————————————-
* நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும்..
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிக உச்சத்தில் இருக்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு காலத்தில் டீக்கடைகளிலும், தெருமுனைகளிலும், கடைத்தெருகளிலும், சலூன் கடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசப்பட்டு வந்த அரசியல் இன்று மெய்நிகர் தளங்களில் (Virtual Space) பேசப்பட்டு வருகிறது. முகநூல், ட்விட்டர் போன்ற மெய்நிகர் தளங்களில் வினை /எதிர்வினை ஆற்றுபவர்களை நேரடியாக நமக்கு தெரியாது. அவர்களின் பின்புலம், அவர்களது பலம் /பலவீனம் எதுவும் தெரியாது. அந்தந்த நேரத்து கருத்துச் சண்டை அவ்வளவே. எனவே கவனம் முக்கியம்.
சமூக வலைதளங்களில் வருகின்ற எதிர்மறை கருத்துக்களை கையாளுவது என்பது நம்மில் பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கிறது. பல நேரங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளை பரப்புகின்ற மிகப்பெரிய நபராக நாமே இருந்து விடுகிற ஆபத்தும் இந்த இணைய உலகில் இருக்கிறது. ஆர்குட் காலகட்டத்தில் இருந்து பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் என பல்வேறு சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படுகின்ற கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது என்பதற்கான உளவியல் புரிதல் நமக்குள்ளாக தேவையாக இருக்கிறது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் அண்ணன் சீமானை பற்றி எந்த ஒரு விமர்சனம் வந்தாலும், அதற்கான எதிர்வினையை செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பது என்பது அவர்களது இனப்பற்றினை காட்டுகிறது.அதே சமயத்தில், எதிர்வினை செய்கிறோம் என்ற பெயரில் நம் குறித்தான ஒரு எதிர்மறைக் கருத்தை நாமே விளம்பரம் செய்யக்கூடிய ஆபத்தும் இதில் இருக்கிறது. இந்த விளம்பரத்திற்கு ஆசைப்பட்டுதான், நம் குறித்தான எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் தொடர்ச்சியான ஆதாரம் அற்ற அவதூறுகளை, வசவுகளை, குற்றச்சாட்டுகளை நம் மீது ஏறி வருகிறார்கள். அண்ணன் சீமான் பெயர் இருந்தாலே நாம் விரைந்து சென்று அந்த காணொளியை பார்த்து விடுகிறோம்.அதற்கு பதில் சொல்லவும் தயாராகி விடுகிறோம். இதனால் நம் எதிரி இரண்டு லாபங்களை அடைகிறான். ஒன்று காணொளியை பார்க்க வைத்து நம் மூலமாக அவனுக்கான வருமானத்தை பெறுகிறான். அடுத்தது அவன் காணொளிக்கு நம்மையே விளம்பரம் செய்ய வைக்கிறான்.
எனவே இது போன்ற எதிர்மறை பதிவுகள் நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு விதமான மறைமுக அழைப்பு. நாமும் பதில் சொல்கிறோம் என்ற பெயரில் யாருமே கவனிக்காத அந்த பதிவினை எதிர்வினை செய்து எல்லோரும் கவனிக்க வைக்கின்ற பதிவாக மாற்றுகின்ற தவறினையும் இழைக்கின்றோம்.
இங்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இணையதள உறவுகள் எதிர்மறை கருத்துக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சில எண்ணங்களை பகிர்ந்து உள்ளேன். இதைப் படித்துவிட்டு உங்களுக்கும் சில எண்ணங்கள் தோன்றலாம். அதையும் இங்கே பகிரலாம். இது அறிவுரைகளின் தொகுப்பு அல்ல. ஆலோசனைகள் அது சார்ந்த உரையாடல்கள் மட்டுமே.
1. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என துடிக்காதீர்கள். சில அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு நம் மௌனத்தை விட மிகச் சரியான பதில் வேறு எதுவும் இல்லை.
2. எப்போதும் மதிப்பு மிகுந்த சொற்களால் எதிரியை அணுகுங்கள். அவன் கருத்தை மட்டும் எதிர்க்கிற உங்களது மதிப்பு மிகுந்த சொற்கள் அவனை பதட்டப்படுத்தும். பலவீனமடைய செய்யும்.
3. எந்த விளக்கங்கள் கொடுத்தாலும் ஏற்காமல் தொடர்ந்து அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள்.அவர்களை மாற்ற நாம் பிறக்கவில்லை. அவர்கள் மாறவும் போவதில்லை. எனவே கண்டு கொள்ளாமல் கடந்து விடுவது அவரது விமர்சனத்தை மதிப்பற்ற ஒன்றாக மாற்றும்.
4. பதிவுகள் எழுதும் போது தர்க்கங்களாக வகுத்துக் கொண்டு, ஆதாரங்களோடு பதில் அளியுங்கள். கூடுதலாக நம் எதிரிகள் செய்த வரலாற்றுப் பிழைகள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் படித்து ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினாலே போதும். இவர்களின் கதை முடிந்து விடும்.
5. விமர்சனங்களை எழுதும்போது பெரும்பாலும் அதிக எழுத்துப்பிழை, கருத்துப் பிழையில்லாமல் எழுதுங்கள். அண்ணன் சீமான் எங்களைப் போன்றவர்களிடத்தில் அடிக்கடி வலியுறுத்துவது இதுதான். ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருங்கள். பிழைகளை திருத்துங்கள். வாக்கியங்களை செம்மைப்படுத்துங்கள். கூர்ந்த சொற்கள் அனைவராலும் ஈர்க்கப்படும்.
6. இதுதான் மிக மிக முக்கியம். நம் குறித்தான எதிர் கருத்திற்கு பதிலளிக்கும் போது விமர்சனங்களை அப்படியே எடுத்து பகிர்ந்து விட்டு பதில் அளிக்க தேவையில்லை. அது நம் எதிர்க்கருத்திற்கான விளம்பரத்தை பெற்றுத் தரும். கருத்திற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. இன்று கூட ஒன்றை கவனித்தேன். யாருமே கவனிக்காத மதிப்பற்ற மலிவான இழிவான கார்ட்டூன் ஒன்றினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் நமது ஆட்களே பரப்பிக் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதை பொருட்படுத்தாமல் இருந்தாலே போதும். அதுவே இல்லாமல் போய்விடும்.
5. ட்வீட்டர் போன்ற தளங்களில் நமது கட்சியின் நிலைப்பாடுகளை மிகச் சரியாக எழுதுகிற கட்சி உறவுகளின் பதிவுகளை நிறைய பரப்புங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொண்டால் தான் நம் சார்பான கருத்துக்கள் இணையவெளி எங்கும் நிரம்பி இருக்கும்.
6. அண்ணன் சீமான் அவர்கள் பேசிய காணொளியை சிறுசிறு துண்டுகளாக நமது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் உறவுகள் எப்போதும் வடிவமைத்து அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது ,அதை எல்லா இடங்களிலும் பரப்புவது தான். அண்ணன் சீமான் அவர்களது சிறு காணொளித் துண்டுகள் எதிர் கருத்துக் கொண்டவர்களால் கூட விரும்பப்படுகிறவைகளாக உள்ளன.
6. ஒரே பதிவில் அடுத்தடுத்து பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சொல்ல வேண்டிய பதிலை வலிமையாக சொல்லிவிட்டு நகர்ந்தாலே போதுமானது. எதிரி வைக்கும் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளித்துக் கொண்டே இருந்தால், நாம் இயங்க நேரம் இருக்காது.
7. அரசியல் சார்ந்து நிறைய புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தினை நமது உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணையதளம் சார்ந்து இயங்குகின்ற உறவுகள் தமக்குள்ளாக ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.நன்கு படிப்பவர்களின் பதிவுகள் தனித்து தெரியும்.
8. காணொளி பதிவுகளாக பதில்களை சொல்ல விரும்பும் உறவுகள் போகிற போக்கில் ஒரு காணொளி போடுவதை தவிர்த்து, ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து தேர்ந்த ஒளியில் நல்ல ஒலித் தரத்தோடு என்ன பேச வேண்டும் என்கின்ற முன் தயாரிப்போடு காணொளியை தயாரிக்க வேண்டும். அதை சீரிய முறையில் எடிட் செய்து சிறந்த முறையில் வெளியிட வேண்டும். தொடர்ந்து வெளியிடுகிறவர்களாக இருந்தால் நீங்களும் ஒரு youtube சேனல் தொடங்கலாம்.
9. நாம் யார் என இந்த உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது என்கின்ற எண்ணம் நமக்கு எப்போதும் வேண்டும். நமது சொற்களால், நமது பதிவுகளால், நம் கட்சியின் மாண்பிற்கு எந்தவித நெருக்கடியும் ஏற்பட்டு விட கூடாது. தவறான ஒரு பதிவு ஏற்படுத்தும் விளைவைக் காட்டிலும் பதிவு எழுதாமல் இருப்பது மிகச் சிறந்தது.
10. அரசியல் சார்ந்த பதிவுகளை எழுதுபவர்கள் குடும்பத்தாரோடு இருக்கின்ற புகைப்படங்களை பெரும்பாலும் பதிவிடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல எதிர் தரப்பினரின் கருத்தை மட்டுமே எதிர்த்து விட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்காமல் தவிர்ப்பது நமக்கான மதிப்பினை உயர்த்தும்.
இறுதியாக ஒன்று.
எதற்கு பதில் அளிக்க வேண்டும், எதற்கு பதில் அளிக்கக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டாலே சமூக வலைதளங்களில் இப்போது இருக்கும் நிலையை காட்டிலும் புலிக்கொடியை இன்னும் உயர பறக்க விடலாம்.
அதற்குத் தேவை..
ஒவ்வொரு பதிவிற்கும் முன்னதாக இது தேவையா, தேவையில்லையா சரியா- தவறா, என்று கட்டாயமாக தோன்ற வேண்டிய ஒரு நிமிடச் சிந்தனை.
சிந்திப்போம்.
மறுமொழி இடவும்