நடந்து முடிந்த மக்கள் மன்றத்தில் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எல்லா கட்சிகளுக்கும் ஆழமான அதே சமயத்தில் அசத்தலான பதிலடி கொடுத்த காட்சியை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதே சமயத்தில் இது போன்ற ஒரு ஆயுதத்தை உருவாக்கிய அந்த வித்தைக்காரனையும் நினைக்காமல் இந்த பெருமிதத்தை நாம் கொண்டாட முடியாது.கட்சியின் தொடக்க காலங்களில் மிகவும் கூச்ச உணர்வு கொண்டவனாக , எப்போதும் பின்புறத்தில் நிற்பவனாக இருந்த கார்த்திக் , எப்படி இப்படி ஆனான் அல்லது ஆக்கப்பட்டான் என்பதற்கு நான் எல்லாம் சாட்சி.
அண்ணன் சீமான் தான் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினார். அவனிடத்தில் பொறுப்புகளை கொடுத்து பழக்கப்படுத்தினார். கூச்ச உணர்வை கைவிட்டு மேடையிலே பேச முன்னிறுத்தினார். சிறுசிறு பிழைகளை கூப்பிட்டு திருத்தினார். புத்தகங்களை வாசிக்க சொல்லி அறிவுறுத்தினார். பல நேரங்களில் புத்தகங்களை அவரே பரிந்துரைத்தார். எங்களைப் போன்றோரிடம் பேசும் போது கார்த்தி எப்படிப்பட்ட முக்கியத்துவம் நிரம்பியவன் என்பதை அடிக்கடி எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
அவனும் அண்ணன் சொன்னதை கேட்டு அப்படியே உருவானான். குறிப்பாக புத்தக வாசிப்பு. திராவிடத்தை எதிர்த்து பேச வேண்டும் என்றால் அந்த திராவிடம் சார்ந்த அனைத்தையும் முதலில் வாசித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தான். ஐயா மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா அல்லது வழிமாற்றியதா..? ” என்ற நூலை அவன் வாசித்திருந்த முறைமையை நான் கவனித்து இருக்கிறேன்.ஒரு பக்கம் விடாமல் அடிக்குறிப்புகள் இட்டு அந்த புத்தகத்தையே முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தான். அதேபோல இந்து தமிழ் திசை வெளியிட்ட ” மாபெரும் தமிழ் கனவு ” என்ற நூலை எங்களுக்கெல்லாம் முன்னதாகவே வாங்கி முற்றிலுமாக குறிப்புகள் எடுத்து அதை தனது பேச்சில் தேவைப்படும் இடங்களில் பொருத்தி தனது பேச்சுத் திறமையை இன்னொரு வடிவத்திற்கு மாற்றினான் தம்பி இடும்பாவனம் கார்த்திக்.
அதற்குப் பிறகு பல புத்தகங்கள். இன்றும் நீங்கள் யாராவது அலுவலகத்திற்கு செல்லும் போது பார்க்கக்கூடும். முற்றிலுமாக ஒரு சிறிய அறையில் ஒரு பெரிய புத்தக அடுக்குகளுக்கு நடுவே அவனது வாழ்க்கை அமைந்திருக்கிறது என. இதற்கு அவன் கை கொண்டது முழுக்க முழுக்க உழைப்பினை மட்டுமே. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அரசியல் என்பது முழு நேர வாழ்க்கை. நான் கூட அவனிடம் பரிந்துரைப்பேன். இலக்கியம் கவிதை சினிமா போன்ற பல்வகை பட்ட புத்தகங்களையும் வாசி என்று சொன்னால் எனக்கு அரசியல் புத்தகங்களை படிக்கவே நேரம் போதவில்லை அண்ணா என சொல்லிவிட்டு தவிர்த்து விடுவான்.
அந்த உழைப்பும், ஓர்மைப்பட்ட கவனமும் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டலும் தான் அவனுடைய மக்கள் மன்ற பேச்சில் எதிரொலித்தது. அண்ணன் சீமான் அவனுடைய பேச்சினை மிகுந்த பெருமிதத்தோடு அவருடைய whatsapp ஸ்டேட்டஸ் இல் வைத்திருந்ததை கண்டேன் . இருக்காதா பின்னே.. எங்கோ முகவரி பெற்ற ஊரிலிருந்து எதுவுமே தெரியாமல் கூச்ச உணர்வோடு தயக்க மனப்பான்மையோடு வந்த ஒருவனை தாய் போல தத்தெடுத்து , அவனை கொஞ்சம் கொஞ்சமாக பட்டைத் தீட்டி இன்று இனத்திற்கான மாபெரும் கருவியாக உருவாக்கி இருக்கும் அண்ணன் சீமான் அவர்களின் முன்கூட்டியே உணரும் அந்த மேஜிக் கணிப்புதான் … இடும்பாவனம் கார்த்திக் என்ற அந்த இளைஞனை உருவாக்கியது .
அவன் தொடங்கிய புள்ளியில் இருந்து இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால்… உண்மையில் அது அதிசயம் தான். ஆனால் அதிசயங்களை நிகழ்த்துவதற்கான வல்லமை எப்போதும் அற்புதனான அண்ணன் சீமானுக்கு உண்டு என்பதுதான் நாங்கள் எல்லாம் உணரும் மகத்தான நம்பிக்கை.

♥️மணி செந்தில்.
மறுமொழி இடவும்