அந்த பிஞ்சு
விரல்களுக்கும்
ஒரு மணல் வீடு
இருந்திருக்கும்..
அலை தழுவி
கலைக்காத
தொலைவில்..
காக்கிச் சட்டைகளும்
கந்து வட்டியும்
கனவுகளை அழிக்காத
வரையில்…
அந்த மணல் வீடு
அப்படியே
இருந்திருக்கும்..
இரவின்
கரு நிழல்
பகலின் மீதும்
படிய தொடங்கும்
நிலத்தில் தான்
குழந்தைகள் எரியத்
தொடங்குகின்றன…
கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் பொசுங்கும்
மயிலிறகு தேகங்களுக்கு
எரிவதற்கான காரணங்கள்
தேவையில்லை..
புரியவுமில்லை.
பணம் தின்ன
பிணம் பண்ணும்
நிலத்தில்
இனி ரணம்
சுமக்க இயலாது என
தீ கனம் சுமந்து
எரிகிறார்கள்.
நேற்றைய ஊடகப்
பசிக்கும்..
குற்ற உணர்வற்ற
நமது
முணுமுணுப்புகளுக்கும்
தீ நியாயம்
செய்திருக்கிறது.
இன்றையப் பசிக்கு
நியாயம் செய்ய
சாவின் நாவுகள்
டிஜிட்டல் பாரத
வீதிகளில் தேடி
அலைகின்றன..
எங்கோ முகவரியற்ற
வீதிகளில்
விளையாடிக்கொண்டு
இருக்கும்
குழந்தைகளோ..
அறுக்க கதிரற்று
உயிர் உதிர்க்க
காத்திருக்கும் விவசாயியோ
அவைகளுக்கு கிடைக்கக்
கூடும்..
பிரதமரின் ஆடை
செலவிற்கு கூட
பெறுமானம் இல்லாத
குழந்தைகள் செத்துதான்
போகட்டுமே..
இறக்கை விரித்து
அயல் தேசம் பறக்கிற
அவசரத்தில்
விவசாயி சாவு
விக்கலுக்கு கூட
சமமானதில்லை..
சாகட்டும்.
நீரோவின்
புல்லாங்குழலுக்கு
சாவுகளைப்
பற்றி சங்கடங்கள்
இல்லை.
…..
எல்லாம் கடக்கின்றன.
அவசர கதி வாழ்வில்
மறதி என்பது நீதி.
இன்று
கவலைப்பட..
கோபம் கொண்டு
இரண்டு கெட்ட வார்த்தைகள்
உதிர்க்க..
காரணங்கள் கிடைக்கும்
வரை..
நமக்கு சொச்ச பாரத்தும்
மிச்ச கருப்புப் பண
கனவும் இருக்கவே
இருக்கின்றன..
கூடவே நாம்
உச்சுக் கொட்ட
ஒரு நாள் செய்திகளும்..