ஆசிரியர் என்றால் என்ன என்கிற எளிய கேள்விக்கு, “கற்பித்தல் என்ற முறையில் மாணவர்களுக்கு அறிவு திறன் மற்றும் நல் ஒழுக்கத்தை பெற உதவுபவர்..” என விக்கிப்பீடியா கூறுகிறது. இதில் அறிவு, திறன் போன்றவை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுபவை என்றாலும், நல் ஒழுக்கம் என்பது வகுப்பறையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒரு சிறந்த ஆசிரியரை மாணவன் தன் வாழ்நாளில் மறப்பதில்லை.

ஒரு கல்லூரி பேராசிரியரின் மகன் என்கின்ற முறையில் என் தந்தையை சந்திக்க வருகிற எத்தனையோ மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை கண் பார்வை தெரியாத மாணவர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கை வைப்பதற்காக தன் ஆசிரியரான என் அப்பாவை தேடிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார்.

அவர் கல்லூரி படிப்பு முடித்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. என் அப்பா ஏதோ வேலை நிமித்தம் வெளியே போயிருந்த நேரம் அது. அவர் என் அலுவலகத்தில் என் தந்தைக்காக காத்திருந்தார். மெதுவாக பேச்சு கொடுத்து பார்த்தேன். தன்னைப் பார்வையற்றவர் என எல்லோரும் பரிதாபமாக பார்த்த போது அவரது ஆசிரியரான என் தந்தை தான் அவருக்கு நம்பிக்கை கொடுத்ததாக சொன்னார்.

இந்த வாழ்வில் நாம் கைவிடப்படுகின்ற தருணங்களில் எல்லாம் நாம் தேடி அலைவது நம்பிக்கை மிகுந்த சொற்கள் தானே. நம் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபரின் ஆன்மாவிலிருந்து வருகின்ற சொற்கள் தரும் நம்பிக்கைதான் நட்டாற்றில் கைவிடப்பட்ட நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறது.தன் ஆசிரியரை அந்தப் பார்வையற்றவர் நினைவு கூறும் போதெல்லாம் சற்றே உணர்ச்சிவசப்பட்டார் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

இன்னும் ஆழமாக அவர் மனதில் என் தந்தையின் உருவம் எப்படி இருக்கும் என நினைத்து வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு அடுத்ததாக அவர் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

“பார்வைத்திறன் உள்ள உங்கள் விழிகளை காட்டிலும் இன்னும் அதி துல்லியமாக என் ஆசிரியரின் உருவம் என் ஆழ் மனதில் வரையப்பட்டிருக்கிறது..” என்றார் அவர்.

எதையும் வெறும் விழிகளால் பார்ப்பதை விட மனதால் பார்ப்பது வலிமையானது தானே..

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே என் தந்தையார் வந்து விட்டார். என் தந்தை காலடி சத்தம் கேட்டவுடன், அதுவரை தன்னைக் கடந்த எந்த காலடி சத்தத்திற்கும் எழுந்து நிற்காத அந்தப் பார்வையற்ற மாணவர் எழுந்து நின்றார். தன் ஆசிரியரின் காலடி ஒலி அவருக்கு அவ்வளவு பரிச்சயமாக இருந்தது.

என் தந்தை வந்தவுடன் தன் மாணவனின் கரத்தை இறுக பற்றிக் கொண்டார். சில நொடிகள் அந்த இடம் அமைதியாக இருந்தது. என் தந்தைக்கு அது ஒரு உணர்வுபூர்வமான தருணம். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியில் இருந்தமைக்கான உச்சகட்ட அங்கீகாரத்தில் அவர் மிதந்து கொண்டு இருந்தார் என்பதை நெகிழ்ந்து கலங்கிய அவரது கண்கள் மூலம் நான் கண்டு கொண்டேன்.

…..

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் எனது இயற்பியல் ஆசிரியர் ஜெகதீசன். வழக்கமான பாட கற்பித்தல் முறையை தூக்கி எறிந்து விட்டு உரையாடல்கள் மூலமாக மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான கல்வி அமைய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” என்கிற குறளை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவனுக்காக தலைமை ஆசிரியரிடம் சென்று சண்டை போட்டுவிட்டு அவரது மேசையில் தன் மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு வந்து விட்டார்.அந்த மாணவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தலைமை ஆசிரியர் பொறுமை காக்க, மறுநாள் அந்த மாணவன் எங்கேயோ பணம் ஏற்பாடு செய்து கட்டணத்தை செலுத்தி விட்டான்.

நன்றி சொல்வதற்காக ஜெகதீசன் சாரை சந்திக்க வந்த அந்த மாணவன் கலங்கிக் கொண்டே .‌”எனக்காக மோதிரத்தை கொடுத்து விட்டீர்களே சார்..” என சொல்ல, “அந்த மோதிரம் தங்கம் என்ற உலோகத்தால் ஆனது. உனது படிப்பு அந்த உலோகத்தை விட மதிப்பு மிகுந்தது..”. எனக் கூறிய அவரது சொற்கள் இன்னும் எனக்கு நினைவில் நிற்கின்றன.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் எனது தமிழாசிரியர் விஜயராகவன். மாணவர்களை தனியார் நிறுவனங்கள் வெளியிடும் நோட்ஸ் வாங்குங்கள் என சொல்லும் ஆசிரியர்களுக்கு மத்தியில் தான் நடத்தும் பாடங்களிலிருந்து மாணவர்களுக்கான நோட்ஸ் எனப்படும் பாடப் குறிப்புகளை தயாரித்து எழுத வைப்பார். மிக சுவாரசியமாக வகுப்புகளை வகுப்பறையில் அரசியல் பேசுவார். தேர்தல் முறை மூலம் வகுப்பு தலைவனை தேர்ந்தெடுப்பார்.

அந்தக் காலகட்டத்தில் போலியோ பாதிக்கப்பட்ட என் கால்களுக்கு உலோகத்தில் ஆன காலிபர் அணிந்திருப்பேன். என் உடல் சிரமத்தால் நான் வகுப்பு தலைவனாக மாற மறுத்தபோது, அந்த முறை என்னை வலுக்கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்து, வகுப்பு தலைவன் ஆக்கினார். இதற்கு எதிரே போட்டியிடும் மாணவனை அழைத்து சொல்லி இருந்தால் அவன் போட்டியிலிருந்து விலகி இருப்பான் தான். இது குறித்து கேட்ட போது, ” நீ போட்டி போட்டு வெல்வது தான் உனக்கான தகுதி. அது கருணையால் எப்போதும் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இரு.‌” என்று சொன்னார்.

பள்ளி முடிந்தவுடன் வகுப்பறையில் அந்த காலிப்பரை சரி செய்து கொண்டு நான் வெளியே நடந்து வரும் வரையில் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டு நடந்து வருவார். நான் எழுதும் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் அவரது பிச்சை என இந்த நொடியில் நினைத்து நெகிழ்கிறேன்.

அதேபோல் எனது மூத்த வழக்கறிஞர் பலராமன். எந்தத் தருணத்திலும் அவர் என்னை விட்டுக் கொடுத்தது இல்லை. வாழ்க்கையின் அனைத்து விதமான பிழைகளையும் செய்துவிட்டு ஒரு நாள் மாலையில் அவர் வீட்டுத் திண்ணையில் படுத்து இருந்த போது, என்னை உள்ளே அழைத்துச் சென்று அவர் படுக்கையில் படுக்க வைத்தார். “நல்லா தூங்குடா.. எல்லாம் சரியாயிடும்.” என சொல்லிவிட்டு போனபோது என் கண்கள் நிறைந்து இருந்தன. ஏதோ ஒரு தருணத்தில் தூங்கி எழுந்த போது நள்ளிரவாகி இருந்தது. நான் எழுந்த சத்தம் கேட்டு விழித்த அவர் தனது இளம் மனைவியை அழைத்து எனக்கு கோதுமை தோசை சுட்டுத்தர சொன்னார். அக்கால கட்டத்தில் எல்லாராலும் கைவிடப்பட்ட நான் அன்றைய இரவில் அந்த கோதுமை தோசையால் தான் உயிர்ப்பித்தேன்.

“எல்லாம் சரியாகிவிடும்..” என அவரது சொற்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

….

அண்ணன் சீமான். வெறும் சொற்களால், அழைத்தலால் மட்டும் அவர் அண்ணனாக இருந்து விடுவதில்லை என்பதுதான் அவரின் முக்கியத்துவம். கட்சியிலே இணைகின்ற ஒரு எளிய தம்பிக்கு அண்ணனாக மாறுகிற அந்த தருணம் உள்ளொளி நிறைந்த உணர்வுபூர்வமானது. தம்பிக்கு மட்டும் அண்ணன் அல்ல. அவனது பெற்றோர்களுக்கு அவர் தான் மூத்த மகன். அவனது உறவினர் அனைவருக்கும் அவரும் உறவினர். நெகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட சிக்கலான இந்த உணர்ச்சி முடிச்சினில் தான் நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

” நாளும் பல நற்செய்திகள் ” என்று அவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு நாளையும் புதிதாக்குபவை. எல்லோரையும் வாசிக்க சொல்லும் அவர் தன் மேடையை மாபெரும் வகுப்பறையாக மாற்றுகின்ற மாபெரும் ஆசிரியர். அந்த வகுப்பறையில் அவர் அரசியல் சூழலியல் பொருளியல் என தொடாத பாடங்களே இல்லை. தலைப்பை சார்ந்து பேசுகிற ஒரே ஒரு அரசியல் தலைவர் இன்று தமிழ்நாட்டில் அவர் மட்டும்தான்.

தனிப்பட்ட வாழ்வில் நிறைய துரோகங்கள் முதுகுக்கு பின்னால் நடந்து விட்டன என உணர்ந்த ஒரு இரவில் அண்ணன் சீமானுக்கு என் மனவலி தாங்காமல் அழைத்தேன்.

அவரிடம் எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே இருந்தேன்.

“என்ன ஆச்சுடா..” என்று கேட்டார் அண்ணன். “துரோகம்னே .. ” என்று கலங்கியவாறு சொன்ன போது அண்ணன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். “நம் தலைவர் என்றால் சுட்டு விட்டுப் போய் விடுவார். நம்மால் அப்படி செய்ய முடியாது. நாம் விட்டுவிட்டு போய்விடுவோம்..” என்று அவர் மிகுந்த பக்குவத்துடன் சொன்னதைத்தான் என் வாழ்நாள் பாடமாக கடைபிடித்து வருகிறேன்.

எல்லாவற்றையும் கடப்பது என்பது வாழ்வில் மிக மிக முக்கியமானது. அதனால்தான் வாழ்க்கையை பெரும் நதிக்கு ஒப்பிடுகிறார்கள். துயரங்களும் ,துன்பங்களும் வெள்ளப் பெருக்காக பெருக்கெடுத்து ஓடும் இந்த வாழ்வென்ற நதியை கடப்பதற்கு நமக்கு கிடைத்த தோணிகள் தான் நம் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் தான் நம்மை வழி நடத்துகிறார்கள். வழி தவறும் கணங்களில் அவர்களது சொற்கள் நமக்கு திசைகாட்டிகளாக மாறுகின்றன.

“அறிவு என்பது ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வது. ஞானம் என்பது ஏதோ ஒன்றை கைவிடுவது..” என்கிற ஜென் தத்துவம் ஒன்று உண்டு.

அறிவையும் ஞானத்தையும் ஒரே நேரத்தில் அடைவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

அது நம் ஆசிரியரின் கண்கள். அதில் சரணடைந்தோர் யாரும் சங்கடப்படுவதில்லை.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.