திருச்சியில் ஒரு முறை ஒரு கருத்தரங்குக்கு அழைப்பதற்காக எனது ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தபோது கதவு லேசாக திறந்தும் திறவாதது போல இருந்தது. நானும், எனது நண்பனும் வாசலில் நின்று கொண்டு “சார்.. சார்” என அழைத்துப் பார்த்தோம். யாரும் வரவில்லை. பக்கத்து வீட்டில் மட்டும் ஒரு அம்மா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து நாங்களே தயங்கி அந்த கதவை சற்றே திறந்து பார்த்தபோது வீட்டின் நடு ஹாலில் ஒரு பெஞ்சில் ஒரு வயதான அம்மாவின் சடலம். பக்கத்திலேயே எங்களது பேராசிரியர் கண்கலங்கியவாறே உறைந்து அமர்ந்திருந்தார். அவர் கலங்கியவாறே எங்களை யாரோ என்பது போல அடையாளம் தெரியாமல் பார்க்க, நாங்கள் அவரது முன்னாள் மாணவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டோம். “சொந்தக்காரங்க யாருமே இல்லையா சார்..?” என கேட்டதற்கு அவர் தலை குனிந்தவாறு ‘யாரும் இல்லை’ என்று சொன்னார். அவருக்கு பிள்ளைகளும் இல்லை என நாங்கள் வந்த பிறகு எதிர் வீட்டில் இருந்து வந்த ஒரு பெரியவர் எங்களிடம் சொன்னார்.

எனது நண்பன் எங்கோ சென்று ஒரு மாலை வாங்கி வர, எங்கள் மாலையை வாங்கி எங்களது ஆசிரியர் அவர் மனைவியின் சடலத்தை தூக்கி கழுத்தில் போட்ட போது குலுங்கி குலுங்கி அழுதார். பிறகு தெருவாசிகள் ஒவ்வொருவராக வர, அவர்களது துணையோடு அமரர் ஊர்தி ஒன்றை அழைத்து மாநகராட்சி மின் மயானத்திற்கு செல்வதற்காக அதில் அவரையும், அவரது மனைவியின் சடலத்தையும் அனுப்பி வைத்தோம். போகும்போது எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றிப்பா.. இரண்டு பிணமாக போறோம்.” சொல்லிவிட்டு தளர்ந்த நடையோடு அவர் வண்டியில் ஏறி போகும் அக் காட்சி, அக்கணத்தில் எனக்கு புதுமைப்பித்தன் எழுதிய “செல்லம்மாள்” என்கின்ற சிறுகதையை நினைவூட்டியது. அதுதான் காலத்தை தாண்டி நிலைத்து நின்று நம் நினைவில் உறைந்து நிற்கும் ஒரு படைப்பின் அதிசயம்.

கதைகள் போல நம் அகம் பார்க்கும் கண்ணாடி வேறு ஏதுமில்லை. நாம் வாசிக்கும் கதைகளில் எங்கோ ஓரத்தில் ஏதோ ஒரு புள்ளியில் அக்கதையின் ஒரு சம்பவமாக அல்லது ஒரு கதாபாத்திரமாக அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வசனமாக நாம் தென்படும் போது அந்த கதை நமக்கு பிடித்ததாகி விடுகிறது. மிகச் சிறந்த கதைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. நம்மை யார் என்று நமக்கே காட்டுகின்றன. உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது என்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.

கதைகளில் இரண்டு மகத்தான வடிவங்களாக சிறுகதைகளும், நாவல் வடிவமும் இருக்கின்றன. சுருங்க சொல்லி, சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லி முடிப்பது சிறுகதை. இதுவே விரிவான வர்ணனைகளோடு பல பக்கங்களில் விரிவான பரப்பில் எழுதப்பட்டால் அது நாவல். சிறுகதை என்பது தென்னை மரம் போன்றது. நாவல் என்பது புளியமரம் போன்றது என எளிமையாக சொல்லி இருப்பார் மூதறிஞர் ராஜாஜி.

வாய் சொல் மரபு முடிந்து எழுத்து மரபு தொடங்கிய பிறகு 19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகை நிகழ்ந்தது. தமிழில் முதன் முதலாக அச்சிடப்பட்டது வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதை, ஈசாப் நீதிக் கதைகள், பெரிய எழுத்து கதைகள், அரிச்சந்திரன் கதை, நல்லதங்காள் தெனாலிராமன் கதை போன்றவை. அரை மணி நேரத்தில் ஓரிரு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சில சம்பவங்களை விவரிக்கும் கதையாடல் சிறுகதை என அழைக்கப்படுகிறது என்கிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற சிறுகதை ஆசிரியர் எட்கர் ஆலன்போ. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட சிறுகதை வ.வே.சு எழுதிய “குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை” இந்தக் கதை இடம்பெற்ற தொகுப்பு விவேக போதனி என்ற நூல். ரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மகாகவி பாரதி மொழிபெயர்த்து வெளியிட்டது தமிழ் சிறுகதைகளுக்கு வளம் சேர்த்தது.

இதன் பிறகு சொ.விருத்தாச்சலம் என்கின்ற புதுமைப்பித்தன் தான் தமிழ் சிறுகதைப் பரப்பில் புதிய போக்கினை உருவாக்கினார்.1906-ல் ஏப்ரல் 25ஆம் தேதி கடலூரில் பிறந்த புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் 108 சிறுகதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார். அதில் 48 மட்டுமே அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் வெளியாகி இருக்கின்றன. 42 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த புதுமைப்பித்தன் தமிழ் நவீன இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த மணிக்கொடி இதழில் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 50க்கும் மேற்பட்ட பிற நாட்டுப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து சோசலிசம் சார்ந்த சில அரசியல் நூல்களையும் எழுதி இருக்கிறார். திரைப்பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து கடும் நஷ்டம் அடைந்த புதுமைப் பித்தன் தனது 42 ஆம் வயதில் காச நோயால் காலமானார். அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு “கண்மணி கமலாவிற்கு” வாழ்வின் சகல விதமான துயரத்தையும் விவரிக்கும் அதே சமயத்தில் நேசத்தின் கனத்த சாறு நிரம்பியவை. இவரின் வாழ்க்கை வரலாற்று நூலை தொ மு சி ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாறு என்ற பெயரில் நூலாக எழுதி உள்ளார்.

இலக்கியம் என்றால் இதைப் பற்றி தான் எழுத வேண்டும் பேச வேண்டும் என்கிற வரையறைகளை அடித்து உடைத்தவர் புதுமைப்பித்தன்.

வாழ்வின் சில விஷயங்களை நேராக பார்க்க கூசிவிட்டு சுற்றி வளைத்து சப்பைக்கட்டு கட்டுவதை

எப்படி இலக்கியம் என கருத முடியும் எனக்கேட்ட புதுமைப்பித்தன் இலக்கியத்தை மனத்துயரத்தின் எழுச்சியாக கண்டார்.

அவரது புகழ்பெற்ற கதையான பொன்னகரம். அதில் ஒரு காட்சி.

“இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

அவரது கதைகளில் அதுவரை இலக்கியங்களில் தீண்டத்தகாதது என ஒதுக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், எளிய மனிதர்கள், வறுமையில் வீழ்ந்தவர்கள் என பலரும் கதாபாத்திரங்களாக உலா வந்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த அவரது புகழ்பெற்ற கதை “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்”

சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை என்பவர் சென்னை பிராட்வேயில் உள்ள ஒரு சந்தின் ஓரம் நின்று கொண்டு காபி சாப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கடவுள் முன் தோன்றி திருவல்லிக்கேணிக்கு எப்படி போவது என முகவரி கேட்டதிலிருந்து இந்த கதை தொடங்குகிறது.

முகவரி கேட்ட கடவுளை புதுமைப்பித்தன் வர்ணித்து இருக்கிற முறை அபாரமானது.

” வழி கேட்டவரை கந்தசாமி பிள்ளை கூர்ந்து பார்த்தார். வயசை நிர்ணயமாக சொல்ல முடியவில்லை. 60 இருக்கலாம் அறுபதாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் ‘கொழு கொழு’ என்று வளர்ந்த மேனி. வளப்பம்.”

கேலியும் நையாண்டியும் நிரம்பித் ததும்பும் இக்கதை தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு மணிமகுடம். எதையும் வேடிக்கையாக சொல்லும் பகடி மொழி என்ற ஒரு புதிய வகைமையை இக்கதை மூலமாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் புதுமைப்பித்தன்.

இறுதியில் கடவுள் இந்த பூலோக வாழ்க்கையை வெறுத்து மனிதர்களாகிய உங்களுக்கு வரம் தரலாம் ஆனால் உங்களுடன் வாழ முடியாது என பேசிவிட்டு போவது தான் இக்கதையின் முடிவு.அவரது இன்னொரு சிறு கதையான “காஞ்சனை” திகில் உணர்வை ஏற்படுத்தக் கூடியது.

வாழ்வின் கொடும் துயரிலும் விதி சமைத்த அவஸ்தைகளிலும் சிக்கிக் கொண்டு தான் பட்ட பாடுகள் அனைத்தையும் தன் எழுத்தின் மூலமாக கொண்டு தன் வாழ்க்கையையே தன் எழுத்தின் மூலமாக பகடை செய்து நவீன தமிழ் இலக்கியத்தின் மூதாதையாக மாறிய மாபெரும் மேதை புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற பெயரில் நிறைய பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன. பெரும்பாலும் எல்லா புகழ்பெற்ற பதிப்பகங்களும் புதுமைப்பித்தன் சிறுகதைகளை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ் சிறுகதைகளை தொகுத்த பேராசிரியர் அரசு மற்றும் திரு எஸ் ராமகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகளை தங்கள் தொகுப்பில் முதன்மையானதாக இணைத்திருக்கிறார்கள். 2002ல் இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு சீர் வாசகர் வட்டம் சென்ற வருடம் புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுத்து ரூ 200/- மக்கள் பதிப்பாக கொண்டு வந்தார்கள். அவரது எழுத்துக்களின் முழு தொகுப்பை ஆ.ரா.வேங்கடாசலபதி தொகுப்பில் காலச்சுவடு பதிப்பகம் மிகத் தரமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

மனித வாழ்க்கை அவ்வளவு புனிதகரமானதோ, மகிழ்ச்சிகரமானதோ இல்லை. எல்லா அவலங்களும் கீழமைகளும் நிரம்பித்ததும்பும் வாழ்க்கையை தன் தனித்துவ மொழியால் இலக்கிய பிரதியாக மாற்றிய புதுமைப்பித்தன் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய படைப்புகள்.

புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் / சீர் , என்சிபிஎச் , சாகித்ய அகாதெமி,

காலச்சுவடு மற்றும் பல பதிப்பகங்கள்.

கண்மணி கமலாவிற்கு- புதுமைப்பித்தன்/ தொகுப்பு இளைய பாரதி. டிஸ்கவரி புக் பேலஸ் விலை 200.

புதுமைப்பித்தன் வரலாறு- தொ.மு.சி.ரகுநாதன் – காலச்சுவடு வெளியீடு.