சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் இளையராஜா இசை அபூர்வமானது தான். சலிப்பற்றதுதான்.அவரின் 80, 90 களின் ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒவ்வொரு காலத்தை, நான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் ஒரு திரைப்படக் காட்சியை போல நேரடியாக பார்த்துவிடுகிற அபாயத்தை கொண்டிருந்தாலும், அந்த மாய விளையாட்டை எப்போதும் நான் மறக்காமல் விளையாடிக் கொண்டே இருந்தேன். சில பாடல்கள் கேட்கும்போது அம்மாவின் மடி வாசனை நினைவுக்கு வருகிறது. சில பாடல்கள் கேட்கும்போது கழுத்தோரம் வியர்வை வடிய வடிய, ஒரு உச்சி வெயிலில் மாடிப்படி இடுக்கில் நழுவிய காலத்துளி ஒன்றில் கழுத்தோரம் பெற்ற முதல் காதல் முத்தம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பசித்திருந்த இரவுகளில் பாடல்களை மட்டும் புசித்திருந்த பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

❤️

வலி ஏமாற்றம் காதல் நோய் பிரிவு துயர் காமம் பசி பிணி தனிமை கொண்டாட்டம் என என் வாழ்வில் எதை எடுத்துக்கொண்டாலும் அவரின் இசை அதில் கலந்தே இருக்கிறது. இப்போதுகூடஎத்தனையோ நள்ளிரவுகளில் அவரின் சில பாடல்களை கேட்கும் போது ஆளரவமற்ற சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று விடுகிறேன். “வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்..” என பாடும் போது இந்த வாழ்வு ஒரு கொடும் சாபம் என கலங்கி விடுகிறேன். ” காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே, தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..” என கேட்கும் போது இந்த வாழ்வு எப்படிப்பட்ட வரம் என சிலிர்த்து இருக்கிறேன்‌. சகல வாழ்வையும் கணக்கு,வழக்கோடு சரி பார்த்தால்..வரத்தையும், சாபத்தையும் அவர்தான் எப்போதும் தீர்மானிக்கிறார்.

❤️

ஒரு பாடல் கேட்கும் போதே அந்த காலத்திற்குள் உள்ளே நுழைந்து அக்காலத்து அனுபவத்தை இக்காலத்திலும் மீளப்பெறுவது என்பது அவரது இசையின் ஊடாக மட்டும்தான் என உணரும்போது அந்த இசை எக்காலத்திற்கும் நம்மை கடத்தி செல்லும் ஒரு பிரம்மாண்டமான கால இயந்திரம் என உணர்ந்து வியந்திருக்கிறேன்.

❤️

ஒரு பாட்டு நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பதை எல்லாம் தாண்டி இந்த உலகத்தில் இத்தனை கோடி நபர்களுக்கு மத்தியில் எனக்கான ஆறுதலையும் , எனக்கான வலியையும், எனக்கான அழுகையையும், எனக்கான ரகசியப் புன்னகையையும் வர வைக்கிற உள்ளீடு அப்பாடல்களில் எப்படி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் யோசித்து யோசித்து கடவுள் நம்பிக்கை போல புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்.

❤️

300க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் முழுக்க அவரது இசையாய் சேர்த்துவைத்து கொண்டாடிய காலகட்டங்களிலும் சரி, ஏறக்குறைய 4000 பாடல்களை ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்து நினைத்தபோதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி, எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் அதே சரண அடுக்குகளில், ராக வளைவுகளில் அதே கிறக்கம்.. அதே மயக்கம்.. அதே தொலைதல்.

❤️

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் அவரது இசை போல நெருங்கிய துணை எதுவும் இல்லை. போகுமிடமெல்லாம் கைபிடித்து அழைத்துச் செல்லுகிற சகா போல அவரது பாடல்கள் நாற்புறமும் நம்மை அழைத்து சென்று கொண்டே இருக்கின்றன. வாழ்வெனும் ஏற்றத்தாழ்வு ஊசலாட்டத்தில் சிக்கி பல உளவியல் சிக்கல்களால் சிதைந்த என்னைப் போன்ற பலரை நிதானமாக்கி வாழ வைத்திருப்பது அவரது இசை தான். அந்த தூய விதியில் அவர் சிறிது பிசகி இருந்தாலும் பலரின் தற்கொலைஇங்கே தவிர்க்கப்பட்டு இருக்காது.

❤️

அந்த வகையில்.. அவர் ஒரு மீட்பர்.

❤️

காதுகளால் சுவாசித்து வாழ்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்தஇசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்