இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஒரு நாள் மட்டுமே புத்தக கண்காட்சியில் செலவிட முடிந்தது உண்மையில் வேதனையை தந்தது. வழக்கமான சென்னை புத்தகக் கண்காட்சி கொண்ட சிறப்புகளை ஒருபுறம் இந்த புத்தக கண்காட்சியும் பெற்றிருந்தாலும், மறுபுறம் புத்தகக் கண்காட்சியில் இன்னும் சீர்படுத்தப்படாமல் தொடரும் தவறுகள் இந்த வருடமும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. தூய்மையற்ற கழிவறை, என்னை போன்றவர்கள் நடக்கவே முடியாத ஏற்றத்தாழ்வு உடைய மரப்பாதை, மிகச் சிறிய நூல் அரங்குகள் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய உள்ளன. சென்னை வெள்ளமும், ஊருக்கு ஊர் கண்காட்சி போடுகின்ற நிலையும் புத்தக விற்பனையை பெரிதும் இந்த வருடம் பாதித்ததாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைய நல்ல புத்தகங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. எந்த புது புத்தகத்தை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது புத்தகக் கண்காட்சியில் நாம் பெறுகின்ற மகிழ்வும் துயரும் ஒரே நேரத்தில் வந்தடைகிற மகத்தான அனுபவம். கையில் இருக்கின்ற பணம் புத்தகத்தின் விலை என்கிற இருபக்க தராசு தட்டுகளை வைத்து மனம் மேற்கொள்ளும் விசித்திர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தின் கண்காட்சியில் நிகழ்கிறது.

நீண்ட நாட்களாக ‘தமிழ்த் தேசியப் போராளி தமிழரசன்’ பற்றிய முழுமையான தொகுப்பு ஒன்றினை தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கனவு இந்த வருடம் தமிழ்நேயன் தொகுத்தளித்த “தோழர் தமிழரசன் விடுதலை வீரன்” என்கிற தொகுப்பு நூல் மூலம் நிறைவேறியது.

அதேபோல் கான்சாகிப் யூசப் கான் மருதநாயகம் பற்றிய விடியல் பதிப்பகம் வெளியிட்ட “கிளர்ச்சியாளர் யூசுப் கான்” என்கின்ற விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலும் பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலைத் தோன்றியது.

எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள அலெக்ஸ் ஹேலியின் ” வேர்கள்” முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட கேசவமணி மொழிபெயர்ப்பில் லியோ டால்ஸ்டாயின் “அன்னாகரீனினா” போன்றவை இந்த வருடம் நான் வாங்கிய நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமீபத்திய சாகித்திய அகாதமி விருது வாங்கிய தேவி பாரதி அவர்கள் எழுதிய “நீர்வழி படூஉம்” திருச்செந்தாழை எழுதிய ” ஸ்கெட்சஸ்” முனைவர் ப கிருஷ்ணன் அவர்கள் மொழி பெயர்த்து சிந்தனை விருந்தகம் வெளியிட்டிருக்கிற “கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் ராணுவ நினைவலைகள்” அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிற “டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை” ,நா. வீரபாண்டியன் எழுதியுள்ள “நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்த கோபம்” நண்பர் காளி பிரசாத் பரிந்துரைத்து நான் வாங்கிய சாம்ராஜ் எழுதிய “கொடைமடம்” போன்றவை இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் கண்டடைந்த முக்கியமான படைப்புகள்.

எனது தம்பி எழுத்தாளுமை அகர முதல்வன் பரிந்துரையின் பேரில் இந்த வருடம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கே ஆர் மீரா எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வாங்கியுள்ளேன். வசீகரமான படைப்புலகம்.

இதன் நடுவே வைரமுத்துவின் “மகாகவிதை”, பரகால பிரபாகர் அவர்களின் கட்டுரை தொகுப்பான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” போன்றவையும் படிக்க ஆர்வத்தை துண்டுபவைகளாக உள்ளன.

எப்போதும் சென்னை புத்தக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது என்பது எனது ஆசான் ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ அவர்களை சந்தித்த நாள் முதல் ஒரு தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. அவரை ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் தேசாந்திரி அரங்கில் சந்திப்பதும், இலக்கியம் பேசிக் கொண்டிருப்பதுமான நிகழ்வு இந்த வருடமும் இனிதே நடந்தது.

நான் வாங்க முடியாத சில புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் இறுதி நாளன்று என் அன்புத் தம்பி பிரபா மூலம் வாங்கிக் கொண்டு குளிர் இரவில் அதை சுமந்து தஞ்சையில் என்னிடம் பாதுகாப்பாக சேர்த்த என் உயிர் இளவல் தமிழம் செந்தில்நாதன் நன்றி. நான் கொடுத்த நூல் பட்டியலை வைத்து ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் வாங்கி அன்பு சேர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையத்தை சேர்ந்த என் தம்பி பிரபாவிற்கும் அன்பு முத்தங்கள்.

எனது அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் எழுதிய “வீரப்பன் பெயரால் மனித வேட்டை” என்கின்ற நூலும் எனது அன்புத் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய “யார் பிஜேபியின் பி டீம் ” என்கின்ற நூலும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது பெரு மகிழ்ச்சியை தந்தது.

மானுடம் கொண்டிருக்கின்ற எல்லா விதமான கீழமை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெறவும், பயமும், குழப்பமும் நிறைந்த இருண்மையான எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும், நமக்கு முன்னால் இருக்கின்ற ஒரே ஒரு வெளிச்ச வீதி புத்தகங்கள் படிப்பது தான். வெளிச்சத்தை தேடி கண்டறிவது தானே மனித வாழ்க்கையின் ஒரே ஒரு பொருள்..?!