♥️

அந்தக் காலகட்டங்களில் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அப்போது வெறும் 16 வயது நிரம்பிய ஏறக்குறைய ஒரு சிறுமியாக இருந்தவளுக்கு ஒரு திருமணம். அடுத்த 10 மாதங்களில் அந்த சிறுமி கையில் நோயுற்ற ஒரு குழந்தை.

பிறந்த போது நன்றாகத்தான் இருந்தது.ஆனால் 10 மாதத்திற்கு பிறகு வந்த ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தைக்கு தலைக்கு கீழே எந்த உறுப்பும் இயங்கவில்லை. அன்று அழ ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அடுத்த 25 வருடங்கள் இருவருக்கும் அழுகை மட்டும் தான்.

ஆனால் ஒரு சின்ன சிறிய கிராமத்தில் பிறந்த அந்த சிறுமிக்கு மட்டும் ஒரு அசாத்திய நம்பிக்கை. எதுவுமே இயங்காத அந்த குழந்தையை வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாழவைப்பது. ஓட முடியாத அந்த குழந்தைக்கு பதிலாக அவள் ஓட தொடங்கினாள்.‌ குழந்தை அழுகையை நிறுத்தியது. எப்போதும் அதிசயக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்த அம்மாக்களுக்கு மத்தியில் .. அவள் தன் குழந்தைக்காக ஒரு உலகத்தை உருவாக்கத் தொடங்கினாள்.

அந்த உலகத்திற்கும்… வழக்கமாக வாழும் இந்த பூமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த உலகத்தில் அந்தக் குழந்தைதான் கதாநாயகன். அவன் மீது எல்லோரும் அன்பாக இருப்பார்கள். அவனை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். அவனை எல்லோரும் கொண்டாடுவார்கள். அவனை யாரும் புண்படுத்த மாட்டார்கள். அம்மா உருவாக்கிய அந்த உலகத்தின் ராஜா அவன்.அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் அந்த உலகம்.

இப்போதும் அம்மாவின் மடியை தேடி அலைகிறான். தூங்கி விழித்த உடன் அம்மாவின் முகம் காண தேடுகிறான். முகம் இல்லையேல் பயப்படுகிறான். அம்மாவைப் பார்த்தவுடன் தான் இயல்பாகிறான். அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் ஆக்சிஜன். அம்மா இல்லையேல் அவன் இல்லை.

ஒரு தீபாவளிக்கு அவனை சென்னை அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சொல்லப்போனால் அந்த மருத்துவமனையில் தான் அவன் வாழ்ந்துக் கொண்டிருந்தான். உலகமே வெளியில் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில் இவன் மருத்துவமனையில் ஊசி மாத்திரைகளோடும் வலி துயர்களோடும் போராடிக் கொண்டிருந்தான்.

அம்மா கும்பகோணத்தில் இருந்து வந்து விட்டாள்.தன்மகன் இல்லாத தீபாவளி அவளுக்கு எங்கே… அவன் இருக்கும் இடம் தான் அவளுக்கு தீபாவளி. பண்டிகை எல்லாம். அவனது சிரிப்பில் தான் அவளுக்கு மத்தாப்பு பூக்கும்.‌ வான வேடிக்கைகள் நடக்கும்‌. அந்த மருத்துவமனை வளாகத்திலேயே இருந்த சிறு விடுதியில் அப்பா அம்மா அவன் மூவரும் சிறிய மத்தாப்புகளை கொளுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். வலியாலும் நோயாலும் துடித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடுகிற குடும்பம் அது. அவர்களுக்கு இருக்கிற இடம் பொருட்டல்ல.. எங்கே இருந்தாலும் தங்களுக்கென ஒரு வானத்தையும் அங்கே மின்னும் சில நட்சத்திரங்களையும் பால் வழியும் ஒரு நிலாவினையும், கூடவே சில மத்தாப்புகளையும் அவர்களே உருவாக்கிக் கொண்டு தீபாவளியை கொண்டு வந்து விடுவார்கள்.
உலகம் எங்கோ வெளியில் இருந்தது. அவர்களுக்கு அவர்கள் உலகத்தில் அவர்களுக்குள்ளாக அந்த ஒரு தீபாவளி.

அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்தன. எப்போதும் இந்த உலகத்தோடு போட்டி போடுவதற்காக அந்த மகன் மிகவும் ஆசைப்படுவான். ஆனால் தோற்றுவிடுவான். ஆனால் அந்த அம்மா தோற்கமாட்டாளே.. ! அம்மா மகனை தயாரித்துக் கொண்டே இருந்தாள். இந்த உலகத்தோடு போட்டி போட.. இந்த உலகத்தில் வாழ.. அம்மா அவனை கடும் உழைப்போடு தயாரித்துக் கொண்டே இருந்தாள். எதுவுமே முடியாத, தலைக்கு கீழே எதுவுமே இயங்காத அவனுக்கு பேச கொடுத்தாள்.‌ வாழ கற்றுக் கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவன் இயங்கத் தொடங்கினான். ரசிக்க, எழுத, காதலிக்க, வெற்றியில் கொண்டாட, தோல்வியில் துவள, அவனை தயாரித்து துளித்துளியாய் தன் மகனை உருவாக்கினாள். மகனும் அனைத்தும் செய்தான். ரசித்தான். கவிதைகள் எழுதினான். காதலித்தான். இசையை கேட்டு இமைக்காமல் இருந்தான். அவனே ஒரு கார் வாங்கி ஓட்டினான். அம்மா மீதே காரை ஒரு முறை மோதி விட்டான். இனி காரே ஓட்டுவதில்லை என முடிவெடுத்தான். ஆனால் அம்மா அப்படி இல்லையே.. தன் மீது மோதினாலும் மீண்டும் எழுந்து மகன் கார் ஓட்டியாக வேண்டும் என்பதில் அவள் உறுதியாக நின்றாள். அவனும் அப்படியே செய்தான். பயணப்பட்டு பார்த்தான். அடிகள் வாங்கினான். தோல்வியின் சுகம் புரிந்தான். வெற்றியின் போதாமை அறிந்தான். திருமணம் செய்தான். அவனைப் போலவே இரண்டு நகல்களை தயாரித்தான். அந்த இரண்டும் அம்மாவிடம் தான் அம்மா மடியில் தான் கிடக்கின்றன. இப்படி அனைத்திலும் அம்மா இருந்தாள்.

அவன் நினைத்தான். இந்த உலகத்தில் நாமும் சராசரியாய் மாறிவிட்டோம் என. இல்லை இல்லை. ஒரு கட்டத்தில் அவன் அந்த ரகசிய உண்மையை அறிந்து கொண்டான். இந்த உலகத்தில் தன்னால் மற்றோர் போல இயல்பாக வாழ முடியவில்லையே என ஏங்கித் தவித்த அந்த மகனுக்காக அந்த அம்மா மீண்டும் ஒரு நகல் உலகத்தை தயாரித்து இருக்கிறாள் என்ற உண்மை. அதில் அவனை வாழ வைத்திருக்கிற உண்மைப் புரிந்து அந்த மகன் இப்பொழுது சிரித்துக் கொள்கிறான். அது ஒரு வகை ஞானம் தான். உண்மைதான். இதுவும் அம்மா உருவாக்கிய உலகம்தான்.

இறுதியாக அந்த மகன் புரிந்து கொண்ட ரகசியம் என்னவெனில்… அம்மா உருவாக்கிய உலகத்தில் மட்டும் தான் அவனால் வாழ முடியும். சொல்லப்போனால் அம்மா தான் உலகம்.

கடைசி வரை அம்மா உருவாக்கிய அந்த உலகத்தில்.. அவள் கதகதப்பில் அவன் வாழ்ந்துக் கொண்டே இருக்கிறான்.

வாழ்வான். !

மணி கலையரசி

வாழ வைக்கும் தெய்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

♥️

மணி செந்தில்.

( இதனடியில் ஏஐ தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக ஒரு காட்சி தயாரித்து கொடுத்த எனதுத் தம்பி Ar Anbu Rajesh Ntk விற்கு எனது பேரன்பு நன்றி. )