…..

2016 ஜனவரி.

அவர்கள் எங்களை தடுத்தார்கள். இதற்கு மேலே வாகனங்கள் செல்ல முடியாது. பாலங்கள் உடைந்து கிடக்கின்றன என்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அழிவு அதிகமாகத்தான் இருந்தது. சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள் எதிரே வாகனங்களை மறித்து, இருப்பதை பிடிங்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகதானிருந்தது. பசியால் வெளிறிய கண்களோடு குழந்தைகள் ஏங்கி நிற்கின்ற அக்காட்சி எதனாலும் சகிக்க முடியா துயராய் இருந்தது. ஆம். கடலூர் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலமாய் , வேதனையும், அழுகுரல்களும் நிரம்பிய மனித வாதையின் கொடுஞ்சாட்சியாய் மாறிய தீவாய் மாறி இருந்தது.
அந்த பொழுதில் தான் என் அலைபேசி அலறிய வண்ணம் இருந்தது. எங்கே அண்ணன் வந்துட்டீங்களா என 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பதற்ற அழைப்பு. ஒரு கடை வீதிக்கு முன்னால் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. இந்த விபரத்தை நான் அலைபேசியில் சொன்னவுடன் பக்கத்தில் தான் இருக்கோம். இதோ வர்றோம். என சொன்னதை கேட்டு நான் நிமிருகையில்.. கருஞ்சட்டை அணிந்த ஏழெட்டு இளைஞர்களோடு கடல் தீபன் வந்துக் கொண்டு இருந்தான். எப்போதும் புன்னகையை சுமந்திருக்கும் முகம் அன்று..தொடர்ச்சியான பல உறக்கமில்லா இரவுகளை கண்டு சோர்ந்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே அந்த இளைஞர்கள் உறங்கி இருக்கவில்லை. சரியான உணவோ, ஒய்வோ இல்லாத சூழலில் கொடும் கூற்றாய் விளைந்த இயற்கைக்கு எதிராக அந்த எளிய இளைஞர்கள் போர் தொடுத்து நின்றார்கள். மக்களை காக்க வேண்டும். அவர்களின் கடும் துயரினூடே ஏதாவது ஒரு ஆறுதலை , மீட்பை தந்து விட வேண்டும் என அந்த இளைஞர்கள் போராடினார்கள். அவர்களுள் கடல் தீபன் தனித்து தெரிந்தான். மாநிலம் முழுக்க இருக்கிற நாம் தமிழர் உறவுகளிடத்தில் கோரி உதவிகள் பெற்று அதை மக்களிடம் சேர்ப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தான். எங்கள் வாகனம் வந்த உடன் ஏதோ உதவி வந்திருக்கிறது என ஓடி வந்த மக்களை ஒழுங்கு செய்ய முடியாமல் கண்கலங்கி நின்றிருந்த அவன் மெல்லிய குரலில் சொன்னான்.. எது தந்தாலும் தீராத பசியை , குறையாத வலியை இந்த புயல் வெள்ளம்.. தந்து விட்டு போயிடுச்சிண்ணே..அது தான்னே பெரிய துயர்.
அவனை இதற்கு முன் பல முறை சந்தித்து இருக்கிறேன். அண்ணன் சீமானின் செயல் வடிவம் அவன். அவருடைய உதட்டில் இருந்து சொல் புறப்படும் முன்னரே செயலில் இறங்கி இருப்பான் தீபன். மக்களுக்காக,மக்களோடு நிற்பதற்காக நாம் தமிழரில் விரும்பி இணைந்து இருந்தான். அயலகத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு 2009 க்கு பிறகான தமிழின எழுச்சியை தகவமைப்பதில் தன் வாழ்க்கையையே இழந்து அர்ப்பணித்து நின்ற இளைஞன் அவன்.
.
அவன் மீது தான்.. அந்த கடலூர் கடல்தீபன் மீதுதான்.. இன்று தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறது. காவிரி நதி நீர் சிக்கலில் எத்தனையோ அரசியல் அமைப்புகள் போராடின. ஆனால் நாம் தமிழர் கட்சியின் மீது மட்டும் வரலாறு காணாத அடக்குமுறை. சென்னையில் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என குறிவைத்து காவல் துறை வேட்டையாடியது இந்திராகாந்தி காலத்து எமர்ஜென்சி அத்துமீறல்களுக்கு சற்றும் குறையாதது. தமிழகமெங்கும் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், அன்பான அறிவுரை போன்ற மிரட்டல்கள், முளைச்சலவை பேச்சுக்கள் என பல்வேறு ஆயுதங்களை காவல்துறை மூலம் உபயோகித்து நாம் தமிழர் கட்சிக்கு எதிரான ஒரு வெளிப்படையான யுத்தத்தை ஆளும் வர்க்கம் நடத்தி வருகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த நடிகர் மன்சூரலிகான் மீது கூட பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு.
.
இத்தனைக்கும் ஒரு ஒழுங்கமைவு போராட்டத்தை தான் அண்ணன் சீமான் வடிவமைத்தார். இராணுவத்தைப் போல ஒரு பார்வை மூலம் தன் தம்பிகளை கட்டுப்படுத்தி படை நடத்துவதில் , போராட்டக் களங்களை அமைப்பதில் சீமான் தேர்ந்தவர். ஏறக்குறைய 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் பெருங்கூட்டம். உணர்ச்சியும், அறிவும் சமவிகிதத்தில் கலந்து சூழலியல், அரசியல், இயற்கை, வேளாண்மை, உலக அறிவு, கலை பண்பாட்டு விழுமிய புரிதல் என பல்வகை நுண்மாண் நுழைபுல அறிவோடு ஒரு இளைஞர் படையை சமகாலத்தில் கட்டுவதில் அண்ணன் சீமான் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு போராட்டம் இரு முனைகளை கொண்ட கூரிய ஆயுதம். எந்த வகையிலும் அத்துமீறல்கள் எளிதில் நுழையக் கொடுக்கிற அபாயத்தைக் கொண்ட ஆபத்து. இம்முறை திட்டமிட்டு அதுதான் நடந்தது. காவிரி நதி நீர் உரிமைக்காக காவல் துறை அனுமதித்த இடத்தில் தான் நாம் தமிழர் கட்சியினரும், இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலைப் பண்பாட்டு பேரவையினரும், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் என பல தலைவர்களும், அவர்களது அமைப்பினரும், போராடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத காவல் துறையின் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இயக்குனர் வெற்றிமாறன், தமிழர்நல பேரியக்கத்தின் தலைவர் களஞ்சியம்,அவரது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ரமேசு ஆகியோர் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். இந்நிலையில் காவல்துறையினர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்து சென்னையில் இருக்கிற நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டனர்.அவர்களது வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து ,மின்சாரத்தை நிறுத்தி, அலைபேசிகளை பறித்து மிகப்பெரிய பயங்கரவாதிகளை கைது செய்து போல தோற்றத்தை ஏற்படுத்தியது காவல் துறை. கடந்த 10-04-2018 அன்று நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐயா .பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் , தனியரசு, தமிமுன் அன்சாரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர் உள்ளீட்ட 780 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சீமான் மீது மட்டும் கொலைமுயற்சி உள்ளீட்ட கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு. ஐபிஎல் மைதானத்தில் செருப்பு வீசி கைதான பிரபாகரன், அய்யனார், மகேந்திரன் ,வாகைவேந்தன் உள்ளீட்ட11 பேர் மீது பிணையில் வரமுடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு. அன்றைய தினமே சேப்பாக்கம் தொடர் வண்டி நிலையம் அருகே முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட 9 பேரும், பிரதமர் மோடி வருகையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளீட்ட 13 பேரும், நேற்றுதான் பிணையில் வந்துள்ளார்கள். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான சீமான் அவர்களை தொடர்ச்சியாக சிறைப்படுத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளீட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருக்கின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான் கைது செய்யப்படும் 2 நாட்களுக்கு முன்னர் தான் பித்தப்பை அறுவை சிசிக்கை மேற்கொண்டு மருத்துவ மனையில் இருந்தவர் என குறிப்பிடத்தக்கது.கடந்த 14 ஆம் தேதி ஸ்டாலின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இன்னும் கட்சியின் பல முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்ய காவல் துறை முனைப்பாக உள்ளது. இந்நிலையில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல் தீபன் மீது குண்டர்கள் சட்டம் பாய்ந்துள்ளது.
.
நீண்ட தொலைவு கொண்ட இலட்சியப் பயணத்தில் இது போன்ற அடக்குமுறைகளை கடக்காமல் ஒரு வெகுசன அரசியல் அமைப்பு பயணப்பட்டு விட முடியாது என்ற புரிதல் இருந்தாலும், இங்கே அரசியலைப்புச்சட்டத்தால் உறுதி செய்யப்படுகிற அனைத்து வகை உரிமைகளும் மிதித்து அழித்தொழிக்கப்படுகிற இவ்வேளையில் இது சனநாயகமா..இல்லை சனநாயக போர்வையில் விளைந்த பாசிசமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. காவிரி நதி நீர் உரிமைகளில் போராடுவதாக காட்டிக்கொள்கிற தமிழக அரசு, போராடும் சக அமைப்பினரை கொடும் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைப்பதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்கிற கேள்வியில் இருந்தே பிறக்கிறது இவர்களின் போராடுவதன் லட்சணம்.
.
கடல் தீபன் போன்றோர் கடலலைகளுக்கு ஒப்பானவர்கள். எண்ணற்ற துயர் காற்றின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஓயாமல் உழைப்பவர்கள். அடிமைப்பட்டு அல்லலுற்று ..தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற அன்னை தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காக தன் சுய வாழ்வினை தூக்கி எறிந்து விட்டு மாசற்ற இலட்சியங்களுக்காக.. தன்னையே விலையாக கொடுத்தவர்கள். இவர்களைப் போன்ற இளைஞர்களை தன் உடன்பிறந்தானாக கொண்டு நிற்கிற அண்ணன் சீமானும், அவரது தத்துவமும்.. இருண்டு கிடக்கிற அரசியல் வானில்.. நிகழத் துடிக்கிற அதிசயம்தான். அதில் மின்னும் பொன்துகளாய்..ஒரு ஒளித்துளியாய் கடல் தீபன் மின்னுகிறான்.
……

இந்நேரம் இருட்சிறையின் தனிமை பொழுதொன்றை மழைக்கால தேநீராய் மாற்றி அருந்திக் கொண்டிருப்பான் கடல் தீபன். மின்னும் அவனது விழிகளில் தான் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்காலம் சுடர் விடுகிறது.

.
மணி செந்தில்