
‘வரலாறு கொடியது. அது எப்போதும் புனிதப் பிம்பங்களை உடைத்துக் கொண்டே நகர்கிறது’ என விரைந்தோடும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஏனெனில், புனிதப் பிம்பங்கள் நிரந்தரமானவை அல்ல; எல்லாக் காலத்திலும் புனிதப் பிம்பங்களின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் புனிதப் பிம்பங்கள் அந்த நிலையிலிருந்து அகற்றப்பட்டு, வேறு நிலையில் நகர்த்தப்படுகின்றன. எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியது என எந்தத் தத்துவமும் இல்லை. அதற்கு பெரியார் கருத்துக்களும் விதிவிலக்கல்ல எனக் கூறினாலும், நாம் ஆரிய அடிமைகளாகக் காட்டப்படுவோம்; பாஜகவின் கைப்பாவைகளாகக் கட்டமைக்கப்பட்டு விடுவோம் என்கிற அறிவுப்பரப்பில் திராவிட ஆதரவாளர்களால் எப்போதும் விடுக்கப்படுகிற மிரட்டல்கள் தற்போது முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், இங்கே காலங்காலமாக பெரியார் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஏதேனும் குரல் எழுந்தால், அந்தக் குரல், ‘ஆரியத்தின் குரல்’, ‘ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குரல்’ எனக் கூக்குரலிட்டு தொண்டை குரல்வளை நெறிக்கப்படுகிற காட்சிகள்தான் இதுவரை நடைபெற்று இருக்கின்றன. ‘பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையைக்கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதன் நுண்ணரசியல் பெரியாரின் முரண்பட்டக் கருத்துக்கள் எங்கே பொதுபார்வைக்கு வந்துவிடுமோ என்கிற அச்சம்தான் எனும் வாதத்தினைத் தள்ளி வைக்க முடியாது.
இந்திய வரலாற்றில் எண்ணற்ற பெருந்தலைவர்கள் விமர்சனங்களால் மறுவாசிப்புக்கு/ மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காந்தியடிகள் குறித்தும், ஜவஹர்லால் நேரு குறித்தும் இதுபோன்ற விமர்சனங்கள் வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் எவரும் பெரியார் ஆதரவாளர்கள்போல, பதற்றம் அடைவதில்லை. சமீபத்தில்கூட எட்வினா மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்கள் குறித்து வடஇந்தியாவில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள் இவ்வளவு பதற்றங்கள் நிறைந்தது அல்ல! சொல்லப்போனால், அது ஜவஹர்லால் மற்றும் எட்வினா எனும் தனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்தது. அந்த மீறலைக்கூட உரையாடல்களாக, விவாதங்களாகவே வடநாட்டில் வைத்துக் கொண்டார்கள்.
இதுதான் பெரியாருக்கும் நிகழ்கிறது. பெரியார் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாவது என்பதை அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர்கள், ‘கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை’ என்று கூறிய பெரியாரைக் கடவுள் ஆக்கிவிட்டு, ‘சொந்தப்புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்’ என்ற அகங்காரத்தில் உன்மத்த வெறியில், எதிர்கொண்டவர்களைத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள் எப்போதும் இருப்பவைதான். ஆனால், பதற்றத்தின் அளவு எப்போதும் இல்லாதது. புனிதப் பிம்பங்களாக மாற்றப்பட்டவர்களின் அடையாளங்களுக்கு எதிராக எதிர்வினைகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் இயற்கை. இதில் எவரும் பதற்றமடையவோ, வன்முறை வெறிக் கொள்ளவோ எதுவும் இல்லை. பெரியாரைப் பற்றி எந்தவிதமான விமர்சனமும் எழுந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் காட்டுகிற தீவிரம் மிகவும் அபத்தமானது.
பெரியாரைக் கடந்துசென்றவர்களைக்கூட அதிதீவிர பெரியார் எதிர்ப்பாளர்களாக மாற்றியதில் பெரியாரைப் பற்றித் திட்டமிட்டுப் புனையப்பட்ட மிகைப்பிம்பமும், பெரியாரை சர்வலோக நிவாரணியாக மாற்றி வழிபட்ட திராவிட ஆதரவாளர்களின் வழிபாட்டு மனநிலையும், காலத்திற்கு ஒவ்வாத முரண்பாட்டு மூட்டையான பெரியாரின் குழப்பவாதங்களை இப்போதும் உட்புகுத்தியதும்தான் முதன்மைக்காரணம் எனலாம்.
பெரியாரைப் பற்றி இப்போது எழுகிற எதிர்க்குரல்கள் யாவும் புதிதானவை அல்ல. இதற்கு முன்னால் பெரியாரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சமகாலத்தில் தீவிர தமிழ்த்தேசியத்தளங்களிலிருந்து பெரியாரைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரியார் மிக நீண்டநெடிய அரசியல் பொதுவாழ்வைக் கொண்டவர். அவரது தத்துவம் என எதையும் நிலைநிறுத்த முடியாத அரசியல் நடவடிக்கைகளை உடையவர். காங்கிரசு கட்சியைவிட்டு வெளியே வந்து, அதனை எதிர்ப்பதற்காக முதல் மொழிப்போரை ஆதரித்த பெரியார், அதே காங்கிரசை ஆதரிப்பதற்காக இரண்டாம் மொழிப்போரை எதிர்த்தார். முதல் குடியரசு இதழ் 02-05- 1925 அன்று தொடங்கும்போது, ‘ஈசன் அருளால்’ எனத் தொடங்கியுள்ள பெரியார், 01-01-1962 ஆம் ஆண்டு எழுதிய, ‘விடுதலை’ கட்டுரையில், ‘10 வயதில் இருந்து தான் நாத்திகன்’ எனக் கூறியுள்ளார். முதல் குடியரசு இதழைத் தொடங்கும் போது அவருக்கு வயது 46. 1925ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.டி. தியாகராயர் இறந்தபோது, “அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார் பெரியார். ‘ராமசாமி நாயக்கர்’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அவர் தனது சாதிப்பட்டத்தை 1927ஆம் ஆண்டுதான் நீக்கினார். கீழ்வெண்மணி படுகொலையில் பெரியார் சாதியவாதிகளுக்கு ஆதரவாகத்தான் நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரசு கட்சி கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டத்தைப் போல, ஒரு காத்திரமானப் போராட்டத்தை பெரியார் ஏன் தமிழ்நாட்டில் முன்னெடுக்கவில்லை? என்பது கேள்விக்குரியது. தொடக்கத்தில், ‘குடியரசு’ இதழின் முத்திரைக்கு கீழாக, பெரும்பாவலர் பாரதியாரின், ‘எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓரினம்! எல்லோரும் இந்திய மக்கள்!’ எனும் வரிகள் இடம் பெற்றிருந்தது. 1930ஆம் ஆண்டுக்குப் பிறகாகத்தான் பாரதியாரை பெரியார் நிராகரித்தார். அண்ணா மனமுவந்து ஏற்றுக்கொண்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்புத் தினமாகவும் அறிவித்தவர் பெரியார்.
கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, இந்திய எதிர்ப்பு என்பது எல்லாம் பெரியாருக்குக் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றமென்றால், இதே கருத்து மாற்றம் பட்டறிவு மூலம் எவருக்கேனும் நிகழும்போது ஏன் வலிக்கிறது? என்பதுதான் நமது கேள்வி. பெரியாரின் நிலைப்பாடுகள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் தத்துவார்த்தரீதியில் அமையாமல், அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல, பெரியார் என்ற தனி மனிதனின் எண்ணத்திற்கும், முடிவுக்கும் ஏற்றாற்போலவே அமைந்தன எனலாம்.
பெரியார் வாழும் காலத்திலேயே அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதன், ம.பொ.சி போன்ற தமிழினத்தின் தலைவர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இறுதிக்காலத்தில், தன் பாடல்களில் திராவிடத்தை நீக்கிய பாரதிதாசனோடும் முரண்பட்டார் என்றெல்லாம் தகவல்கள் உண்டு.
அறிஞர் குணா எழுதிய, ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற சிறு நூல் என் கைகளுக்கு கிடைத்தக் காலத்தில் நான் தீவிர பெரியார் ஆதரவாளர். பிறகு, அ. மார்க்ஸ் அந்தப் புத்தகத்திற்கான எதிர்வினை கட்டுரைகளை ஒரு நூலாக்கி இருந்தார். அந்த நூலின் பெயர், ‘குணா பாசிசத்தின் வடிவம்’. அதன்பிறகு, தற்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிற ரவிக்குமார், 2002ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில், ‘தாய்மண்’ இதழில் எழுதிய பல்வேறு கட்டுரைகள் அப்போது மீண்டும் விவாதப் பொருளாக மாறின. பிறகு, பெரியார் குறித்த விமர்சனங்களோடு எண்ணற்ற புத்தகங்கள் காலந்தோறும் வெளிவந்து கொண்டேதானிருந்தன. அதில் தமிழ்த்தேசியத் தத்துவப் பேராசன் ஐயா பெ.மணியரசன் அவர்கள் எழுதிய, ‘பெரியாருக்குப் பின் பெரியார்’ , ‘திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? , ‘வெண்மணித்தீ வெளிச்சத்தில் காங்கிரசு – கம்யூனிஸ்ட் – திராவிட அரசியல்’, வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ , ’வழக்கறிஞர் குப்பன் எழுதிய, ‘தமிழரின் இனப்பகை ஈவெரா’, சுப்பு எழுதிய, ‘திராவிட மாயை’, சடகோபன் எழுதிய, ‘ஆரிய திராவிட மாயை’, முருகு ராசாங்கம் எழுதிய, ‘பெரியாரின் குடியரசு – முதல் மலர் கிடைத்துவிட்டது’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக, இடைநிலை சாதிகளுக்காகத்தான் போராடினார் பெரியார்; தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அல்ல என்கிற கருத்தோட்டத்தில் ஏராளமான நூல்கள் ஆதித்தமிழர்கள் பார்வை நிலையிலிருந்து எழுதப்பட்டு, பெரியாரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் மறுவாசிப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன. பெரியார் மறைவுக்குப் பின்பு, ‘பெரியாரின் கொள்கைகளைத் குழிதோண்டிப் புதைத்த திராவிடர் கழகம்’ என வே. ஆனைமுத்து எழுதிய நூலும் இருக்கிறது.
‘தமிழ்த்தேசியம் எதிர் திராவிடம்’ என வரும்போது திராவிடத்தின் வாளாகவும், திராவிடத்தின் கேடயமாகவும் பெரியாரே முன்னிறுத்தப்படுகிறார். எனவே, காலங்காலமாக தமிழ்த்தேசியவாதிகளால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் பெரியார். மேலும், மொழி, தேசிய இனம், தேசம், நிலப்பரப்பு எனும் எதிலும் பெரியார் விருப்பம் கொண்டவர் அல்லர். எனவே, தமிழர் இன உரிமைகளுக்கான கருத்தியலின் அரசியல் வடிவமான, ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்பது பெரியாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதுதான். ‘தமிழ்த்தேசியம்’ என்கிற இனவிடுதலை அரசியல் பயணத்தில் நிற்பவர்களுக்கு திராவிடம் என்பது மிகப்பெரிய தடையாக எழும்போது, பெரியார் நிலைகள் தாக்கப்படுவது இயல்பானதுதான். மேலும், பெரியாரை தமிழின அறிவுலகத்தின் உச்சமாக வைத்து வழிபடும் அந்த வழிபாட்டு மனநிலைதான் அதிகாரத்தின் வழியாக பொதுப்புத்தியாக மாறி, இன்று பெரும் ஆபத்தாக மாறி நிற்கிறது. தமிழ்த்தேசியர்களால் பெரியார் குறித்த விமர்சனங்களைச் சார்ந்து, திராவிடக் கூடாரங்களில் எழும் பதற்றம் அவர்களது கருத்தியல் வறட்சியைக் காட்டுகிறது. மேலும், பெரியார் புத்தகங்களை முன்வைத்து நிகழும் இந்த உரையாடல்களில் சான்றுகளைத் தேடி, இருதரப்பும் அலைந்து கொண்டிருக்கையில் அதை நாட்டுடைமை ஆக்காமல் தனி உடைமையாக வைத்திருப்பது குறித்து திராவிட ஆதரவாளர்கள் பேச மறுப்பதன் உண்மை பொருள் என்னவெனில், பெரியார் கருத்துக்கள் பல இன்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டு அவரது பிம்பத்தை அவரே சிதைக்கிற வகையில் அமைந்திருப்பதுதான். இது பெரியார் மறுவாசிப்புக்கு/ விமர்சனங்களுக்கு உள்ளாகிற காலம்; புனிதப்பிம்பங்களும், போலிக் கருத்துருவாக்கங்களும் உடைகிற காலம்!
பெரியார் எழுதிய எழுத்துக்களை அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள், ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் வரிசை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அதேபோல, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களால் ‘பெரியார் களஞ்சியம்’ என்கிற தலைப்பில் தொடங்கப்பட்டு வரிசை நூல்களாக வெளிவந்திருக்கின்றன. பெரியாரின் கருத்துக்கள் இதுவரை நமக்கு நூலாகவும், இணையப் பதிவுகளாகவும், பல்வேறு அறிஞர்கள் தெரிவித்தக் கருத்துக்களின் அடிப்படையிலும் இந்தத் தொடர் முழுக்க மீள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. பெரியார் குறித்த இந்த விவாதங்கள் தமிழ் அறிவுப்பரப்பில் எவ்வித அதிகாரக் கட்டுப்பாடும் இன்றி, சுதந்திரத்தோடு நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடே இந்தத் தொடர்!
பெரியாரை ஆழமாக வாசித்த பெரியாரியவாதிகள் பெரியார் ஒன்றுக்கொன்று முரணாக வைத்த கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக அணுகி, பெரியார் மீது உள்ள அளவற்ற வழிபாட்டு மனநிலையாலும், கண்மூடித்தனமானப் பற்றினாலும் எவ்வித விமர்சனப் பார்வையுமின்றி மொத்தமாகக் கடந்திருக்கிறார்கள். அந்த விபத்து எனக்கும் நடந்திருக்கிறது என்பதை மறைப்பதற்கில்லை. அளவற்ற அதே பற்றினால் பெரியார் குறித்து பல கட்டுரைகளை ஏற்கனவே எழுதியிருக்கிற எனக்கும் இது ஒருவித புது அனுபவம்தான். பெரியாரின் கருத்துக்களை ஏன் மறுவாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும்? என்கிற கேள்வி அபத்தமானது. ஒவ்வொருவர் கருத்தும் வருங்காலத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதுதான் வரலாறு நமக்கு விடுத்திருக்கிற செய்தியாகும்.
தமிழர்களின் உச்சபட்ச அறநூலாகப் போற்றப்படும் திருக்குறள் குறித்து பெரியார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, பி.ஆர்.பரமசிவ முதலியார் ஒரு நீண்ட மறுப்பு எழுதினார். அதற்கு பெரியார் அளித்த பதில்கள், பெரியார் கருத்துக்களுக்கும் பொருந்தும்தானே!
“உண்மையைப் பேசும்போது அதனால் யாருக்கும் பழிப்பு ஏற்படுமானாலும் அது பற்றி கவலை கொள்ளாது அந்தப் பழிப்பிற்குக் காரணமாக உள்ளதை ஒழிக்க முயல வேண்டியதே வீரர்களின் கடமையாகும்.”
( ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 1 – பக்கம் 213)
பார்ப்பன எதிர்ப்பு அரசியலிலிருந்து பெரியாரது அரசியல் உருவாகிறது. பார்ப்பன எதிர்ப்பு அரசியலை ஆரிய எதிர்ப்பு அரசியலாக வரையறுத்த பெரியார் வரலாற்றில் இல்லாத ‘திராவிடர்’ என்கிற இனத்தை முன்னிறுத்தினார். தனது எழுத்துக்களில் பேச்சுக்களில் ஒரு இடத்தில், ‘திராவிடர்’ என்றும், இன்னொரு இடத்தில், ‘தமிழர்’ என்றும் மாற்றி மாற்றி அடையாளப்படுத்தி, தமிழர் நிலத்தில், தமிழர் அறிவுப்பரப்பில் அடையாளக் குழப்பங்களை உண்டாக்கினார். அதற்கு கால்டுவெல்லை துணைக்கு அழைத்துக் கொண்ட பெரியார், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரை உள்ளடக்கி, ஆரிய எதிர்ப்புச் சொல்லாக, ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக புது விளக்கம் அளித்தார்.
“தமிழர் என்றால், அதற்குள் பார்ப்பனர் வந்து விடுவார்கள்” என்று விசித்திர விளக்கம் அளித்த பெரியார், ‘திராவிடர்’ என்ற சொல்லே தென்னிந்திய பார்ப்பனர்களை குறிக்கும் சொல்தான் என்பதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ‘திராவிடம்’ என்ற சொல் தமிழ்ச்சொல்லும் அல்ல; தமிழ் இலக்கியங்களில், ‘திராவிடம்’ என்ற சொல் எங்கும் காணப்படவில்லை என்பதும், பெரியார் நிறுவ முயன்ற, ‘திராவிடம்’ என்ற கற்பனை இனவாதத்தை தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் புறக்கணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இல்லாத கற்பனைவாதமான திராவிடத்தை ஆரிய எதிர்ப்பு சொல்லாக அறிவித்து, தமிழர்களின் இயல்பான தேசிய இன அடையாளத்தை மறுத்து, திராவிடரென்பதையே ஒரு இனமாக வரையறுக்க முயன்ற பெரியார் தனக்கு இனப்பற்றோ, மொழிப்பற்றோ இல்லை என்றார். ஆனால், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, “கண்ணப்பர் தெலுங்கர்; நான் கன்னடியன்; தோழர் அண்ணாதுரை தமிழர்” என்று கூறியதோடு மட்டுமில்லாமல், “நான் பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு – 22.08.1926) என்றும் சுயஅறிமுகம் செய்கிறார்.
தனக்கு மொழி அபிமானமோ, தேச அபிமானமோ இல்லை எனத் தீர்க்கமாக அறிவித்த பெரியார், தமிழ்மொழியை விமர்சித்த அளவுக்கு தனது தாய் மொழியான கன்னடத்தையோ, இதர திராவிட மொழிகள் என அடையாளம் காட்டிய தெலுங்கையோ, மலையாளத்தையோ விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த மொழியின் மீதும் பற்றில்லை என்ற பெரியார், ஆங்கில மொழி மீது அளவற்ற நாட்டம் கொண்டிருந்தார். பெரியாரின் மொழி, இனம் குறித்தான முரண்பாடான கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் வரும் அத்தியாயங்களில் காண்போம்.
- தொடரும்