நேற்றைய தினம் தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு கலந்தாய்வு நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாங்கள் அனைவரும் எங்கள் கருத்துக்கள் அனைத்தையும் சொல்லி முடித்த பிறகு இறுதியாக பேச வந்தார் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பெரு மதிப்பிற்குரிய ஐயா கிருஷ்ணகுமார் அவர்கள்.
அய்யா கிருஷ்ணகுமார் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளர். தமிழ் பெரும்புலவர் அம்மாபேட்டை தமிழ் சேரனார் அவர்களது இளைய மைந்தர். வள்ளலார் வழி வாழ்ந்து வருகின்ற சுத்த சன்மார்க்க நெறியாளர். மொழிப்பற்றும் இலக்கியச் செழுமையும் ஒன்றோடு ஒன்று இணைந்து தழைத்த பெரும் குடும்பத்தின் பெருமைமிகு வாரிசு.
அவரோடு பலமுறை நான் உரையாடியிருக்கிறேன். மொழியின் ஆழ அகலத்தை தன் இலக்கிய அறிவு கரங்களால் நீந்தி கடக்க அவர் துணிந்திருப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். வள்ளலாரின் மரணமில்லாப் பெருவாழ்வு என்கின்ற கருத்துருவை மிக ஆழமாக கற்றவர். திருவாசகமாகவோ,தேவராப்பாடல்களோ, திருவருட்பா பாடல்களோ.. பழந்தமிழ் இலக்கியங்களில் எதைப்பற்றி கேட்டாலும் ஆதாரப்பூர்வமாக இலக்கியச்சுவை குறையாமல் நயமாக எடுத்துரைப்பதில் அவர் ஒரு மேதை.
அப்படிப்பட்ட பெருமகன்தான் அந்தத் தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் இறுதியாக பேச வந்தார்.
எதற்காக தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்தது என்கின்ற காரணத்தை பேசத் தொடங்கியவர்.. சொற்களின் மரணம் குறித்து பேசத் தொடங்கினார்.
நம்மொழி ஒவ்வொரு சொல்லாக இழந்து கொண்டிருப்பதை மிக ஆழமாக வேதனையான தன் மொழியில் அவர் இயல்பாக எடுத்துரைக்கும்போது கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது.
நம்மொழி கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்று அண்ணன் சீமான் பல்வேறு கூட்டங்களில் ஏற்கனவே எடுத்துரைப்பதை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் ஐயா அவர்கள் சில சொற்களை குறிப்பிட்டு அது அதனுடைய வேர்த் தன்மையை இழந்து இழந்து கொண்டிருக்கிறது என்றார். சிறு குழந்தைகளுக்கு மயில் என்ற சொல் தெரியவில்லை பீகாக்(Peacock) என்றுதான் புரிகிறது என்று சொன்னபோது உண்மையில் அச்சமாக இருந்தது.
அதன் தொடர்ச்சியாக அவர் வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது மேலும் சில சொற்களைப் பற்றி விவாதித்தார். குறிப்பாக நாற்றம் என்ற சொல். நாற்றம் என்பது நறுமணம் என்ற பொருளுடையது. ஆனால் இன்று அது தன்னுடைய வேர் தன்மையை இழந்து வேறு பொருள் தருவதை நம் இயல்பு வாழ்க்கையில் நாம் அறிந்திருக்கிறோம்.
இவ்வாறாக பேசிக் கொண்டு போனவர்.. இந்த மொழியை மீட்டெடுக்க யாராவது வர மாட்டார்களா என்று எண்ணி காத்திருந்தபோதுதான் வந்தவர் சீமான். அதனாலேயே அவர் பின்னால் நான் நிற்கிறேன் என்றார்.
சொற்களின் மரணத்தை கண்டு அரசியலுக்கு வந்த ஒருவரும்.. இந்த மொழி சாகாமல் இருக்க அரசியலை கூட ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிற ஒருவரும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்சியும் பல வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி இருக்கின்றன. ஆனால் சொற்களுக்காக மொழிக்காக நிற்கிற ஒரு வேட்பாளரை இந்த தேர்தல் களத்தில் யாரும் காண்பதரிது.
ஐயா கிருஷ்ணகுமார் வீட்டில் அவருடைய தகப்பனார் முதுபெரும் தமிழ் புலவர் தமிழ் சேரனார் அவர்களது புகைப்படம் இருந்தது. சாதாரணமாக இறந்தவர்களுக்கு பூ பால் பழம் வைத்து படைப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவரது வீட்டில் அவரது புகைப்படத்திற்கு முன்னால் திருவாசகம் திருவருட்பா போன்ற பல நூல்கள் வைத்து படைக்கப்பட்டு வருவது வியப்பாகவும் நெகழ்ச்சியாகவும் இருந்தது.
இப்படித்தான் எங்களது ஒவ்வொரு வேட்பாளரும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தேர்தல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு புறம்..
சொற்களின் மரணங்களுக்காக.. ஆறுகளின் அழிவிற்காக.. விதை நெல்லின் மீட்பிற்காக.. பறவைகளின் மரணங்களுக்கு நியாயம் கேட்பதற்காக.. இயற்கை அழிவினை சகித்துக் கொள்ளாமல் நீதி கேட்பதற்காக..
மண்ணின் பூர்வக்குடிகள் இந்த தேர்தல் களத்தில் ஆழ் மன துயரங்களோடு நிற்கிறார்கள்..
மறுபுறம் ..
கொள்ளையடித்ததை காப்பாற்ற.. ஊழல் செய்து இம்மண்ணின் சுரண்ட.. எதிர்காலம் ஒன்று இருப்பததையே மறந்து நிகழ்காலத்திலேயே இந்த நிலத்தை அழித்து முடிக்க…
கொலைக்கார கொள்ளைக்காரக் கூட்டம்
மக்களை ஏய்த்து சுரண்டி பிழைக்க மீண்டும் நிற்கிறார்கள்.
யாருக்கு உங்கள் ஓட்டு..??