மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பாவம் அவர்கள்..

அரசியல்

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல,
90 சதவீதம் இந்துக்கள் தான் எங்கள் கட்சியில் உள்ளார்கள் என பகிரங்கமாக சொல்கிற திமுக வை நம்புகிறவர்கள்.

இது ஆர்எஸ்எஸின் திட்டம், நவீன குலக்கல்வித் திட்டம் என திக தலைவர் வீரமணியால் , கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன் போன்றவர்களால் கூட சுட்டிக் காட்டப்படும் “இல்லம் தோறும் கல்வித் திட்டம்” தான் திராவிடத்தின் அடையாளம் என பேசுகிற திமுகவை நம்புகிறவர்கள்.

ஆர்எஸ்எஸ் சமூக இயக்கம் எனச் சான்றிதழ் கொடுத்து சங்பரிவார் கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதமாதா சிலையை அமைச்சரை வைத்து திறந்து வைக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடியை ஆதரித்த திமுகவை நம்புகிறவர்கள்.

A Right Man in Wrong Party என வாஜ்பாய்க்கு சான்றிதழ் கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவை நம்புகிறவர்கள்.

முதன்முதலாக பிள்ளையார் ஊர்வலத்திற்கு இந்த மண்ணில் அனுமதி கொடுத்து, இந்த நொடி வரை பிள்ளையார் சதுர்த்தி அன்று பள்ளிவாசல் நுழைவாயில்களை பதட்டம் கொள்ள வைக்கிற ஆபத்தினை அன்றே அனுமதித்த திமுகவை நம்புகிறவர்கள்.

காலையில் தினமலர் விழாவில் கலந்துகொண்டு, தினமலருக்கும் கழகத்திற்கும் உள்ள உறவை கவிதையாக பேசிவிட்டு, மாலை நோன்புக் கஞ்சி குடித்து, குல்லா போட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, இரவு துக்ளக் விழாவில் சோ எனது நண்பர் என பேசிய கருணாநிதி தலைமையிலான திமுக வை நம்புகிறவர்கள்.

நீதிமன்றமே பிடிவாரண்ட் கொடுத்த போதும் கூட எச் ராஜாவை கைது செய்யாது வேடிக்கை பார்த்து பாஜகவோடு அனுசரணையாக நடந்து கொள்ளும் திமுகவை நம்புகிறவர்கள்.

பத்மா சேஷாத்திரி பள்ளி மீது கைவைத்தால் உன் ஆட்சியைக் கலைப்பேன் என பகிரங்கமாக முகத்தில் காரி உமிழும் சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு சொல்கூட பேசாமல் அமைதியாக அடக்கமாக நடந்து கொள்ளும் திமுகவை நம்புகிறவர்கள்.

இஸ்லாமிய மக்களை பாதிக்கக்கூடிய குடியுரிமை சட்டங்கள், வேளாண் சட்டமசோதா போன்றவற்றை தந்திரமாக பாராளுமன்றத்தில் ஆதரித்து வந்துவிட்டு , இங்கே எதிர்ப்பது போல நடித்து ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வழக்கும் வாங்காமல் தப்பித்து போன திமுகவை நம்புகிறவர்கள்.

பாஜகவின் அதிகார பீடமாய் வந்து அமர்ந்து இருக்கும் ஆளுநர் மேசைக்கு அனைத்து கோப்புகளையும் அனுப்ப வேண்டும் என அடிமை சாசன உத்தரவை பிறப்பிக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

தேர்தல் காலத்தில் வாக்களித்த நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை எதையுமே செய்யாமல் மத்திய அரசை பகைத்துக் கொள்ளாமல் நட்பு பாராட்டும் திமுகவை நம்புகிறவர்கள்.

கோவை குண்டுவெடிப்பு கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களை இதுவரை விடுதலை செய்யாமல், இதற்கு முன்னாலும் விடுதலை செய்யாமல் ஓட்டுக்கு மட்டும் முஸ்லிம்களை பயன்படுத்தும் திமுகவை நம்புகிறவர்கள்.

எப்போதும் தேர்தல் அரசியலில் இரண்டு சீட்டு மூன்று சீட்டுக்கு மேல் இஸ்லாமியர்களுக்கு தராமல் அவர்களது ஓட்டை மட்டும் கணக்கு செய்து சரியாக கறக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பு மட்டுமே, நீதி அல்ல, இது எங்கள் மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதி, என முழங்கிய அண்ணன் சீமானை நம்பாது நீதிமன்றத் தீர்ப்பு அப்படியே கடைபிடியுங்கள் என சொன்ன திமுகவை நம்புகிறவர்கள்.

இந்து முன்னணிக்கு எதிராக வீரத்தமிழர் முன்னணி தொடங்கி சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழ்,ராமனுக்கு எதிராக ராவணன், பிள்ளையாருக்கு எதிராக முருகன்,விவேகானந்தருக்கு எதிராக வள்ளலார், காவிக்கு எதிராகப் பச்சை , சூலாயுதத்திற்கு எதிராக வீரவேல், ராகவேந்திரருக்கு எதிராக வைகுந்தர்,சாய்பாபாவிற்கு எதிராக புரட்சியாளர் பழனி பாபா என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இஸ்லாமியர்களை தமிழர் மெய்யியல் காக்கும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களாக அறிவித்து எப்போதும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்கின்ற அண்ணன் சீமானை 1008 கேள்விகள் கேட்டு விட்டு திமுகவினை ஒரு சொல் கூட கேட்காமல் அப்படியே நம்புகிறவர்கள்..,

நாங்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தி , ஒவ்வொரு தேர்தலிலும் இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் வழங்காத அப்பெரும் இடங்களை இஸ்லாமியர்களுக்கு வழங்கி, குறிப்பாக 13 இடங்களில் எட்டு இடங்களில் இஸ்லாமியப் பெண்களுக்கு வழங்கி, இஸ்லாமிய மக்கள் இந்த மண்ணின் சிறுபான்மை அல்ல, அவர்கள் பெரும்பான்மை தமிழ் தேசிய இனத்தின் பெருமை மிக்க மக்கள் என முழங்கிடும் நாம் தமிழர் கட்சியை..

நம்பாமல் போவது இயற்கைதான்.

இன்னும் நாளை பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்தாலும் அதையும் இவர்கள் நியாயப்படுத்தி தான் பேசுவார்கள். ஏற்கனவே பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்தபோது குறைந்த பட்ச செயல் திட்டம் இருக்கிறது என்றெல்லாம் நியாயப் படுத்தி தான் பேசினார்கள்.

பாவம் அவர்கள்.
அவர்களோடு விவாதிக்காதீர்கள்.

யார் எதிரி, யார் நண்பன் என தெரியாத பாவம் அவர்கள்.

இங்கே இந்துத்துவா தான் திராவிடம் வழியாக வருகிறது என உண்மை அறியாத பாவம் அவர்கள்.

அவர் வந்து விடுவார், இவர் வந்துவிடுவார் என அச்சுறுத்தி ஓட்டை பறிக்கும் திருடர்களை நம்பி வழிதவறி நிற்கிற கூட்டம் அவர்கள்.

அநீதிக்கு துணை போவதும், நேர்வழி நிற்பவர்களை இழிவு படுத்துவதும் சரியானவையா என மறுமையில் ஏக இறைவன் முன்னால் அவர்கள் பதில் அளிக்கட்டும்.

இதைச் சரியாக உணர்ந்து
தேவையற்ற விவாதங்களை நம் உறவுகள் தவிருங்கள். புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். அன்று அவர்கள் வரட்டும்.

நம் தலைவர் நமக்கு கற்பித்தது போல நாம் அவர்களுக்காகவும் தான் களத்தில் நிற்கிறோம். பல சமயங்களில் அவர்களுக்காக நாம் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.

அண்ணன் சீமான் சொல்வது போல..

இந்தத் தேர்தல் களத்திற்கு அப்பாலும் நமக்கென ஒரு லட்சியம் இருக்கிறது. நாம் வெல்கிறோமோ, தோற்கிறோமோ, போராடுவோம்.

ஏனெனில் நாம் போராடப் பிறந்தவர்கள். நம்மை விமர்சிப்பவர்களுக்காகவும் நாம் போராடுவோம்.

நாம் தமிழர்.

மணி செந்தில் ‌.

 36 total views,  1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது