❤️

2009 -ல் மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் “கூட்ட மேடையில் முதன்முதலாக ஏறிய போது கைப்பிடித்து என்னை ஏற்றினார்.

அந்த நொடி முதல் அந்த கைகள் என்னை விட்டு விலகியதே இல்லை. தாய்மை சாயல் கொண்ட அந்தக் கண்கள் என்னை விலக்கியதே இல்லை.

அண்ணன் என்ற சொல்லுக்கு அவரைத் தவிர வேறு எதுவும் அர்த்தமில்லை. அவரிடமிருந்து வரும் என்ற தம்பி என்ற அழைப்பைத் தாண்டி வேறு எதுவும் உயர்வில்லை.

தனிப்பட்ட அளவில் நான் எவ்வாறு அவரைப்பற்றி உணர்ந்திருக்கிறேனோ, அதே போல்,நாம் தமிழர் கட்சி என்ற அமைப்பில் இருக்கின்ற லட்சக்கணக்கான உறவுகளும் அவரை உணர்கிறார்கள்.
அவர்கள் அனைவரோடும் நேச வேதியியல் அமைந்த விசித்திரமான பிணைப்பு அண்ணன் சீமானுக்கு உண்டு.

சாதி, மதம், பொருளாதார அடிப்படை, சுயநல அரசியல் பிழைப்பு, எதிர்பார்ப்பு என்றெல்லாம் இயல்பான சமூகத்திற்கு உரிய எந்த சமூக இணைப்புகளும் இல்லாத ஒரு பெருங்கூட்டம், அந்த ஒற்றை மனிதனின் அன்பான சில வார்த்தைகளால் தான் கட்டப்பட்டிருக்கிறது. இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்சியை விட்டு சென்றுவிட்ட சிலர் கடுமையாக விமர்சிப்பதை பார்க்கும் போது அதில் தொனிக்கின்ற உணர்ச்சிகளை கவனித்துப் பார்த்தால்..பிசகிய காலத்தினால் இழக்கவே கூடாத “அண்ணனை இழந்து விட்ட” சுய கழிவிரக்கம் அவர்களை பாடாய்படுத்துவதை தான் வெறுப்பாய் உமிழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என நானெல்லாம் உணர்ந்திருக்கிறேன்.

ஏனெனில் அண்ணனின் நிழல் போல் சொர்க்கத்தின் அரண்மனை கூட சுகமாக இருக்காது என அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும் இல்லையா..??

அண்ணன் என தலைவனின் தம்பியை அழைத்து விட்டு மற்றவர்களை தலைவராக ஏற்க , அண்ணனாக அழைக்க கூசும் இல்லையா..??

எதிர்ப்புகளால் தான் நம் அண்ணன் உருவானார். போராட்டங்களும் இழப்புகளும் தான் அவரை உரம் ஏற்றியது. எதற்கும் அஞ்சாத, இனத்திற்காக எதையும் இழக்க துணிந்த அவரது அசாத்திய துணிச்சல் தான் அவரை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

இவைகள்தான் ஒவ்வொரு நொடியும் அவர் நமக்கு விடுத்துக் கொண்டிருக்கின்ற செய்தி.

….

இரவு பகலாக உழைத்து, வியர்வை மழையில் நனைந்து, நிறைய வாசித்து, எந்தத் தலைவர்களும் பேசாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் பேசி, துளித்துளியாய் இலட்சக்கணக்கில் உறவுகளை இணைத்து, ஒரு பெரும்படை கட்டி நிமிர்ந்து நின்று , ஒவ்வொரு நொடியும் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிற அந்தப் பெருமகன் நம்மைப் பொறுத்தவரையில் நாம் கற்க விரும்பும் ஒரு தனி மனிதனின் வரலாறு மட்டுமல்ல. நிமிரத்துடிக்கும் ஒரு இனத்தின் வரலாறு.
காலத்தினால் கையளிக்கப்பட்ட
ஒரு கடமையின் வரலாறு.

❤️

“அண்ணன் என்ற என் அண்ணைக்கு
நெஞ்சமெல்லாம் பூரித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”

❤️

இனி நாம்தமிழர் காலம்

❤️