❤️

நாங்கள் மூணாறு சென்று சேர்ந்தபோது நடுநிசி ஆகிவிட்டது. இரவு உணவிற்கு முன் விடுதிக்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று நாங்கள் போட்டிருந்த திட்டம் கடுமையான மழைப் பொழிவினால் தாமதமாகிவிட்டது.அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வருபவர் பெரும் ரசனைக்காரர். பயணம் தொடங்கியதிலிருந்தே அருண்மொழியின் புல்லாங்குழல் களும், அலையலையாய் எழுந்த வயலின்களின் கூட்டு இசையும், பெண்களும் ஆண்களுமாய் கோரஸ் பாடிய சேர்ந்திசை பாடல்களும் , இளையராஜா என்கின்ற மாந்திரீகனால் எங்களுக்காக உருவாக்கப்பட்டதோ என சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு ஊடுருவிக் கொண்டிருந்த பாடல்கள் சதா அந்த காருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அடிக்கடி அவர் “இந்த வரிகளை கேளுங்கள், இந்த வயலின் பிட்டை கேளுங்கள்” என சொல்லிக்கொண்டே காரை ஓட்டி வந்தார்.

ஆங்காங்கே மலைச்சரிவுகளில் காரை நிறுத்திவிட்டு அமைதியாக மழை பொழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டே நின்றோம்.”மழையும், இளையராஜாவும் ஒன்று தானே..” என்றார். இரண்டுமே அலுப்பதே இல்லை என்று அவரே மெல்லியக் குரலில் சொல்லிக் கொண்டார். இப்படிப்பட்ட ரசிக மனப்பான்மை கொண்ட ஒருவர் வழித்துணையாக கிடைக்கும் அந்தப் பயணம்தான் எப்படி கவித்துவமானது..??…..அந்தக் கவித்துவ பயணத்திற்கு முன்னாலிருந்த பல நாட்கள் மிகப் பொல்லாதவை.

ஏறக்குறைய ஒரு சரிவில் நானே உருண்டு கொண்டிருந்தேன். பற்றி ஏற எதுவும் இல்லை என்ற நிலையில், ஒரு அதல பாதாளத்திற்குள் நான் விழுந்து கொண்டிருந்தேன். என்னை சேர்ந்தவர்கள் தவித்துப் போனார்கள். எப்படியாவது மீண்டும் எழுப்பி முன் நிறுத்தி விட வேண்டும் என என்னை விரும்புபவர்கள் அனைவரும் துடித்துக் கொண்டிருந்தார்கள். எவருடைய சொற்களும் என் காதில் ஏறவில்லை. அப்போதுதான் அண்ணன் சித்தார்த்தன் வீட்டுக்குள் கசங்கிப்போன துணி போல, மூலையில் சுருண்டு கிடந்த என்னை சலவை செய்ய ஒரு மலை பயணத்திற்கு அழைத்துப்போனார்…..திடீரென வீட்டிற்கு முன் ஒரு நாள் காரில் வந்து இறங்கினார். “வாருங்கள்.. போவோம்” என்றார். எங்கே என்று நான் கேட்கவுமில்லை. அவரும் திருச்சி தாண்டும் வரை சொல்லவும் இல்லை.

வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என வீட்டில் சொல்லிவிட்டு என்னை அழைத்து வந்தார். ஏற்கனவே பயந்திருந்த எனது வீடு அவர் அழைக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே அனுப்பி வைத்தது……திண்டுக்கல்லை தாண்டியவுடன் மழைப்பொழிவு தொடங்கியது. நாங்கள் தேனி வழியாக மூணாறு செல்ல திட்டமிட்டிருந்தோம். வழியெல்லாம் மழை. ஆனால் அவரோ காருக்குள் பாடிக்கொண்டு இருந்த பாடல்களின் சேர்ந்திசையாக மழையையும் மாற்றிவிட்டார். அவர் ஒரு அற்புதமான ஓட்டுனர். எந்தச் சரிவிலும், எந்த திருப்பதிலும் வண்டியை லாவகமாக திருப்ப கவிதை குறிப்புகள் போல அவரிடம் சில பிரத்தியோக நெகிழ்வுகள் இருந்தன…..”அலைபேசியை அணைத்து போடுங்கள்” என்றார்.

“கடந்த காலத்தைப் பற்றி எதையும் யோசிக்காதீர்கள்,எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்,நிகழ்காலத்தில் இருப்பது ஒன்றே நிஜம் என்று நம்புங்கள்”.. எனச் சொன்னார். கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில் நிகழ்காலத்தை கவனிக்கத் தவறுகிற என் கண்களை அவர்தான் அந்த மழைப் பயணத்தில் திறந்துவைத்தார்…..சாதாரண நிலப்பரப்பில் பெய்யும் மழையை விட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை சற்றே உக்கிரமானது. இரு பக்கமும் தலைவிரித்து ஆடும் மரங்கள் மனதை ஏதோ செய்தன. ஆனாலும் இவர் ரசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு மூணாறு நகரத்தைத் தாண்டி ஒரு காட்டுக்குள் இருந்த “Rain Forest” என்ற பகுதியிலிருந்த ஒரு விடுதிக்கு என்னை அழைத்துப் போனார். அந்த விடுதியின் பெயரும் “Rain Forest” தான்……நான் கொஞ்சம் இலகுவாகி இருந்தேன்.

மழையும், இயற்கையும் ஒருங்கிணைந்து என் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் அவிழ்த்துக் கொண்டே இருந்ததை நானே உணர்ந்து கொண்டே இருந்தேன். அது அவருக்கும் புரிந்திருக்கும் போல.. “Better ஆ feel.. பண்றீங்க போல” ..என கேட்டு விட்டு புன்னகைத்தார்….இரவு முழுக்க பேசிக்கொண்டே இருந்தார். கனவுகள் நிறைய சுமக்கும் ஆன்மா அவருடையது. அவரது ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் என ஒவ்வொன்றையும் என்னிடம் ஆழமாக விவரித்துக் கொண்டே சென்றார்.

நான் ஏதோ கொட்ட முயன்ற போதெல்லாம் அதை அலட்சியப்படுத்தி விட்டு நான் எழுதிய சில கவிதைகளை அவர் படித்துக் கொண்டிருந்தார்….மழை இரவு. குளிர் பொழுது. பயணக் களைப்பு. அப்படியே தூங்கி விட்டேன். காலையில் விழித்து பார்க்கும் போது என் மீது கனமான போர்வை ஒன்று போர்த்தப்பட்டு இருந்தது. அவர் வெளியே சென்று விட்டு புதிதாக விளைந்த கேரட்டுகளை வாங்கி வந்திருந்தார்.‌ காலை உணவாக பச்சை காய்கறிகளை உண்ணுவது மிக மிக நல்லது என சொன்னார்….அப்போதுதான் நான் மெதுவாக கேட்டேன். “எதற்காக என்னை அழைத்து வந்து இருக்கிறீர்கள்.. ?, இவ்வளவும் செய்து கொண்டு இருக்கிறீர்கள்..?” என கேட்டேன். இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை என்றார் அவர். பிறகு அவரே மெல்லிய குரலில்..”நான் தனிமைப்பட்டு துவண்ட போது எனக்கு யாரும் இல்லை. அப்போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன். யாராவது காயப்படும் போது நான் அவர்களோடு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டுதான் உங்களோடு வந்திருக்கிறேன், காயப்படும் போது மருத்துவம் பார்ப்பது தானே மருத்துவன் கடமை…” என்றார்

….”ஊர் சுற்ற போவோமா..” என்று கேட்டேன். “வேண்டாம் ஒய்வெடுங்கள்” என்றார். “தோட்டத்தில் உட்கார்ந்து ஏதாவது எழுதிப் பாருங்கள்..” என்றார். நான் ஏதாவது எழுதுவோம் என நினைத்து அமரும்போது எழுத எனக்கு எதுவும் வரவில்லை. எதிரே அமர்ந்திருந்த அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் . “வந்த வேலை சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் காலியாகி ( Empty) கொண்டிருக்கிறீர்கள்.” என்றார்

.‌‌…அண்ணன் மருத்துவர் சித்தார்த்தன் 2009 காலகட்டங்களில் எனக்கு பழக்கம். ஈழ ஆதரவு போராட்டங்களின் போது ஈழத்தில் மக்கள் படும் துயரங்களை, இனப் படுகொலைக் காட்சிகளை தாங்கிய சிடி தயாரிக்க எங்களுக்கு 1000 சிடி வாங்கிக் கொடுத்தார். மக்களிடம் பரப்புங்கள் என்றார். தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை “மாவீரன் முத்துக்குமார்” ஆவணப்படம் தயாரித்து விட்டு தவித்துக் கொண்டிருந்த போது படத்தை வெளியிட பெருமளவு பணம் தேவையாக இருந்தது. அண்ணன் நல்லதுரை என்னிடம் என்ன செய்யலாம் என கேட்டபோது.. “அண்ணன் சித்தார்த்தனுக்கு படத்தைப் போட்டுக் காட்டுவோம். அவர் மூலமாக மருத்துவர்களிடம் பணம் வசூலிப்போம்..” என்று சொன்னேன். எங்கள் வீட்டில் படம் திரையிடப்பட்டது. படம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் சித்தார்த்தன் மாவீரன் முத்துக்குமார் தீ குளிக்கும் காட்சியில் கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

படம் முடியும் வரை அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. படம் முடிந்த பின்னர் எங்கள் திட்டத்தை அவரிடம் சொன்னோம். “எந்த மருத்துவரிடமும் கேட்கத் தேவையில்லை, நானே முழு பணம் தருகிறேன்..” எனச்சொல்லி ஒரு பெரிய தொகையை அளித்து உதவி செய்தார். அதன் பிறகு நாம் தமிழர் உருவான காலகட்டங்களில் திமுக, திராவிட இயக்கம் என்றெல்லாம் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாம் தமிழரை மானசீகமாக நேசிக்கத் தொடங்கினார். அண்ணன் சீமான் மீது அளவற்ற அன்பு அவருக்கு. கும்பகோணத்தில் நடந்த ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் மேடையில் அண்ணனுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த அவர் அண்ணன் சீமானின் கரங்களை பற்றிக் கொண்டே இருந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

சமூகத்திற்காக உழைக்க முன் வருபவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்….ஏதோ ஒரு விசித்திர அலைவரிசை என்னையும் அவரையும் இறுக்கி கட்டிப் போட்டு வைத்து விட்டது. என் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அவர் தானாக முன்வந்து இடம்பெறத் தொடங்கினார். எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துக் கொண்டு அலைவார்.என் எழுத்துக்கள் மீது அவருக்கு மிகுந்த விருப்பம். என் புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. படித்துவிட்டு அலைபேசியில் பல மணி நேரம் கொண்டாடித் தீர்ப்பார். நீங்கள் கொண்டாடும் அளவிற்கு அதில் எதுவும் இல்லை அண்ணா என சொன்னால்.. உனக்கு எழுத வருகிறது அதை விட்டு விடாதே என்றார்.திரைப்படத்திற்கு கதை ஒன்றை தயார் செய்து அவரிடம் காட்சி காட்சியாக நான் விவரித்தபோது ஆர்வமாக கேட்டவர் .. உடனே இதற்கு திரைக்கதையை தயார் செய்யுங்கள். ஒரு வருட காலத்திற்குள் நானே தயாரிக்கிறேன் என்றார்.

காரை ஓட்ட நான் கற்றுக் கொண்ட போது அவரை வைத்துக்கொண்டு கும்பகோணத்தை ஒரு வலம் வந்தேன். பெருமிதத்தால் என்னை கட்டிக்கொண்டு கண்கள் கலங்க “இது தான் நான் எதிர்பார்த்தேன்” என்றார். அந்த விழிகளின் ஈரம் தாய்மைக்கு நிகரானது

…..உடல்நிலையோ மன நிலையோ சரி இல்லையெனில் அவர் மருத்துவமனையில் போய் அமைதியாக அமர்ந்திருப்பேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு கூடு. நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என என்னை நினைக்க வைக்கிற கூடு. அங்கே போனால் பேரன்பு சிறகுகளின் தாய்மை கதகதப்பு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. கடைசி சந்திப்பு வரை அந்த நம்பிக்கை பொய்த்ததே இல்லை….

எனக்காக மூணாறு வந்த அவர் ஐந்து நாட்களும் என்னை அமைதிப் படுத்துவதில், முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தனிமையிலே என்னை சிந்திக்க அனுமதித்தார். தலைகுனிந்து அமர்ந்திருக்கும் என்னை உற்று நோக்கியவாறே பல மணி நேரம் அமைதியாக எதிரில் அமர்ந்திருந்தார். இயற்கையும் அவரது பேரன்பும் என்னை குணப்படுத்த தொடங்கின. நானும் சிரித்து பேசி வழக்கமான மனிதனாக மாற தொடங்கினேன்.கடைசி ஒரு நாள் மட்டும் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துப்போனார். தேயிலைத் தோட்டங்களின் நடுவே இருந்த ஒரு மலை முகட்டில் காரை நிறுத்தி வைத்துவிட்டு ஜென்சியின் “ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடலை இருவரும் கண்கள் பனிக்க கேட்டுக் கொண்டே இருந்தோம்…

.ஒவ்வொரு எனது அரசியல் முயற்சியிலும் அவர் இருந்தார். பக்கபலம் என்கின்ற சொல் மிக மிகக் குறைவு. அவர்தான் பிரதான பலமாகவே இருந்தார். அழுத்தம் திருத்தமாக ஆலோசனைகள் சொல்வார். “எதன் பொருட்டும் துவண்டு விடக்கூடாது, வேலைகள் நின்றுவிடக் கூடாது” என்பார். “இனத்திற்கான பணி, 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தை விடுதலை செய்வதற்கான பணி, வெறும் பணத்திற்காக முடங்கி விடக்கூடாது, நான் உதவுகிறேன்.” என்பார்….

அவர் அறை முழுக்க புத்தர் சிலைகள் நிறைந்திருக்கும். கடவுள் மறுப்பாளர். சாதி எதிர்ப்பாளர். கெட்ட பழக்கங்கள் கிடையாது. நிறைய படிப்பார். எளிய மக்கள் தேடி வரும் போதெல்லாம் மருத்துவத்தை செய்துவிட்டு பணம் வாங்காமல் அனுப்பி வைத்து விடுவார். எதையும் வெளியே சொல்ல மாட்டார். விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்து வெளிச்சம் பாய்ச்சிய மனிதநேய விளக்கு அவர்…..மூணாறில் இருந்து திரும்பி வரும்போது, திருச்சியை தாண்டுகையில் ஒரு பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருப்பதை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப் போனார். சிறிது நேரம் கழித்து வந்தவரிடம் எங்கே போனீர்கள் என கேட்டேன். “நாம் வீட்டிற்கு தானே போகிறோம். கையில் 4000 பணம் இருந்தது. வண்டிக்கு எரிபொருளும் போட்டாகிவிட்டது. அதனால் அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து விட்டேன். நாளைய தினம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..” என்றார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

“ஏன் அண்ணா இப்படி..?” என்றேன்… “நமக்கு மனது சரியில்லை என்றால் மலைகளுக்கு சென்று சுற்றி வருகிறோம்.. அவர்கள் எல்லாம் எங்கே செல்வார்கள்..?” என கேட்டு விட்டு மீண்டும் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்ட தொடங்கிவிட்டார்……கடைசியாக அவரை நான் என் தம்பி ஆனந்தோடு கடந்த 07.05.2021 அன்று சந்தித்தேன். முகக் கவசம் எல்லாம் போட்டுக் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு இருந்தார்.நெஞ்சு பக்கமாக வலிக்கிறது என்றேன். இசிஜி எடுத்துப் பார்த்துவிட்டு “வலிமையான இதயம். ஒரு நோயும் இல்லை..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எதற்கும் பயப்படாதீர்கள். நான் இருக்கிறேன் என்றார்….அடுத்த சில நாட்களிலேயே கொரனா நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது.

கடந்த 16.05.2021 நான் பதறிப்போய் அவருக்கு அலைபேசியில் அழைத்தேன். நீண்டநேரம் ஒலித்த அந்த அலைபேசியை எடுத்து சற்று இருமலோடு பேசினார். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சொன்னார். ஆக்சிஜன் உதவியோடு இருப்பதாக சொன்ன அவர், ” வேறு யார் அழைத்தாலும் இந்த சமயத்தில் எடுத்து இருக்க மாட்டேன், நீ அழைக்கிறாய். இனி பேச முடியுமோ முடியாதோ என தெரியவில்லை. அதுதான் பேசிவிட வேண்டும் என எடுத்தேன்..” என்றார். நான் கலங்கி விட்டேன். “அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாம் மீண்டும் மூணாறு போகிறோம் , ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலை மலைமுகட்டில் நின்று கேட்கிறோம்” என்று சொன்னேன். இருமலோடு அவர் சிரித்த ஒலி எனது காதில் கேட்டது. “நான் வராவிட்டாலும், நீயாவது போய்விட்டு வா..” என்று சொன்னார்.

“கண்டிப்பாக நீங்கள் வருவீர்கள்” என நான் சொல்லிக் கொண்டிருந்தபோது “என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடலைப் பார்த்துக் கொள், எழுதுவதை விட்டு விடாதே..” என்று சொல்லி சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தார்.நான் கலங்கிய கண்களோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தேன்….இன்று காலை 10:45 மணிக்கு அவர் கொரனா நோய் முற்றி இறந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் இடுகாட்டிற்கு வரும்போது இடுகாட்டின் வாசலில் நானும் தம்பி ஆனந்தும், தம்பி சாமிநாதனும் நின்று கொண்டிருந்தோம்.

வேகமாக வந்த ஆம்புலன்ஸ் எங்களை கடந்து சென்றது. அவர் முகத்தை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பினார்கள்.

…..மகத்தான அந்த மனிதனிடமிருந்து ஒரு விடைபெறுதல் கூட பெற முடியாத சாபத்தை என்ன சொல்லி நொந்து கொள்வது..??

எதுவுமற்ற என்னிடம் இருந்தது இறுதியான ஒரே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் வீதியில் என்னை நிறுத்தி வைத்துவிட்டு, ஆம்புலன்சில் வேகமாக என்னை கடந்து இடுகாட்டிற்குள் சென்று விட்டது. …

கடைசியாக நாங்கள் மூணாறு போனபோது தேயிலை தோட்ட காடுகளின் நடுவே அந்த மலைமுகட்டில் ஒலித்த “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்த காவியப்பாடல் காற்றில் கரையாமல் உறைந்திருக்கும். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கத்தான் அவர் மூணாறு சென்றிருக்கிறார் என நான் இந்த நொடியில் நினைத்துக் கொள்கிறேன்….

என்றாவது நான் மூணாறு சென்றால் .. தேயிலைத் தோட்ட காடுகளுக்கு நடுவே, பனி சுமக்கும் அந்த மலை முகட்டின் மீது நான் நிற்கும் அப்பொழுதில் “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்தப் பாடல் தானே ஒலிக்கத் தொடங்கும், அவர் அருவமாய் என் அருகில் நின்று கொண்டு என் தோளை பிடித்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்…..

(மருத்துவர் சித்தார்த்தன். குடந்தை நகரத்து எளிய மக்களின் மருத்துவர். வயது 53. சுருதி மருத்துவமனையின் நிறுவனர். ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளர். கும்பகோணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திட உயிராய் நின்றவர். கும்பகோணம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகத்தான வலிமையாக திகழ்ந்தவர்.24.05.2021 அன்று கொரனா நோய்த்தொற்றின் காரணமாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.)

….https://youtu.be/S5ZD5CDBTxA