Disclaimer.

முதலில் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.”

இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே.

????

எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம்.

90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில் இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் “ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற
மிக மிக சாதாரண சம்பவங்கள்.

எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம். அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் “அறுவடை நாள் “திரைப்படத்தில் வருகிற “தேவனின் கோவில் மூடிய நேரம் ..”என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை.

இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை.

இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான்.

2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு “காட்டு மல்லி”பூத்திருக்கிறது.

நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் “காட்டுமல்லி ” குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம்.

அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் “உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை …?” என்பது போல அபத்தமாக இருந்தது.

ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய “ஜெய் ஹோ ” பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய “நாட்டுக்குத்து “பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான்.

சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் “அலைகள் ஓய்வதில்லை “படத்தின் “புத்தம் புது ராகம் ..”என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது.

தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது.
என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எங்களுக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்கு எம் வாழ்த்துக்கள்.

❤️