யாரை எல்லாம் தமிழர்கள் என்று வரையறை செய்கிறீர்கள் என எப்போதுமே தமிழ் தேசியத்தை நோக்கி விமர்சனம் எழுப்பும் ‘திராவிடத் திருவாளர்கள்’ அண்ணன் சீமான் தயவால் வரிசையாக விழும் ‘தர்ம அடி’ காரணமாக திராவிடர் என்பவர்கள் யார் என்கிற கேள்விக்கு இதுவரையில் பதிலளிக்க முடியாமல் ஆளாளுக்கு புளுகிக் கொண்டிருக்கின்ற காட்சியை பார்க்க முடிகிறது.

ஆரிய எதிர்ப்பு தான் திராவிடம், திராவிடம் என்பது ஒரு வாழ்க்கை முறை, தமிழர்கள் தான் திராவிடர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள் தான் திராவிடர்கள்,தமிழ் தெலுங்கு மலையாளம் துளு பேசுகிற மக்கள் தான் திராவிடர்கள், என்றெல்லாம் ஆளாளுக்கு குழப்பி கருப்பாய் இருப்பவர் தான் திராவிடர் என்கிற வரை இந்த உளறல் நீண்டு வருகிறது.

இன வரையறை என்பது மிக மிக நேர்த்தியானது. ஒரே நேரத்தில் ஒருவர் இரு இனங்களை சேர்ந்தவராக காட்டிக் கொள்ள முடியாது. ஆனால் இங்கே பலர் முதலில் நான் இந்தியன் பிறகு திராவிடன் அதன் பிறகு தமிழன் என்றெல்லாம் போகிற போக்கில் குழப்புகின்ற காட்சியை நம்மால் காண முடிகிறது.நாம் பிறந்த தேசிய இனம் தமிழன் என்கிற இனம். நம் தாய்நிலம் 1947க்கு பிறகு இந்திய நாட்டோடு இணைக்கப்பட்டது.இந்தியா என்பது நாம் வாழும் நாடு (country). தமிழர் என்பது நம் தேசம்( Nation) அல்லது தேசிய இனம். இந்தியா என்பது தமிழர் போன்ற பல தேசிய இனங்கள் இணைந்த ஒரு ஒன்றியம்.

இதில் திராவிடம் என்பது எதுவுமே இல்லை. அது வாழ்க ஒழிக போன்ற வெற்று அரசியல் முழக்கம் மட்டுமே. அதை ஒரு இனமாக அடையாளப்படுத்துவது தமிழர் என்கின்ற இனத்தை மறைக்கும் செயலாகும்.ஒரு இனம் என்றால் மொழி/நிலம் /பண்பாடு /பொதுவான பொருளியல் வாழ்வியல்/ தொன்றுதொட்ட வரலாற்றில் உருவான ஓரினம் என்ற உளவியல் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். திராவிடத்திற்கென்று மொழி கிடையாது. திராவிடத்திற்கு என்று நிலம் கிடையாது. திராவிடத்திற்கு என்று பண்பாடோ பொதுவான பொருளியல் வாழ்வியலோ இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் திராவிடம், திராவிட மாடல் என்றெல்லாம் கட்டமைக்க முயற்சிக்கப்படுவது ஆரியத்திற்கு/ இந்துத்துவாவிற்கு எதிரான செயல்பாடுகள் அல்ல. தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து இல்லாமலாக்கும் நகர்வுகள்.

தமிழராய் பிறந்து தமிழராய் வாழ்ந்து ஆரியத்தை அடியோடு எதிர்த்த மரபு சித்தர் காலத்தில் இருந்து வள்ளலார், வைகுண்டர் வரை நமக்கு இருக்கிறது. இதில் திராவிட முகமூடி நமக்குத் தேவையில்லை.அதனால்தான் வரலாற்றில்‌ கி.ஆ.பெ அண்ணல்தங்கோ தொடங்கி ஐயா பெ மணியரசன், அண்ணன் சீமான் போன்றோர் தங்கள் அடையாளத்தைக் காக்க திராவிடத்தை எதிர்த்து நிற்கிறார்கள்.

குறிப்பாக அண்ணன் சீமான் எழுப்புகிற அதிரடி கேள்விகளால் குழம்பிக் திரிகிறது திராவிடம். மண்ணின் பூர்வகுடி மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஆரியத்தின் நோக்கங்களை நிறைவேற்ற ஆரியம் தயாரித்த ஆயுதம் தான் திராவிடம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகிவிட்டது.பாஜக ஹெச் ராஜா நாங்கள்தான் திராவிடர்கள், சங்கராச்சாரியே திராவிட சிசு தான், நாங்கள் பஞ்ச திராவிடர்கள், மோடி கூட திராவிடர் தான் என பேசி அதிர வைத்திருக்கிறார். மறுபுறம் பாஜக தலைவர்அண்ணாமலை நான் கருப்பாக இருக்கிறேன் நானும் திராவிடன் என கச்சை கட்ட, எருமை கூட கருப்பாகத் தான் இருக்கிறது அது திராவிடரா என வினா எழுப்பி ஒரே நேரத்தில் ஆரிய/ திராவிட முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் அண்ணன் சீமான்.

ஒருபுறம் 60 ஆண்டு காலமாய் திராவிடம் குட்டையை போட்டு குழப்பியதில் யுவன் சங்கர் ராஜா தலை கிறுகிறுத்து கருப்பு திராவிடன் என கருவாட்டு சாம்பார் போன்ற ஒரு புதிய இனத்தை கண்டுபிடிக்க, மறுபுறம் அவர் தந்தை இளையராஜாவை வைத்து ஆரியம் அம்பேத்கரின் கனவுகளை மோடி நிறைவேற்றுவதாக கதை கட்டிக் கொண்டிருக்கிறது.இரண்டு புரட்டுகளும் ஒரே நேரத்தில் அம்பலமாகி உருட்டுகளாய் மாறிக் கொண்டிருக்கின்ற‌ வேளை இது.

வண்டி இழுக்கும் எருமை மாட்டை நாய் பார்த்து குரைக்கிறது என அபூர்வ தத்துவத்தை உதிர்த்திருக்கிறார் மிஸ் யூ மனுஷ்.60 ஆண்டுகளாக இவர்கள் இழுத்த இழுப்பில் வண்டி கவிழ்ந்தது தான் மிச்சம் ‌. இதில் என்ன ஆச்சரியம் என்றால் பாஜகஅண்ணாமலைக்கு எதிராக அண்ணன் சீமான் பதில் சொன்னால் திமுக மனுஷ்யபுத்திரனுக்கு மண்டை காய்கிறது. முதலில் பெரியார் கூட திராவிடத்தை இனமாக கட்டமைக்க வில்லை என்பதை வேண்டுமென்றே மறைத்து , வந்தவர் போனவர் எல்லாம் வாழ்வதற்கும், ஆள்வதற்குமான பொதுக்கழிப்பிடம் ஆக தமிழ்நாட்டை மாற்ற, மீண்டும் மீண்டும் திராவிடம் என்கிற பொய்க் கதையை இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாருக்கு மொழி/ இனம்/ தேசியத்தின் மீது எவ்விதமான நம்பிக்கையோ பற்றோ இருந்ததில்லை என்பதை அவரே தெளிவுபடுத்தி இருக்கிறார்.எதுவுமே இல்லாத திராவிடத்தை வெறும் பிழைப்புக்காக தமிழர்கள் மீது திணிப்பது என்பது ஒரு தேசிய இனத்திற்கு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிற அவமானம்.எச் ராஜாவே நானும் திராவிடன் தான் என சொன்ன பிறகு திராவிடம் என்பதே போலி என தெளிவாகிவிட்டது.

தமிழன் என்று சொன்னால் பார்ப்பனர் உள்ளே வந்துவிடுவார் என பயங்காட்டி பார்ப்பனர் ஒருவரையே திராவிட இயக்கத்தின் தலைவர் ஆக்கி சமூக நீதி காத்த வீராங்கனை என பெரியார் திடலே பட்டம் கொடுத்த படம் தான் இவர்களது வரலாறு.திராவிடம் என்கின்ற அடையாளத்தை பூர்வகுடி தமிழர்கள் மறுப்பதன் வாயிலாக அவர்களுக்கான தனித்துவ அரசியல் அதிகார கதவு திறக்கிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பிறகுதான் திராவிடத் தலைவர் பெரியாரை கூட இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் என இனமாற்றம் செய்யத் துடிக்கின்றன அறிவாலயத்து ஒட்டுத் திண்ணைகள்.

எப்படி ஆரியம் தமிழைத் தவிர்த்து இந்தியைத் திணிக்கிறதோ, அதேபோல தமிழர் அடையாளத்தை மறுத்து திராவிடம் திணிக்கப்படுகிறது. இரண்டையும் எதிர்த்து தமிழ்த் தேசியம் மேலெழும்பத் துடிக்கிறது.அண்ணன் சீமான் ஒரு புதிய கதவினை திறந்து இருக்கிறார். தன் எளிமையான கேள்விகளால் , வலிமையான திராவிடக் கோட்டையை மறுக்கவே முடியாத தர்க்க வெடிவைத்து தகர்த்து வருகிறார்.

இனி ஒரு சீமான் மட்டுமல்ல, வீதிக்கு வீதி சீமான்கள் முளைப்பார்கள். அவர்கள் ஒரே சமயத்தில் ஆரியத்தின் உச்சிக் குடுமியையும், திராவிடத்தின் ஆணி வேரையும் பிடித்து குலுக்குவார்கள்.நம்முடைய கேள்வி மிக மிக எளிமையானது.

எருமை கூட இருக்கிறது. நாம் கண்ணால் பார்த்து இருக்கிறோம். திராவிடம் எங்கே இருக்கிறது.??இனி வரலாற்றில் தமிழர் எதிர் ஆரிய/திராவிட யுத்தம் தான் இங்கே நடைபெற இருக்கிறது.

அந்த வரலாற்றில் கருப்பாய் பிறந்ததால் எருமையும் இடம் பெற இருக்கிறது என்பதுதான் கூடுதல் தகவல்..