பேரன்பு கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கொஞ்சம் நீளமான கட்டுரை தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி படியுங்கள். முழுமையாகப் படியுங்கள். பலருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். பரப்புங்கள்.ஏனெனில் செய்தி முக்கியமானது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் தமிழக வரலாற்றில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒரு இன அழிவின் போது எதுவும் செய்ய முடியாத மன வலியில், எதற்காக தாய் மண்ணை, உறவுகளை இழந்தோம் என்ற சிந்தனையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.அதுவரை இருந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் சிறு சிறு குழுக்களாக இருந்து அரங்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் அதே கூட்டம். அதே நபர்கள். “இவ்வளவுதானா தமிழ்த் தேசியம்..” என சிந்திப்பது போல ஒரு சிலரது ஜோல்னாப் பைக்குள் சிக்கிக்கொண்ட புத்தகங்களாய் தமிழ்த் தேசியம் என்கின்ற கருத்தாக்கம் இருந்தது.நம் கண் முன்னால் நிகழ்ந்த சொந்த இனத்தின் அழிவு இந்த சிறு சிறு குழுக்களின் போதாமையை நமக்கு எடுத்துக் காட்டின. தமிழர் என்கின்ற தேசிய‌ இனத்திற்கு ஒரு அரசியல் வலிமை தேவைப்பட்டது.

இந்திய தேசியம்/ மதவாதம்/ இடதுசாரியம்/ போன்ற வெகுஜன அரசியல் கருத்தாக்கமாய் தமிழ்த்தேசியமும் மாற வேண்டும் என்கின்ற புரிதலை ஈழ அழிவுதான் நமக்குள் ஏற்படுத்தியது.நம் இனப்பிணங்களில் இருந்து பிரசவித்த புரிதல் அரசியலாய் மாறத் தொடங்கிய போது, நாம் தமிழர் பிறந்தது.ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தரக்கூடிய ஒரு பெரும் திரள் வலிமைமிக்க மகத்தான அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி உருவானது.

ஈழத் தாயகத்தின் விடுதலை மட்டுமின்றி, தாயகத் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிற திராவிடக் கட்சிகளின் ஊழல் மிக்க, சுயநல ஆட்சிகளால் நிகழ்ந்துவிட்ட அனைத்துக் கேடுகளில் இருந்து விடுதலைப் பெற உலகம் முழுதும் பரந்து வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் உரிமைக் குரலாய் ஒரு அமைப்பு வேண்டும் என்கின்ற புரிதலில் நாம் தமிழர் உருவாகி வளர்ந்தது.எத்தனையோ அடக்குமுறைகளுக்கும், ஊடகப் புறக்கணிப்புகளுக்கும், பொருளாதார சங்கடங்களுக்கும் மத்தியில், பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பை நாம் உயிரெனப் பாதுகாத்து வருகிறோம்.எத்தனையோ துரோகங்களை பார்த்துவிட்டோம். துரோகங்கள் செய்வதற்கு காரணங்கள் தயாரிக்கப்பட்டன. காரணங்களுக்காக துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாம் உயிரென நேசித்து போற்றி வளர்த்த அமைப்பினை உடைக்க ஒரு பெரும் கூட்டமே இறங்கி வேலை செய்கிறது.ஆனாலும் அதையும் மீறி தான் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு புலிக் கொடியோடு முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கருஞ் சட்டை அணிந்த இளைஞன் புலிக்கொடி தூக்கிக்கொண்டு திரியத் தொடங்கி விட்டான். பள்ளிவாசலில் ஓட்டு கேட்கும்போதுதொழுதுவிட்டு திரும்பிய யாரோ ஒரு இளைஞன் எங்களோடு சேர்ந்து துண்டறிக்கை கொடுத்து ஓட்டு கேட்கின்றான். வீதியில் பேசிக் கொண்டிருக்கிற எங்களைப் பார்த்து மனம் கேட்காமல் ஒரு 51 ரூபாய் திருவாளர் பொது ஜனம் என்ற பெயரில் வழங்கி விட்டு கண் கலங்கிய கண்களோடு ஒரு எளியவர் நடக்கிறார்.

அண்ணன் சீமானின் அனல் மிக்க தமிழுக்கு பிறகு திமுக காரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கருணாநிதி என்ற பெயர் வைப்பதில்லை. ஆனால் வீட்டுக்கு வீடு பிரபாகரன்கள் பிறக்கிறார்கள். பிரபாகரன் என்று சொன்னால் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட மண்ணில் இன்று அவரை தேசியத் தலைவராக கொண்டாடுகிற ஒரு கூட்டம் உருவாகி விட்டது. தூய தமிழில் பலரும் உரையாடுகிறார்கள்.எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அரசியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மாறி இருக்கிறார்கள். பொதுத் தொகுதியில் ஆதித்தமிழர் நாம் தமிழர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு நாம் தமிழர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.வீதிக்கு வீதி இளைஞர்கள் முழக்கம் இடுகிறார்கள். நாம் தமிழர் என்பது வெறும் கட்சியின் பெயர் அல்ல. அது ஒரு உணர்வு. உறவுகளை ஏற்படுத்தும் பெருங்குடும்பம். சொல்லப்போனால் நாம் தமிழர் என்பது ஒரு வாழ்வியல் என பலரும் புரிந்து கொண்டு விட்டார்கள்.அண்ணன் சீமான் போல பல 100 இளைஞர்கள் ஊருக்கு ஊர் உருவாகிவிட்டார்கள். அனல் பறக்கும் அவர்களது பேச்சில் சத்தியம் தெறிக்கிறது. அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் கேள்விகளை தாங்கமுடியாமல் திமுக காரர்களும், அண்ணா திமுக காரர்களும், பாஜக- காங்கிரஸ் காரர்களும் தலை குனிந்தவாறு அமைதியாக கடக்கிறார்கள்.இது தமிழ்த் தேசியத்தின் பொற்காலம்.

இன உணர்ச்சி கொண்ட தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில்தான் வருகிறது மார்ச் 7ஆம் தேதி.

தேர்தல் என்ற யுத்தத்திற்கு அண்ணன் சீமானின் சொற்கள் மூலம் நாம் ஆயுதங்கள் தயாரிக்கிற நாள். போருக்குத் தயாராகும் நாள்.நாம் தமிழர் உறவுகளே.. பயணத்திற்குத் தயாராகுங்கள். உடனடியாக பேருந்து வாகனங்களை முன்பதிவு செய்யுங்கள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள். யாரையும் விட்டு விடாதீர்கள். குடும்பம் குடும்பமாக சென்னையில் கூடுவோம்.சென்னை குலுங்க வேண்டும். நமது உயரும் கரங்களில் அந்த வானையே முத்தமிடுகிற நமது புலிக்கொடி காற்றை உரசி பறக்க வேண்டும். “எழுந்தது பார் ஒரு புதிய தலைமுறை.. தாய் மண்ணை காக்க ..” என எதிரிகளும், துரோகிகளும் ஒரே நேரத்தில் அச்சப்படும் அளவிற்கு. நாம் சென்னையில் திரள வேண்டும்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சீமான் என்ற தனிமனிதன் சிந்திய வியர்வை, அவனது தம்பிகள் உழைத்த பெரும் உழைப்பு போன்றவைகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க சென்னையில் நாம் நிகழ்த்த இருக்கும் மகத்தான எழுச்சி மூலம்தான் கிடைக்கும் என்பதை நாம் உணர்வோம்.

234 வேட்பாளர்கள்.117 ஆண்கள்/ 117 பெண்கள்.ஒரே மேடையில்.இதற்கெல்லாம் மேல் நம் அணுவெல்லாம் ஊடுருவி நம்மைபுலிகளாக மாற்றும் அண்ணன் சீமானின் அனல் உரை.மார்ச்சு 7 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக நான்கு மணி. சென்னை ராயப்பேட்டை ,ஒய்எம்சிஏ மைதானம்.திரள்வோம்.. திரள்வோம்.பகை மிரளத் திரள்வோம்.பைந்தமிழ் இனத்தீரே..சென்னையில் சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி.

334தமிழ வேள், Lingadurai K and 332 others15 comments131 sharesLikeCommentShare

15