அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது. மிகச் சிறிய வீடு.
அந்த வீட்டில்தான் தம்பி அன்பு கிடத்தப்பட்டு இருந்தான். அந்த வீடு கூட தம்பி அன்பிற்கு சொந்தமானது இல்லை. அது அவனது அண்ணன் வீடு . அண்ணன் சீமானையும் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிற நாம் தமிழர் உறவுகளை மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நிறைவுற்று இருந்த அந்த புன்னகை மாறாத முகத்துடையவன் அமைதியாய் சலனமின்றி படுத்திருந்தான். அவனது இயற்பெயர் சுரேஷோ.. ரமேஷோ.. அண்ணன் சீமான்தான் அவனுக்கு அன்புச்செழியன் என பெயர் சூட்டியிருந்தார்.
உள்ளடங்கிய அந்த நிலத்திலிருந்து ஏதோ ஒரு அழுத்தத்தில் எகிறித் தாவி அன்பு அண்ணன் சீமானை வந்து சேர்ந்திருந்தான். அந்த ஊருக்கு சென்றபோது எனக்குத் தோன்றிய ஒரே ஒரு சிந்தனை.. இங்கிருந்து எப்படி இவன் அண்ணன் சீமானிடம் வந்து சேர்ந்தான் என்பது தான்.
பூர்வக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் அவனுக்கும் அண்ணன் சீமானுக்கும் இருந்த பிணைப்பு பூர்வக் கதைகளுக்கே உரிய காவிய பூர்வமானது.
அண்ணன் சீமானுக்கும் அவனுக்குமான உறவு மிகவும் தனித்துவமானது. அண்ணன் சீமான் என்ன சிந்திக்கிறார் என்பதை அவர் சிந்திக்கும் நொடியின் தொடர்ச்சியிலேயே அன்பு உணர்ந்து கொள்வான். அண்ணன் சீமானுடன் நெருங்கி இருக்கிற எங்களுக்கெல்லாம் அகப்படாத பிரத்யோக அலைவரிசை அவனுக்கு மட்டும் அண்ணனோடு அமைந்திருந்தது.
அதை கண்சாடையாக எல்லாம் அர்த்தப்படுத்த முடியாது. அது ஒரு சிமிட்டல் அவ்வளவே. அந்த மெல்லிய விழி அசைவு அண்ணன் சீமானிடமிருந்து பிறந்த நொடியிலேயே அன்பு புரிந்து கொள்வான். அவர் எத்தனை மணிக்கு எங்கே செல்லவேண்டும் என்பதில் தொடங்கி அவரது உடை உணவு மருத்துவம் என அனைத்திலும் அன்பு முழுமையாய் நிறைந்திருந்து நிறைவேற்றுவான். அதுமட்டுமே அவனது வாழ்க்கை என அவன் அர்த்தப்படுத்தி இருந்தான்.
அவனுக்கு யாரைப்பற்றியும் எவ்வித குறையும் இல்லை. அடுத்தவரைப் பற்றி எந்த குறையும் இல்லாத அவனது ஆன்மா தெய்வத்தின் சாயல் உடையது. எவரைப் பற்றியும் அண்ணனிடம் அவன் தவறாக சொன்னதாக எங்களுக்கு தகவல் இல்லை. அதேபோல் அண்ணனிடம் அவனுக்குள்ள நெருக்கத்தை எங்கேயும் அவன் பயன் படுத்திக் கொண்டதில்லை. அவனது ஒரே தேவை.. அண்ணனின் நலம்.
ஒரு அரசியல் தலைவரின் ஓட்டுநர் என்கிற பொறுப்பு சாதாரணமானதல்ல. தொடர்ச்சியான நள்ளிரவு பயணங்கள், கடுமையான அலைச்சல்கள், ஓய்வின்றி கடும் உழைப்பை கோருகிற சூழல்கள் என மாபெரும் சவால்களை கொண்ட அந்த பொறுப்பினை அன்பு புன்னகையோடு நிர்வகித்து வந்தான்.
2016 சட்டமன்ற தேர்தல். ஒரு நாளைக்கு அண்ணன் சீமான் குறைந்தது 5 கூட்டங்கள் பேச வேண்டும். ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பயணத்தொலைவு உள்ள பகுதிகள். குறித்த நேரத்திற்கு அண்ணன் சென்றாக வேண்டும். வேட்பாளர்களும், மக்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் உணர்ச்சி வேகத்தில் ஒரு ஊரில் அதிக நேரம் பேசி விட்டால் அடுத்த ஊரின் கூட்டம் பாதிக்கப்படும். மேடு பள்ளமான சாலைகள், சாலை விதியை சற்றும் மதிக்காமல் எதிரே வரும் வாகனங்கள் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீறிப்பாயும் அந்த வாகனம் பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும். ஏனெனில் உள்ளே இருப்பவர் எதிர்கால தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை. இதையெல்லாம் உணர்ந்து கொண்டு அன்பு அண்ணன் சீமானின் கருப்பு நிற அந்த வாகனத்தை ஒரு பறவையாக கருதி அவனுக்கே உரிய கவித்துவ ஓட்டுதல் மொழியோடு ஓட்டும்போது பார்க்கிற எங்களுக்கு அவ்வளவு பரவசமாக இருக்கும். அந்தத் தொலை தூரப் பயணங்களில் அண்ணன் ஓய்வு எடுத்துக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கும்போது அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரேக்கை அழுத்தும் போது கூட நாசூக்காக அழுத்தி வேகம் எடுக்கிற அந்த அழகு அண்ணன் மீதான அவன் கொண்டிருந்த தாய்மைக்கு நிகரான மகத்தான பேரன்பின் வெளிப்பாடு.
அண்ணன் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அன்புவின் அலைபேசி எண் என் அலைபேசி திரையில் ஒளிரும். அண்ணன் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்கள். நீங்கள் எங்கே அண்ணா இருக்கிறீர்கள்.. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் திருச்சி வந்துவிடுவார். அதற்கு முன்பாக நீங்கள் விமான நிலையம் சென்று விடுவீர்களா என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்விகளை அன்பு வைத்துக் கொண்டே போவான். அவன் திருப்திப்படும் வரை நாங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அதேபோல அண்ணனோடு அவன் பயணிக்கும் காலங்களில்.. அண்ணன் குளித்துவிட்டு வரும்போது அவரது உடைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், என அனைத்தும் ஒருவித ஒழுங்கில் அன்பு வைத்திருப்பான். அந்த ஒழுங்கு அவனுக்கு மட்டுமே உரியது.
தேவையற்ற ஒரு சொல்லை அன்பு பேசியதாக நான் கவனித்ததில்லை. என்னுடைய பதிவுகளை அவனுக்கு பகிரியில் அனுப்பும் போதெல்லாம் படித்துவிட்டு உடனே பாராட்டி பேசுவான். அதுவும் அண்ணன் சீமானை பற்றி எழுதும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
ஏனெனில் அண்ணன் சீமான் தான் அவனது உலகம். அதைத்தாண்டி அவனுக்கு எதுவும் இல்லை. அவன் குடும்பத்தைப் பார்க்க அதிகம் ஊருக்கு போனதாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. அண்ணன் சீமான் ,அண்ணியார் கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் என்ற அவனது உலகம் மிகச் சிறியது. இன்று அந்த உலகத்தை விட்டு தான் அவன் பிரிந்து போய் இருக்கிறான்.
அவனது உடலை கண்டு அண்ணன் சீமான் கதறி அழுதது சுற்றியிருந்த எங்களையெல்லாம் உலுக்கி எடுத்து விட்டது. தன் உடலிலிருந்து ஒரு பாகம் பிரித்து எடுக்கப்பட்டது போல அண்ணன் கதறித் துடித்தார். இந்த பிரிவினை எதனாலும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் திரும்பி பார்க்கும் பொழுதெல்லாம் அன்பு நின்றுகொண்டிருந்தான். இன்று அவன் இல்லாத வெறுமை அவருக்கு தாங்க முடியாத உயிர் வலியை தந்து விட்டது. இடுகாட்டிற்கு அவனை அவரை தூக்கிச் சென்றார். இத்தனை ஆண்டுகாலம் அவரை சுமந்து அன்பு அலைந்து திரிந்தான். அவனது இறுதிப் பயணத்தில் அவன் உயிராக நேசித்த அவனது அண்ணன் சீமான் அவனை சுமந்து எடுத்துச் சென்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவனுக்கு நுரையீரலில் புற்று நோய் என்று நான் கேள்விப் பட்டபோது உண்மையில் பதறிப்போனேன். அவனை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுபற்றி விசாரிக்க எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ஆனாலும் அதை புரிந்து கொண்ட அவன் நான் நல்லா இருக்கேன்னே.. என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே கடந்து விடுவான். அண்ணன் சீமான் எங்கெங்கோ அவனுக்காக மருத்துவம் தேடி பேசிக்கொண்டிருந்தார். எப்படியாயினும் எவ்வளவு செலவு செய்தாலும் அவனை காப்பாற்றி விடவேண்டும் என துடித்தார். அவன் இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை. ஆனால் அவர் எதை நினைத்து அச்சப்பட்டு துடித்தாரோ அது நடந்தே போனது.
கடைசியாக அவனை நான் பார்த்தது மகன் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளில்.. என் கையை இறுகப் பிடித்தவாறே என்னோடு போட்டோ எடு அண்ணா என்றான். நான் என் அலைபேசியை அதற்காக தயார் செய்தபோது.. அவனே சொன்னான்.. இந்த போட்டோ ஒரு நாள் நீ எழுதுகிற பதிவுக்கு உனக்கு பயன்படும் அண்ணே.. என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
சட்டென யாரோ என்னை சாட்டையால் அடிப்பது போல உணர்வு.. லூசு மாதிரி பேசாதடா.. என்று போட்டோ எடுக்காமல் நான் கோபத்தோடு திரும்பிவிட்டேன்.
என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
நானும் அந்த புகைப்படம் எடுக்காமலேயே திரும்பிவிட்டேன்.
ஆனால்..அந்த நொடியில் சின்னப் புன்னகையோடு சிரித்திருந்த அவனது முகம் என்றும் மாறாமல் ஒரு புகைப்படம் போல என் ஆன்மாவில் உறைந்து விட்டது.
அன்பு காற்றோடு காற்றாய் கலந்துவிட்டான்.
தனது உதிர உறவை பறிகொடுத்துவிட்டு அண்ணன் சீமான் கண்கலங்கி தனியே அமர்ந்து இருக்கிறார்.
நினைவுகளின் அழுத்தத்தால்.. அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார் அவர்.
அந்த மூச்சுக்காற்றில்தான் அன்பு கலந்து இருக்கிறான் என்ற சிறு ஆறுதல் அவருக்கு வாழ்நாள் முழுக்க நீடிக்கப் போகிற அவன் இல்லாத வெறுமையின் துயரத்தை சற்றே ஆற்றட்டும்.