மறக்கவே இயலாத துரோகத்தை தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் செய்ய துணிந்து விட்டன நமது அரசியல் கட்சிகள்..தாவித் தாவி ஆள் பிடிக்கும் கூடாரங்களாய் திமுகவும், அதிமுகவும் களத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றன..அனைவரும் கூட்டணி பாகுபாடு இன்றி ஒரு விஷயத்தில் ஒருமித்து இருக்கிறார்கள்…அது ஈழத் தமிழர்களின் அவலங்களை கண்டு பொறுக்க இயலாமல் போராடும் தாயகத் தமிழனின் மனநிலையை கூர் மழுங்கச் செய்வது..

இனம்,மொழி, உணர்வு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் முடியும் வரை உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைப் போல…அணிந்திருப்பது கூட வெளியே தெரியாது அல்லது தெரிந்து விடக்கூடாது அல்லது தெரிந்தாலும் கூட வரும் கூட்டாளிக்கு உறுத்தக் கூடாது…தேர்தல் முடிந்த பிறகு உள்ளே போட்டிருக்கும் ஜட்டியை வெளியே அணிந்து கொண்டால் போயிற்று..சூப்பர் மேன் ஆகி விடலாம்..

பரவசமான, உற்சாக பானங்கள், பிரியாணி பொட்டலங்கள், ரொக்கங்கள்., துணி மணி , அன்பளிப்பு வகையறாக்கள் என அடுத்த திருவிழாவினை பார்க்க தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.. ஈழத்தமிழினம் அழிவது இவர்களுக்கு ஒட்டு எண்ணிக்கைக்கு அப்பால் தான் இனி உறுத்தும்..இன அழிப்பு வேலையை திட்டமிட்டு நடத்தி வருகின்ற காங்கிரஸிற்காக கலைஞர் உருகுவதும், குலாமோடு குதுகலிப்பதுமாக ஆளும் கட்சிகள் ஆடம்பரமாய் தயாராகி விட்டன.. விடுதலை சிறுத்தைகளுக்கு போயஸ் கார்டன் தோட்டக் கதவுகளை விட கோபாலபுரத்து கதவுகள் உயரம் குறைவு போல தோன்றுகிறது. இங்கே புரட்சி புயலும், இடது சாரிகளும் ராணுவ நடவடிக்கை என்றால் அப்பாவித் தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சே நாமாவளி பாடிய போயஸ் தோட்டத்தில் ஜெ மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.மாம்பழத்திற்கு எங்கு விலை உயர்வோ அங்கு விற்கப்படும்.
பார்த்துக் கொள்ளுங்கள் தோழர்களே..இவர்கள் தான் நமது தலைவர்கள்.ஈழம் என்று தங்கள் அமைப்பின் பெயரில் கூட வந்து விடக்கூடாது என்ற கவனமாக இருக்கும் நல்லவர்கள்..யாருக்கு யார் மோசம்…யாருக்கு உண்மையிலேயே தமிழன் மீது பாசம் ..என இனி தேர்தல் மேடைகளில் சூடு பறக்கும்..அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது நம் தலைவர்களுக்கு…ஈழத்தைப் பற்றி பேசப் படும் மேடைகளில் காங்கிரஸோ, ஜெயலலிதாவோ இருக்கக் கூடாது.. இருந்தால் ஈழம் பற்றி ஈ கூட பேசாது…
அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி ஈழத் தமிழனின் அவலமும் ,துயரமும் இவர்களை எட்டவே போவதில்லை…தமிழுணர்வாளர்கள் யாரும் காங்கிரஸிக்கு ஒட்டுப்போடப் போவதில்லை..சரி ..அந்த வாக்கினை யாருக்குத்தான் போடுவது…கலைஞர் மீதான வெறுப்பு ஜெயலலிதாவிற்கு சாதகமாக முடிகிறது…காங்கிரஸின் மீதான வெறுப்பு மதவாத பிஜேபிக்கு ஆதரவாக முடிகிறது..மிஞ்சி இருப்பது யாருமில்லையே.. தேர்தல் திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் ஈழத் தமிழின ஆதரவு கலங்கி நிற்கிறது..
ஈழத் தமிழின அவலங்கள் குறித்தான மதிப்பீடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த தேர்தலை அணுகலாமா என்ற கேள்வியை என் தோழர் கேட்கிறார். சரி …சாகும் அந்த மக்களை சவக்குழியில் தள்ளி விட்டு விட்டு இந்த தேர்தலை நாம் அணுகலாமா..?- இனம் அழிகையில், நம் தொன்ம அடையாளங்கள் தொலைகையில் மிஞ்சி இருப்பது யாராக இருக்க முடியும் தோழர்களே…நன்கு சிந்தித்துப் பாருங்கள்…வேதனையும்,சுய கழிவிரக்கமாய் போனது தமிழனுடைய நிலை.
கத்தி..கதறி..போர்க்குரலாய் முழங்கிய கலைப் போராளி அண்ணன் சீமான் இன்று கம்பிகளுக்கு பின்னால்… தன்னை தானே எரித்துக் கொண்டு தமிழனாய் நிரூபித்துக் கொண்டவர்களின் தணல் கூட இன்னும் தகிக்கும் வெப்பமாய் நம் முன்னால்… இருந்தும் கூட நம்மால் நகரக் கூட முடியவில்லையே.. தெரு..தெருவாக கத்தியாயிற்று…உண்ணாவிரதம்…ஆர்ப்பார்ட்டம்,பூட்டு போடுதல் என அனைத்தையும் செய்தாகி விட்டது..மனித சங்கிலி முதல் இதய சங்கிலி வரை இழுத்து பார்த்தாகி விட்டது… ஈழத் தமிழர்களின் துயரமும், அவலமும் தீர்ந்த பாடில்லையே. காரணம் என்ன…அரசியல் கட்சிகள் என்ற பெயரில் வியாபாரக் குழுக்களும், தொழிலதிபர்களும் உருவானதுதான்…
தன்னலமற்று போராடி வந்த மாணவர்களை கல்லூரியை மூடி அவர்கள் உணர்வினை மூடியாகி விட்டது..மிஞ்சி நின்ற வழக்கறிஞர்களை காவல் துறை அடியாட்களை வைத்து அடித்து துவைத்தாகி விட்டது. இனி வழக்கறிஞர்கள் முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியாகி விட்டாயிற்று.. என்ன ஒரு சாணக்கியத்தனம்…ஆடம்பரமான அரங்கில் தேர்ந்த நடிகர்களோடு நடந்த உருக்கமான மருத்துவமனை காட்சி போல…
இனி என்ன செய்வது என்ற கையறு நிலையோடு நாம் குழம்ப வேண்டாம் தோழர்களே..
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்..
அது இன எதிரி காங்கிரஸினை தோற்கப்படிப்பது…
அதற்கு நம் வாக்குச் சீட்டுகளை அம்புகளாக எய்வோம்.. அப்போதுதான் மிஞ்சி இருக்கும் பிழைப்புவாதிகளுக்கு பிழைப்பிற்காகவேனும் தமிழின உணர்வோடு நடித்தாக வேண்டிய பயம் பிறக்கும்….காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸிக்கு எதிராக நிற்பவர்களுக்கும் ,மிஞ்சிய தொகுதிகளில் உணர்வு எஞ்சியவர்களுக்குமாக நமது வாக்கினை பயன்படுத்துவோம்.
இதுதான் முடிவாக தெரிகிறது எனக்கு.இது முடிவு என்பதை விட ஒரு துவக்கமாக கொள்ளலாம் இப்போதைக்கு…