பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜனவரி 2021

தொ.ப என்கின்ற தனிமனித பண்பாட்டு ஆய்வுலக பல்கலைக்கழகம்

மனித இன வரலாற்றில் தொன்மை இனமாக அறியப்படுகிற தமிழர் என்கின்ற தேசிய இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் நாகரீக வளர்ச்சியிலும் பண்பாட்டு முதிர்ச்சியிலும் அறிவுசார் இனமாக விளங்குகிறது என்பது பெருமித கதையாடல்கள் அல்ல , தொல் அறிவியல் ஆய்வுகள் மூலம் வரலாற்றின் போக்கில் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகிற உண்மை என்பதை சமீபத்திய பல ஆய்வாளர்கள் உரிய ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள்.

தொன்ம இனமான தமிழர் இனம் வாழ்ந்து வருகிற இந்த நிலம் வெறும் மண்ணும், காடும், கடலும், மலைகளும் நிரம்பிய சக்கை குவியலல்ல. இந்த மண் ஆதிகாலம் முதல் இடையறாது அறுந்துவிடாது தொடர்ந்து வரும் பண்பாட்டு விழுமியங்களால் செழிப்புற்று உயிர்த்திருக்கின்ற மிகப்பெரிய ஆய்வுக் களமாக, மனித இனத்தின் தோற்றம் பற்றியும் பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றியும் ஆய்வு செய்கிற பண்பாட்டு ஆய்வாளர்கள் முன்னால் விரிந்திருக்கிறது.மனித இனத்தின் நம்பிக்கைகளின் தொட்டிலாய் ஆதி நிலமான தமிழர் நிலம் விளங்குகிறது. ஆதி மனிதன் தோன்றிய காலகட்டத்தில் தன்னை இயற்கையோடு இணைந்து தகவமைத்து தக்க வைத்துக் கொள்வதில் அவனது பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள் மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழன் பலவிதமான சமயங்கள், பல்வகையான வழிபாட்டு முறைகளை கொண்ட மாபெரும் சமூக இனமாக திகழ்ந்து வருகிறான்.

ஒரு தொன்ம இனத்தின் ஒவ்வொரு நம்பிக்கையும் மிகப்பெரிய ஆய்விற்குரியதாக, வரலாற்றின் விசித்திர முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான சூட்சமங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.நவீன அறிவுசார் வெளியில் பண்பாட்டினை ஆய்வு செய்தல் என்பது முக்கியமான வகைமையாக விளங்கி வருகிறது. நமது பண்பாட்டு விழுமியங்களை குறித்து இதுவரை நிகழ்ந்த ஆய்வுகள் அனைத்துமே அயல் நிலங்களில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் விதிகளையும், அயலக தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

இந்த வழக்கமான ஆய்வு முறையினை தகர்த்து தனது வேறுபட்ட விசாரணை முறைகளால் ஆய்வுத் துறையில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் தொ. பரமசிவன் அவர்கள்.வழக்கமான ஆய்வுகளுக்கு பயன்படுத்தும் காரணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு சமூக அடித்தட்டில் வாழ்கின்ற எளிய மனிதர்களின் வாழ்வின் மரபிலிருந்து தன் ஆய்விற்கான தரவுகளை எடுத்தாண்டு ஆய்வு செய்தது தான் பேராசிரியர் தொ.ப அவர்கள் தமிழ் ஆய்வு உலகத்திற்கு அளித்த மாபெரும் கொடையாகும்.தமிழர் ஆய்வு மரபு என்பது நா. வானமாமலை, மயிலை சீனி வேங்கடசாமி, ராகவையங்கார், கார்த்திகேசு சிவத்தம்பி என நீண்ட தொடர்ச்சி கொண்டது. அதில் பேராசிரியர் முனைவர் தொ பரமசிவன் மிகமிக தனித்துவமானவர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட “கோயில்களில் ஆடு மாடு கோழி பலியிட தடை சட்டம்” என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட போது இந்து மத அரசியல் அடையாளமாகத் திகழ்கிற‌ இராம கோபாலனும், அதற்கு நேர் எதிர் அரசியலான திராவிட இயக்க அரசியல் அடையாளமாக திகழ்கிற திக தலைவர் கி வீரமணியும் ஒரே நேரத்தில் வரவேற்றபோது, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மார்க்சிய பெரியாரிய ஆதரவாளராக விளங்கிய ஐயா தொ.ப அவர்கள் கடுமையாக எதிர்த்தார். ஒரே நேரத்தில் தமிழரின் பண்பாட்டு விழுமிய அடையாளங்களை அழிப்பதில் ஆரியமும், திராவிடமும் காட்டிய தீவிரத்தன்மையை எளிய மக்களின் வாழ்வியலில் இருந்து தான் கண்டறிந்த ஆய்வுத் தரவுகளை ஆயுதமாகக் கொண்டு தொ.ப எதிர்த்து நின்றார்.”சங்கரமடத்தில் கிடாய் வெட்ட சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது ‌. அதேபோல எங்கள் சங்கிலி கருப்பன் கோவில் சர்க்கரை பொங்கல் மட்டும் தான் வைக்க வேண்டும் என சண்டித்தனம் செய்யவும் கூடாது” என தனது அறிவார்ந்த குரலால் எதிர்த்து நின்றார்.

அவரது மிக முக்கிய நூலான பண்பாட்டு அசைவுகள்(காலச்சுவடு வெளியீடு) என்கின்ற ஆய்வு நூலானது அவருடைய “அறியப்படாத தமிழகம்” மற்றும் “தெய்வங்களும் சமூக மரபுகளும்” என இரு நூல்களில் உள்ள கட்டுரைகள் மற்றும் புதிய கட்டுரைகளை உள்ளடக்கியதாகும். அந்த நூலில் தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பௌத்தம், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கருப்பு என்கிற ஏழு தலைப்புகளில் தண்ணீர் தொடங்கி இறப்புச் சடங்கு வரையிலான தமிழரின் ஒவ்வொரு பண்பாட்டுத் துளிகளையும் அவர் ஆய்வுக்குட்படுத்தி எளிய மொழியில் விவரித்து இருந்தது என்பது தமிழ் ஆய்வுத் துறையில் மிகப் பெரிய பாய்ச்சலை உருவாக்கியது.நவீன தமிழியல் ஆய்வின் முக்கிய பேராசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி “ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் வடிவமாக படிந்துள்ளன என்பதை பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்ற ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உப்பு எண்ணெய் தேங்காய் வழிபாடு விழாக்கள் உடை உறவுமுறை உறவுப்பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ் சமூகத்தின் ஈராயிரம் 3000 ஆண்டு வரலாற்று அசைவியக்கம் கோடிட்டு காட்டப்படுகிறது..” என பேரா.தொ.ப எழுதிய பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலை புகழ்ந்திருக்கிறார்.

அதேபோல அவரது மற்றொரு நூலான “சமயங்களின் அரசியல்” ( விகடன் வெளியீடு) இந்திய தத்துவ வரலாறு என நாம் அறிந்து இருக்கின்ற வரலாறு வர்ணாசிரம மேலடுக்கில் இருந்து மற்ற சாதிகளை ஒடுக்குகிற மேல் சாதிக்கும், ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்பதை சமயங்களின் அரசியல் என்கின்ற 65 பக்க நீள் கட்டுரை ஒன்றாலும் , ஆய்வாளர் சுந்தர்காளி அவர்களுடனான எழுத்து வடிவிலான நீண்ட உரையாடல் ஒன்றின் மூலம் நிறுவியிருக்கிறார்.தமிழ்நாட்டின் வரலாறு என நாம் அறிந்திருக்கிற சங்க காலம் தொடங்கி பின்னிடைக்காலம் வரையிலான பல வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமாக கையாண்டு கோயில்கள் என்கின்ற நிறுவனங்களின் அதிகார உச்சங்களையும், வீழ்ச்சிகளையும் பற்றி மாபெரும் ஆய்வு ஒன்றை இந்த நூலில் அவர் நிகழ்த்தி இருக்கிறார்.

பேரா. முனைவர் தொ.ப அவர்களின் ஆய்வுகள் இந்துமத மேலாதிக்க அதிகாரத்தை சுக்கு நூறாக உடைத்தெறிவதற்கு மாபெரும் கருவிகளாக பயன்படுகின்றன. இந்து மதம் என்கின்ற ஓர்மை படுத்துவதின் அரசியல் எவ்வாறு வர்ணாசிரமத்தையும், மனு நீதியையும் நுட்பமாக காப்பாற்றுகிறது என்பதை அவர் தனது தீவிர வாசிப்பின் மூலம், சங்கப்பாடல்கள் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான தனது பரந்துபட்ட அறிவின் மூலம் அம்பலப்படுத்தினார்.அவரது புகழ் பெற்ற கட்டுரை “காஞ்சி மடமும், கைதான மடாதிபதியும்”(உரைகல், கலப்பை வெளியீடு) வாதப்பிரதிவாதங்களை அறிவுத்தளத்தில் ஏற்படுத்தியது. இந்து மதம் என்கின்ற திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தின் உச்ச அதிகார பீடமாக இருக்கக்கூடிய காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றை , அதன் செல்வாக்கு பரவலாக்கப்பட்ட மோசடி தனத்தை மறுக்கவே முடியாத தரவுகளால் நிறுவிய தொ.ப வின் பங்களிப்பு தமிழக அரசியல் வெளியில் இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிற பல்வேறு குருட்டுத்தனங்களுக்கு எதிராக முழங்கிக் கொண்டே இருக்கிறது.

நாட்டார் வழக்காற்றியல் குறித்து அவர் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. சாதாரண உரையாடலின் போது கூட தொ.ப வெளியிடுகிற அறிவாய்ந்த வீச்சுக்கள் எதிர்நின்ற பலரை ஆச்சரியப்பட வைக்கிறது.தமிழ் இலக்கியத் துறையிலும் அவர் நிகழ்த்திய ஆய்வுகள் தமிழ் மொழிக்கும் இலக்கியத் துறைக்கும் புது ரத்தத்தை பாய்ச்சியவை. அவர் எழுதிய கல்லெழுத்துகள்( நாள் மலர்கள், பாவை பப்ளிகேஷன்ஸ்) என்கின்ற கல்வெட்டுகளை பற்றிய கட்டுரை இலக்கியத்திற்கும், வரலாற்றுக்கும் இடையிலான நுட்ப இடைவெளியை வைத்துக்கொண்டு செய்யப்பட்ட சாதனையாகும்.1950ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த பேராசிரியர் தொ பரமசிவன் அவர்கள் மானுடவியல், சமூக பண்பாட்டுத் துறை, இலக்கியம் போன்ற துறைகளில் நிகழ்த்திய ஆய்வுகள் தமிழ் சமூகத்தின் தொல் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவை. ஒரு முது இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் அறிவு என்பதே அந்த இனம் பெற்றிருக்கின்ற நாகரீக வளர்ச்சி என தொ.ப தன் ஆய்வுகள் மூலம் நிறுவினார்.

பண்பாட்டுக்கூறுகள் அழிந்தால் இனம் அழிந்து போகும், அடையாளத்தை இழந்து போகும் என எச்சரித்த அவர் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய உயர் கல்விப் புலங்களில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். எதையும் வெளிப்படையாக பேசி விடுகின்ற அவரது கருத்துக்கள் மிகவும் ஆழம் மிக்கவை. இறுதிக்காலத்தில் தமிழம் வலையொளிக்கு அவர் வழங்கிய செவ்வியில் “திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் முற்றுப்பெற்றுவிட்டது.”என ஏறக்குறைய இந்துத்துவா சார்போடு இயங்குகிற சமகாலத்து திராவிட இயக்கங்களை கடுமையாக அவர் விமர்சித்தார்.முனைவர் பட்டத்திற்கான அவரது அழகர் கோவில் பற்றிய ஆய்வேடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பற்றி செய்யப்படும் அனைத்து ஆய்வுகளுக்கும் இந்த நூல்தான் ஒரு முன்னோடியாக இருக்கிறது. தொலைந்து கொண்டிருக்கும் தமிழ் பண்பாட்டின் மிச்சங்களை ஆவணப்படுத்தி, ஆய்வு படுத்தி தமிழினத்தின் தொல் அறிவு, முதுமை, பெருமித செழுமை ஆகியவற்றை அரும்பெரும் நூல்களாக தமிழின எதிர்கால சந்ததிக்கு பெரும் கொடையாக அளித்து விட்டு மறைந்திருக்கிறார் பேராசிரியர் முனைவர் தொ பரமசிவன் அவர்கள்.

எண்ணற்ற அவரது மாணவர்கள் ஆய்வுத் துறையில் அவரது வழியில் தொடர்ச்சியாக பயணப்பட்டு நம் மொழி கலாச்சார பண்பாட்டு துறைகளுக்கு மாபெரும் பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள். இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் அவரிடம் கல்வி பயின்றது தான் தனது சமூகப் பார்வைக்கு ஒரே காரணமென அவர் மறைந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தன் ஆசிரியரை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்தது படிக்கின்ற ஒவ்வொரு வாசிப்பாளனும் உணர்வான்.அறிவுலக இழப்பாக நிகழ்ந்திருக்கிற அவரது மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று தான். ஆனால் பண்பாட்டு அசைவுகள், பரண், நாள் மலர்கள், விடுபூக்கள், இந்து தேசியம் என நீளுகின்ற இருபதுக்கும் மேலான அவரது நூல்களில் அவர் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப்பாதையில் வெளிச்சம் காட்டும் அறிவுச்சுடர் களாக திகழும்.

ஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.

❤️❤️❤️❤️❤️❤️❤️

தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் பிடித்து பாடியும் விடுவான்.

கால் நடக்க முடியாதவர்களுக்கு , மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. உடல் குறைபாடுள்ள பெண்கள் நிலை இன்னும் மோசம். நானும், தம்பி மணிகண்டனும் கொஞ்சம் அதில் விதிவிலக்கு. மனதைப் பார்த்து காதலியுங்கள் என்றெல்லாம் புத்தகத்தில் வரிகள் மின்னும் போது நானெல்லாம் சிரித்துக் கொள்வேன். அப்படி எல்லாம் எந்த காதலும் பிறக்காது. அப்படி பிறந்தால் அது குறுகிய கால அனுதாபமாகத்தான் இருக்கும் என்பதை என்னை ஒத்த பலர் வாழ்வில் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தம்பி மணிகண்டன் திருமண புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. திருமணத்தன்று நான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என ‌ திருமணத்திற்கு முதல் நாள் நான் மண்டபத்திற்கு சென்று‌ என் அம்மா முன்னிலையில் ஒரு இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ராஜபார்வை என்ற ஒரு படம் உண்டு. கமலஹாசனின் 100வது திரைப்படம். கண்பார்வை திறன் அற்றவராக கமல் அதில் திறம்பட நடித்திருப்பார். எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காத கண் பார்வைத் திறனற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் சரியாக போகவில்லை என்பார்கள். அந்தப் படத்தின் தோல்வியில் தான் ‌ கமல் வெறுப்பில் சில வணிக திரைப்படங்களில் நடித்ததாகவும் சொல்வார்கள்.

அந்தத் திரைப்படத்தில் கண் பார்வைத் திறனற்ற கமலஹாசனின் வீடு அவர் புழங்குவதற்கு ஏற்ப திட்டமிட்ட அடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். சிறிது இடம்மாறி போனாலும்‌ அவர் தடுமாறி விடுவார். ஒருமுறை கதாநாயகி மாதவி வீட்டிற்கு வரும்போது சில பொருட்களை இடம் மாற்றி வைத்து விட, கமல் தடுமாறி விடுவார். இந்த நுட்பமான திரைப்படக் காட்சி எங்களைப் போன்றோரின் அனுதாபம் கோராத திட்டமிடலுடன் கூடிய ஒரு வாழ்வியலை ஆவணம் ஆக்கிய மிக முக்கியமான காட்சி. மாற்றுத்திறனாளிகளை போற்றுவதாக கூறிக்கொண்டு ராகவா லாரன்ஸ் போன்ற கோமாளிகள் எடுக்கின்ற முட்டாள்தனமான படம் அல்ல அது. படத்தின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் தான் இருக்கும். உடல் குறைபாடுள்ள சகமனிதனின் சுயமதிப்பை பற்றி ஆராய்கிற ராஜபார்வை தமிழின் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.

எந்த மாற்றுத்திறனாளியும் அனுதாபம்‌ கோருவதில்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை இடையூறு செய்யாத ஒரு உலகம். ஆனாலும் உலகம் அவ்வாறு இல்லை தானே..

அன்பின் மிகுதியால் சிலர் எங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்களுடைய சமநிலை தவறுவது போல சில செயல்களை செய்து விடுவார்கள். குறிப்பாக எனக்கெல்லாம் வலது கையை பயன்படுத்தி இடதுகையை காலில் ஊன்றிக்கொண்டு நடந்து செல்லும் உடலமைப்பு. ஆனால் உதவி செய்ய வருபவர் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மாற்றி வேறு கையைப் பிடிக்கும் போது நான் தடுமாறி விடுகிறேன். அது அவர்களது பிழையல்ல. அது அன்பின் ஒரு பகுதி என்று‌ நானும் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் அமைப்பில் புதிதாக சேர்ந்த நண்பர் ஒருவர் என நேரடியாக அதுவரை பார்த்திராத ஒருவர், தஞ்சை கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை முதன்முதலாக பார்த்தார்.‌ இன்று அவர் அலைபேசியில் என்னை அழைத்து இந்த உடல் சூழ்நிலையிலும் நீங்கள் கட்சி வேலை செய்கிறீர்கள், யூ ஆர் கிரேட் என்றெல்லாம் அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுகுறித்து நீண் ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அமைப்பில் வேலை செய்வதுதான் என்னை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதை எப்படி அவரிடம் விளக்கி புரிய வைக்க முடியும் என்பதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.

நான் உலகத்தில் அதிகம் விரும்பும்‌ அனைவருமே என்னிடம் அனுதாபம் காட்டாதவர்கள். குறிப்பாக என் அம்மா. பிறகு அண்ணன் சீமான். பின்னர் என் மனைவி உள்ளிட்ட சில பெண்கள் என இவர்கள் யாருமே என்னிடம் அனுதாபம் காட்டியதில்லை. என்னை வெகுவாக விரும்பிய (disclaimer: அது மிக நீண்ட காலத்திற்கு முன்னால்…) ஒரு பெண் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு பணிக்கு என்னை அவள் அழைத்த போது என் உடல் நிலையை சிந்தித்து தான் இதை கேட்கிறாயா என நான் கேட்டதற்கு “உன்னால் ஒரு விஷயம் முடியாது என்று நான் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் பார்வையில் இயல்பான மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்கிறாய். கிளம்பி வாடா”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

திருமணத்திற்காக நான் பெண் பார்க்கும்போது .. என் மனைவியிடம் நான் ஏதோ அறிவுரை சொல்வது போல பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம் எனவும் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், விளக்கமாக அறிவுரை கூறி என் உடல் இருக்கும் தகுதி குறித்து அவளிடம் விளக்கி பேசினேன்.

அதை எல்லாம் அமைதியாக கேட்டு விட்டு நான் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவள் அப்பாவிடம் போய் சென்று “எனக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனால் இவரோடு தான்” என்று பெரியோர்களால் பேசப்பட்ட சாதாரண திருமணத்தை ஒரு அழகான காதல் திருமணமாக என் மனைவி மாற்றி விட்டாள்.

இந்த வரிசையில் என்னை மிகவும் வெறுக்கும் என் அரசியல் எதிரிகளும் வருகிறார்கள். அவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் வசவுகளை எத்தனையோ முறை நான் ரசித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் இவ்வளவு தொந்தரவாக இருப்பது குறித்து மட்டுமே வருந்தி இருக்கிறேனே தவிர, என் உடல் குறைபாட்டினை குறித்து எதையும் பொருட்படுத்தாது, அனுதாபமோ, கருணையோ காட்டாது என்னை தீவிரமாக எதிர்க்கும் அவர்களது எதிர்ப்பு கூட நான் விரும்புகிற ஒன்றுதான்.

ஏனெனில் ஒரு உலகம் இவ்வாறு அமைய எங்களைப் போன்றோருக்கு மிக மிக அரிது. எனது மகன்களுக்கு என் அப்பாவால் எல்லாம் முடியும் என்கிற மகத்தான நம்பிக்கை இருக்கிறது. அது நான் கொடுத்தது இல்லை. அவர்களாகவே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பல இடங்களுக்கு எனது மூத்த மகன் சிபி தான் என்‌ உடன் வருகிறான். என் கட்சி உறவுகள் போலவே அவனும் கவனமாக என்னை அழைத்துச் செல்கிறான்.

அண்ணன் சீமான் எப்போதும் நான் மேடை ஏறும் போது பார்த்துக் கொண்டிருப்பதாக பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். நான் தடுமாறி விடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். சில சமயங்களில் தடுமாறும் போது அவரது சிறிய கணைப்பு போன்ற ஒரு ஒலி என்னை எச்சரித்து சுதாரிக்க வைத்திருக்கிறது. ஒருபோதும் என் அண்ணன் சீமான் எனக்கு எவ்வித சார்பும் செய்தததில்லை. உன்னால் முடியாது என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. இன்னும் உன்னால் முடியும் என்றுதான் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர் என் அண்ணன்.

அந்த வகையில் என்னை மதிப்பு மிகுந்தவனாக இந்த உலகம் நடத்தியிருக்கிறது. தம்பி மணிகண்டனுக்கும் ஏறக்குறைய அப்படித்தான். நான் எல்லாம் அவனை கடுமையாக திட்டி இருக்கிறேன். அவனும் சளைத்தவன் அல்ல. கல்லூரி வாழ்க்கை தொடங்கி சகலத்திலும் அவன் சேட்டைக்காரன் தான். சிறந்த பாடகன். பாடிப் பாடியே காதலித்து மனதுக்குப் பிடித்தவளைக் கரம் பிடித்தும் விட்டான்.தம்பி குடவாசல் மணிகண்டனின் மணவாழ்க்கை என்னைப்போலவே மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் மனதார வாழ்த்துகிறேன்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அந்த மகிழ்ச்சியின் ஊடே நெடுங்காலமாய் சுமந்துவரும் ஒரு பெரும் வலியை அவர்கள் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்.

அம்மா என்றால் அப்படித்தானே.. மணிகண்டனுக்கு திருமணம் நடந்தால் என்ன.. எங்களைப் போல வேறு யாருக்கு நடந்தால் என்ன..

அம்மாவுக்கு எல்லாம் ஒன்றுதான்.

ஏனெனில் உலகத்தில் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்.

❤️

தமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்

தமிழினம் தனது தனி நலன்களுக்காக போராட புரட்சிப் பாதையில் படை எடுத்து விட்டது.அந்த படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது.
-ம. பொ. சி 1954 செப்டம்பர்.

ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளங்களில் முதன்மையாக கொண்டிருப்பது மொழி. மொழி என்ற முகமே ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் தோன்றியுள்ள எத்தனையோ நாடுகள் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களை சார்ந்தே நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுவான மக்கள் பொருளியல் வாழ்க்கை, பொது பண்பாடாக வெளிப்படும் நாம் ஓரினம் என்கின்ற உளவியல் பாங்கையும் தழுவி வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த ஒரு நிலையான சமூகம் என அறியப்படுகிறது.


சங்க காலம் தொட்டே தமிழ்மொழி பேசப்பட்டு வந்த தமிழக எல்லை என்பது வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்து வந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் ஆண்டாலும் வடவேங்கடம் தொடங்கி தென்குமரி வரையிலான பெரும் நிலப்பரப்பு தமிழகம் என அறியப்பட்டு வந்திருக்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து”என்கிறது தொல்காப்பியம்.
சேர சோழ பாண்டியர்களான தமிழ் மூவேந்தர்கள் 1300 வருடம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருந்து தமிழக நிலப்பரப்பினை காத்து வந்து இருக்கிறார்கள்.கி-மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்து மன்னன் காரவேலன் இந்தக் கூட்டணியை உடைத்து எறிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இடைக் காலத்திலும் மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் படையெடுத்து வெற்றி தோல்வி கண்டாலும், தமிழக நிலப்பரப்பு ஏறக்குறைய பிறமொழி இனத்தாரிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டே கிபி 12ஆம் நூற்றாண்டு வரை வந்தது. 

 
முகலாயர் படையெடுப்பின்போது கூட சில இன ஊடுருவல்கள் நடந்ததே ஒழிய தமிழக நிலப்பரப்பை பொருத்தவரையில் அது தமிழர்களின்  தாயகமாக தான் விளங்கியது.
வரலாற்றின் முதல் விடுதலைப் போர் என அறிவிக்கப்படுகிற 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே 1801 ஆண்டிலேயே ஆங்கிலேயருக்கு எதிராக தமிழக மண்  போர்க்கோலம் கண்டது. அதற்கும் முன்பாக மாவீரன் பூலித்தேவனும், மருதநாயகம் யூசப்பும் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழக மண்ணில் எழுச்சியோடு போராடினார்கள். 1801ஆம் ஆண்டு மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட காலகட்டத்தில் ஏறக்குறைய முந்தைய சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் ஆங்கிலேயர் ஊடுருவி ஆட்சி செய்ய தொடங்கி விட்டார்கள். திப்புசுல்தானின் வீழ்ச்சி தென்னகத்தில் ஆங்கிலேயர் கால் ஊன்றுவதற்கு நாற்றங்காலாய் அமைந்தது. 


1825 ஆம் ஆண்டு தெலுங்கு கன்னட மலையாள பகுதிகளை தமிழ் நாட்டோடு இணைத்து சென்னை மாகாணம் ( Madras presidency) கடலூரை தலைநகரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி பேரறிக்கைக்கு பிறகு ஆளுநர் நியமிக்கப்பட்ட சென்னை மாகாணம் தனித்த பெரும்பகுதியாக திகழ்ந்தது. சென்னை மாகாணத்தின் தலைநகராக, முக்கிய பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கூடிய சென்னை திகழ்ந்ததால் தென்னிந்தியா முழுக்க சென்னை அரசியல் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக விளங்கியது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தப் பெரும் நிலப்பரப்பு 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை ஒரே மாகாணமாக தான் இருந்தது.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முன்பாக இந்தியா என்கிற ஒரு நாடு இல்லை. இந்தப் பெரும் நிலப்பரப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால், சமஸ்தான ஜமீன்தார்களால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக கூட வரலாற்றில் எப்போதும் இன்று இந்தியா என வரையறுக்கப்படும் இந்தப் பெரும் நிலப்பரப்பு ஒருபோதும் ஒரே மன்னரால் ஆளப்பட்டது இல்லை. இந்த நிலப்பரப்பு முழுக்க வாழும் மக்கள் ஒரே மொழி பேசியதில்லை.மொழி, பண்பாடு, பருவநிலை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் முரண்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பை ஆங்கிலேயர் தனது துப்பாக்கி முனையின் மூலமாக இந்தியா என்ற ஒரு பெரும் நாடாக கட்டி எழுப்பினர்.


அதற்கு முன் இந்தப் பெரும் நிலப்பரப்பு வரலாற்றில் எப்போதும் இந்தியா என்று அழைக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயர் தனது அதிகார வசதிக்காக இந்தியா என்ற நாட்டை உருவாக்கி சென்னை, மும்பை, கல்கத்தா என அதிகார தலைநகரங்களை உருவாக்கினர்.
பலதரப்பட்ட மொழி பேசும் பண்பாடு பழக்கவழக்கங்கள் கொண்ட அப்போதே ஏறத்தாழ 20 கோடி மக்கள் தொகைக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தை கட்டி ஆள இந்தியா என்கின்ற ஓர்மை ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது. ஆனால் இந்தியா என்கின்ற நாடு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட போது நாமெல்லாம் இந்தியர் என்கின்ற உணர்வு அப்போது யாருக்கும் இல்லை என்பதுதான் மிக முக்கியமானது. ஆங்கிலேயர் எப்படி நிர்வாக வசதிக்காக இந்தியா என்கின்ற நாட்டை உருவாக்கினார்களோ, அதேபோல ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் ஆங்கிலேய எதிர்ப்பாளர்களுக்கு அன்று தேவைப்பட்டது.


1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரமான நாளுக்கு பிறகு, இந்தியாவை ஒரே நாடாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட கருதவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை ஒன்றியங்களின் நாடு என்றுதான் குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு விவாதங்களின் போது கூட மொழிவழி மாநிலங்கள் பிரிவது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திர இந்திய நாட்டில் முதன்மையான ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது ஒவ்வொரு பொதுத் தேர்தல் அறிக்கையிலும் மொழிவாரி மாகாணப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதியை அளித்தது.
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற ஒரு நாடாக அறிவிக்கப்பட்டாலும், மொழி உணர்வுகள், பல்வேறு பண்பாட்டு கலாச்சார விழுமியங்கள் இவற்றின் முரண்கள் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்கான மக்கள் உளவியல் தொடக்கத்திலிருந்தே இருந்தன. 1954 ல் தொடங்கப்பட்ட தெற்கெல்லை போராட்டம் என வரலாற்றில் அறிவிக்கப்பட்ட திருவிதாங்கூர் எல்லைப் போராட்டம் மொழி உணர்வுக்கு சரியான எடுத்துக்காட்டாகும். 1954 ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்களை தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு போராடிய திருவிதாங்கூர் தமிழர்கள் 10 பேர் மலையாள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.அதேபோல சித்தூர், திருத்தணி , கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.


ஆனாலும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாததோடு மட்டுமில்லாமல், தமிழர்களின் நலனுக்கு எதிராக நடந்து கொள்வதில் தீவிரமாக இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழுத்த தேசியவாதியான காமராஜர்  ஒட்டுமொத்த இந்தியாவின் தானே அனைத்து பகுதிகளும் இருக்கப் போகின்றன என்ற பரந்த எண்ணத்தில் மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாமல் இருந்துவிட்டார். தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1957 ஆம் ஆண்டு படாசுக்கர் எல்லை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. பிரகாசம் தலைமையிலான ஆந்திரத் தலைவர்கள் ‘மதராஸ் மனதே’ என முழங்கி சென்னை ஆந்திராவோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராடினார்கள்.ஐக்கிய கேரளம் வேண்டும் என்று கேரள பொதுவுடமை கட்சியின் தலைவர் உயர்திரு ஏகே கோபாலன் தலைமையில் மலையாளிகள் போராடி வந்தனர். தமிழக பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் ஜீவா தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டிற்கே சொந்தம் என அறிவிக்க , பொதுவுடமை கட்சியிலும் பிரிவினைகள் தோன்றின. திருவாங்கூர் கொச்சி போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை கேரளாவோடு  இணைப்பதற்கு திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்த ஈவேரா ஒப்புதல் அளிக்க , அதை தமிழ்த் தேசிய அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். 1960 ஆம் ஆண்டு தான் திருத்தணி தமிழ்நாட்டோடு தளபதி கே விநாயகம் தலைமையிலான போராட்டத்தால் இணைக்கப்பட்டது. மார்ஷல் நேசமணி, தளபதி கே விநாயகம், ம பொ சிவஞானம், உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் எல்லை மீட்புப் போரில் தமிழகத்தின் எல்லைக் காக்க போராடினர்.  

ஆனாலும் தமிழர்களின் பரந்துபட்ட மனப்பான்மையின் காரணமாக தமிழகம் தனது பூர்வீக நிலத்தில் பலவற்றை இழக்க நேரிட்டது. கர்நாடகாவிலும் கொள்ளேகால் வனப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளையும்,ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களையும், கேரளா விடம் தேவிகுளம் பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளையும் அன்றைய தமிழகத் தலைவர்களின் அலட்சியப் போக்கினாலும், திராவிட தேசிய அரசியல் கட்சிகளின் தமிழர் விரோத நிலைப்பாடுகளாலும் தமிழகம் இழந்தது.
திராவிட-தேசிய கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையால் தமிழக எல்லைப் போராட்டம் முழுவதுமாக வெற்றி அடைய முடியாமல் பகுதி வெற்றியோடு தமிழர்கள் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.


1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் அறிவிப்பு வெளியானது. தற்போதைய எல்லை படி சென்னை மாகாணம் என வழங்கப்பட்ட நிலப்பரப்பு தனித்த மாநிலமாகவே உருவானது. 


விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு என்ற கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைத் துறந்தார். 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு கொண்டுவரப்பட்ட மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திமொழி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசாங்கம் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.


முதன்முதலாக தமிழ்நாடு என்கிற மொழிவாரி மாநிலம் உருவான நாளான 1956 நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்து  2019 அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்றினை செய்தது. 
இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் தாயக நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்திய ஒன்றியத்தின் கீழ் தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளான 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு கொண்டது. 2009 ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு பிறகு தாயகத் தமிழகத்தில் பொங்கியெழுந்த தமிழ் தேசிய உணர்விற்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு நாள் அமைந்து உள்ளது.


கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலத்தவர்கள் தங்கள் மாநிலம் உருவான நாளை மிகப் பெரிய விழாவாக எடுத்து, தங்கள் மாநிலத்திற்கு என பொதுவாக இருக்கும் கொடியை அந்நாளில் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு உயர்வு நிலை தமிழகத்திற்கு ஏற்படாதா என எண்ணியிருந்த நிலைமையில், தமிழக அரசின் தமிழ்நாடு நாள் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஐயா சி பா ஆதித்தனார் வடிவமைப்பில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி சில மாற்றங்களோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்டு , இன்று பரந்துபட்ட தமிழர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே தமிழ்நாட்டு கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் ‘தமிழ்நாடு நாள்’ கட்சியின் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றப்பட வேண்டும் என்கிற அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சி என்கிற பெருமையை நாம் தமிழர் கட்சி பெறுகிறது. 


தமிழராய் பிறந்ததில் பெருமைகள் கொள்வோம்.நாம் தமிழராய் திகழ்வதில் பெருமிதம் கொள்வோம்

பொதுக்கருத்தியலின் வன்முறையும்,பொன்மகள்களின் அபத்தங்களும்..———————————————–

சமீபகாலமாக பொது கருத்தாக்கத்தின் தாக்கம் அதிகமாகி வருவதை நாம் கவனிக்கிறோம். பொதுக்கருத்து என்பது யாதெனில் செல்வாக்குப் பெற்ற கருத்தாக்கம் என்பதே சரியானது. பலரும் பொது கருத்தாக்கத்தின் மீதான ஈர்ப்பினால் தங்கள் சுய கருத்துக்களை மறந்து விட்டு பொதுக் கருத்தாக்கத்தை வலுப்படுத்த வரிசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது. பொதுக்கருத்து என ஏற்படுத்தப்படும் அதிகாரத்தின் புனைவு நிகழ்த்தும் ஆகப் பெரும் வன்முறையாகவே கருத முடிகிறது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பில்  கூட “சமூக கூட்டு உணர்வின் மனசாட்சி” என்கின்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் இந்த சமயத்தில் நினைவு கூரலாம். அந்த சொல்லால் எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இச் சமயத்தில் சிந்திக்க வேண்டியச் செய்தி.


எனவே சமூகமாக சேர்ந்து இருப்பதன் பலன்களையும், ஏதோ ஒரு வடிவத்தில் வலுவாக ஒலிக்கிற ஒரு கருத்தினை  தானும் ஆதரிப்பதன் மூலம் வலிமையாக இருப்பது போன்ற தோற்ற உளவியலுக்காக நம்மில் பலர் பொது கருத்தாக்கத்தின் ஆதரவாளராக மாறி ஒலிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பொதுக் கருத்தாக்கம் என்பது சகல காலத்திற்கும் பொருந்தக்கூடிய மிகச்சரியாக முடிவுகள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாத தீர்மானங்களாக இருந்திருப்பதை வரலாற்றின் பக்கங்களில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

“நமது ஊரை அவமானப்படுத்தி பேசிவிட்டார்கள் , வாருங்கள் .. பக்கத்து ஊரை போய் அடிக்கலாம்” என்பது போன்ற அழைப்புகள் ‘பொது கருத்தாக்கத்தின் செல்வாக்கு’ தோற்றங்களுக்கு நல்ல உதாரணம். ஏன், எதற்கு என்ற கேள்வி பெரும்பாலும் எவருக்கும் எழாது. எல்லோரும் அடிக்கப் போகிறார்கள், நாமும் போவோம் என்பது போன்றதான பொதுக் கருத்து சமூகத்தில் வலிமையான கருத்தாக மாறி வருவது என்பது உண்மையில் அபாயகரமான ஒன்று.


மனித மனம் உணர்ச்சிகளின் பிடிகளில் கட்டுண்டது. தொலைக்காட்சி, இணையம் என்கின்ற பல்வேறு விதமான ஊடகங்கள் வலிமை பெற்று இருக்கின்ற காலத்தில் அந்தந்த நொடிகளில் உண்டாகும் செய்திகளில் மனித மனம் உணர்ச்சிவசப்பட தொடங்குகிறது. யாரோ ஒருவன் தவறு செய்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் அவனை எல்லோரும் சேர்ந்து அடிப்போம் என்பதுபோன்ற பொதுக் கருத்தியலின் அபத்தங்களை சமீப கால சமூகம் எதிர்கொண்டு வருகிறது.யாரோ கற்பழிக்கப்பட்டு விட்டார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்பதற்காக தவறாக அறியப்பட்டு சிக்கிக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்படுவதும் பொது கருத்தியல் இழைக்கும் வன்முறைதான்.
குறிப்பாக பொதுக் கருத்திற்கு சார்பாக பேசப்படும் அல்லது கதை அமைக்கப்படும் எல்லா திரைப்படங்களுமே நல்ல திரைப்படங்கள்தான் என ஒரு பொதுக் கருத்து திட்டமிட்டு உண்டாக்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஒரு திரைப்படம் என்பது வெறும் கருத்தியல் சார்ந்த கலை அல்ல. மனித உணர்வுகளை நுட்பமாக அவதானித்துஒளி, இசை, வசனம், காட்சி அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டு  கலையம்சம் மிகுந்த படைப்பாக ஒரு சிறந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்கிறார் புகழ்ப்பெற்ற இயக்குனர் இங்கர் பெர்க்மன்.
அதில் ஒரு புள்ளி பிசகினாலும் உண்மையான கலைஞன் மனம் பாதிக்கப்படுவதை நம்மால் அருகில் இருந்து கவனிக்க முடிகிறது. நான் உயிராக நேசிக்கின்ற ஒரு அண்ணன் திரைப்படத் துறையை சார்ந்தவர். நீண்டகாலமாக திரைப்படம் என்பதை ஒரு கலையாக உள்வாங்கி பல்வேறு உலகத் திரைப்படங்களை கண்டுணர்ந்து, பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இணை இயக்குனராக வசனகர்த்தாவாக பணிபுரிந்து தான் விரும்பிய கலையம்சம் கூடிய ஒரு படைப்பினை திரையில் மொழிய நீண்டகாலமாக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தன்னிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் குறித்தும், தன் கண்ணெதிரே தான் கொண்டிருக்கிற கலை உளவியல் சிறுக சிறுக கொலை செய்யப்பட்டது குறித்தும் முகநூலில் மிகக் காத்திரமாக ஒரு பதிவு எழுதி இருந்தார். அப்படித்தான் ஒரு அசலான கலைஞன் காத்திரமாக இருப்பான். அந்தக் கலைஞனின் கோபம் சத்திய ஆவேசமானது.
பலரிடம் ஒரு பொதுக்கருத்து இருப்பதை நானே கவனித்திருக்கிறேன். கதை எழுதுவது,கவிதை எழுதுவது, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது போன்ற பல படைப்பு பணிகள் உட்கார்ந்த இடத்திலேயே செய்யக்கூடியவை தானே .. அதை எல்லோரும் செய்யலாம் என்பது போன்ற ஒரு அலட்சிய மனப்பாங்கு ‌ உலகப் பொது விதியாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


அப்படியெல்லாம் எந்த வாசிப்பும், எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் எழுதுவதுஏறக்குறைய தற்கொலைதான். தனது படைப்பை அம்சத்தை மட்டுமல்ல பொதுவாக கலை என்கிற வடிவம் கொண்டிருக்கிற மேன்மையை கொலை செய்வது. ‌ உணர்வு பூர்வமான ஒரு படைப்பினை ஒரு கலைஞன் உருவாக்கும்போது அவன் எதிர்கொள்ளும் உளவியல், உடலியல் சிக்கல்கள் மிகக் கொடுமையானவை.


சமீபத்தில் Honey land (2019) என்கிற மிக முக்கிய ஒரு ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.  Tamara Kotevska , Ljubomir Stefanov என்ற இரு இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள்.ஏறக்குறைய திரைப்படம் போலவே தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த ஆவணப்படம் உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. சிரியா நாட்டின் எல்லையில் தேன் எடுக்கச் செல்லும் வயது முதிர்ந்த ஒரு எளிய பெண்ணின் கதை. அந்த சிறிய ஆவணப்படம் முன் மொழியாத அரசியல் எதுவும் இல்லை என்ற அளவிற்கு உலகமயம், இயற்கையை அழித்தல், மனிதர்களின் பேராசை, இயற்கை தன்னைத் தானே மறுசீரமைப்பு செய்து கொள்வது போன்ற முக்கிய அரசியல் கருத்துக்களை தீவிரமாக பேசக்கூடிய அந்த ஆவணப்படம் மிக எளிமையான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அந்த திரைப்படம் எடுப்பதற்கு 5 வருடங்களுக்கு மேலாக அந்தப் படக் குழுவினர் உழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.


உண்மையான கலை அம்சத்திற்கு உள்ள வலிமையே அதுதான். அதன் இயல்பின் மொழியிலேயே அரசியல் பேசும். சிறந்த கலைப்படைப்பு ஒன்றில் நாம் வலிந்து புகுத்த அரசியல் என்று ஏதும் இல்லை. இல்லையென்றால்அதை திணிக்கப்பட்ட ஒன்றாக, துருத்திக் கொண்டுதான் இருக்கும்.


சமீபகாலமாக Child Abuse  பற்றிய பரவலான விவாதங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அது குறித்தான ஒரு திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள்(2020). அந்தத் திரைப்படம் OTT என்கிற முறைமையில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் என்பதைத் தாண்டி அதில் கொண்டாட ஏதுமில்லை என்பதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டிய எவ்வித கலையம்ச புள்ளிகளும் அந்த திரைப்படத்தில் இல்லை என்பது உண்மையில் வருத்தத்துக்குரிய ஒன்று.பொதுக்கருத்து என்பதன் அடிப்படையில் எல்லோரும் ஆதரிக்கிறார்கள் நாமும் பாராட்டுவோம் என்பதான கருத்தினை எல்லாம் தாண்டி பொன்மகள் வந்தாள் ஒரு மகத்தான தோல்வி.


மிகவும் அலட்சியமாக தயாரிக்கப்பட்ட திரைக்கதையும், காட்சி வடிவங்களும்,உண்மையாக பேசப்பட வேண்டிய மிக முக்கிய செய்தியொன்றை வெவ்வேறு திசைகளில் திசைமாற்றி குழப்பின.
 Child Abuse போன்ற குற்ற வழக்குகள் முதலில் பெரும்பாலும் திறந்த வெளி நீதிமன்றங்களில் (not open court,  in-camera Proceedings) நடைபெறுவதில்லை என்பது கூட அந்த திரைப்பட இயக்குனருக்கு தெரியாதது, அல்லது அது குறித்த தரவுகள் சேகரிக்க தவறிய அந்த இயக்குனரின் அலட்சியம் என்பது ஜீரணிக்க முடியாதவை.

உண்மையில் ஒரு நீதி மன்றம் என்பது எப்படிப்பட்டது என்பது கூட அறிந்துகொள்ள அந்த இயக்குனர் விரும்பவில்லை என்பதுதான் வேதனைகரமானது. வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே கதாநாயகியின் தந்தையும் கதாநாயகியும் பேசிக் கொள்கின்ற காட்சி,வில்லனிடம் லஞ்சம் பெற்ற நீதிபதி (அந்தப் பணம் என்னானது..?) இறுதியில் நல்லவர் போல நீதி வழங்குவது, நீதிபதிகளை பகடி செய்வதற்காக உருவ கேலி காட்சிகளை அமைத்திருப்பது என நீதிமன்றத்திற்கு முன்பின் செல்லாதஒருவர் இயக்குனராகி இருப்பதன் விபத்து என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் குழந்தைகளின் ஆடையில் உதிரத்தை காட்டுவதும், குழந்தைகளுக்கு முன்னால் பேண்டின் பெல்டை கழட்டுவதும் போன்ற பொது மனிதனின் உளவியலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகளே போதுமென அந்த திரைப்படத்தின் இயக்குனர் நினைத்தது தான் படத்தின் ஆகப் பெரும் பலவீனம்.


இதுவரை பேசப்படாத ஒரு பொருளை பேசியதால் மட்டுமே மட்டமான கலையம்ச தன்மைகளோடு இருக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அற உணர்வுகள் உடைய எந்த எளிய கலைஞனுக்கும் அல்லது எழுத்தாளனுக்கும் தோன்றுகின்ற அடிப்படைக்கேள்வி.


Hope (2013) என்கின்ற ஒரு கொரியன் படம் இருக்கிறது. இணையத்திலும் காணமுடிகிறது. குழந்தைகள் மீது நடக்கிற பாலியல் அத்துமீறல் பற்றிய மிக முக்கியமான திரைப்படம். இயல்பான வாழ்வொன்றில் ஒரு மழைப்பொழுதின் போது பள்ளிக்கு செல்லும் சிறுமி தன் குடையில் இடம் கேட்கும் குடிபோதைக்காரன் ஒருவனை காண நேர்கிறாள்.அதிலிருந்து அந்த சிறுமியின் வாழ்க்கையே மாறிப் போகிறது. அந்த ஒற்றைச் சம்பவம் உளவியல் ரீதியாக உடல்ரீதியாக அந்த சிறுமியை நாசப்படுத்த, அதிலிருந்து அந்த சிறுமியின் தந்தை எப்படி தன் மகளை மீட்டார் என்பதுதான் அந்த திரைப்படம்.Ji-hye Kim எழுதிய கதையினை Joon-ik Lee இயக்கியிருக்கிறார். தென்கொரியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கொரியன் திரைப்பட வரிசையில் மிக முக்கியமான திரைப்படமாக திகழ்கிறது.


ஒரு நடு இரவில் பார்த்துவிட்டு விடிய விடிய கண்கலங்க விழகத்துக்கொண்டே கிடந்த அனுபவத்தை Hope தந்தது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் கை விரல்கள் உதிரத்தோடு தோன்றுகின்ற அந்த ஒரு காட்சியை தவிர வேறு எங்கும் ரத்த வாடை கிடையாது. மேலும் Child Abuse போன்ற சமூகத்தை அதிர்ச்சியூட்டும் கதைகளை கையாளும்போது எப்படி கையாள வேண்டும் என்பதற்கு Hope ஒரு மகத்தான பாடம்.


வெறும் Good touch- Bad touch சொல்லிக் கொடுத்தாலே அது சீர்திருத்தம் என நினைப்பவர்களுக்கு பொன்மகள் வந்தாள் ஒரு காவியம்தான். ஆனால் தன் மகளை ஒரு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு எதிராக சட்ட போராட்டங்களையும் செய்துகொண்டு, ஒரு மனித விலங்கினால் குதறப்பட்டிருக்கும் தன் மகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அந்தத் தந்தை செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் நம்பிக்கை மொழி பேசுகிற நெகிழ்ச்சி உணர்வின் அடிப்படையிலானவை.
குறிப்பாக அந்த சிறுமியின் கேள்வி “மழையில் நனையும் ஒருவருக்கு நான் இடம் கொடுத்தது தவறா..” என்கின்ற ஒரு சிறு குழந்தையின் அந்த அறம் சார்ந்த கேள்விக்கு முன்னால் மனிதனின் மனசாட்சி தலைகுனிந்து நிற்கிறது.


குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் அத்துமீறலுக்கு சட்டம் அடங்கிய தண்டனையோடு ஒரு பொது மனம் அமைதி கொள்கிறது. ஆனால் கலையம்ச விழிப்புணர்வு கொண்ட ஒரு அசல் கலைஞன் அதற்குப் பிறகுதான் சமூகத்திற்கான செய்தியைச் சொல்ல வருகிறான். அதுதான் நம்பிக்கை. அதைத்தான் Hope திரைப்படத்தின் இயக்குனர் Joon-ik Lee சாதித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளெல்லாம் அவ்வளவு நுட்பமான தரவுகளோடு மிகத்தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதை அதே துறையில் பணி புரிவதால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ‌.நமது ஆட்கள் இன்னும் “விதிப் பட நீதிமன்றத்தையே” தாண்டவில்லை என்பது தான் இதில் வேதனையான ஒரு செய்தி.


ஏறக்குறைய பொன்மகள்வந்தாள் திரைப்படத்தையும், Hope திரைப்படத்தையும் ஒரே காலகட்டத்தில் பார்க்க நேர்ந்ததால் என்னவோ, நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையும், இன்னும் அசலான கலையம்ச  கதைகளோடு கோடம்பாக்கம் வீதிகளில் ஏன் மிகச் சிறந்த படைப்பாளிகள் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. நமக்கு நட்சத்திரப்பகட்டும் , அபத்தங்களும் நிறைந்த பொன்மகள்கள் வரத் தேவையில்லை. விலங்காம்ச மானுடத்தீமைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்க Hope போன்ற மின்னுகிற நம்பிக்கைகளே போதுமானது.

..

முடிவிலி அழைப்புகள்.

❤️

வெகு நாட்களுக்குப் பிறகு என் அலைபேசியில் நான் மறைத்து வைத்திருந்த ஒரு பெயரில் அவள் வந்தாள். ஒளிர்ந்துக் கொண்டே இருந்த அலைபேசியை, அதில் புலப்பட்ட அவள் பெயரை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வெறும் அழைப்பல்ல. அது ஒரு சுழல்.

அந்த சுழலில் மீண்டும் சிக்கி சிதைந்து விடக்கூடாது என சுதாரித்தேன். சிதைந்தழிந்து மீண்டும் மீண்டும் மீள் எழுவதென்பது‌ பழங்கால விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல முடிவிலி என அறிந்து இருக்கிறேன். சில நொடிகள் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த அலைபேசி திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அனிச்சை போல, என்னையும் மீறிய ஒரு நொடியில் நான் அந்த அழைப்பை எடுத்து விட்டேன்.

எடுத்த ஒரு நொடியில் சட்டென சுதாரித்து விட்டு ஏதோ ஒரு வேலையில் இருப்பது போன்று காட்ட வேண்டுமென என்னை நானே தயாரித்துக் கொண்டு… குரலில் வலிந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் அவசரக் குரலில் நான் வேலை ஒன்றில் இருப்பதாக சொன்னேன். அவளோ.. அதை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக.. “ஏன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டே இருக்கும் அலைபேசியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாய்..” என கேட்டாள்.

என்னைச் சுற்றி ஏதாவது கேமிரா இருக்கிறதா என நான் சுற்றிமுற்றிப் பார்த்தேன். அந்த மௌனத்தையும் அவளே உடைத்து..” உன்னை பின் தொடர எனக்கு எப்போதுமே நினைவுகள் போதும். கேமிரா தேவையில்லை..” என்றாள் அலட்சியமாக.நான் பதட்டமானேன்.அவளே மேலும்.. “உன்னை உன்னையும் விட நான் அறிந்திருப்பதை நீ தெரிந்திருப்பது தான் உன்னை பதட்டம் ஆக்கிக் கொண்டே இருக்கிறது..” என்றாள்.

உண்மைகளின் எடை அதிகரித்துக் கொண்டே போவதும், நான் சுற்றியிருந்த பொய்த் திரைகள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்துக் கொண்டே போவதுமான சூழலில்..கொஞ்சம் கெஞ்சலான குரலில்..”இப்போது உனக்கு என்னதான் வேண்டும்..?” எனக் கேட்டேன்.”என் மின்னஞ்சலின் கடவுச்சொல் எனக்கு மறந்துவிட்டது. என்னவென்று சொல்.” எனக் கேட்டாள். “அதெப்படி எனக்குத் தெரியும்..?” என கேட்டேன். “என்னையும் விட அதிக நேரம் என் மின்னஞ்சலை நோண்டிக் கொண்டு இருப்பது நீதானே..” என்றாள் சற்றே கிண்டலோடு.திடுக்கிட்டேன்.

என் விஷயத்தில் மட்டும் எப்படி இவ்வளவு சுதாரிப்பாக இருக்கிறாள் என வியந்துக் கொண்டே மெளனித்தேன்.”சொல்லு”.. என அதட்டினாள்.கொஞ்சம் தயக்கத்தோடு நான் உன்னை முதலில் பார்த்த தேதிதான் என்றேன்.அதுதான் எந்த தேதி..? எனக் கேட்ட அவளிடம்.அது அவளுக்கே மறந்துவிட்டது என்ற ஒரு நொடியில் எனக்கும் மறந்து விட்டது என அவளுக்கு உணர்த்த‌ சற்றே மூர்க்கமான குரலில் “தெரியவில்லை” என கோபத்தோடு சொல்லி அழைப்பினை துண்டித்தேன்.

சில நிமிடங்கள் எனக்கு நரகமாக நகர்ந்தன. மாறி மாறி சுழன்ற கால அலைவரிசையில் ஏதோ ஒரு சின்ன புள்ளி மட்டும் பொருந்தாமல் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.ஏதோ சிந்தித்தவாறே.. நான் அவசரம் அவசரமாக என் மடிக்கணினியை திறந்து அவளது மின்னஞ்சலை வழக்கமாக நான் பயன்படுத்தும் அவளை சந்தித்த அந்த நாளை கடவுச் சொல்லாக பதித்து திறக்க முயன்றேன்.ஏதோ தவறென கணினித் திரைகத்தியது.அந்த நொடியில் தான் அலைபேசியில் அவள் மீண்டும் ஒளிர்ந்தாள்.சின்ன சிரிப்போடு அவள் சொன்னாள்.”அந்த கடவுச்சொல்லை நான் மாற்றி விட்டேன்.”அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

❤️

பகலில் ஒரு இரவு.

❤️

முகத்தில் மெல்லிய வெப்பம் பரவ நான் கண் விழித்தேன். விடிந்திருந்தது. அருகில் நீ இல்லை.

எழுந்து பார்த்தபோது அறைக்கு வெளியே பால்கனியில் நின்று கொண்டு கையில் ஒரு தேனீர் குவளையோடு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாய்.

இமைக்காத விழிகளோடு உறைந்திருந்த உன் பார்வை ஏதோ ஒரு இசை குறிப்பை எனக்கு நினைவூட்டியது. பெரும்பாலும் நீ கவனிக்காத பொழுதெல்லாம் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான். சாப்பிடும்போதும், தூரத்தில் எங்கோ நின்று கொண்டு திரும்பிப் பார்க்கும் போதும், சில சமயங்களில் நள்ளிரவு விழிப்பின் போதும் நீ பார்த்த பார்வைகளை எல்லாம் நான் இசைக்குறிப்புகளாக மட்டுமே சேமித்து வைத்திருக்கிறேன். அவை பின்னிரவு கனவுகளில் என் காதோரங்களில் கேட்பதாக உணருகிறேன்.

❤️

இப்போதெல்லாம் என் சட்டையை என்னை விட நீதான் அதிகம் அணிந்து கொள்கிறாய். என் இளநீல சட்டையை அணிந்துகொண்டு நீ கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது உன்னை என்னவோ கடலின் ஒரு பிரதியாக எனக்கு உணர்த்தியது.”என்ன.. காலையின் விடியலை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா..” என்று கேட்ட என்னை பார்த்து “இது காதலின் விடியல்” என்றாய்.

உன்னை பின்புறமாக அணைத்து கழுத்தில் முகம் புதைத்து கண் மூடினேன். “அதற்குள் உனக்கு இரவு வந்து விட்டது..” என்று சொல்லி சிரித்தாய். “ஆமாம்.. நிலா நட்சத்திரங்கள் கூட எனக்குத் தெரிகின்றன..” என்றேன் நான்.”ஒரு காலைப்பொழுதில் இரவை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய்..” என்று சொல்லிக்கொண்டே என்னை விட்டு விலகி நின்றாய்.நீ கூடத்தான் நள்ளிரவில் கூட ஒரு விடியலை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய் என நான் சிரித்துக்கொண்டே சொன்னதற்கு செல்லமாய் என் முடி கலைத்தாய்.

“ஏன்.. நமக்குள் பிரச்சனை.. நம்மைப் பொறுத்தவரை இரவும் இல்லை.. பகலும் இல்லை.. அவற்றை நாம் தான் உண்டாக்கிக் கொள்கிறோம்.” என்று நீ சொன்ன போதுஅந்த காலைப்பொழுதில் நிலாவும் ஒரே ஒரு நட்சத்திரமும் இருந்தது தற்செயலானதல்ல.

❤️

மஞ்சள் நிற வாழ்வொன்றின் மர்மக்கதை.

❤️

அந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை.

ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு.

ஆனாலும்..அவ்வப்போது ஏதேனும் நினைவுகள், அல்லது சில பாடல்கள், சில காட்சிகள், நீண்ட தூர பயணங்கள் என வாழ்வின் ரசனைமிக்க மயிலிறகுகள் ஆன்மாவை வருடும் போதெல்லாம் அந்த மஞ்சள் நிற சுடிதார் உயிர் பெற்று விடுகிறது.

பண்டிகைக்கால துணிகள் எடுப்பதற்காக ஜவுளிக் கடைக்குப் போனபோது கலைத்துப்போட்ட பட்ட துணிகளில் ஒரு மஞ்சள் சுடிதாரை மட்டும் உறைந்த பார்வையால் நான் பார்த்துக்கொண்டிருந்தை பார்த்த கடைக்காரப் பெண் புரியாமல் விசித்திரமாக பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

யாருக்கு துணி எடுத்தாலும் நான் மஞ்சள் வண்ணத்தில் துணிகள் எடுப்பது குறித்து வீட்டில் இருப்போர் அனைவருக்கும் ஒரு சலிப்பு ஏற்படுவதுண்டு. “மஞ்சள் என்றால் உனக்கு அப்படி பிடிக்குமா அப்பா..? ” என புரியாமல் கேட்கும் என் மகனிடம் நான் எப்படி விளக்குவேன்…?

ஒரு மஞ்சள் நிற சுடிதாருக்கு பின்னால்..சில சூரிய சந்திரர்களும்,தாள கதியில் ஓடும் ஒரு நீரோடையும்,ஆர்ப்பரித்து கொட்டுகிற அருவியும்,நீலம் பாவித்து கிடக்கிற ஒரு கடலும்..பசுமை பூரித்து கிடக்கிற பச்சை வயலும்..பனி இரவுகளும்.. பவுர்ணமி பொழுதுகளும்..இதையெல்லாம் தாண்டி..இந்த வாழ்க்கை முழுக்க நான் நேசித்து பொத்தி வைத்திருக்கிற நினைவின் பசும் அடுக்குகளும் இருக்கின்றன..என்பதையும்,அதற்கான சாத்தியங்கள் என்னைப்போல பலருக்கும் இருக்கும் என்பதையும்..எப்படி விளக்குவேன்..?

இது.. ஒரு மஞ்சள் நிற சுடிதார்ஒரு புடவை ஆகி, சில காலங்கள் என் வாழ்வாகவும் ஆகி, என்னைக் கடந்து நடக்கின்ற ஒரு தென்றலாகவும் ஆகி,அப்படியே முழுமையாக ஆக்கிரமித்து,என்னை புரட்டி போட்டு விட்டு.. எவ்வித காரணமும் இன்றி ஒரு நிழலை போல கரைந்துப் போன கதை.

????

நினைவோ ஒரு பறவை..

நினைவோ ஒரு பறவை.

♥️

இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது.

களைத்த கண்களுடன் எடுத்துப் பார்க்கையில் அவள் எண்ணிலிருந்து வந்த எந்த எழுத்தும் இல்லாத ஒரு வெற்றுச் செய்தி. இந்த நள்ளிரவில், எதற்காக.. எவ்விதமான எழுத்துக்களோ, வார்த்தைகளோ இல்லாத வெற்றுச் செய்தி என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை தவறி வந்திருக்கலாமோ என யோசித்துப் பார்த்தேன். அது எப்படி திசைமாறி காற்றில் அலைகிற‌ பூ ஒன்று சரியாக என் மடியில் மட்டும் விழுகிறது..?

வேறு வகையில்தான் சிந்திக்க வேண்டும்.இன்னும் அலைபேசியில் என்னை அழிக்காமல் வைத்திருக்கிறானா என ஒரு வேளை.. நம்மை பரிசோதித்து பார்க்கிறாளோ, அல்லது இந்த நள்ளிரவில் உன் நினைவின் பாடலோடு உறங்காமல் விழித்துக் கிடக்கிறேன் என உணர்த்த எண்ணுகிறாளோ என்றெல்லாம் என் மனம் தனக்குத் தானே விசித்திர கோடுகளை வரைந்து பார்த்து வசீகர ஓவியங்களாய் மாற்றத் தொடங்க..ஒரு மாய விளையாட்டு அதுவாகவே நிகழத் தொடங்கியது.

அது வெறும் வெற்றுச் செய்தி. அந்த வெற்றுச் செய்தி‌ அலைபேசியின் ஒளியூட்டப்பட்ட வெண்திரையில் காணும்போது, ஒரு எழுதப்படாத தாளைப் போல இருந்தது. அது ஒருவகையில் வரையப்படாத ஓவியம். நீண்டநாள் விரல்கள் படாது, புழுதியேறி கிடக்கும் பழுப்பேறிய பியானோ ஒன்றின், கருப்பு- வெள்ளை கட்டைகளில் வாசிக்கப்படாமல் உறைந்து கிடக்கும் ஒரு இசைத்துளி.

அது வெறும் ஒரு வெற்றுச் செய்தி என ஏற்றுக் கொள்ளாதே என உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.அந்த நொடியில் தான்..நலம் விசாரித்தல்கள் ,அக்கறையும் அன்பும் நிறைந்து வழிகிற சொற்கள்… என கற்பனையில் என் மனம் அதன் போக்கில் எழுதி பார்த்து ஏகாந்தம் கொள்ள.. தொடங்கியது.ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம் போல..அது ஒரு எழுதப்படாத வசவுவாகக் கூட இருக்கலாம். இனி உன்னை சபிக்க சொற்களே இல்லை என்பதற்கான குறியீட்டு சாட்சியமாக கூட உணர்த்த விரும்பி இருக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வும் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அது ஒரு வெற்றுச் செய்தி.அதை எப்படி எடுத்துக் கொள்வது.. கால நதியின் கோர ஓட்டத்தில் மண்மூடி புதைந்துவிட்ட நினைவின் விதை ஒன்று வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டு இருக்கிற வெளிச்சத்துண்டால் உயிர்பெற்று துளிர்க்க முயல்கிறது என எடுத்துக் கொள்ளலாமா..அல்லது..உறுதியான முறிவொன்றினை வார்த்தைகளின்றி அறிவிக்க வருகிற மௌன மொழி பூசிய இறுதி அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாமா…என்றெல்லாம் யோசித்து குழம்பிய வாறே.. அடைத்துக் கிடந்த என் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான்.. “நினைவோ ஒரு பறவை” என ஒரு பாடல் தூரத்தில் எங்கோ கேட்டது.யாரோ வயதான தள்ளுவண்டிக்காரர் அவரது பண்பலை வானொலியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்தவாறே அமைதியாக ஆளற்ற சாலையில் நியான் விளக்கொளியில் நடந்து செல்ல, எங்கிருந்தோ கசிந்த அந்தப் பாடலின் மர்ம முடிச்சுகளில் இதயம் இடறத் தொடங்கியது.”அதற்காகத்தான் அலைபாய்கிறேன் வந்தேன் தர வந்தேன் நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை…”தள்ளுவண்டியோடு அந்தப் பாடலும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே சென்று காற்றில் கரைந்து மௌனமாக.. மீண்டும் தனிமையின் போர்வை போர்த்தி தன்னை முடக்கிக் கொண்டது அந்த சாலை.

நான் ஏதோ வெறுமையுடன் என் மேசையின் மீதிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அந்த வெற்றுச் செய்தியை எடுத்துப் பார்க்க தொடங்கினேன். அந்த ஒரு நொடியில் தான்..ஒரு நீல நிற சிறு பறவை ஒன்றுஅலைபேசி திரையில் இருந்து கிளம்பி, சிறகடித்தவாறே என் அறைக்குள் சில நொடிகள் சுற்றிசுற்றி பறந்து திறந்திருந்த என் ஜன்னலின் வழியே பறந்து போனது.அதன்பிறகு அலைபேசியை எடுத்துப் பார்க்க ஏனோ அச்சமாக இருந்தது.

♥️

Powered by WordPress & Theme by Anders Norén