❤️

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான்.

நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா தான் கேரம்போர்டு விளையாடுவாள். டிரேடு என்று சொல்லக்கூடிய ஒரு விளையாட்டு. பரமபதம் சதுரங்கம் அமர்ந்து விளையாடக்கூடிய எல்லா விளையாட்டுகளிலும் அம்மா தான் அமர்ந்திருப்பாள். நான் கற்பனை காண்பது எதையாவது படித்து பரவசம் அடைவது என எனது எல்லா உணர்ச்சிகளையும் அம்மாவிடம் தான் கொட்டுவேன்.

அம்மாவிற்கு 16 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 17 வது வயதில் நான் பிறந்து விட்டேன். 17 வயதில் நோயுற்ற ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக மருத்துவமனைகளுக்கு அலைந்த இயல்பு வாழ்க்கையை மீறிய அவலமும், அலைகழிப்பும் கொண்ட வாழ்க்கையை அடைந்த ஒரு தாய் எனது அம்மா. இப்போதுள்ள கருத்தடை போன்ற அறிவியல் வசதிகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நோயுற்ற ஒரு குழந்தை பிறந்து விட்டானே என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மா அடுத்த குழந்தையை கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு மனிதனாக அது போன்ற தருணங்களை என்னால் இந்த வயதில் புரிந்து கொண்டு கண்கலங்க முடிகிறது.

தனிமை தரும் வலி என்னை வதைத்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும்‌‌ நான் சாய்வதற்கான தோள்களை அம்மா தயாராகத்தான் வைத்திருக்கிறாள். இன்றளவும் கூட அப்படித்தான்.

இன்றும் நான் காலையில் எழுந்து தேடும் முதல் முகம் என் அம்மா உடையது தான். என்னை மட்டுமல்ல என் பிள்ளைகளையும் அவள் தான் வளர்த்து ஆளாக்குகிறாள்‌ . என் மகன்களுக்கு அவர்களது தாய் தந்தையரை விட தாத்தா ஆத்தா தான் முதன்மையானவர்கள் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் தான்.

நான் படுத்து “பறக்கும் குதிரை” கதை கேட்ட அதே மடியில் தான் என் மகன்களும் படுத்து அதே “பறக்கும் குதிரை” கதை கேட்டார்கள்.

இன்றளவும் எனது சிறு அசைவுக்கு கூட அம்மாவிடம் ஏற்படும் மாற்றம் மிக வியப்பானது. அதை பதைபதைப்பு என்று சொல்வதா, தன் தயாராவதற்கான ஆயத்தம் என்று சொல்வதா என்றெல்லாம் எனக்கே குழப்பங்கள் உண்டு.

சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் சற்றே தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இது போன்ற நூற்றுக்கணக்கான சூழ்நிலைகளை அம்மா தன் வாழ்வில் சந்தித்திருந்தாலும், இந்த முறை ஏனோ கொஞ்சம் தளர்ந்து விட்டாள். கொஞ்சம் காலில் அடிபட்டு இருந்தாலும் அம்மாவிற்காக அடுத்த நாளே நான் எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாலும் இந்த முறை அம்மாவை சமாதானப்படுத்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

கீழே விழுந்து கொஞ்சம் அடிபட்டு இருந்த என்னை பார்க்க

பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் வந்திருந்த போது அம்மா உடைந்து அழ, அம்மாவிற்கு எந்தவித சமாதானமும் சொல்லாமல் ஐயா அவர்கள் அமைதியாக தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் சதீஷ் அம்மாவை சமாதானப்படுத்துங்கள் ஐயா எனக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஐயா அவர்கள் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த நிலை எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அம்மாவிற்கு ஏதோ ஐயா ஆறுதல் சொல்வார்கள், அம்மா சமாதானம் அடைவாள் என நினைத்த எனக்கு ஐயாவின் அமைதி ஆச்சரியமாக இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கலங்கிய கண்களோடு ஐயா நிமிர்ந்து பார்த்தார். ஏன் ஐயா எதுவும் சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு… “அந்தத் தாய்மை கொண்ட வலிக்கு ஆறுதல் கூற என்னிடத்தில் மொழி இல்லை, அப்படி மீறி கூறினாலும் அந்த மொழி பற்றாக்குறையாக தான் இருக்கும், எனவே அதுவே அழுது அதுவே ஓயட்டும்..” எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்தவாறே சென்றார். தமிழ் மொழி மட்டுமல்ல உணர்வின் மொழியும் அறிந்த பெருமகன் அவர்.

அந்த நொடியில் நான் முடிவெடுத்துக் கொண்டேன். அம்மாவிற்காவது நான் நிறைய வேலைகளை என் சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை எடுத்துக்கொண்டு செய்து என்னை இயல்பானவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்து சமீபத்தில் எங்கள் இல்லத்தில் ஒரு திருமணமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்றும் அப்படித்தான். நான் போராட்டத்திற்கு கிளம்பினேன். போராட்டத்திற்கு நிறைய ஆட்களை அழைப்பதற்காக பேசிக் கொண்டே இருந்தேன். அம்மா உடனே எதுவுமே சொல்லாமல் நானும் அப்பாவும் வருகிறோம் என்று என் காரில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மகன் எதன் பொருட்டும் சங்கடப்பட்டு விடக்கூடாது. குறிப்பாக எனது நாம் தமிழர் முயற்சிகளில் அனைத்திலும் என் தாய் தந்தையரின் பங்கு உண்டு. அவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் சீமான் இன்னொரு மகன்.

மூத்த மகன் எடுக்கின்ற முயற்சிகளுக்கு இளைய மகன் நிற்க வேண்டும் என்கிற தீவிரம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு.

போராட்டத்தில் நின்று நான் பேசி முடிக்கும் வரை அம்மா என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த தன் மிக முக்கியமான காரணம் தஞ்சை சாலையில் தடுமாறி விழுந்துவிட்ட தன் மகன் கும்பகோணத்தில் விழாமல் நின்று பேசி விடுவான் என்ற நம்பிக்கை.

அம்மா நம்பிக்கை என்று பலிக்காமல் இருந்திருக்கிறது..??

நானும் பேசிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

அம்மா நான் நன்றாக பேசினேனா என்று என் கேள்விக்கு..

கலங்கிய விழிகளோடு என் அம்மா அளித்த பதில் ..

“நல்லா ஆயிட்ட.”

❤️

அம்மாவைப் போன்ற ஒரு தேவதை என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்னதான் நேர்ந்து விடும்..??