????

என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது.

ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும்.

அதைத்தான் தனது தீவிர திரை மொழி மூலம் மாமன்னன் ஆக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

மிக மிக சாதாரண “மண்”ணாக இருந்தவர் எப்படி மாமன்னனாக மாறினார் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரி சுருக்கம்.

தனது முந்தைய திரைப்படங்களைப் போல சாதியை மறைமுகப் பொருளாக வைத்து உரையாடல்களை நிகழ்த்தாமல் நேரடியாக சாதியின் நுட்பமான உணர்ச்சி படிமங்களை காட்சி மொழியாக்கி இருக்கின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணனில் தனக்கு சாத்தியப்பட்ட தனக்கே உரிய திரை மொழி வசீகரத்தை மாமன்னன் திரைப்படத்தில் இழந்துவிட்டது போல ஒரு உணர்ச்சி.

சாதி முரண்பாடுகளைப் பற்றிய ஒரு உரையாடலை இரண்டு தேனீர் கோப்பைகள் ஊடாக தொடங்குவோம் என்றது பரியேறும் பெருமாள். சாதியை பற்றி மிக நுட்பமாக பேசும் அந்தத் திரைப்படத்தில் அதி உச்ச அழகியல் எது என்றால் சாதி என்ற சொல் அந்த திரைப்படத்தில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது தான்.

கர்ணனும் அப்படித்தான். அடுக்கடுக்கான படிமங்களால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்கள் சிந்திக்க நிறைய ஊடு பொருள்களை புதைத்து வைத்து சாதி உணர்ச்சியின் கோரத்தை ரத்தமும் சதையுமாக நம்மை அனுபவிக்க வைத்திருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதே வித்தை மாமன்னனிலும் சாத்தியமாகி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. அதில் என்ன வருத்தம் என்றால் மாமன்னன் போன்ற சாதி மறுப்பு உளவியலை திரை மொழியாக கொண்ட திரைப்படங்கள் கலை நேர்த்தியில் மிளிர வேண்டும் என்கின்ற விருப்பம் தானே ஒழிய வேறொன்றுமில்லை.

ஆனாலும் வடிவேல் என்கின்ற ஒரு உச்ச கலைஞன் தன் கலை வாழ்வின் சிகரத்தை தொட்டு நம்மை நோக்கி திரும்பிப் பார்த்த அனுபவத்தை மாமன்னன் நமக்கு ஏற்படுத்துகிறான்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இதுதான் கடைசி படம் என்றார்கள். ஆனால் இதுதான் அவருக்கு முதல் படம். உணர்வுகளை முகத்தில் உறைய வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த திரைப்படம் தான் அவருக்கு வழங்கியிருக்கிறது.

படத்தை இந்த இருவருக்கும் இணையாக தாங்குவது பகத் பாசில் என்கின்ற நடிப்பு அரக்கன் தான். மூவரும் இருக்கும் காட்சியில் பகத் பாசில் மிக எளிதாக வடிவேலு மற்றும் உதயநிதியை ஓவர் டேக் செய்து திரையை ஆதிக்கம் செய்வது என்பது அவரது கலை மேதமை.

மற்றபடி இந்தத் திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படங்களில் தென்படாத பிரச்சார நெடி சொல்ல வருகிற மிக முக்கியமான கருத்தினை பலவீனப்படுத்துகிறது.

காட்சி அமைப்புகளில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள திமுக சார்பு நிலை ,புத்தர் சிலைகள் ,அம்பேத்கர் ஓவியம் ,பன்றி குட்டி டாட்டூ இவை எல்லாம் மாமன்னனுக்கு எந்த வலிமையும் சேர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி சற்றே நீண்டு ஏதாவது நடத்தி திரைப்படத்தை முடியுங்கள் என பார்வையாளர்கள் நினைக்கும் அளவிற்கு திரை மொழி சீரமைப்பு இல்லை.

திமுகவின் கருப்பு சிவப்பு சாயலில் வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட அரசியல் கட்சி கட்சியின் தலைவராக வருகின்ற மலையாள நடிகர் லால் பேசுகிற சமூக நீதி வசனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு பொருந்தாது என்பதுதான் கடந்த கால வரலாறு.

திராவிட இயக்கங்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று வரை ஒரு மாமன்னன் திரைப்படம் எடுப்பதற்கான தேவை இந்த மண்ணில் எழுந்திருக்காது. திராவிட இயக்கங்கள் தனது வரலாற்று வழிப் பாதையில் செய்து கொண்ட அப்பட்டமான சமரசங்கள், பிழைப்புவாதங்கள் போன்றவைகளால் தான் இன்னும் இங்கே சாதிய இருப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டு எழுந்து நிற்கிறது.

எனவே சமூக நீதி அரசியல் என்றால் அது திமுக தான் என மாமன்னன் திரைப்படம் கட்டமைக்கின்ற போலிபிம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதிக்காக மிகச் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்பதை எவ்வித உணர்ச்சியும் கடத்தாத அரசியல் பேசும் காட்சிகள் காட்டி விடுகின்றன.

வேட்பாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் ,ஒன்றியச்செயலாளர்,வட்டச் செயலாளர் வரை சாதி பார்த்து மிகச்சரியாக ஆதிக்க சாதிக்கு பொறுப்பளிக்கின்ற திராவிட இயக்க அரசியல்தான் மாமன்னன் மற்றும் அதிவீரன் போன்றவர்கள் அனுபவிக்கின்ற அத்தனை கொடுமைகளுக்கும் மூல காரணம் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜின் கலை ஆன்மா உணர்ந்திருக்கும் தான். ஆனாலும் அதை அவரால் ‘செஞ்சோற்றுக் கடனுக்காக’ வெளிப்படையாக பேச முடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி மாமன்னனில் சில அற்புத தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த மலைமுகட்டில் வடிவேலு தனது இயலாமையை எண்ணி கைப் பிசைந்து கண்கலங்கி நிற்கின்ற அந்தக் காட்சி இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் அதி உச்சமானது. அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆபத்துகளை உள்ளுணர்வால் உதயநிதி உணர்கிற தருணங்கள். தந்தை மகனுக்கு இடையே இருக்கின்ற நேசமிக்க கணங்கள் போன்ற காட்சிகளில் இயக்குனர் மாரி செல்வராஜின் திறமை பளிச்சிடுகிறது.

சாதியின் நுட்பமான புள்ளிகளை வலிமையாக பேச வந்த திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு அரசியல் அதிகாரப் போட்டி தேர்தல் என்றெல்லாம் திசை மாறி அலைகழிவது இயக்குனர் மாரி செல்வராஜ் கதை அமைப்பில் கொண்டிருந்த தடுமாற்றங்களை அப்பட்டமாக காட்டுகிறது.

மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்த்து செல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு மாமன்னன் ஒரு புதுவிதமான திரைப்பட அனுபவத்தை தரும் தான். ஆனால் ஒரு இயக்குனராக தன் படைப்பாக்க உச்சத்தின் அனுபவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அனுபவித்தாரா என்பது சந்தேகமே.

மாமன்னன் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம்.

????