திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு கலை வடிவத்தின் உச்சத்தை அடைவதற்காக துணிச்சலான முடிவுகளை எடுங்கள். அது வெல்லலாம், தோற்கலாம்.. ஆனால் துணிச்சலான முடிவுகள் தான் எப்போதும் கலை வடிவத்தின் உச்சங்களை வெளிப்படுத்துகின்றன”.
ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக அதன் திரைக்கதை விளங்குகிறது. சிறந்த கதையாக அறியப்பட்டவைகள் திரைக்கதையாக வேதியியல் மாற்றம் அடையும்போது பல சூழ்நிலைகளில் தோல்வி அடைந்திருக்கின்றன. நல்ல கதைகளுக்கு எப்போதுமே நல்ல திரைக்கதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் நல்ல திரைக்கதைகளுக்கு ஓரளவு போதுமான வழக்கமான கதை இருந்தால் வென்று விடலாம். அவ்வாறாகத்தான் மாநாடு வென்றிருக்கிறது.
ஒரு திரைப்படத்தை அறிவியலாக புரிந்து கொள்வதும், கலை மொழியில் அறிந்து கொள்வதும் வெவ்வேறானது. திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய பார்வையாளன் திரையில் விரிகிற காட்சியோடு ஒன்றுபட்டு தானும் அதில் ஒரு பகுதியாக உணர தலைப்படும் போது தான் கலையின் அழகியல் வெளிப்படுகிறது. ஒரு திரைப்படம் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் சகலவிதமான நினைவுகளிலிருந்து அவனை திசை திருப்பி , தான் விவரிக்கும் கதையில் அவனை ஒன்ற வைத்து , அவனது கால ஓட்டத்தை மெலிதாக அவன் மறக்க வைக்கிற அந்த உணர்வுப் புள்ளியை தான் தனது வெற்றியாக கருதுகிறது.
அந்த கால ஓட்டத்தை தான் ஒரு கதைக் கருவாகக் கொண்டு மாநாடு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவருடைய முந்தைய திரைப்படங்கள் வணிக ரீதியிலான அனைத்து சமரசங்களுக்கும் உட்பட்டு , வெகு மக்களுக்கான தமிழ்சினிமாவின் சகலவிதமான இலக்கணங்களுக்கு உட்பட்டவை தான். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 (2007) தெருவில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை அடிப்படையாக கொண்டது. மாபெரும் திறமை உள்ள விளையாட்டு வீரர்களை விதந்தோதும் படங்களுக்கு மாற்றாக தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றிய அத்திரைப்படத்தின் எளிய வகையிலான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெங்கட்பிரபு தான் கட்டமைத்த நண்பர்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள், காதல், கடத்தல் இவற்றில் எழுகின்ற துரோகங்கள், வழக்கமான கதாநாயகத்தனம் போன்ற குறிப்பிட்ட வகையிலான சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் சில ரசனை மிகுந்த தந்திரங்களை அவரால் செய்ய முடிந்தது. அவரது உச்சபட்ச வணிக வெற்றியை கொடுத்த மங்காத்தா திரைப்படம் கூட இவ்வாறானதே. வழக்கமான நன்மை/தீமை இடையிலான யுத்தமாக ஒரு திரைப்படத்தை வடிவமைக்காமல், ஒரு திரைப்படத்தில் அனைவரும் கெட்டவர்களாக இருந்து, யார் இதில் அதிகம் கெட்டவர் என்கின்ற போட்டி நடத்தி, அந்தப் போட்டியையும் மக்களை ரசிக்க செய்து அதிகம் தீயவர் எவரோ, எவர் அதிகம் வில்லத்தனம் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகன் என வழமையான கோடுகளில் இருந்து மாற்றி வரைந்தது மங்காத்தாவின் திரைக்கதை அமைப்பு.
முதல் முறையாக “வெங்கட்பிரபு அரசியல்”( A Venkat Prabu Politics) என தலைப்பிடப்பட்டு மாநாடு என்கின்ற திரைப்படத்தை அவர் அறிவித்தபோது நிச்சயமாக இது தீவிரமான அரசியல் திரைப்படமாக இருக்காது என அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தவர்கள் கண்டிப்பாக கணித்து இருப்பார்கள். அந்தக் கணிப்பு சரியானது தான். மாநாடு அரசியல் படமல்ல. அரசியலைப் பற்றிய படமும் அல்ல.
நழுவி ஓடும் கால ஓட்டத்தின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் சிம்பு மற்றும் வில்லன் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவர் விளையாடும் பரமபத கதையே மாநாடு. எல்லோரையும் விட இந்த திரைப்படம் நடிகர் சிலம்பரசனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சமீப காலத்தில் தன் மீது எழுந்திருந்த எல்லா விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அவருக்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது. இந்த இரண்டில் அவர் மீது எழுந்து இருந்த எல்லா விமர்சனங்களுக்கும் இத்திரைப்படத்தின் மூலம் அவர் பதில் சொல்லிவிட்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது இரண்டாம் தேவையான படத்தின் வெற்றி அவருக்கு கிடைத்துவிட்டது.
அரசியல் என்ற சொல்லை பயன் படுத்தி விட்டதால் கதாநாயகன் ஒரு இஸ்லாமியனாக உருவாக்க பட்டிருப்பதை தாண்டி , இஸ்லாமியர்கள் என்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கின்ற செய்தி இந்த திரைப்படத்தின் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆறுதல் நமக்கு இருந்தாலும் அது வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு மத பெரும்பான்மையினர் வசிக்கும் நாட்டில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பற்றி இத்திரைப்படம் இன்னும் விரிவாகப் பேசி இருக்கலாம் என்பது ஒரு குறையே.
“Time Loop” பற்றி ஏற்கனவே பல ஆங்கிலத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்னவென்று சிந்தித்தால்”காலச்சுழி” என்பது சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன். இந்தக் கருத்தோடு காலத்தின் முன்னாலும் பின்னாலும் பயணிக்கிற ‘டைம் மிஷின்’ விவாகரங்களை பொருத்திப் பார்த்துக் கொண்டால் இன்னும் இந்த விஷயம் புரியும்.
புத்திசாலித்தனமாக மாநாடு திரைப்படத்திலேயே” Time loop” திரைப்படங்கள் குறித்த அறிமுகங்களை கதாநாயகனே கொடுத்து விடுவதால் அந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று என பார்வையாளர்களை இயக்குனர் நம்ப வைத்து விடுகிறார்.
தமிழிலும் ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவா இயக்கிய 12 B( 2001) இதுபோன்ற திரைப்பட வகைமைகளுக்கு தமிழில் நமக்கு கிடைக்கின்ற ஒரு முன்னோடி திரைப்படம். அதேபோல் சூர்யா நடித்து விக்ரம் கே குமார் இயக்கிய 24 (2016), அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கேம் ஓவர் (2019) சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கன்னியும் 3 களவாணிகளும் (2014) போன்ற சில படங்களும் இதே போன்று கால நழுவலின் கண்ணியில் சிக்கிக்கொண்ட நிகழ் மனிதர்களின் கதைகள் தான். டைம் மெஷின் பற்றிய திரைப்படங்களை தனி பட்டியலாக வே கூறலாம்.
படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வருகிற ஒய் ஜி மகேந்திரன் தனது வசனத்தில் போகிற போக்கில் கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” ( Tenet) திரைப்படத்தை குறிப்பிடுவதும் படம் குறித்த புரிதலை பார்வையாளருக்கு ஏற்படுத்தும் முயற்சி தான்.
இவ்வளவு முன் தயாரிப்புகளை சொல்லியும் பார்வையாளர்களுக்கு “Time Loop” பற்றி புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் திரைக்கதை வடிவமைப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்திருக்கிற திறமையான “எளிமை” இந்தத் திரைப்படத்தின் மூல கருத்தினை புரிந்துகொள்ளாத எளிய பார்வையாளர்களுக்கு கூட , திரைக்கதையின் சுவாரஸ்யத்தை சென்று சேர்த்துவிடுகிறது.
அதற்காகவே வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கு உரிய கதாநாயகன் -வில்லன் மோதலாக இந்த திரைப்படத்தை வடிவமைத்துக் கொண்டது இயக்குனரின் புத்திசாலித்தனம். இந்த வழமையான சட்டகத்திற்குள் Time Loop சற்றே குழப்பமான வடிவத்தை பொருத்தி , அதற்கு இந்திய திரைப்பட பார்வையாளனுக்கு தேவைப்படும் புராணீக நியாயம் சேர்ப்பதற்காக காலபைரவர் கதையையும் இணைத்து இயக்குனர் வெங்கட்பிரபு விவரிக்க முயன்றிருக்கிறார்.
இந்த முயற்சிகள் படம் பார்ப்பவர்களை சிந்திக்க வைப்பதற்கு முன் ,எஸ் ஜே சூர்யா வின் அசாத்திய உடல்மொழியோடு கூடிய தவிப்பிலும்,” தலைவரே தலைவரே..” என அவர் புலம்பும் புலம்பலிலும், இத்திரைப்படம் பார்வையாளனுக்கு வெகு சுவாரசியமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தான் இந்தப் படத்தின் மாபெரும் வலிமை.
படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் பிரவீனுக்கு இது நூறாவது படம் என்பதனால் தன்னுடைய பங்களிப்பு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். காட்பாதர் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் என அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வாங்கிய “வால்டர் முர்ச்” சிறந்த படத்தொகுப்பிற்கு 1. உணர்ச்சி 2.கதை 3. ரிதம் 4. கண் பார்வையை தொடர்தல் 5. திரையின் இருபரிமாண இடம் 6. முப்பரிமாண வெளி என ஆறு விதிகளை வகுக்கிறார் ( மாண்டேஜ் -தமிழில் தீஷா, பேசாமொழி பதிப்பகம் வெளியிடு). இந்த விதிகளில் ஒன்று பிசகினாலும் திரைப்படம் தான் தெரிவிக்க வந்த மூல கருத்திற்கு அப்பால் விலகிச் சென்றுவிடும் எனவும் அவர் எச்சரிக்கிறார். இந்த விதிகளை மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பில் பொருத்திப் பார்த்தால் ஏறக்குறைய பொருந்திப் போவது ஆச்சரியம்தான்.
மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் தனது கடந்த 99 திரைப்படங்கள் வழங்கிய அனுபவத்தினை வைத்து எது பார்வையாளர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் வெற்றி கண்டுள்ளார். படத்தின் இன்னொரு பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.
மற்றபடி காட்சிக்கு காட்சி வேறுபடும் கதாநாயகன் சிம்புவின் உடல்வாகு படத்தின் போக்கினை பாதிக்கிறது. வேக வேகமாக நகரும் திரைக்கதையில் குறிப்பிட்ட சில காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் பார்வையாளர்கள் களைப்படைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்களை சேர்த்து இணைத்து வழங்கி இருப்பது படத்திற்கு பலம் என்றாலும், அது ஒவ்வொரு முறையும் நடக்கும் போது கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது.
ஒரு திரைக்கதையாக இந்தப் படத்தை இயக்குனர் விவரிக்கும்போது அதை புரிந்து கொண்டு தயாரிக்கும் திரை அறிவு கண்டிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அவசியம் தேவை. “மிக மிக அவசரம்”(2019) என்கின்ற மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கிய சுரேஷ் காமாட்சி இந்தத் திரைக்கதையின் அடிப்படையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தயாரித்திருக்கிறார். நீண்ட காலமாக படம் தயாரிப்பு நிலையிலேயே இருந்தது பல காட்சிகளில் தெரிந்தாலும், படத்தின் திரைக்கதையின் போக்கு அதை முறியடிக்கிறது.
படம் வெளிவருவதற்கு முன்பாக வழக்கம்போல் தடைகள் ஏற்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்கின்ற முறையில் பணம் போட்டு ஒரு படைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை சரியாக மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பது மிக மிக சவாலான ஒரு விஷயம். அந்த சவாலில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெற்றி பெற்றிருக்கிறார்.
வழமையான கதையில் புதுமையான திருப்பங்களோடு கூடிய, விறுவிறுப்பான திரைக்கதையால் மாநாட்டிற்கு கூட்டம் கூடுகிறது.
அந்தவகையில் மாநாடு தன் வழக்கமான திரைக்கதையின் போக்கில் வலிந்து பொருத்திக்கொண்ட “கால விசித்திரத்தால்” தமிழில் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியிருப்பது ஒரு வெற்றிக்காக காத்து நின்ற இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கக்கூடும்.
-மணி செந்தில்.
மறுமொழி இடவும்