❤️

காதல் என்றால் என்ன..?இளமைத் தீ பற்ற வைத்த நெருப்பா, உணர்ச்சிகளின் விளையாட்டா, ஹார்மோன்களின் சதியா, வாழ்க்கை விதித்த தவிர்க்க முடியா விதியா‌.. என்றெல்லாம் யோசித்தால் குழம்பி விடுகிறோம்.”செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” என்கிறது குறுந்தொகை.”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.”காதல் கூட கடவுள் மாதிரி தான். காதல் என்னும் ஈர அலைகள் அடித்துக் கொண்டிருப்பதால் தான் இன்னும் இந்த பிரபஞ்சம் ஈரமாகவே இருக்கிறது” என்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

சிறைச்சாலை திரைப்படத்தில் என்றோ சிறையிலேயே மரணித்துப் போன தன் கணவனுக்காக தொடர்வண்டி நிலையத்தில் காத்து நிற்கின்ற தபுவின் கதாபாத்திரம் , கபாலி திரைப்படத்தின் தன் கணவனுக்காக காத்திருக்கும் ராதிகா ஆப்தே கதாபாத்திரம் போன்றவை சுட்டுவது போல காதல் என்பது தீவிரமான காத்திருத்தலா என்றெல்லாம் வினாக்கள் நம் நெஞ்சாழத்தில் சிறகு விரிக்கின்றன.ரஷ்யப் புரட்சியாளர் லெனின் வாழ்க்கையில் நதேழ்தா குரூப்கயாவின் பங்கு பற்றி லெனின் விவரிக்கும் போது “அவர் என் ஈடு இணையற்ற தோழர்” என்கிறார்.சகல காலத்திலும் புரட்சியின் குறியீடாக மாறி இருக்கும் சேகுவேராவை பற்றி அவரது காதலி அலெய்டா குறிப்பிடும்போது .. “சே வின் மினுக்கும் கண்களில் தான் தான் வாழ்வதற்கான நம்பிக்கையை” பெற்றதாக சொல்கிறார்.

என்றோ ஊரை விட்டு ஓடிப்போன என் நண்பனின் சித்தப்பா ஒரு மன நோயாளியாக மும்பை தாண்டி புனே அருகில் கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் சேர்த்து வைத்திருந்த பெரும் குப்பைகளில் பள்ளியில் அவர் படித்த போது உடன் படித்த மாணவியின் புகைப்படம் ஒன்றை வைத்திருந்ததாக ஆச்சரியமாக சொன்ன செய்தி இன்னும் என் நினைவில் இருக்கிறது.மனப் பிறழ்வின் போது கூட மறக்காத நினைவுகள் காதல் என்ற தீவிரத்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.என்னோடு சட்டக் கல்லூரியில் உடன் படித்த வகுப்புத் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது எப்போதும் அவளோடு திரிந்து அவள் அவனைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த அவளது மாமன் மகன் அங்கே இல்லாததை பார்த்த போது எங்களுக்கு மனம் என்னவோ போலிருந்தது.

சில காலத்திற்குப் பிறகு எங்கள் ஊருக்கு அருகே ஒரு கோவிலில் அவனை சந்தித்தபோது என்னை பார்த்தவுடன் தவிர்த்து விட்டு ஓடிய அவனை தடுத்து நிறுத்தி ஏன் என்னவாயிற்று எனக் கேட்டேன்.”அவள் நன்றாக இருக்கிறாள் சார் ..” என சொல்லிவிட்டு வேக வேகமாக போய்விட்டான்.அவனைப் பொறுத்த வரையில் அவன் காதல் என்பது .. “அவனது காதலி, இன்று இன்னொருவனின் மனைவியாக நன்றாக வாழ்கிறாள்..” என்பதுதான்.

❤️

என்னை மகனாகப் பெற்றெடுத்த போது என் அம்மாவிற்கு பதினேழு வயது.‌ பிறந்த பத்தாவது மாதத்திலேயே போலியோ வினால் நான் பாதிக்கப்பட்டபோது தன்னுடைய 18வது வயதில் இருந்து மருத்துவமனை மருத்துவமனையாக தன் நோயுற்ற மகனை தூக்கிக்கொண்டு அலைவது தான் என் தாய்- தந்தைக்கு வாழ்வாக மாறிப் போனது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான தீபாவளி -பொங்கல் பண்டிகைகள் கூட எங்கள் மூவருக்கும் மருத்துவமனையில்தான். ஒரு கிராமத்தில் எந்த அறிமுகமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த ஏறக்குறைய வளர்ந்த சிறுமி போல இருந்த என் அம்மாவை, என்னோடு மருத்துவமனையில் தனியே விட்டுச் செல்லும் போது தனது கலங்கும் கண்களை காட்டாமல் வேறெங்கோ பார்ப்பது போல துடைத்துக்கொண்டே தளர்வாக ஜோல்னாப் பையோடு நடந்து சென்ற என் தந்தையை கண்டபோது இதுவும் காதல் தான் என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அம்மாவின் உடல் நலம் ஒரு முறை கடினமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்பட்ட தருணம் ஒன்றில் .. “அவள் என்னை விட்டு போய் விட மாட்டாள். அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.” என கனிந்த விழிகளோடு சொன்ன அப்பாவின் நம்பிக்கைதான் காதல் என்று அப்போது என்னால் வகைமைப் படுத்த முடியவில்லை.

சமீபத்தில் தீவிர கொரனா நோயால் என் தந்தை பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். ஏறக்குறைய நினைவில்லை. அம்மா நானும் உடன் போகிறேன் என்று சொன்னபோது.. “எந்த மருத்துவமனையும் அனுமதிக்க மாட்டார்கள் அம்மா..” என்று நான் சொன்னதை அவர்கள் ஏற்கவே இல்லை.”இது உயிர் கொல்லும் நோய். கூட இருப்பவர்களுக்கும் பரவும் மிகு அபாயம் கொண்ட தொற்று ..” என்றெல்லாம் என் அம்மாவுக்கு எவ்வளவோ எடுத்து சொன்னபோதும் கூட, அம்மா பிடிவாதத்தை தளர்த்தவில்லை.பிறகு என் நண்பர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனையில் தனி அறையில் அம்மாவுக்கு உரிய பாதுகாப்போடு தங்க வைக்க முயன்ற மறுநாள் அம்மாவுக்கும் நோய் பரவியிருந்தது.

நான் மனம் வெறுத்துப் போனேன்.அம்மா புன்னகையோடு அப்பாவுடன் இணைந்து தங்கிக் கொண்டார்.அவரை கவனித்துக் கொள்வது, எங்களுகெல்லாம் வீடியோகால் மூலம் தகவல் சொல்வது போன்றவற்றை மகிழ்வாக செய்து வந்தார்.நம்பிக்கை சொற்கள் மூலம் என் அப்பாவை உயிர்ப்பித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்து இன்றளவும் ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கொள்ளும் அவருடைய அசராத தீவிரம் உண்மையிலேயே எனக்கு அச்சம் அளித்தது.

உயிர் கொல்லும் தொற்று நோயால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற போதும் கூட சாகத்தூணியும் அந்த பேதமை கூட காதல் தான் என உணரும் பக்குவம் இந்த வயதில் தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

❤️

இப்போதும் அவர்கள் ஏதோ மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மெல்லிய புன்னகையோடு கசியும் கண்களோடு அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.இந்த முடிவற்ற உரையாடல் வாழ்வு முழுக்க ஒரு இசை போல இசைந்து கொண்டே இருக்கிறது.ஒருவருக்கொருவர் அதைக் காதல் என்றெல்லாம் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.அவர்களைப் பொறுத்தவரையில்இந்த வாழ்தல் என்பதே காதல் தான்.

❤️

காலமெல்லாம் காதல் வாழ்க.

❤️

அப்பா-அம்மாவிற்கு 47 ஆவது மணநாள் வாழ்த்துகள்