சமீபகாலமாக பொது கருத்தாக்கத்தின் தாக்கம் அதிகமாகி வருவதை நாம் கவனிக்கிறோம். பொதுக்கருத்து என்பது யாதெனில் செல்வாக்குப் பெற்ற கருத்தாக்கம் என்பதே சரியானது. பலரும் பொது கருத்தாக்கத்தின் மீதான ஈர்ப்பினால் தங்கள் சுய கருத்துக்களை மறந்து விட்டு பொதுக் கருத்தாக்கத்தை வலுப்படுத்த வரிசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது. பொதுக்கருத்து என ஏற்படுத்தப்படும் அதிகாரத்தின் புனைவு நிகழ்த்தும் ஆகப் பெரும் வன்முறையாகவே கருத முடிகிறது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பில்  கூட “சமூக கூட்டு உணர்வின் மனசாட்சி” என்கின்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் இந்த சமயத்தில் நினைவு கூரலாம். அந்த சொல்லால் எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இச் சமயத்தில் சிந்திக்க வேண்டியச் செய்தி.


எனவே சமூகமாக சேர்ந்து இருப்பதன் பலன்களையும், ஏதோ ஒரு வடிவத்தில் வலுவாக ஒலிக்கிற ஒரு கருத்தினை  தானும் ஆதரிப்பதன் மூலம் வலிமையாக இருப்பது போன்ற தோற்ற உளவியலுக்காக நம்மில் பலர் பொது கருத்தாக்கத்தின் ஆதரவாளராக மாறி ஒலிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பொதுக் கருத்தாக்கம் என்பது சகல காலத்திற்கும் பொருந்தக்கூடிய மிகச்சரியாக முடிவுகள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாத தீர்மானங்களாக இருந்திருப்பதை வரலாற்றின் பக்கங்களில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

“நமது ஊரை அவமானப்படுத்தி பேசிவிட்டார்கள் , வாருங்கள் .. பக்கத்து ஊரை போய் அடிக்கலாம்” என்பது போன்ற அழைப்புகள் ‘பொது கருத்தாக்கத்தின் செல்வாக்கு’ தோற்றங்களுக்கு நல்ல உதாரணம். ஏன், எதற்கு என்ற கேள்வி பெரும்பாலும் எவருக்கும் எழாது. எல்லோரும் அடிக்கப் போகிறார்கள், நாமும் போவோம் என்பது போன்றதான பொதுக் கருத்து சமூகத்தில் வலிமையான கருத்தாக மாறி வருவது என்பது உண்மையில் அபாயகரமான ஒன்று.


மனித மனம் உணர்ச்சிகளின் பிடிகளில் கட்டுண்டது. தொலைக்காட்சி, இணையம் என்கின்ற பல்வேறு விதமான ஊடகங்கள் வலிமை பெற்று இருக்கின்ற காலத்தில் அந்தந்த நொடிகளில் உண்டாகும் செய்திகளில் மனித மனம் உணர்ச்சிவசப்பட தொடங்குகிறது. யாரோ ஒருவன் தவறு செய்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் அவனை எல்லோரும் சேர்ந்து அடிப்போம் என்பதுபோன்ற பொதுக் கருத்தியலின் அபத்தங்களை சமீப கால சமூகம் எதிர்கொண்டு வருகிறது.யாரோ கற்பழிக்கப்பட்டு விட்டார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்பதற்காக தவறாக அறியப்பட்டு சிக்கிக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்படுவதும் பொது கருத்தியல் இழைக்கும் வன்முறைதான்.
குறிப்பாக பொதுக் கருத்திற்கு சார்பாக பேசப்படும் அல்லது கதை அமைக்கப்படும் எல்லா திரைப்படங்களுமே நல்ல திரைப்படங்கள்தான் என ஒரு பொதுக் கருத்து திட்டமிட்டு உண்டாக்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஒரு திரைப்படம் என்பது வெறும் கருத்தியல் சார்ந்த கலை அல்ல. மனித உணர்வுகளை நுட்பமாக அவதானித்துஒளி, இசை, வசனம், காட்சி அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டு  கலையம்சம் மிகுந்த படைப்பாக ஒரு சிறந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்கிறார் புகழ்ப்பெற்ற இயக்குனர் இங்கர் பெர்க்மன்.
அதில் ஒரு புள்ளி பிசகினாலும் உண்மையான கலைஞன் மனம் பாதிக்கப்படுவதை நம்மால் அருகில் இருந்து கவனிக்க முடிகிறது. நான் உயிராக நேசிக்கின்ற ஒரு அண்ணன் திரைப்படத் துறையை சார்ந்தவர். நீண்டகாலமாக திரைப்படம் என்பதை ஒரு கலையாக உள்வாங்கி பல்வேறு உலகத் திரைப்படங்களை கண்டுணர்ந்து, பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இணை இயக்குனராக வசனகர்த்தாவாக பணிபுரிந்து தான் விரும்பிய கலையம்சம் கூடிய ஒரு படைப்பினை திரையில் மொழிய நீண்டகாலமாக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தன்னிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் குறித்தும், தன் கண்ணெதிரே தான் கொண்டிருக்கிற கலை உளவியல் சிறுக சிறுக கொலை செய்யப்பட்டது குறித்தும் முகநூலில் மிகக் காத்திரமாக ஒரு பதிவு எழுதி இருந்தார். அப்படித்தான் ஒரு அசலான கலைஞன் காத்திரமாக இருப்பான். அந்தக் கலைஞனின் கோபம் சத்திய ஆவேசமானது.
பலரிடம் ஒரு பொதுக்கருத்து இருப்பதை நானே கவனித்திருக்கிறேன். கதை எழுதுவது,கவிதை எழுதுவது, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது போன்ற பல படைப்பு பணிகள் உட்கார்ந்த இடத்திலேயே செய்யக்கூடியவை தானே .. அதை எல்லோரும் செய்யலாம் என்பது போன்ற ஒரு அலட்சிய மனப்பாங்கு ‌ உலகப் பொது விதியாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


அப்படியெல்லாம் எந்த வாசிப்பும், எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் எழுதுவதுஏறக்குறைய தற்கொலைதான். தனது படைப்பை அம்சத்தை மட்டுமல்ல பொதுவாக கலை என்கிற வடிவம் கொண்டிருக்கிற மேன்மையை கொலை செய்வது. ‌ உணர்வு பூர்வமான ஒரு படைப்பினை ஒரு கலைஞன் உருவாக்கும்போது அவன் எதிர்கொள்ளும் உளவியல், உடலியல் சிக்கல்கள் மிகக் கொடுமையானவை.


சமீபத்தில் Honey land (2019) என்கிற மிக முக்கிய ஒரு ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.  Tamara Kotevska , Ljubomir Stefanov என்ற இரு இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள்.ஏறக்குறைய திரைப்படம் போலவே தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த ஆவணப்படம் உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. சிரியா நாட்டின் எல்லையில் தேன் எடுக்கச் செல்லும் வயது முதிர்ந்த ஒரு எளிய பெண்ணின் கதை. அந்த சிறிய ஆவணப்படம் முன் மொழியாத அரசியல் எதுவும் இல்லை என்ற அளவிற்கு உலகமயம், இயற்கையை அழித்தல், மனிதர்களின் பேராசை, இயற்கை தன்னைத் தானே மறுசீரமைப்பு செய்து கொள்வது போன்ற முக்கிய அரசியல் கருத்துக்களை தீவிரமாக பேசக்கூடிய அந்த ஆவணப்படம் மிக எளிமையான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அந்த திரைப்படம் எடுப்பதற்கு 5 வருடங்களுக்கு மேலாக அந்தப் படக் குழுவினர் உழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.


உண்மையான கலை அம்சத்திற்கு உள்ள வலிமையே அதுதான். அதன் இயல்பின் மொழியிலேயே அரசியல் பேசும். சிறந்த கலைப்படைப்பு ஒன்றில் நாம் வலிந்து புகுத்த அரசியல் என்று ஏதும் இல்லை. இல்லையென்றால்அதை திணிக்கப்பட்ட ஒன்றாக, துருத்திக் கொண்டுதான் இருக்கும்.


சமீபகாலமாக Child Abuse  பற்றிய பரவலான விவாதங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அது குறித்தான ஒரு திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள்(2020). அந்தத் திரைப்படம் OTT என்கிற முறைமையில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் என்பதைத் தாண்டி அதில் கொண்டாட ஏதுமில்லை என்பதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டிய எவ்வித கலையம்ச புள்ளிகளும் அந்த திரைப்படத்தில் இல்லை என்பது உண்மையில் வருத்தத்துக்குரிய ஒன்று.பொதுக்கருத்து என்பதன் அடிப்படையில் எல்லோரும் ஆதரிக்கிறார்கள் நாமும் பாராட்டுவோம் என்பதான கருத்தினை எல்லாம் தாண்டி பொன்மகள் வந்தாள் ஒரு மகத்தான தோல்வி.


மிகவும் அலட்சியமாக தயாரிக்கப்பட்ட திரைக்கதையும், காட்சி வடிவங்களும்,உண்மையாக பேசப்பட வேண்டிய மிக முக்கிய செய்தியொன்றை வெவ்வேறு திசைகளில் திசைமாற்றி குழப்பின.
 Child Abuse போன்ற குற்ற வழக்குகள் முதலில் பெரும்பாலும் திறந்த வெளி நீதிமன்றங்களில் (not open court,  in-camera Proceedings) நடைபெறுவதில்லை என்பது கூட அந்த திரைப்பட இயக்குனருக்கு தெரியாதது, அல்லது அது குறித்த தரவுகள் சேகரிக்க தவறிய அந்த இயக்குனரின் அலட்சியம் என்பது ஜீரணிக்க முடியாதவை.

உண்மையில் ஒரு நீதி மன்றம் என்பது எப்படிப்பட்டது என்பது கூட அறிந்துகொள்ள அந்த இயக்குனர் விரும்பவில்லை என்பதுதான் வேதனைகரமானது. வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே கதாநாயகியின் தந்தையும் கதாநாயகியும் பேசிக் கொள்கின்ற காட்சி,வில்லனிடம் லஞ்சம் பெற்ற நீதிபதி (அந்தப் பணம் என்னானது..?) இறுதியில் நல்லவர் போல நீதி வழங்குவது, நீதிபதிகளை பகடி செய்வதற்காக உருவ கேலி காட்சிகளை அமைத்திருப்பது என நீதிமன்றத்திற்கு முன்பின் செல்லாதஒருவர் இயக்குனராகி இருப்பதன் விபத்து என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் குழந்தைகளின் ஆடையில் உதிரத்தை காட்டுவதும், குழந்தைகளுக்கு முன்னால் பேண்டின் பெல்டை கழட்டுவதும் போன்ற பொது மனிதனின் உளவியலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகளே போதுமென அந்த திரைப்படத்தின் இயக்குனர் நினைத்தது தான் படத்தின் ஆகப் பெரும் பலவீனம்.


இதுவரை பேசப்படாத ஒரு பொருளை பேசியதால் மட்டுமே மட்டமான கலையம்ச தன்மைகளோடு இருக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அற உணர்வுகள் உடைய எந்த எளிய கலைஞனுக்கும் அல்லது எழுத்தாளனுக்கும் தோன்றுகின்ற அடிப்படைக்கேள்வி.


Hope (2013) என்கின்ற ஒரு கொரியன் படம் இருக்கிறது. இணையத்திலும் காணமுடிகிறது. குழந்தைகள் மீது நடக்கிற பாலியல் அத்துமீறல் பற்றிய மிக முக்கியமான திரைப்படம். இயல்பான வாழ்வொன்றில் ஒரு மழைப்பொழுதின் போது பள்ளிக்கு செல்லும் சிறுமி தன் குடையில் இடம் கேட்கும் குடிபோதைக்காரன் ஒருவனை காண நேர்கிறாள்.அதிலிருந்து அந்த சிறுமியின் வாழ்க்கையே மாறிப் போகிறது. அந்த ஒற்றைச் சம்பவம் உளவியல் ரீதியாக உடல்ரீதியாக அந்த சிறுமியை நாசப்படுத்த, அதிலிருந்து அந்த சிறுமியின் தந்தை எப்படி தன் மகளை மீட்டார் என்பதுதான் அந்த திரைப்படம்.Ji-hye Kim எழுதிய கதையினை Joon-ik Lee இயக்கியிருக்கிறார். தென்கொரியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கொரியன் திரைப்பட வரிசையில் மிக முக்கியமான திரைப்படமாக திகழ்கிறது.


ஒரு நடு இரவில் பார்த்துவிட்டு விடிய விடிய கண்கலங்க விழகத்துக்கொண்டே கிடந்த அனுபவத்தை Hope தந்தது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் கை விரல்கள் உதிரத்தோடு தோன்றுகின்ற அந்த ஒரு காட்சியை தவிர வேறு எங்கும் ரத்த வாடை கிடையாது. மேலும் Child Abuse போன்ற சமூகத்தை அதிர்ச்சியூட்டும் கதைகளை கையாளும்போது எப்படி கையாள வேண்டும் என்பதற்கு Hope ஒரு மகத்தான பாடம்.


வெறும் Good touch- Bad touch சொல்லிக் கொடுத்தாலே அது சீர்திருத்தம் என நினைப்பவர்களுக்கு பொன்மகள் வந்தாள் ஒரு காவியம்தான். ஆனால் தன் மகளை ஒரு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு எதிராக சட்ட போராட்டங்களையும் செய்துகொண்டு, ஒரு மனித விலங்கினால் குதறப்பட்டிருக்கும் தன் மகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அந்தத் தந்தை செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் நம்பிக்கை மொழி பேசுகிற நெகிழ்ச்சி உணர்வின் அடிப்படையிலானவை.
குறிப்பாக அந்த சிறுமியின் கேள்வி “மழையில் நனையும் ஒருவருக்கு நான் இடம் கொடுத்தது தவறா..” என்கின்ற ஒரு சிறு குழந்தையின் அந்த அறம் சார்ந்த கேள்விக்கு முன்னால் மனிதனின் மனசாட்சி தலைகுனிந்து நிற்கிறது.


குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் அத்துமீறலுக்கு சட்டம் அடங்கிய தண்டனையோடு ஒரு பொது மனம் அமைதி கொள்கிறது. ஆனால் கலையம்ச விழிப்புணர்வு கொண்ட ஒரு அசல் கலைஞன் அதற்குப் பிறகுதான் சமூகத்திற்கான செய்தியைச் சொல்ல வருகிறான். அதுதான் நம்பிக்கை. அதைத்தான் Hope திரைப்படத்தின் இயக்குனர் Joon-ik Lee சாதித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளெல்லாம் அவ்வளவு நுட்பமான தரவுகளோடு மிகத்தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதை அதே துறையில் பணி புரிவதால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ‌.நமது ஆட்கள் இன்னும் “விதிப் பட நீதிமன்றத்தையே” தாண்டவில்லை என்பது தான் இதில் வேதனையான ஒரு செய்தி.


ஏறக்குறைய பொன்மகள்வந்தாள் திரைப்படத்தையும், Hope திரைப்படத்தையும் ஒரே காலகட்டத்தில் பார்க்க நேர்ந்ததால் என்னவோ, நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையும், இன்னும் அசலான கலையம்ச  கதைகளோடு கோடம்பாக்கம் வீதிகளில் ஏன் மிகச் சிறந்த படைப்பாளிகள் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. நமக்கு நட்சத்திரப்பகட்டும் , அபத்தங்களும் நிறைந்த பொன்மகள்கள் வரத் தேவையில்லை. விலங்காம்ச மானுடத்தீமைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்க Hope போன்ற மின்னுகிற நம்பிக்கைகளே போதுமானது.

..