
❤️
ஒரு உயர்ந்த ரசனையின் பூரண வெளிப்பாடு எது என்று கேட்டால், அது கண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.
ஒரு படைப்புக்கு பார்வையாளன் தரக்கூடிய உயர்ந்த பரிசு எதுவென்றால், அவனது கண்களில் தன்னையும் அறியாமல் பெருகும் ஒரு துளிக் கண்ணீர்தான்.
திரையரங்கில் படம் பார்க்கும்போது, உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழியும். உடனே அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்ப்பேன். என்னைப் போல யாராவது அழுகிறார்களா என்று.
சிலர் எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள். சிலர் காட்சியின் உணர்ச்சிப் பெருக்கில் என்னைப் போலவே கலங்கிக் கொண்டிருப்பார்கள்.
தங்களுக்குள் எழும் உணர்ச்சிகளை அடைத்து வைத்துக்கொள்ள முடியாமல், இடம், பொருள், ஏவல் பாராமல் கண்ணீராக அவற்றை வெளிப்படுத்த முடிகிறவர்கள் மிகச் சிலரே. அவர்கள் ஒருவகையில் பாக்கியசாலிகள். ஏனெனில், கண்ணீர் என்பது மனம் சுமக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் இயற்கையான வழி.
எனக்குத் தெரிந்து ஷேக் தாவூத் என்ற இந்தியன் வங்கி மேலாளர் ஒருவர் இருந்தார்.
மாலை ஆறு மணிக்கு வங்கி வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, பெரும்பாலான நாட்களில் அவர் திரையரங்குகளை நோக்கிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளாமல், தனியே ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். நான் இளம் வழக்கறிஞராக இருந்த காலத்தில், இரவு வேலைகளை முடித்துத் திரும்பும்போது, ஏதோ ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் தங்கர் பச்சானின் அழகி (2002) திரைப்படம் வெளியானது.
தமிழில் வெளியாகியிருக்கும் உணர்ச்சிமிகுந்த திரைப்படங்களில் அழகி திரைப்படத்திற்கு இன்றளவும் ஒரு தனித்துவமான இடம் உண்டு.
அந்தத் திரைப்படத்தில், இளம் வயதில் உயிருக்கு உயிராக நேசித்த பெண்ணை, வாழ்க்கையின் ஓட்டத்தில் எதிர்பாராதவிதமாக மிகவும் மோசமான சூழ்நிலையில் பார்த்திபன் சந்திக்க நேரிடுகிறது. நந்திதா தாஸ் தனது குழந்தையுடன் நடைபாதையில் கைவிடப்பட்டவராக வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவர்களுடன் பார்த்திபன் அமர்ந்து உணவு உண்ணும் அந்தக் காட்சி, திரையில் நிகழும் ஒரு சம்பவமாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் கொடூரமான முரணாக நம் முன்னால் விரிகிறது.
அந்த அற்புதமான காட்சியில் ஒரு சிறிய மௌனம்.
அதன்பிறகு, இளையராஜாவின் குரலில் “என் குற்றமா? உன் குற்றமா?” என்ற பாடல் தொடங்குகிறது.
கனத்த இளையராஜாவின் குரல், எவ்விதப் பக்கவாத்தியங்களின் துணையுமின்றி தனித்து ஒலிக்கத் தொடங்கும்போது, நம் இதயத்தை யாரோ ஒருவர் கத்தியால் அறுப்பது போன்ற வலி ஏற்படுகிறது.
என் கண்கள் கலங்கியபடி, இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபோதுதான், அந்த வங்கி மேலாளர் ஷேக் தாவூத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைக் கவனித்தேன்.
மறுநாள் வங்கியில் அவரைப் பார்த்தபோது, வழக்கம்போல மிகவும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
நேற்று திரையரங்கில் நான் பார்த்த அந்தக் கண்ணீர் மனிதனுக்கும், இன்று வங்கியில் நான் பார்க்கும் இந்தக் கடமை மனிதனுக்கும் தான் எவ்வளவு பெரிய வித்தியாசம்!
அன்றைய முற்பகல் தேநீர் இடைவேளையில் அவரிடம் கேட்டேன்:
“இவ்வளவு மும்முரமாகப் பணியாற்றும் உயர்ந்த வங்கி அதிகாரியான நீங்கள், நேற்று திரையரங்கில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தீர்களே?”
அவர் ஒரு நொடியில் திடுக்கிட்டார்.
பிறகு அமைதியாகச் சொன்னார்:
«“இழந்தவனிடம் இருக்கிற ஒரே ஒன்று அவனுடைய கண்ணீர்தான். கண்ணீரைச் சிந்தாத இதயம் கல்லுக்கு ஒப்பானது. கண்ணீரைப் போல காயத்தை உணர்த்தி ஆற்றுகிற மருந்து ஏதுமில்லை.
கண்ணீர் என்பது துயரத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது மனிதன் இன்னும் மனிதனாகவே இருக்கிறான் என்பதற்கான அடையாளம்.
பிரிவின்போது கண்ணீர் வருகிறது. மரணத்தின் துயரத்தில் கண்ணீர் வருகிறது. இழப்பின் வலியில் கண்ணீர் வருகிறது. அதேபோல, ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும்போதோ, ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கும்போதோ, நம் மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஏதோ ஒரு உணர்வை ஒரு காட்சி அல்லது ஒரு வரி திடீரெனத் தொட்டுவிட்டால், நம் கண்கள் ஈரமாகின்றன.
அப்படித்தான் எனக்கும் ஆகிவிடுகிறது. அழகி திரைப்படத்தின் நந்திதா தாஸ் மட்டும் கைவிடப்பட்டவர் அல்ல. நாம் பலரும் ஏதோ ஒரு விதத்தில், எவராலோ அல்லது எதனாலோ கைவிடப்பட்டவர்கள்தான். காலத்தின் விதியால் சபிக்கப்பட்டவர்கள்தான்.”»
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவரது கண்கள் மீண்டும் கலங்கின.
அந்தக் காட்சி இன்றளவும் என் நினைவில் இருக்கிறது.
அதிலிருந்து திரைப்படம் பார்க்கும்போது கண்கலங்குவதை நான் ஒருபோதும் கூச்சமாகக் கருதியதில்லை. மாறாக, நல்ல திரைப்படம் ஒன்றின் முன் என் மனம் உருகி, கண்களில் கண்ணீர் பெருகும்போதெல்லாம் அதை ஒரு வரமாகவே கருதுகிறேன்.
நிறைய நல்ல திரைப்படங்களைப் பார்த்து அழுதிருக்கிறேன்.
அப்படித்தான் இன்று, எனது அன்பு மகன் சிபி கௌதம் Cibi Gowtham பரிந்துரைத்த Liar’s Dice என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.
சிபி ஒவ்வொரு திரைப்படத்தையும் ஆழமாகக் காண்பவன். ஒரு படைப்பாளியின் ஆன்மாவைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படைப்பின் சாரத்தைச் சத்தோடு பருகுபவன். என்னைவிடவும் தேர்ந்த ரசனை கொண்டவன்.
நல்ல திரைப்படங்களையும் நல்ல புத்தகங்களையும் தேடித்தேடி அடைபவன். உயர்ந்த விஷயங்களை மட்டுமே பரிந்துரைப்பவன்.
அப்படித்தான் அவன் இந்தத் திரைப்படத்தையும் எனக்குப் பரிந்துரைத்தான்.
2013 ஆம் ஆண்டு வெளியான Liar’s Dice திரைப்படத்தை கீத்து மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார். இது அவரது முதல் முழுநீளத் திரைப்படம்.
நடிகையாக நளதமயந்தி திரைப்படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான கீத்து மோகன்தாஸ், பின்னர் இந்தியத் திரைப்பட உலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.
அவருடைய கலைப் பயணத்தின் தொடக்கத்திலேயே உருவான Liar’s Dice, அவரது படைப்பாற்றலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த சான்றாக இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியும் ஆழமான அழகியலோடும், அதே நேரத்தில் உரையாட வைக்கும் உண்மைத்தன்மையோடும் படமாக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு பயணத் திரைப்படம்.
ஆனால், வெறுமனே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பயணத்தைப் பற்றிய திரைப்படம் அல்ல.
பயணத் திரைப்படங்கள் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானவை.
மலையாளத்தில் வெளியான சமீர் தாகிர் இயக்கிய “நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி”. (2013) எனக்கு மிகவும் பிடித்த பயணத் திரைப்படங்களில் ஒன்று. அதைப் போலவே, ஆலியா பட் நடித்த இம்தியாஸ் அலி இயக்கிய “Highway (2014)” திரைப்படமும் என்னை மிகவும் கவர்ந்தது. சே குவேராவின் வாழ்க்கைப் பயணத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட வால்டர் சால்ஸ் இயக்கத்தில் வெளியான “The Motorcycle Diaries (2004)” திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.
பயணத் திரைப்படங்களில் அழகான மலைகள், சாலைகள், ஆறுகள், நகரங்கள் எனப் பயணத்தின் வெளிப்புறக் காட்சிகள் மட்டும் இருப்பதில்லை.
அந்தப் பயணத்தின் ஊடாக அல்லாடும் மனித உணர்ச்சிகளின் வலி, வேதனை, நிராசை, காதல், கோபம், தனிமை, நம்பிக்கை என மனித மனத்தின் பல அடுக்குகளையும் நாம் கடந்து செல்கிறோம்.
Liar’s Dice அப்படிப்பட்ட ஒரு பயணம்.
இந்தத் திரைப்படத்தை இயக்கிய கீத்து மோகன்தாஸ் இதுவரை இயக்கியிருப்பது மூன்று திரைப்படங்கள்தான்.
ஆனால், எண்ணிக்கையைவிட அந்த மூன்று திரைப்படங்களுக்கிடையே அவர் கடந்து வந்திருக்கும் கலைப்பயணம்தான் முக்கியமானது.
முதல் திரைப்படமான Liar’s Dice — ஒரு சின்னஞ்சிறு மலைக்கிராமத்திலிருந்து பெருநகரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெண்ணின் வழியாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தியாவின் இன்னொரு முகத்தையும் நமக்குக் காட்டுகிறது.
அதன்பிறகு வந்த Moothon — காணாமல் போன தன் அண்ணனைத் தேடி ஒரு சிறுவன் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக, மனிதர்களின் அடையாளம், உறவு, காதல், வன்முறை, பாலுணர்வு, தனிமை என இன்னும் ஆழமான மனித மனத்தின் இருண்ட பகுதிகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
இப்போது, அந்த இரண்டு படைப்புகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான யாஷ் நடிக்கும் Toxic திரைப்படத்தின் மூலம், முற்றிலும் வேறொரு பரப்புக்குள் கீத்து மோகன்தாஸ் நுழைகிறார். Toxic 2026 ஆகஸ்ட் 26 அன்று வெளியாகிறது.
Liar’s Dice திரைப்படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு.
ஒளிப்பதிவை மேற்கொண்டவர் ராஜீவ் ரவி — இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். Dev.D, Gangs of Wasseypur போன்ற திரைப்படங்களில் தனது தனித்துவமான ஒளிப்பதிவு மொழியை உருவாக்கியவர். பின்னர் Annayum Rasoolum போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநராகவும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியவர். கீத்து மோகன்தாஸின் வாழ்க்கைத் துணையும் அவரே.
Liar’s Dice திரைப்படத்திற்கான அவரது ஒளிப்பதிவு வெறுமனே காட்சிகளைப் பதிவு செய்வதில்லை; அந்தக் காட்சிகளின் உணர்ச்சிகளையும் ஒளியாக மொழிபெயர்க்கிறது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காக ராஜீவ் ரவி தேசிய விருதைப் பெற்றிருப்பது, அந்தக் கலைநேர்த்திக்கான ஒரு முக்கியமான அங்கீகாரம்.
இமாச்சலப் பிரதேசத்தின் பனிமூடிய மலைக் கிராமங்களின் தனிமை ,பனியால் மூடப்பட்ட மலைப்பாதைகள், வெறிச்சோடிய நிலப்பரப்புகள், நீண்ட சாலைகள் — இவை அனைத்தும் கமலா என்ற பெண்ணின் பயணத்திற்கு ஒரு வெளிப்புற அழகை மட்டும் தருவதில்லை; அவளுடைய உள்ளுக்குள் இருக்கும் தனிமைக்கும் அச்சத்திற்கும் ஒரு காட்சியுருவைத் தருகின்றன.
பின்னர் அந்தப் பயணம் டெல்லியை நோக்கி நகர்கிறது.
மலைகளின் மௌனம் மெதுவாக மறைகிறது.
அதற்குப் பதிலாக, பெருநகரத்தின் இரவு நேரப் பரபரப்பு நம்மைச் சூழ்கிறது.
மலைக்கிராமத்தின் அமைதிக்கும், டெல்லியின் இரவுநேர நெரிசலுக்கும் இடையே உள்ள அந்தக் காட்சிமாற்றம், ஒரு புவியியல் மாற்றமாக மட்டும் இல்லாமல், ஒரு மனிதனின் உலகம் எவ்வாறு மாறுகிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
பனியில் உறைந்திருந்த ஒரு உலகிலிருந்து, மனிதர்களால் நிரம்பி வழியும் நகரத்திற்குள் கமலா நுழைகிறாள்.
ஆனால் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில்தான் அவளுடைய தனிமை இன்னும் அதிகமாகிறது.
இதுதான் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவின் மகத்துவம்.
Iiar’s Dice கதை எளிமையானது தான்.
இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர மலைக்கிராமம் ஒன்றில் வாழும் கமலா என்ற இளம் பெண்ணின் கணவன் வேலைக்காகப் பெருநகரத்திற்குச் சென்றிருக்கிறான். பல மாதங்களாக அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
அவனைத் தேடி, தனது சிறுமகளையும் ஒரு ஆட்டுக்குட்டியையும் அழைத்துக்கொண்டு அவள் டெல்லியை நோக்கிப் புறப்படுகிறாள்.
அவளுக்குத் தெரியாத பாதைகள்.
அறிமுகமில்லாத மனிதர்கள்.
பாதுகாப்பற்ற சூழல்கள்.
எதிர்காலம் குறித்த எந்த உறுதியும் இல்லாத ஒரு பயணம்.
ஆனால் கணவனைத் தேட வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவளை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.
இந்தப் பயணத்தில் அவளுக்குத் துணையாக வருகிறான் நவாஸுத்தீன் சித்திக் ஏற்றிருக்கும் மர்மமான மனிதனின் கதாபாத்திரம்.
அவன் ஒரு முன்னாள் ராணுவ வீரன்.
ஆனால் வழக்கமான திரைப்படங்களின் கதாநாயகனைப் போல அவன் உருவாக்கப்படவில்லை.
ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கக்கூடிய பலவீனங்களும், சந்தேகங்களும், குழப்பங்களும், சுயநலங்களும் கொண்ட மனிதனாகவே அவன் நமக்கு முன்னால் நிற்கிறான்.
அதுவே அந்தக் கதாபாத்திரத்தை உயிருள்ள மனிதனாக மாற்றுகிறது.
கதாநாயகியாக நடித்த கீதாஞ்சலி தாபாவும் மிக நுட்பமான, இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
கணவனைத் தேடும் தவிப்பு, குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய அச்சம், தனிமை, அறிமுகமற்ற உலகத்தின் மீதான பயம் என அந்தப் பெண்ணின் ஒவ்வொரு உணர்வையும் அவர் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
ஆனால் Liar’s Dice ஒரு பெண்ணின் கணவனைத் தேடும் கதையாக மட்டும் நின்றுவிடவில்லை.
அதன் பின்னால் இந்தியாவின் இன்னொரு முகம் இருக்கிறது.
இந்தியாவைப் போன்ற ஒரு வளரும் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பெரும் கட்டிடங்களை எழுப்பும் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள், எந்த அடையாளமும் இல்லாமல் உழைக்கிறார்கள்.
சில நேரங்களில் அவர்கள் கட்டியெழுப்பிய அதே கட்டுமானத் தளங்களிலேயே தங்கள் உயிரையும் இழக்கிறார்கள்.
பீகார், ஒடிசா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சின்னஞ்சிறு கிராமங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் திரட்டப்பட்டு, பெருநகரங்களின் கட்டுமானப் பணிகளுக்காக அழைத்து வரப்படுகிறார்கள்.
தங்களுடைய பூர்வீகக் கிராமங்களை விட்டு வெகு தொலைவில் வந்து பணியாற்றும் அவர்களில் பலருக்கு போதுமான தொழில்பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை.
எந்தக் கட்டிடத்தில் வேலை செய்கிறார்களோ, அந்தக் கட்டிடத்திலேயே அல்லது அதன் அருகிலுள்ள சிறிய இடங்களிலேயே, அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவர்கள் தங்கிக் கொள்ள வேண்டிய நிலை.
இந்த அடித்தட்டு மனிதர்களின் அளவற்ற உழைப்பினால்தான் இந்தியாவின் பெருநகரங்கள் நாளுக்கு நாள் வானத்தைத் தொடும் கட்டிடங்களால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அந்தக் கட்டிடங்களின் உயரத்தைப் பார்க்கிற நாம், அவற்றை எழுப்பிய மனிதர்களின் வாழ்க்கையின் ஆழத்தைப் பார்ப்பதில்லை.
அவர்களுடைய பெயர்கள் நமக்குத் தெரியாது.
அவர்களுடைய முகங்கள் நமக்கு நினைவில் இருப்பதில்லை.
அவர்கள் காணாமல் போனால் தேடுவதற்குக்கூட யாரும் இல்லாமல் போய்விடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு தொழிலாளிதான் காணாமல் போகிறான்.
அவனைத் தேடி அவனுடைய மனைவியும் குழந்தையும் புறப்படுகிறார்கள்.
அவர்களுடன் ஒரு ஆட்டுக்குட்டியும் பயணிக்கிறது.
அவர்களுக்கு வழிகாட்டியாக வருகிற மனிதனும் அவர்களுக்கு உறவினன் அல்ல; நண்பனும் அல்ல.
வெறும் பணத்திற்காக அவர்களுடன் பயணிக்கும் ஒரு மர்மமான மனிதன்.
இந்த மூன்று மனிதர்களின் பயணம், மெதுவாக நம்முடைய பயணமாக மாறிவிடுகிறது.
அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பாதையும் நம்முடைய மனதிற்குள் ஒரு பாதையைத் திறக்கிறது.
படத்தின் உச்சக்காட்சியை அடையும் போது கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
படத்தைப் பார்த்து முடித்துவிட்டு, நான் படம் பார்த்த அறையின் விளக்குகளை அணைத்தேன்.
அப்படியே இருட்டில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
என் கண்கள் ஈரமாக இருந்தன.
என் மனதிற்குள் ஒரே ஒரு கேள்வி எழுந்தது:
ஏன் இந்தத் திரைப்படம் நம்மை இவ்வளவு கடுமையாகப் பாதிக்கிறது?
பதில் ஒன்றுதான்.
அந்தத் திரைப்படத்தில் ஆன்மா இருக்கிறது.
அந்த ஆன்மா அசலானது.
உண்மையானது.
வாழ்க்கையிலிருந்து பிறந்தது.
அந்த ஆன்மாவை அப்படியே கலையாக மாற்றித் தருகிற கீத்து மோகன்தாஸ் போன்ற மிகச் சிறந்த இயக்குநர்கள், தங்களுடைய படைப்பாற்றலின் உச்சங்களால் நம்முடைய உள்ளத்தைத் தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அதனால்தான் ஒரு திரைப்படம் முடிந்த பிறகும் அது முடிந்துவிடுவதில்லை.
திரை இருண்டுவிடுகிறது.
விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
மனிதர்கள் அறையைவிட்டு வெளியேறுகிறார்கள்.
ஆனால் அந்தப் படைப்பின் ஆன்மா மட்டும் நம்முடன் பயணிக்கத் தொடங்குகிறது.
நம் நினைவுகளுக்குள் தங்குகிறது.
நம் தனிமையான இரவுகளில் நம்மிடம் பேசுகிறது.
சில நேரங்களில், நம்முடைய கண்களை ஈரமாக்குகிறது.
ஒரு நல்ல திரைப்படத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.
இல்லை.
ஒரு நல்ல திரைப்படம்தான் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நமக்குள் மறைந்திருக்கும் மனிதனை நமக்கே காட்டிக் கொண்டிருக்கிறது.
யூடியூபில் இலவசமாக காணக் கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள்.
❤️
மணி செந்தில்
மறுமொழி இடவும்