—————————————————————–

“நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய்.. நான் உன் காலடியில் கிடந்து, உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப் பட்டேன். சுதந்திரமாய் சக்திவாய்ந்து இயல்பாய் இருந்தேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். ஏனெனில் நான் காட்டுக்கு சொந்தமானவன்.”

பிரான்ஸ் காப்கா அவரது பெண் தோழி மெலினாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்..

துருவனின் எழுத்துக்களும் அப்படித்தான். ஏனெனில் அவைகளும் தொன்ம மனிதனின் அசுர மொழிகள் தான்.இதுவரை வெளிவந்திருக்கிற வழமையான எழுத்து சித்திரங்களை உதறி விட்டு வன்முறையின் பேரழகோடு அவனது அடர்பச்சை வெளியாகியிருக்கிறது. பிரதி முழுக்க கலைத்துப் போடப்பட்டிருக்கும் சொற்க்கோர்வை மிகவும் புதிரானவை. ஆழ்நிலை சிந்தனையை கோருபவை. இதுவரை உங்கள் வாழ்வின் எல்லா வித அனுபவச் சாரங்களின் ஊடாக நீங்கள் அடைந்திருக்கிற அனைத்து வித இறுக்க முடிச்சுகளையும் அறுத்துப் போட்டு விட்டு ஒரு கட்டவிழ்க்கப்பட்ட மனநிலையோடு அடர் பச்சையின் பக்கங்களை நீங்கள் தொடுவீர்களேயானால்.. இதுவரை நீங்கள் காணாத பெரும் களியாட்டத்துக்கு உங்களை நீங்களே ஒப்புக்கொடுக்கிறீர்கள் என அர்த்தம்.

புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு நூற்றாண்டின் தனிமை (one hundred years of solitude) மேஜிக்கல் ரியலிசம் (Magical realism) என்கின்ற பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு வகையை சார்ந்து எழுதப்பட்ட புனைவாகும். மார்க்வெஸ்சின் நாவல்கள் மாக்கான்டோ என்கின்ற புனைவு வழி சித்தரிப்பு நகரத்தில் நிகழ்கின்றன. அவரது எழுத்துக்கள் நிஜத்திற்கும் புனைவின் விசித்திரங்களும் இடையிலான மெல்லிய கோட்டினை அழிக்க முயன்று கொண்டே இருக்கின்றன.

அடர்பச்சை யும் அப்படித்தான். கடவுள்-அசுரர்-தேவர்-சாத்தான் போன்ற புராண எதார்த்த புள்ளிகளை
கை கொண்டு , மறுக்கவே முடியாத மீள்புனைவு சாத்தியங்களை அடர்பச்சை தனக்குள் அடக்கி இருக்கிறது.

ஆழமாக உள்நோக்கி பார்த்தோமானால் அடர்பச்சை வார்த்தைகள் அற்ற ஒரு பிரதி. செந்நிற வானில் தனித்துப் பறக்கும் ஒரு பறவையின் பறத்தல் போல பொருத்தி வைக்கப்பட்ட காலச் சட்டகத்தினை மீறி அதன் இயக்கம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.

செவ்வக வெளிச்சப் பாய்ச்சல் மட்டுமே
உட்புகுந்திருக்கும் வெற்று வாசலைப் போல அடர் பச்சையில் ஊடுருவி பாய்ந்திருக்கிற தனிமை உணர்ச்சி வாசிக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவையும் பின்தொடர்ந்து தொற்றிக்கொள்கிறது.

“கவிதையானது வேற்றுக் குரல். அது வரலாற்றின் குரலோ அல்லது எதிர் வரலாற்றின் குரலோ அல்ல. எனினும் கவிதையில் வரலாறு எப்போதும் வேறுபட்ட ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும்” என்கிற மெக்சிகோ கவிஞன் ஆக்டேவியா பாஸின் குரலைப் போல அடர்பச்சையின் அடி இழை புராண இதிகாசங்களின் புனித பிம்பங்களுக்கு எதிரான குரலாக மட்டும் அடையாளப்படுத்தப்படுமேயானால் அது முழுமை அல்ல. மாறாக ஆக்டேவியா பாஸ் வரையறை செய்வது போல இது வேற்று குரல்.

கவிதை என்றெல்லாம் வகைமைப் படுத்தி விட முடியாத ஒழுங்கின்மை தான் அடர் பச்சையின் ஆகப் பெரும் வலிமை.கழுத்து நரம்பின் மையப்புள்ளியை அறுத்துவிட்டு செல்கிற ஒரு புராதான வாளின் கூர்மை போல கவித்துவப் புள்ளிகளின் கூர்மை அடர்பச்சை முழுக்க ஒளி விடுகிறது. ஆனாலும் கவிதை என்ற ஒழுங்கினில் எங்கும் அடைபடாமல் காற்றின் நழுவல் போல நழுவிக் கொண்டே போவதை இப்பிரதி முழுக்க தரிசிக்கலாம்.

ஆல்பெர் காம்யூ எழுதிய The plague (1948) என்ற நாவலில் Tarrou-டேரூ என்ற இளைஞன் வருவான். அவனுக்கு இருக்கின்ற மகத்தான சிக்கல் இதுதான்..

“கடவுளே இல்லாத ஒரு இடத்தில் ஒருவன் எவ்வாறு புனிதனாவது ..?”

என்கிற கேள்வியை அவன் எழுப்பிக் கொண்டே இருப்பான். அதேபோன்ற
கேள்வியைத்தான் அடர்பச்சையும் எழுப்புகிறது.

சாத்தானும் அசுரனும் இல்லையேல் கடவுள் ஏது.. கடவுளின் கட்டமைக்கப்பட்ட புனித நிழல்களைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பும் போது தான் கடவுள் உயிர்க் தொடங்குகிறான். அசுரன் கடவுளின் தலைக் கொய்ய வாளை உயர்த்தும் அந்த நுட்ப புள்ளியில்தான் கடவுள்
உயிர்க் கொள்ள தொடங்குகிறார். இதுபோல தத்துவ விசாரணை உள்ளீடு கேள்விகள் அடர்பச்சை முழுக்க விரவிக் கிடக்கிறது.

ஒரு கவிதை அல்லது ஒரு இலக்கிய வடிவம் மேம்பட மேம்பட மொழி கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது. மொழியின் வசீகரங்கள் மறைந்து போய் ஒரு காட்சி ஊடகமாக அந்த இலக்கிய வடிவம் விரிய தொடங்குகிறது. ஆச்சரியகரமான வகையில் அடர்பச்சையில் அந்த மேஜிக் நிகழ்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தீரா வன்முறையின் படிமங்கள் ஒரு மையச் சரடு போல அடர்பச்சை முழுக்க பயணித்துக் கொண்டே இருக்கிறது. மீள்எழுதலுக்கான பெருவழி, இறுதியில் கூர்வாளின் நுனி கொண்டே எழுதப்படுகிறது.

பழைய Western classic cowboy படங்களில் காணப்படும் மரச் சட்டங்களால் வேயப்பட்ட கட்டிடங்கள் கொண்ட புராதன அமெரிக்க சிறு நகரத்தில் வெக்கை பூசும் வெயிலில் நட்ட நடு மணல் வீதியில் துப்பாக்கி எடுப்பதற்காக கரங்களை அசையாமல் காத்திருக்கும்
ஒரு அக்மார்க் கௌபாயின் கண்களில்
தோய்ந்திருக்கும் அதே வன்முறையின் அழகியல் அடர்பச்சை யிலும் காணப்படுவதுதான் இது இயல்பிலேயே கொண்டிருக்கும் உலகத்தரம்.

இந்தப் பதிவில் நான் எங்கும் அடர்பச்சையின் வரிகளை மேற்கோள் காட்டவில்லை என்பது திட்டமிட்ட ஒன்றே. நீங்களாக கண்டடைய வேண்டுகிற அந்த அனுபவம் எனது மேற்கோள்களால் நழுவக்கூடாது என நான் விரும்புகிறேன்.

விலக்கப்பட்ட கனி போல அடர்பச்சை தன்னியல்பில் ஈர்க்கும் சுவாரசிய ஆச்சரியங்கள் கொண்டது. நிலைநிறுத்தப்பட்டு இருக்கிற எல்லாவித புனித பிம்பங்களையும் ஒற்றை கோட்டில் நிறுத்தி வினா எழுப்புகிற அடர்பச்சையின் அரசியல்
காலம்காலமாய் புறக்கணிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட குரல்களின் விம்மல்.

அடர்பச்சையை நான் முன்மொழிகிறேன்.

நீங்கள் வழிமொழியுங்கள்.