❤️

❤️

அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்…

நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது.

❤️

இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதி
குளிர்கால பனியால் கனத்து விடுவதுபோல‌ கனத்து விடுகிறது.

அந்தப் பாடல் ஒரு திடப்பொருள் போல உறைந்து விடுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி விலகி ஓடுகிற மணி நேர நொடிகளை இறுக்கி கட்டி அந்தப் பாடல் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விடுகிறது.

❤️

எங்கிருந்தோ கிடைத்த அந்தப் பாடலின் வசீகரமான துண்டு ஒன்றினை என் அலைபேசியின்
அழைப்பிசையாக பொருத்திய போது, யாரோ ஒருவர் அழைக்கும் போதெல்லாம் நீயே அழைப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒரு கட்டத்தில் நீ தான் அந்தப்பாடல்
என உணரத் தொடங்கிய போது
நானே வெவ்வேறு அலைபேசிகளின் மூலமாக என்னை அழைத்துக் கொண்டதும் நடந்தது.

இறுதியாக நீயே ஒரு பின்னிரவில் என்னை அழைத்தாய்.

உலகமே தன் இமைகளை மூடிக்கிடக்கும் அந்த சலனமற்ற
நள்ளிரவின் திறக்கப்படாத கதவுகளை அந்த அழைப்பிசை
திறந்ததாக நான் உணரத் தொடங்கினேன்.

காலதேச தூரம் கடந்து காற்றின்
சிறகை பிடித்துக் கொண்டு
நீயே அருகில் வந்து விட்டதாய் ஓர் உணர்வு.

அழைப்பினை எடுக்க துடிக்கிற
எனது விரல்களுக்கும்..
அழைப்பிசை தந்த மெய் மறத்தல்
உணர்வுகளுக்கும் இடையே..

நேரம் வழுவி அழைப்பு துண்டானது.

மீண்டும் அழைத்தாய்.

மீண்டும் அதே நிலை.

❤️

எதற்காக அழைத்து இருப்பாய் என எண்ணுவதற்கு முன்பாக அழைத்திருக்கிறாய் என்ற நிறைவில் நான் நிலைத்திருக்க..

“Missed call’ என்று உனது பெயர் மின்னிக் கொண்டிருந்தது.

❤️