பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: செப்டம்பர் 2025

கடவுளின் சிகரெட்.

❤️

கைவிடப்பட்ட

தனிமை

என் முன்னால்

மழையில் நனைந்த

நாய்க்குட்டி போல

நடுங்கிக்கொண்டு

அமர்ந்து இருந்தது.

மிகுந்த பரிவோடு

மினுக்கும் அதன்

மீச்சிறு கண்களை

பார்த்துக் கொண்டே

இருந்தேன்.

தனிமை

சிணுங்கியது.

அந்த மழை பெய்யும்

நள்ளிரவில்

தூரத்தில் எங்கோ

கேட்ட குழந்தையின்

அழுகை ஓசை

எனக்கு முன்னால்

அமர்ந்திருந்த

தனிமையை

பதட்டப்படுத்தியது.

இரு.. இரு..

நம் இருவரோடு

யாரோ இன்னொருவர்

இருக்கிறார் என்று

மெல்லிய குரலில்

நான் சொன்ன போது

தனிமை ஆசுவாசப்பட்டது.

சில நொடிகள்

அமைதிக்கு பிறகு..

நானும்

என் தனிமையும்..

” இது மௌனமான

நேரம்..”

என்ற பாடலை

எங்களது கிசுகிசுப்புக்

குரலில் பாடத்

தொடங்கினோம்.

ஏதோ புகை எங்களை

சூழவே ..

நான் திரும்பிப்

பார்த்தபோது …

எனக்குப் பின்னால்

இருந்த

ஒரு பார் ஸ்டூலில்

அமர்ந்து கொண்டு

கடவுள் சிகரெட்

பிடித்துக் கொண்டிருந்தார்.

❤️

மன்னிப்பின் நிழல்.

❤️

மனித வாழ்வின் ஓட்டத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ, செய்த பாவங்களை தொண்டைக்குழிக்குள் உறுத்தும் முள்ளாக சுமந்தலையும் விழிகள் தனித்து தெரிபவை. மன்னிப்பை தேடி அலையும் அந்த ஈரமுள்ள ஆன்மாக்களின் கடைசிப் புகலிடம் கடவுள்.

” கடவுள் மிக மன்னிப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கிறான்” என்கிற வரிகள் கடவுளின் மொழியாக புனித நூல் குர்ஆன் கூறுகிறது. கடவுளின் மைந்தனாக தோன்றிய இயேசு பிரானும் ” அவர்கள் என்ன பாவம் செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்கிறார்கள். என் பிதாவே! அவர்களை மன்னித்து விடுங்கள்..” என்று கேட்டார் என புனித பைபிள் கூறுகிறது.

ஏறக்குறைய எல்லா அற நூல்களும் மன்னிப்பின் புனிதத்தை சதா போதித்துக் கொண்டே இருக்கின்றன.

நம் தலைமுறையின் மகத்தான கவிஞன் முத்துக்குமார் தனது கடைசி திரைப்படமான “தரமணி” யில் ஒரு மன்னிப்புப் பாடல் ஒன்றை மனமுருக எழுதியிருப்பார்.

“என்னை மன்னிப்பாயா

யா அல்லா ஓ

நஞ்சினைப்போல

நெஞ்சுக்குள் இருக்கும்

குற்றம் கொல்கிறதே

என் தொண்டைக்குழியில்

உறுத்தும் முள்

ஏதோ சொல்கிறதே

நீ இருக்கும் இடந்தான்

எது அல்லா

அது மன்னிக்கும் மனமே

யா அல்லா..”

மன்னிக்கும் மனதை கடவுளின் இருப்பிடமாக முத்துக்குமார் எழுதியிருப்பார்.

இறுதியாக எல்லா காயங்களையும் பாவங்களையும் தூக்கிக் கொண்டு கடவுளின் முன்னால் சரண் அடைந்திருக்கிற ஒரு ஆன்மாவின் அழுகையாக அந்தப் பாடல் இப்படி நீளும்.

“காயங்களை கட்டிக்கொண்டு

உன்னிடம் வந்துவிட்டேன்

என் பாவம் யாவும் தூயவனே

என்றோ மறந்துவிட்டேன்

லாயில்லாஹாயில்லல்லா

லாயில்லாஹாயில்லல்லா

முகம்மது ரசூலல்லா”

உண்மையில் “மன்னிப்பு என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நிம்மதி” என்கிறார் கவியரசர் கண்ணதாசன். “மன்னித்துவிடு. கொந்தளித்துக் கொண்டிருக்கும் உன் மனது அமைதியாகி விடும்” என்று சொல்லும்

அவரது வரிகள் மிக ஆழமானவை.

மன்னிப்பை மிக அதிகமாக பேசும் புனித பைபிளில் சில வாசகங்கள் நம்மை அதிரச் செய்கின்றன.

” பிரியமானவர்களே..! பழிவாங்குதல் எனக்குரியது.நானே பதிற் ( பதில்) செய்வேன்.”

-ரோமர் 12:19

மனிதனுக்கு மன்னிப்பைப் போதிக்கின்ற கடவுள் பழிவாங்குதலை தனக்குரியதாக மாற்றுகிறான். புனிதக் குர்ஆனிலும் ” கடவுள் கண்காணிப்பதிலும், கணக்குத் தீர்ப்பதிலும் விரைவானவன். ” என்ற வரிகள் உண்டு.

“பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு” என்கிறது மகாபாரதம்.

….

என்னுடைய பதின் வயதுகளில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்களுக்கு நான் அடிக்கடி சென்றபோது பழக்கமான

மத ஊழியர் சகாயம். எப்போதும் பைபிளின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு ஜெபமாலைகளின் மணிகளை உருட்டிக் கொண்டே இருக்கும் அவரை பைபிள் இல்லாமல் பார்க்க முடியாது. எல்லோரிடமும் அதிகம் பேசாத, அதே சமயத்தில் ஊழியக் கூட்டத்திற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கின்ற அவரிடம் வெறுப்புற்றவர் என்று யாருமில்லை.‌ அவருக்கென்று யாரும் கிடையாது என்றும், இளம் வயதில் திருமணம் செய்த மனைவி இரண்டு வாரங்களில் யாரோ ஒருவரோடு ஓடி விட்டதாகவும், இதே ஊரில் அந்தப் பெண்ணும் குடும்பம் சகிதமாக இருப்பதாகவும், இவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகவும் அவரைப் பற்றி என் நண்பன் சாம் என்னிடம் கூறிய போது, பிறகு இவர் யாருக்காக பிரார்த்திக்கிறார் என எனக்கு தோன்றியது.

ஒருமுறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சற்று முன்னதாகவே சென்று விட்ட நிலையில், அந்த சிறு அரங்கில் கடவுளின் சிலுவைக்கு முன்னால் சகாயம் மண்டியிட்டு ஜெபமாலை உருட்டிக் கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ஜன்னலின் வழியே மாலை வெயிற்துளி கீற்றுப் போல உள்ளே பாய , அதன் ஒளியில் நின்று, நிழலின் ஆழத்தில் நின்றுக் கொண்டிருக்கும்‌ கடவுளின் சொரூபத்தை நோக்கி‌ மனமுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவரின் கண்களில் பிரார்த்தனையின் போதே சாரை சாரையாக கண்ணீர் கசிந்து வழிந்துக் கொண்டிருந்தது.

நான் அமைதியாக காத்திருந்தேன். பிரார்த்தனை முடிந்து திரும்பியவர் என்னை பார்த்தவுடன் சற்றே அதிர்ச்சி அடைந்தார். அவரது தனிப்பட்ட பிரார்த்தனையை நான் பார்த்து விட்டதை கண்டு அவர் சற்று கூச்சப்பட்டார். என்னிடம் ஏதும் சொல்லாமல் விலகிப் போன‌ அவரை அதன் பிறகு தனியே எங்கும் பார்க்க முடியவில்லை. எங்களது பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் ரெல்டன் ஒருமுறை என்னிடம் தனியே பேசிக் கொண்டிருக்கும்போது சகாயத்தை பற்றி பேச்சு வந்தது.

அவன் யாருக்காக பிரார்த்திக்கிறான் என்று நினைக்கிறாய் என ஜேம்ஸ் சார் கேட்டபோது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவன் ஓடிப் போன தன் பொண்டாட்டிக்காக பிராத்தித்து கொண்டிருக்கிறான் என்ற போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “மன்னிப்பதன் மூலமாக நிம்மதியை அடைகிறார் போல..” என நான் சொன்ன போது .. இல்லை இல்லை என மறுத்த ஜேம்ஸ் சார் அடுத்தது சொன்னது தான் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

“அந்த மன்னிப்பு அவன் அவளுக்கு கொடுக்கிற தண்டனை..” என்று அவர் சொன்னார். எப்படி என்று புரியாமல் நான் பார்த்தபோது..

” வழக்கமா பாதிக்கப்பட்டவன் சபிப்பான். ஆனா இவனோ யாரால பாதிக்கப்பட்டானோ, அவ நல்லா இருக்கணும்னு பிராத்திக்கிறான். அத, அவன் எழுதி பிரார்த்தனை கூடையில போட்ட பிரார்த்தனை ஓலை மூலமா பாதர் பீட்டருக்கு தெரிஞ்சி, அவர் ஒரு முறை அந்த பொண்ணுகிட்டயே இத பத்தி சொல்ல , அன்னைக்கு இவன் பிரார்த்திக்கிறத, அந்தப் பொண்ணு தூரத்திலிருந்து பாத்துட்டு , கதறி அழுதது இருக்கே.. நினைச்சு பாக்க கூட முடியல” என ஜேம்ஸ் சார் கண்கள் பனிக்க சொன்னது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.

உண்மையில் சகாயம் மன்னித்தது தான் அந்தப் பெண்ணுக்கு வழங்கிய மாபெரும் தண்டனை என நினைக்கும் போது இன்றும் பயமாக இருக்கிறது .

ஜெயமோகன் எழுதிய “அமுதம்” என்ற நெடுங்கதை ஒன்றைப் படித்தேன். காட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட மாபெரும் தோற்றம் கொண்ட பசு ஊர் முழுக்க அனைவருக்கும் பால் சுரந்து பசியாற்றி ஊரை செழிக்க வைக்க, பால் குடித்த அனைவரும் உடல் பூரித்து வளமான உடல் அடைய, அந்த ஊருக்கே பாலூர் என பெயர் வந்ததாக நீளும் அந்தக் கதையில், இறுதியாக அந்தப் பசுவை துர்சக்தியாக கருதி ஊர் மக்கள் அவமானப்படுத்தி அடித்து துரத்தி காட்டில் வைத்து எரித்துக் கொள்ளும் அந்த சமயத்தில் அந்தப் பசு யாரையும் சபிக்காமல், பால் குடித்த அனைவரும் தனது பிள்ளைகள் எனக் கருதி, அனைவரையும் மன்னித்து, நிதானமாக நின்று அந்த மரணத்தை எதிர்கொள்ளும் காவியத் தருணத்தை ஜெயமோகனின் வரிகளில் படிக்கும் நொடிகளில் மகத்தான சிலிர்ப்பை ஊட்டுபவை.

“கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவனின்

காலில் வந்து விழுகிறது

கோபுரத்தின் நிழல்.”

– மதிக்குமார் தாயுமானவன்.

கடவுளுக்கே குற்ற உணர்வு கொடுத்த மதிக்குமார் தாயுமானவன் எழுதிய இந்த கவிதைக்கு தலைப்பு

” பாவமன்னிப்பு.”

….

உண்மையில் ‌ வாழ்வின் ரகசிய சூத்திரம் என்னவென்றால்.. மன்னிப்பவர்களோ அல்லது பழி வாங்குபவர்களோ.. யாருமே நிம்மதியாக இல்லை என்பதுதான்.

பழிவாங்குதலை ஒரு தட்டிலும் மன்னிப்பதை இன்னொரு தட்டிலும் ஏந்தி மாயத் தராசு ஒன்று முன்னும், பின்னும் அசைந்தாடும் ஆட்டத்தை தான்

வாழ்வென நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

-மணி செந்தில்.

இரு மரணங்கள்.

காலையிலிருந்து இந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஷீகான் உசைனி எங்கள் தலைமுறையின் மகத்தான தற்காப்புக் கலை பயிற்சியாளர்.‌ தற்காப்புக் கலை, கராத்தே, வில்வித்தை போன்றவை மிகவும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்கிற நிலையை மாற்றி, பாலின வேறுபாடுகளைத் தகர்த்து அதை வெகுசனப்படுத்திய தற்காப்புக் கலை கலைஞர்களில் உசைனி முக்கியமானவர்.

பத்ரி உள்ளீட்ட சில திரைப்படங்களில் நடித்து, திடீரென சமையற்கலை நிபுணராக தோன்றி வேக வேகமாக சமைத்து, பாத்திரங்களை, கரண்டிகளை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டமாக அவர் ‌ பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 90களில் பிரபலம். சிற்பியாகவும் முத்திரை பதித்தவர்.

என் மகன்கள் இருவரும் அவருடைய பயிற்சி வகுப்பில் இணைந்து இருந்தவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் “தரப்படுத்துதல்” என்கிற வகுப்பில் ஈடுபட கும்பகோணம் வந்திருந்த போது கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் அவரை என்னுடைய தம்பியும் அவருடைய தலைசிறந்த மாணவர்களில் ஒருவரான கும்பகோணம் நகரத்தின் மகத்தான கராத்தே மாஸ்டர் “தம்பி வினோத்” அவர்கள் என்னை ‘சீமான் தம்பியாக’ அறிமுகப்படுத்திய போது ” எனது சிறந்த நண்பர் சீமான், அவருடைய தமிழ் உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்” எனச் சொல்லி கை குலுக்கினார். அவரது கரங்களை பற்றி கொடுக்கும் போது ‌ இரும்புக்கை மாயாவியின் கரங்களை குலுக்கியது போன்ற ஒரு உணர்வு. அவ்வளவு உறுதி.

திடீரென ஒரு நாள் அவருக்கு அபூர்வமான புற்றுநோய் வந்திருக்கிறது என சொல்லி முகநூலில் வீடியோ போட்ட போது இதையும் அவர் “100 கார்களை கைகளில் ஏற்றுகின்ற சவால்” போல வென்று வந்துவிடுவார் என நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தமிழகமே நம்பியது.

ஏனெனில் அவர் அவ்வாறு தான் தன்னைப் பற்றிய தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார். தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்கும் உறுதியும் கொண்ட அந்த இரும்பு மனிதனுக்கு எதுவும் ஆகாது என்று நாமெல்லாம் நினைத்தது அந்த மனிதன் நமக்குள் தனது அளப்பரிய ஆற்றலால் விதைத்த பொதுப்புத்தி.

ஆனாலும் மரணம் கருணையற்றது தானே.. மரணத்திற்கு எந்த காரணமும் தேவையில்லை. மரணத்திற்கான காரணங்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்படுபவை. மரணம் குறித்து சொல்லப்படும் காரணங்கள் மனிதர்களை சமாதானப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டவை. அதை உசைனியும் நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.

அவருக்குப் பின்னால் அவரது மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவருடைய கலையை, எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவரை என்றென்றும் நினைவு கூர வைப்பார்கள்.

எனது உயிருக்கினிய இரண்டு தம்பிகள் மாஸ்டர் வினோத் அவனுடைய மாணவனும், கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் போராளியுமான விக்கி ஆகிய இருவரும் மாஸ்டர் உசைனி கும்பகோணம் நகரத்திற்கு வழங்கிய கொடைகள்‌. அடுத்தடுத்த இழப்புகளில் சிக்கித் தவிக்கும் என் தம்பி வினோத் இதிலிருந்தும் மீண்டு வர வேண்டும். அவன் மீண்டு வருவான். ஏனெனில் அவன் உசைனி மாணவன்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் தமிழ் உணர்வும், தற்காப்பு கலை நிபுணத்துவமும் வாய்ந்த தம்பிகளை மாஸ்டர் உருவாக்கி விட்டு சென்றிருக்கிறார்.

அவர் நீடித்து வாழ்வதற்கான எல்லா காரணங்களையும் அவர் மரணத்திற்கு முன்பே செய்துவிட்டு மறைந்திருக்கிறார்.

அவருக்கு என் கண்ணீர் வணக்கம்.

துயர் மரணத்தின் நிழல் பேரிருளாய் சூழ்ந்திருக்கும் இந்த இரவை இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்படி கடப்பாரென்று நினைத்துப் பார்த்தாலே மனம் கனத்துப் போகிறது. மாஸ்டர் ஷிகான் ஹீசைனிக்காக‌ இரங்கல் பதிவு எழுதிவிட்டு மாலையில் மௌனமாக அமர்ந்திருந்த போது இயக்குனரும் நடிகருமான மனோஜ் இறந்த செய்தி வந்து சேர்ந்தது.

அவரது மரணச் செய்தி கேட்டு பலரும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். முக்கியமாக நடிகர் தம்பி ராமையா அவர்கள் கொடுத்த பேட்டி என்னவோ மனதை ஏதோ செய்தது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.

உண்மையில் மனோஜ் தன் வாழ்நாள் முழுக்க தன் தந்தை அடைந்த கலை உயரத்தில் பாதியாவது தொட்டுவிட வேண்டும் என போராடிக் கொண்டே இருந்தார். மாபெரும் ஆளுமைகளுக்கு மகன்களாகப் பிறப்பதும் ஒருவித சாபம்தான். எதற்கெடுத்தாலும் தன் தந்தையோடு அவர்களை ஒப்பிட்டு அவர்களின் சுயம் அழிக்கும் உலகம் தான் மனோஜ் போன்றவர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறது.

இன்று மாலை மனோஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த “தாஜ்மஹால்” படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மிகச்சிறந்த ஆல்பம் அது. கவிப்பேரரசு வைரமுத்து ஒவ்வொரு வரியையும் தனக்கு வாழ்வளித்த பாரதிராஜாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக எழுதி இருப்பார்.

படம் வெளியானபோது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அபூர்வமான ஒலிக் கோர்வைகளோடு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த பாடல்கள் வேறு படத்தின் மீதான பரபரப்பை கூட்டி இருந்தன. இத்தனைக்கும் மணிரத்னத்தின் கதை திரைக்கதையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் அது.

சுவையான எல்லாவற்றையும் கலந்து, சுவையற்ற ஒன்றை தயாரித்தது போல ‌ ஆகிவிட்டிருந்தது படம். இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கொண்டு வாடா வாடா என அறிமுகமானார் மனோஜ். ‌ ஆனால் வழக்கமான பாரதிராஜாவின் உயிர்ப்பும் உணர்வும் நிரம்பி வழியும் “பாரதிராஜாவின் கிராமம்” அந்தத் திரைப்படத்தில் இல்லை. செயற்கையான காட்சி அமைப்புகள், உடைகள் என படம் ஏதோ தெலுங்கு கிராமத்தை நகலெடுத்தது போல அமைய, மனோஜ் வெற்றி பெற முடியாமல் முடங்கத் தொடங்கினார்.

ஆனாலும் அவருக்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருந்தது. திரைப்படத்துறையோடு ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்பு கொண்டவாறு இருக்க முயற்சி செய்தார். சில முயற்சிகள் சிறு வெற்றிகள் அடைந்தாலும், பாரதிராஜா என்கின்ற மாபெரும் யானை அடைந்திருந்த உயரம் அந்த சிறு வெற்றிகளுக்கான அங்கீகாரங்களைக் கூட அவரை அடைய விடாமல் தடுத்தது.

அது ஒரு வகை சாபம்தான். ” காந்தி இஸ் மை ஃபாதர்” என்று ஒரு புத்தகம் உண்டு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் தன் வாழ்வில் தன் தந்தையின் உயரத்தால் அடைந்த துயரின் கதை அது. இறுதியில் ஒரு குடிகாரனாக மாறி, காந்தியை எதிர்ப்பதற்காகவே மதமும் மாறி எல்லாவற்றையும் இழந்து கடைசியில் அனாதை போல அரசு மருத்துவமனையில் இறந்து போனார் தேசப்பிதாவின் அசல் மகன். அது திரைப்படமாக கூட வெளிவந்திருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். ஆனாலும் அவருக்கும் இதே போன்ற சிக்கல்தான். தன் தந்தையை விட்டு கொஞ்சம் விலகி நின்ற யுவன் சங்கர் ராஜா அடைந்த வெற்றியை தந்தையின் நிழலில் நின்று கொண்டிருந்த கார்த்திக் ராஜா அடைய முடியவில்லை. இத்தனைக்கும் தன் அண்ணன் கார்த்திக் ராஜா தன்னைவிட மிகச் சிறந்த இசை அறிவு கொண்டவர் என யுவன் சங்கர் ராஜாவால் புகழப்பட்டவர் அவர்.

மனோஜ் தன் தனிப்பட்ட வாழ்வில் அனுதினமும் எதிர்கொண்ட அழுத்தங்கள் அவரை சாகும் வரை நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்படியாவது தந்தைக்காக ஒரு வெற்றி அடைந்து விட வேண்டும் என போராடி தவித்த நல்ல மகன் அவர். சிறுநீரக பிரச்சனைகளுக்கு நடுவில் அவர் இயக்கிய “மார்கழித் திங்கள்” மோசமான தோல்வியை சந்தித்தது. நீண்ட நாட்களாக “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து விட வேண்டும் என தவித்ததாக அவர் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.

அரண்மனையில் இருந்தவர்தான். ஆனாலும் வீதியில் இறங்கி தனக்கென ஒரு தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என எல்லா கதவுகளையும் தட்டிப் பார்த்திருக்கிறார்.

ஒரே ஒரு கதவு தான் அவருக்காக திறந்திருந்தது.

அது மரணத்தின் கதவு.

மனோஜ் போய்விட்டார்.

கம்பராமாயணத்தில் தன் மகன் இந்திரசித்தை போரில் இழந்த ராவணன் “எனக்கு நீ செய்ய வேண்டியது எல்லாம் உனக்கு நான் செய்து கொண்டிருக்கிறேனே..” என அழுது புலம்பும் ஒரு துயர் கவிதைப் போல பாரதிராஜாவின் இந்த சோகம் மீதம் இருக்கும் அவரது சிறு வாழ்நாளில் பெரும் முள்ளாய் உறுத்தி உயிர்வாதை செய்துக் கொண்டே இருக்கும்.

அதுவும் அவர் துளித்துளியாய் அடையும் ஒருவகை மரணம் தான்.

… கண்ணீர் வணக்கம்.

தனிமை என்பது யாதெனில்..

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén