உங்களோடு ஒரு நிமிடம

..

அந்த உணர்வை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது இனவெறியாக, பாசிசமாக நாசமாக காட்டுமிராண்டித்தனமாக எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் காற்று இந்த நிலம் இந்த மலை இந்த மண் இந்த செடி கொடிகள் இந்த மரம் என இங்கே இருக்கின்ற அனைத்தும் எங்களுக்குச் சொந்தம்.

நான் இம்மண்ணின் பூர்வகுடி.

நீங்கள் உங்கள் தத்துவ ஆயுதங்களை தூக்கிக்கொண்டு எங்களது வீதிகளில் வந்து இனிப்பு தடவிய வார்த்தைகளால் ஒரு எதிர்காலத்தை எங்கள் முன்னால் உங்களது மாய விரல்கள் மூலம் உருவாக்கி காட்டுகிறீர்கள்.

இந்த வயல்வெளிகளில் உலவும் காற்று எங்களுடையது. எங்களது முன்னோர்கள் காலம் காலமாய் சுவாசித்த காற்று அது.
அவ்வளவு எளிதாக உங்களுக்கு நாங்கள் கடன் கொடுத்து விட முடியாது.

எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே இருக்கின்ற மேடுபள்ளங்களை சமப்படுத்த வந்திருப்பதாக புன்னகையுடன் எங்களிடத்திலே பேசுகிறீர்கள்.

எங்களது சமமற்ற மண்ணில் நீங்கள் போட்டிருக்கும் உங்களது வல்லாதிக்க அதிகார குடிசையை இன்னும் சில தலைமுறைக்கு அகற்றாமல் நீட்டிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்.

ஆம் இது சமமற்ற மண் தான்‌.

மேடு பள்ளமும் சேறும் சகதியுமாக இருந்தாலும் இது எங்கள் மண்‌.

எங்கள் தாய் மண்.

எங்களது மண்ணில் நாங்கள் எங்களது உரிமையை விட்டுத்தர மாட்டோம்.

எங்களை நீங்கள் இந்தியன் என்று மயக்கலாம். திராவிடன் என்று குழப்பலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி என் உடம்பில் தவித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு மரபணு என்னை தமிழனாக துடித்து உணர வைக்கிறது.

எனக்கு எனது இன்னொரு தாய் நிலமான ஈழம் அழிகையில் வலித்தது. உயிரே போனது போல ஒரு வலி அது. அந்தத் தோல்வியால் தனிப்பட்ட முறையில் நான் இறந்து விட்டதாக உணர்கிறேன். ஆனாலும் அந்தத் தோல்வியை வரலாற்றின் நிரந்தரமாக ஆக்கிவிடக் கூடாது என சுதாரித்து எழுகிறேன்.

இந்தப் பரிதவிப்போ வன்மமோ உங்களுக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணை சேர்ந்தவர் அல்ல.
உங்களது இனத்தவர்கள் எல்லாம் அவரவர் மண்ணில் இறையாண்மை யோடு வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்.

ஆனால் நாங்களும் எங்களது இரண்டு தாய் நிலங்களையும் இழந்துவிட்டு.. எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டு 50 ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனாலும் நாங்கள் இப்படியே இருக்கப் போவதில்லை. எங்கள் தலைமுறையில் எங்களது கரங்கள் உயர்ந்திருக்கின்றன. இதே தலைமுறையில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை என்றால்.. எங்களது அடுத்த தலைமுறையின் விழிகளில் எங்களது விடுதலைப் போராட்டக் கதையை நம்பிக்கையோடு ஒளிர வைப்போம்.

ஆம். உங்களால் காட்டுமிராண்டிகள் என அழைக்கப்பட்ட நாங்கள் கம்பீரமாக சொல்கிறோம்.

ஆம்.. நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.

ஆனால் காடு எங்களுடையது.

.

மணி செந்தில்

இதன் அடியில் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்க துடிக்கும் வல்லாதிக்க கரங்களோடு போராடிக் கொண்டிருக்கின்ற அந்த இளம் குழந்தைகளின் போராட்டக் காட்சிகள்.

ஒரு நாள்.. எங்கள் மண்ணிலும் இது நடக்கலாம். எங்கள் பிள்ளைகளும் இவ்வாறே நிற்கலாம்.

அதற்குள் தேவை
ஒரு விழிப்பு.