
இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

உலகத்தின் மாமனிதர்கள் அனைவரும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் “காணாமல் போவதை” வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த உலகை மிகச் சரியான வழியில் கற்றுக் கொள்வதற்கு எந்தத் திட்டமிடலும் இல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலாக, காலச்சுவடு வெளியீடான “அமர நாயகன்” படித்துக் கொண்டிருக்கிறேன்.
புரட்சியாளர் சேகுவேரா தனது நண்பருடன் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மோட்டார் சைக்கிளில் அலைந்து திரிந்து பயணத்தின் மூலமாக இந்த உலகை புரிந்து கொள்ள முயற்சித்தது நமக்குத் தெரியும்.
அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் தனது பதின் வயதுகளில் குருவைத் தேடி ஒரு பயணம் போயிருக்கிறார். காசி உள்ளிட்ட வட நாட்டின் நிறைய ஆன்மீக தலங்களுக்கு தனக்கான ஞானக் குருவை தேடி பயணப்பட்ட இளம் வயது போஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் கண்ட பல சாமியார்கள் சுயநலம் கொண்ட, ஏமாற்று பேர்வழிகளாக திகழ்ந்ததால் அவர் இது போன்ற முயற்சிகளை கைவிட்டார். இந்தப் பயணத்தால் அவருக்கு டைபாய்டு ஏற்பட்டது. அதை பிற்காலத்தில் “ஞான குருவை தேடி அலைந்ததால் அடைந்த வினை’ என சொல்லி சிரிப்பாராம்.
ஆனாலும் இந்த பயணம் மூலம் அவர் எளிய மனிதர்களிடம் நெருங்கியிருக்கிறார். அம்மை, காலரா போன்ற நோய்கள் தொற்றி அவதிப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னார்வலராய் பாடுபட்டிருக்கிறார். சேகுவேரா தன் பயணத்தில் தொழுநோய் மருத்துவமனையில் சேவை செய்தது போல.
இது போன்ற ஒற்றுமைகள் இருவர் வாழ்க்கையிலும் நிறைய இருக்கின்றன.
இந்தியாவில் அப்போது உயரிய படிப்பு லண்டனில் தேர்வாகும் ஐசிஎஸ். அதாவது இப்போதைய ஐஏஎஸ் போல. அதை யாராலும் எளிதில் வென்று விட முடியாது. கடும் உழைப்பும், கடுமையான பயிற்சியும், மிகுந்த அறிவும் கோரும் அந்த தேர்வு, இந்தியர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் கூட இந்த தேர்வில் தோற்றவர்தான். எனவே எப்போதும் சவாலையும், சாகசத்தையும் எதிர்கொள்கிற மனநிலையில் இருந்த சுபாஷுக்கு இந்தத் தேர்வும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட, போராடி இறுதியில் வெற்றிப் பெற்றார்.
ஆனாலும் இந்தத் தேர்வில் வென்று அடைகிற ஆங்கிலேய குடிமைப்பணி என்று அழைக்கப்பட்ட வேலையில் சேர சுபாஷுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர் தன் சகோதரர் சரத்திற்கு எழுதிய கடிதங்கள் படிக்கும்போதே நம்மை நெகிழச் செய்கின்றன. “போராட்டம் இல்லாத வாழ்வு அரைவாழ்வு” என வாழ்க்கையைப் பற்றி வரையறுத்த சுபாஷுக்கு , இதுப் போன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கோப்புகளைப் பார்த்து, கையெழுத்து போட்டு, அடிமை வாழ்வு வாழ்வது என்பது கொடும் நரகமாகத் தோன்றியது. குறிப்பாக ஆங்கிலேயனுக்கு கீழே தன்னால் தன் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது எனத் தீர்க்கமாக முடிவு செய்த சுபாஷ், தன் சகோதரரையும் தனது பெற்றோர்களையும் சமாதானப்படுத்த அவர் எழுதிய கடிதங்கள் உண்மையிலேயே ஒரு அப்பழுக்கற்ற மனிதனின் தூய ஆன்மாவை காட்டுகிறது.
ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணியில் சேராமல் ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆங்கிலேய அதிகாரியிடம் அனுப்பிய போது, அதை மறுபரிசீலனை செய்ய அவரது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அவ்வளவு சிறந்த மாணவன் இப்படி உயரிய பதவியை மறுப்பது என்பது அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சுபாஷின் தந்தைக்கும் அதே நிலைதான்..
இறுதியாக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு சுபாஷ் தனது சகோதரர் சரத்திற்கு எழுதிய கடிதத்தில்..
“வாழ்க்கை என்ற கடலில் பயணப்பட காத்திருக்கிறேன். இந்தக் கப்பல் இப்போது கவர்ச்சியான துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கிறது. இப்போது இதற்கு அதிகாரம் சொத்து செல்வாக்கு என அனைத்தும் இருக்கிறது. ஆனாலும் என் ஆழ் மனதிற்குள் இன்னொரு குரல் இப்படி கேட்கிறது.. பொங்கிப் பாயும் அலை கடலில் சவால்களை எதிர்கொண்டு பயணிக்கும் போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்” என என் மனது சொல்கிறது. சவால்களை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டேன். இறுதியாக இந்தப் பயணத்தில் எங்கே செல்வேன் என்பதை நான் அறிவேன்.”
என எழுதி இருக்கிற சுபாஷ் பற்றி நினைக்கும் போது நமக்கு நினைவில் வரும் முதுமொழி ” அலைகள் இல்லாத கடல் சிறந்த மாலுமியை உருவாக்காது.”


இதே போலத்தான் கியூபா புரட்சிக்கு பிறகு அந்த நாட்டின் உயரிய அமைச்சராக பதவி ஏற்ற புரட்சியாளர் சேகுவேரா அந்தப் பதவியை துறந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூப புரட்சி போல புரட்சி செய்ய பயணத்தை தொடங்கிய போது, தனது சகா பிடல் காஸ்ட்ரோவுக்கு எழுதிய கடிதம் தான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது.
“புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையைக் கொண்டு செல்கிறேன். மக்களின் புரட்சிகரத்தன்மைகளைப் பெற்றுச் செல்கிறேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆழமான காயங்களைச் சரிசெய்கிறது.
வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன்.
வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம். எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.”

வரலாற்றின் புதல்வர்கள் எப்போதும் தியாகத்திற்கு தயாரானவர்களாக, துளியும் சமரசம் அற்றவர்களாக, தன்னலம் மறுப்பவர்களாக, எதையும், எந்த நொடியிலும் தூக்கி எறிந்து விட்டு சாதாரண நிலைக்கு கீழிறங்க பயணப்படுபவர்களாக ( down to earth) இருந்திருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமான உண்மைகள். இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
மறுமொழி இடவும்