரர் நாளை நிகழ்த்திக் கொண்டிருக்க ..தன்னந்தனியாக கடலில் இறங்கிக் கொண்டு வைகோ ஏதோ புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்த போது.. இவரா இந்திரா காந்தி ராஜீவ் காந்தி போன்ற பெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த தலைவர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காலத்து மனிதராக வைகோ மாறிப்போனதுதான் நிகழ்காலத்தின் மீது அவர் கொண்டிருக்கின்ற வெறுப்பாக இன்று மாறிப் போயிருக்கிறது.

வைகோ கொண்டிருக்கின்ற திராவிடக் கொள்கை ஏற்கனவே அம்பலப்பட்டு நவீன அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்படுகிற ஒன்றாக மாறிவிட்டது. திராவிட இயக்கங்களின் முக்கிய கொள்கைகளான சாதி மறுப்பு, பகுத்தறிவு, இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ஆகியவைகளை திராவிட இயக்கங்களே கைவிட்டு விட்ட சூழலில்.. நவீன தமிழ் தேசியர்கள் சாதிமறுப்பு ,இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பு ,பகுத்தறிவு, சூழலியல், போன்ற பன்முக கொள்கை சட்டகங்களால் தங்களை செழுமைப்படுத்திக் கொண்டு களத்தில் வலிமையாக நிற்கிறார்கள்.

எனவேதான் வைகோ போன்றவர்கள் பயப்படுகிறார்கள். கோபப்படுகிறார்கள் .எழுந்து ஓடுகிறார்கள்.

ஈழத் தமிழர்களைக் கொன்ற கருணாநிதிக்கு என் வாழ்நாளில் மன்னிப்பே கிடையாது என்று முழங்கிய வைகோ இன்று கருணாநிதி மகன் காலில் விழுந்து கிடப்பது என்பது அரசியல் தடுமாற்றம் மட்டுமல்ல. திராவிட இயக்கங்களுக்கே உரிய தத்துவ நிலை நீர்த்துப்போதல்.

அது ஒரு வகையான மரணம். திராவிடக் கட்சிகளின் தலைமைகள் தங்கள் தத்துவத்தின் மரணத்தை மறைக்க முடியாமல் கோபப்படுவதை தான் நிகழ்கால காட்சிகள் அம்பலப்படுத்துகின்றன.

வைகோ தன் வாழ்வில் சொன்னது போல இப்போது சுவர் ஏறி தப்பித்து ஓட முடியாத நிலைமையில் தற்போது நிற்கிறார்.

வைகோவால் அன்று துரைமுருகன் அடிவாங்கினார். பிறகு ஜெயலலிதா, விஜயகாந்த் என நீளூம் அப்பட்டியலில் இடம் பெறாமல் தப்பிக்க ஸ்டாலின் முயல்கிறார். ஆனாலும் வைகோ ஸ்டாலினின் வேட்டியை விட மறுக்கிறார்

அண்ணன் சீமான் போன்றவர்கள் வைகோவின் படத்தை தன் சட்டைப்பையில் வைத்திருந்தவர்கள். இன்று அவரே ஒரு கட்சி ஆரம்பித்து வைகோவை கடந்து எங்கோ சென்றுவிட்டார்.

ஆனால் வைகோ இன்னமும் கோபாலபுரத்தில் ஸ்டாலினின் கருணைக்காக காத்திருப்பது என்பது தடுமாற்றம் நிறைந்த அவரது அரசியல் வாழ்வில் உச்சக்கட்ட தோல்வியாக அமைய இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும்.ஆனால் வேறு வழியில்லை.

திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். மூச்சற்ற பிணம் என்ன முக்கினாலும் உயிர் வரப்போவதில்லை.

ஒருகாலத்தில் நாங்களெல்லாம் நேசித்த வைகோ என்றோ தொலைந்துவிட்டார். இன்று இருப்பவர் தோற்றுப்போன ஒரு வயதான நடிகர். பழங்கால நினைவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நிகழ்காலத்தில் அதை வைத்துக் கொண்டே ஓட்டிவிடலாம் என நினைத்து பரிதாபமாக தோற்பவர்.

ஒரு காலத்தில் அவரது பெருமைமிக்க நினைவுகளே அவரை இன்று கொலை செய்கின்ற மாபெரும் ஆயுதங்களாக மாறி துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை தான் அவர் கோபமாக வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெருமை சித்திரத்தை வைகோ என்றோ தனது அரசியல் தவறுகளால் மாற்றி கோமாளி சித்திரமாக வரைந்து விட்டார்.

இனி வைகோ என்ற மனிதர் ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்பதை வைகோவே சொன்னால் கூட யாரும் நம்பப் போவதில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

துளி-19

 

ஒரு கருவறையின் காத்திருப்பு..
—————————————————–

சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த போது அம்மாவை பார்த்தேன். இந்த முறை இன்னமும் தளர்ந்திருந்தார்.அண்ணனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இறுக கைகளைப் பற்றிக் கொண்டார்.

கூட்டம் அதிகமாக இருந்தது நான் நகர்ந்து வந்து விட்டேன். சில நேரம் கழித்து வழக்கறிஞர் அங்கயற்கண்ணி எனது நண்பர் திருமலை அக்கா அமுதா நம்பி ஆகியோரோடு அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

என்னை பார்த்தவுடன் மீண்டும் வந்து என் கைகளை பற்றிக்கொண்டார். அவரது கண்களை நேரடியாக பார்ப்பது என்பது ஆறாத ரணம் ஒன்றை நேரடியாக காண்பது போன்றதான கொடுமை. அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆழ்மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு. நாமெல்லாம் உண்டு களித்து உறங்கும் பொழுதுகளில் கூட வெறுமை வீடொன்றில் வாசலில் நிழலாடும் ஒரே ஒரு உருவத்திற்காக 28 வருடங்களாக அவர் காத்திருக்கிறார். அது ஒரு துயர்மிக்க நீண்ட காத்திருப்பு. பசுவதை குறித்து பாடம் எடுக்கும் இந்த நாட்டில் ஒரு தாய் 28 வருடங்களாக அனுபவித்து வரும் வதை குறித்து இந்த மானுடச் சமூகம் கண்டும் காணாமல் கடந்து போவது உலகின் மாபெரும் கொடுமை.

அந்த ஈர விழிகள் எப்போதும் உறங்கியதே இல்லை. வயதான அந்த தாய் தந்தையர் எழுதாத கடிதங்கள் இல்லை. போகாத போராட்டங்கள் இல்லை. கையில் ஒரு தட்டியோடு தமிழகத்தில் அவர்கள் நிற்காத வீதிகள் எங்கும் இல்லை.

இத்தனைக்கும் பிறகும் கூட உடல் நலிவுற்ற அவரும், அவரது கணவரும்.. தங்களைப் போலவே நீண்ட சிறை வாசத்தால் நோய்மையின் எல்லைகளை தொட்டு தவிக்கிற தங்கள் மகனை என்ன விலை கொடுத்தேனும் விடுதலை செய்யும் முயற்சியில் தளர்ந்தே இல்லை.

அவர்களுக்கென்று இந்த உலகில் எதிரிகள் யாரும் இல்லை. தங்கள் மகன் விடுதலைக்கு உயரும் ஒவ்வொரு கைகளும் அவர்களுக்கு உறவுகளே. தங்கள் மகன் விடுதலைக்கு உழைக்கும் ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் தங்கள் மகனை காணுகிறார்கள்.

வரப்போகின்ற ஒரு வசந்த நாளுக்காக.. 28 வருடங்களாக வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலை நோக்கி அந்த ஈர விழிகள் காத்திருக்கின்றன. பிஞ்சுக் குழந்தை முதல் இளைஞனாக நின்ற பருவம் வரை அந்த வீட்டில் உலவிய அந்த வெண்ணிற கால்கள்.. மீண்டும் தங்கள் வீட்டு முற்றத்தில் தென்றலாக உலவாதா என்கின்ற உள்ளார்ந்த ஏக்கத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அந்த ஒரே ஒரு மகன் வெறும் மகன் அல்ல.. அவர்களது உலகம்.. அவர்களது வாழ்க்கை..

அவன் உண்மையிலேயே பேரறிவாளன்.மரண வலியிலும் மகிழம்பு புன்னகை களை உதிர்க்கும் பேரழகன்.

28 வருடங்களாக அந்த உலகம் அவர்களுக்கு தொலைந்து இருக்கிறது. நம்மைப் போல ஒரு நாளும் அவர்கள் இயல்பாக உண்டு உறங்கி மகிழ்ந்து வாழ்ந்ததில்லை.

செய்யாத குற்றத்திற்கு.. புரியாமல் அறியாமல் 28 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவிட்டனர் ஏழு தமிழர்கள். அவர்களைவிட இந்த 28 வருடங்களாக கொடும் தண்டனையை அவரது குடும்பத்தினர்கள் அனுபவித்து விட்டார்கள்.

இனிமேலும் அந்த தண்டனை நீடிப்பது எதனாலும் சகிக்க முடியாதது‌.

…….

அம்மா என் முன்னால் நின்று கொண்டு இருந்தார்கள்.”மணி செந்தில்.. இந்த முறையாவது உன் அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவானா.. ”

அந்தக் கேள்வியில் இருந்த வலிக்கு என்னிடம் மருந்து இல்லை. ஆனால் அந்தக் கேள்வியின் பதிலுக்கான வழி நம் ஒவ்வொருவரிடமிருக்கிறது.

தமிழர் ஒவ்வொருவரும் வீதிக்கு வர வேண்டும்.

7 தமிழர் விடுதலையை இந்த உலகமே தன் விழி உயர்த்தி கேட்கும் அளவிற்கு உரத்து கேட்க வேண்டும்.‌

இணையம் முழுக்க பரப்புவோம். இனி கரங்கள் இணைந்து இயங்குவோம்.

#28YearsEnoughGovernor

துளி-18

 

இராஜ விழிகள் கொண்ட பேரழகன்..
————————————————————–

முதன்முதலாக அந்தக் குரலை கேட்டப்போது நான் சற்றே ஆச்சரியம் அடைந்தேன்.அது ஒரு வகையான நெகிழ்வும்,குழைவும் கொண்ட குரல். அந்த இறுக்கமான பிம்பத்திற்கும் அந்த குரலுக்கும் சம்பந்தமில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அவரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.அவரை சந்தித்தவர்கள் அவரைப் பற்றி நினைவுகளால் அவரவர் பங்கிற்கு ஒவ்வொரு சித்திரத்தை வரைகிறார்கள்.

எதிரிகளுக்கு கூட அவரைப்பற்றி கால தேச அபிமானங்களை தாண்டி ஆச்சர்யங்கள் மிகுந்த வியப்பு இருக்கிறது.

அவர் இல்லை என்கிறார்கள் சிலர். அவர் இருக்கிறார் என்கின்றார்கள் சிலர். ஆனால் அவரோ இந்த மிகை/குறைகளை எல்லாம் கடந்த காலநதியின் முடிவற்ற பயணம் போன்ற ஒரு முடிவிலி.

ஒரு முறை தலைவரைப்பற்றி மறைந்த ஓவியர் வீர சந்தானம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில்.. இராஜ விழிகளோடு பிறந்த பேரழகன் டா அவர். அது அரச அம்சம். என்றார். எனக்கு மகிழ்வு கலந்த ஆச்சரியம்.புன்னகைத்துக் கொண்டேன்.

எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ஆச்சரியமான செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நமது நண்பர் ஒருபேருந்தில் பயணம் செய்து இருக்கிறார். அந்தப் பேருந்தில் ஒரு வயதான பாட்டியும் அவரது பேரனும் பயணம் செய்திருக்கிறார்கள். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. திடீரென அந்த பேருந்தில் பயணம் செய்வதற்காக சிங்கள ராணுவ வீரர்கள் சிலர் ஏறுகின்றனர். மற்ற பயணிகளை அவரவர் இருக்கைகளை விட்டு எழச் சொல்லி மிரட்டி கட்டாயப்படுத்தி அந்த இருக்கைகளில் அவர்கள் அமரத் தொடங்கினார்கள். ஆனால் பாட்டியால் மட்டும் எழ முடியவில்லை. தனக்கு மூட்டுவலி இருப்பதாகவும் தன்னால் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது எனவும் சிங்கள ராணுவ வீரரிடம் அந்த பாட்டி கெஞ்சவே அதைப்பார்த்து அந்த சிங்கள வீரன் அந்தப் பாட்டியை வலுக்கட்டாயமாக இருக்கையிலிருந்து பிடித்து கீழே தள்ளுகிறான். பாட்டி கீழே விழுந்தவுடன் அருகிலிருந்த மற்றொரு சிங்கள வீரன் அந்த பாட்டியை அடிக்க கையில் இருந்த லத்தியை ஓங்கியபோது அந்த லத்தியை தனது பிஞ்சு கைகளால் அவரோடு பயணித்து வந்த அந்த பேரன் தடுத்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனின் அச்சமற்ற விழிகளில் ஒரு வகை பிரபாகரனித்துவம் தென்பட்டதாக என் நண்பர் பிரமித்து கூறினார்.

அவரே மீண்டும் சொன்னார்.

அப்போதுதான் நானே நம்பத் தொடங்கினேன் .

தலைவர் உயிருடன் இருக்கிறார்.

அந்த பிஞ்சு விழிகளில் மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் உயரும் கரங்களில் ..ஒலிக்கும் முழக்கங்களில்.. தலைவர் உயிருடன் தான் இருக்கிறார்.

களங்கமற்ற அந்த புன்னகை மூலமாகவே நான் இந்த உலகில் வாழ்வதற்கான அனைத்து துணிவினையும் அடைகிறேன்.

எனது மூத்த மகன் சிபிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதேனும் கெட்ட கனவு காணும் போதெல்லாம்.. எழுந்து அமர்ந்து பெரியப்பா என்று தலைவரை அழைப்பான். மீண்டும் அவனாகவே உறங்கிவிடுவான். இது அவனது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லை. தலைவரும் எப்போதும் இறந்ததில்லை.

என் அண்ணனுக்கும்..
என் மன்னனுக்கும்..

இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தலைவர் 64
நவ 26-2018

துளி-17

 

 

பிரிவொன்றின் வானம்
_________________________

உன்
மெளனப்பறவைக்கு
முன்னால்
என் பேரன்பின்
சொற்கள்
தானியங்களாய்
இறைந்து கிடந்தன.

நீயோ எதையும்
பொருட்படுத்தாது
பியோனோ
ஒவியத்தின்
உறைந்திருக்கும்
இசையானாய்..

நிராகரிப்பின்
சிறகுகளோடு
வலசை பயணப்பட
எத்தனிக்கும் உன்
பார்வை
ஏறக்குறைய கடலசைவில்
நின்றாடிய தனிமை
படகொன்றின் நிழலைப்
போர்த்தி இருந்தது.

ஏதேனும் ஒரு நொடி
உடைதலில்
ஏதேனும்
காரணங்கள் தட்டுப்படும்
என்கிற உனது
பரிதவிப்பை நான்
கண்ணாடி சன்னலுக்கு
வெளியே பெய்யும்
மழையை போல
அவதானித்திருந்தேன்.

நாமாகிப் போன
நம் குளத்தின்
அந்த அசைவற்ற
சலனத்தை கலைக்க
ஏதேனும் நினைவின்
கற்களை
வீசுவாய் என
நான் எதிர்பார்த்திருந்த
வேளையில்…

நீ மெளனமாக
தலை குனிந்தாய்..

நீ நிமிர்ந்த போது
உன் கண்கள்
கலங்கிருந்தன.

இனி ஒருபோதும்
உன்னை சந்தித்து
விடக்கூடாது என
அப்போதுதான்
முதன் முதலில்
நினைத்தேன்.

 

துளி-16

 

மழையாலானவனின்
மற்றுமொரு உரையாடல்..

——————————

நான் நிதானித்து
செய்கிற எதையும்
உனக்கான பாவனைகளாக
நீயே கற்பிதம்
செய்து கொள்கிறாய்..

என்னை எப்போதும்
ஒரு பியானோ வாசிப்பவனாக
நீ யோசிக்கிறாய்.

நானோ மூடிய
கைகளோடு
அலைபவன்.

அப்படி என்றால்
அந்த மூடிய கரங்களில்
உயிருடன்
துடிக்கும் நீல மீன்
குஞ்சு ஒன்று துடித்துக்
கொண்டு இருப்பதாக
நீ சொல்கிறாய்.

நான் வெற்றுக்கரங்களை
திறந்து காட்டுகிறேன்.

காற்றில் அந்த
நீல மீன் சிறு
தட்டானாய் மாறி
பறந்து விட்டதென
நீ பதைபதைக்கிறாய்.

முடிவாக
உன்னை நான்
கடலில்
தள்ளப்போவதாக
குற்றம் சாட்டுகிறாய்..

இல்லை.
அந்தக் கடலை
கூட
உனக்கென எழுதிய
சில வரிகளுக்கு
இடையே புதைத்து
வைத்திருக்கிறேன்
என்றேன்.

அப்படியென்றால்
நேற்று பெய்த மழையை
எங்கோ எடுத்துச்
சென்று அலட்சியமாக
தொலைத்து விட்டாய்
என விசும்பினாய்.

இல்லை இல்லை..
மழையை தான்
நான் சொற்களாக
மாற்றி உன்னோடு
உரையாடிக் கொண்டிருக்கிறேன்
என்றேன்.

கண்கள் கலங்க
என்னை
பார்த்த நீ
பார்வைகளால்
ஒரு கடலையும்..
மெல்லிய
சிரிப்பொன்றினால்
சிறு அலைகளையும்
அங்கேயே
உருவாக்கினாய்.

அந் நொடியில்..
நீ கொடுத்த
ஈர முத்தமொன்று
நீல மீன் குஞ்சாய்
அதே கடலில் நீந்திக்
கொண்டிருந்ததை
இறுதி வரை நீ
கவனிக்க வில்லை.

துளி 15

 

 


மெளனங்களோடு
பேசுதல்.
—————————-

நீங்கள்
எப்போதும்
சொற்களோடு
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்.

வெறும் சொற்கள்
நம்பிக்கையின்
வேரற்றவை.

வறண்டப் பாலையின்
எப்போதோ அறியாமல்
சிந்தி விடும் மழைத்துளி
ஒன்றின் இருப்பினைப்
போன்றவை ‌.

காதற்ற வெளியில்
தவறி உதிர்ந்து
விடும் ராகத்
துளியின் சாயல்
கொண்டவை.

அவைகளால்
எதையும்
நிரப்பவும்
முடியாது.
அவைகளாக
எதனுள்
நிரம்பவும்
முடியாது.

அந்தந்த
கணங்களுக்கே
உரிய
கூட்டிசைவிற்கான
சமாதானங்கள்
அவை.

சில தொண்டை
விம்மும்
கணங்களை
கண்டும் காணாமல்
நகர்த்தக் கோரிடும்
வாயசைவு
வாக்குறுதிகள்
அவை.

இவையெல்லாம்
தாண்டி
போலியற்ற
இருளுக்குள் அசலான
கனத்த
மெளனம் ஒன்று
ராட்சசனாய்
அமர்ந்து இருக்கிறது.

அதனோடு
என்றாவது..
அதன் காயம்
கொண்ட கண்களை
நேர் கொண்டு..

தலைகுனியாமல்
நேர்மையாக
உரையாடி
இருக்கிறீர்களா..?

துளி -14

 

 

[youtube]https://youtu.be/bns94zsAejg[/youtube]

 

 

முடிகிற முடியாதவைகள்..
_________________________

தடுக்கிடும்
நினைவுகளின்
கூர் நுனியினை
கவனத்தோடு
விலக்கி நடக்க
முடிகிறது.

தவறி எங்கோ
தட்டுப்படும்
உன் பெயரை
சின்ன மெளனம்
ஒன்றினால்
ஜீரணிக்க முடிகிறது.

என் நொடிப்
பார்வையில்
உதிரும் பூ
ஒன்றினால்..
உன் புன்னகையை
நினைவூட்டாமல்
உதிர முடிகிறது.

என் தலைமுடியை
சற்றே கலைத்து
விட்டு செல்லும்
காற்றின்
சிறகுகளால்
உன் விரல்கள்
பற்றிய
ஞாபகங்களை
வர வைக்க
முடியவில்லை.

எதிர்படும்
யாரோ ஒருவரின்
ஏதோ ஒரு சொல்
எப்போதோ
நீ உதிர்த்தது
என ஒப்பீடு செய்ய
தற்போது ஒப்பவில்லை.

பொருள் பொதிந்த
கவிதைகளை
நம் இரவுகளோடு
பொருத்தாமல்
என்னால் வாசித்து
கடக்க முடிகிறது.

சட்டென திரும்பி
பார்க்கையில்
தோள்களில் இல்லாத
உன் முகம் குறித்து
எனக்கு எவ்வித
வருத்தமும் இல்லை.

தனிமை கணங்களை
தடுமாறாமல்
கடக்கவும்..
மழைப் பொழுதுகளை
வெறும் வேடிக்கை
நிகழ்வாக நினைக்கவும்
என்னால் முடிகிறது.

அதிகாலை
விழிப்பொன்றில்
யாரும் அறியாமல்
இப்போதெல்லாம்
கலங்குவதில்லை.

சிரிக்க முடிகிறது.
சிக்கனமாக
சொன்னால்…

உயிர் வாழ
முடிகிறது.

எனினும்
எப்போதாவது
என்னையும்
மீறி கேட்டு
விடுகிற

இந்த
இளையராஜாவை
என்ன செய்வது..??

Page 1 of 3

Powered by WordPress & Theme by Anders Norén