தற்கால இந்திய அரசியல் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி என்பது இந்த மண்ணிற்கு நேர்ந்த மாபெரும் அவலம் என்பதை எல்லாம் தாண்டி பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமை, சகோதரத்துவம், அமைப்பின் ஊடாக விவாதங்கள்/ உரையாடல்கள் மூலமாக கட்டி எழுப்பப்படும் ஜனநாயகம், போன்ற பல்வேறு அபூர்வமான அரசியல் கட்டுமானங்களை கொண்ட இடதுசாரி இயக்கங்கள் தனது இறுதிக் காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என உண்மையிலேயே நமக்கெல்லாம் அச்சம் ஏற்படுகிறது.
இந்திய மண்ணுக்குரிய அடிப்படைத் தன்மைகளை இடதுசாரிகள் புரிந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் என்றோ இந்தியாவில் இருக்கின்ற மொழி வழி தேசிய இனங்களின் நலன்களை இடதுசாரிகள் புரிந்து கொள்ளாமல் வர்க்க நலன்களை மட்டும் சார்ந்து அரசியலை அணுகினார்கள் என்றோ அரசியல் சமரசங்கள் மூலமாக தாங்கள் உயிரெனக் கொண்டிருந்த கொள்கைகளை காவு கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றோ எழுகின்ற விமர்சனங்களை வேதனையோடு சமூக அக்கறை உள்ள எவராலும் அப்படியே கடந்து விட முடியாது.
ஏனெனில் இந்த பெரும் நில அரசியலில் இடதுசாரிகள் செலுத்திய தாக்கத்தினை கடந்த கால வரலாறு என்றும் அது ஒரு கனாக்காலம் என்றும் பெருமூச்சோடு சிந்திப்பவர்கள் சிறு எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகிறார்கள் என்பது ஜனநாயக அரசியலில் தற்போது எழுந்திருக்கிற மற்றும் ஒரு ஆபத்து.
2004 பாராளுமன்றத் தேர்தலில் 68 இடங்களை பிடித்த இடதுசாரிகள் அதற்குப் பிறகு அடைந்த பின்னடைவுகள் குறித்த விமர்சனக் கட்டுரை அல்ல இது. உண்மையில் இடதுசாரிகள் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை “அறிவுச்சுதந்திரமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் இளம் வயதில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பான்” என்கின்ற பொது மொழியை நம்புகிறவர்கள் தங்களுக்குள்ளாக சிந்திப்பதற்கான சில கேள்விகளையும் , 75 ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்ட திராவிட அரசியல் தலைவர்கள் இடதுசாரி தலைவர்களுக்கு எவ்வாறு எதிர்ப்புள்ளிகளில் இருக்கிறார்கள் என்கின்ற சிந்தனையையும் எழுப்ப இந்த கட்டுரை முயல்கிறது.
உண்மையில் இடதுசாரித்தனம் என்பது புரட்சிகர மனநலையோடு கூடிய எந்தவித தன்னல நோக்கமும் இல்லாமல், மக்களை நேசிக்கின்ற அபூர்வமான குணத்தாது. குறிப்பாக இடதுசாரிகள் கொண்டிருந்த, இன்னும் சிலரிடம் எஞ்சி இருக்கின்ற எளிமையின் அழகியல்.
சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இறந்த போது எழுதப்பட்ட ஒரு பதிவு ஒன்றினில் உம்மன் சாண்டி தன் வாழ்வில் கொண்டிருந்த எளிமையை காட்டிலும் அதற்கு முன்பாக இருந்த ஏகே ஆண்டனி மற்றும் இ எம் எஸ் நம்பூதிரி பாட் போன்ற கேரள முதல்வர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு எளிமையாக இருந்தார்கள் என்று ஒப்பீடு செய்யப்பட்டு எழுதப்பட்டிருந்ததை வாசித்த போது தமிழர்களாகிய நாம் எவ்வளவு மோசமான ஒரு அரசியல் சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. முதலமைச்சர்கள் பணிபுரிந்த தலைமைச் செயலக பேருந்து நிறுத்தத்தில் அவர்களது மனைவிகள் பேருந்து ஏறிய காட்சியும், ஏ கே ஆண்டனி பதவியேற்ற விழாவிற்கு கூட குடும்பத்தினரை அழைக்காமல் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளுங்கள் என உறுதி காட்டியதும் , முதல்வர்கள் சாதாரண மனிதர்களாக இருசக்கர வாகனங்களில் தலைமைச் செயலகம் வந்ததும் எங்கு சென்றாலும் வரிசையில் நின்றதும் கேரள மண்ணில் இ எம் எஸ் என்கின்ற இடதுசாரி தலைவர் தந்த தாக்கத்தினால் தான்.
மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்த இ எம் எஸ் தனது இளம் வயதில் தனது குடும்ப சொத்துக்கள் மூலம் தனக்கு வர்க்கப் பார்வை வந்துவிடும் என்கிற கொள்கை உறுதியில் சொத்துக்களை விற்று அந்தக் காலத்தில் ஏறக்குறைய 1.80 லட்சம் ரூபாய் தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.
இதுவெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். திமுகவின் தோற்றம், திக பிளவு இரண்டுமே சொத்துப் பிரச்சனை அல்லது அடுத்த ட்ரஸ்டி பிரச்சனை என்கின்ற ஒற்றைக் காரணம் என்பதோடு நம் தமிழக நிலையை எண்ணி நாம் நம்மை எண்ணியே தலையில் அடித்துக் கொண்டு மேலே தொடர்வோம்.
இ எம் எஸ் நம்பூதிரி பாட் காலமானபோது “இ எம் எஸ் இல்லாத கேரளாவை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனி கலங்கியவாறு கூறினார்.
ஏனெனில் தங்கள் வாழ்வின் எளிமை மற்றும் நேர்மைக்கான எல்லா உள்ளொளி தன்மைகளையும் ஏகே ஆண்டனியும் இ கே நாயனாரும் உம்மன்சாண்டியும் இ எம் எஸ் அவர்களிடமிருந்தே பெற்றார்கள்.
ஏன் அது கேரளாவில் மட்டும் சாத்தியப்பட்டது தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்றெல்லாம் உங்கள் மனதிற்குள் எழும் ஆழ்மன கேள்விகளால் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை.
ஒரே ஒரு பதில் தான் அதற்கு.
அந்த மண்ணை தீவிரமாக மக்களை நேசித்த அதி மனிதர்களான இடதுசாரிகள் ஆண்டார்கள்.ஆனால் ஏறக்குறைய 75 ஆண்டுகள் காமராஜருக்கு பிறகு தமிழர் நாட்டை முதலாளித்துவ/பிழைப்பு வாத, ஊழல் மலிந்த திராவிட தலைவர்கள் ஆண்டார்கள்.
எல்லாமும் தலைகீழ் மாற்றமான பிறகு “மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பதுதான் இப்போதைய அரசியல் புது மொழி.அதற்கேற்ப தலைவர்கள் மக்களுக்கான சேவையான அரசியலைப் பிழைப்பாக்கினார்கள். மக்கள் பிரியாணி பொட்டலங்கள் வாங்கிவிட்டு, சாராயம் குடித்துவிட்டு ஓட்டுக்கு காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் தமிழ்நாட்டு ஜனநாயகம்.
குறிப்பாக கேரளாவை ஆட்சி செய்த இந்திய நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் இ எம் எஸ் நம்பூதிரி பாட். 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத முதன்முதல் ஆட்சியை கேரளாவில் கம்யூனிஸ்டுகள் அமைத்தார்கள்.
வி ஆர் கிருஷ்ண ஐயர்,அச்சுத மேனன், பேராசிரியர் ஜோசப் முண்டே சேரி, உள்ளிட்ட மிகச்சிறந்த மேதைகளை அமைச்சர்களாக கொண்ட முதல்வராக பதவியேற்றவுடன் தங்கள் நிலைகளை விளக்கி இ எம் எஸ் இவ்வாறாக உரையாற்றினார்.
“நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள். கடும் பிரச்சனைகள் நிலவும் மாநிலத்தை ஆள முன்வருவது என்பதே கடுமையானது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு குரல்கள் வருகிறது. நால்புறமும் நிற்கும் வரையறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றவேண்டும். கற்பனைக்கு எட்டாத விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சூழல் பழக்கமாகவேண்டும். நாங்கள் தனிப்பட்ட நபர்களாக இவ்வேலையில் நுழையவில்லை. நிறுவன வகைப்பட்ட ஒன்றில் நுழைகிறோம். நாங்கள் கட்சியின் பிரதிநிகள் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுள்ளோம்.
மத்திய காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள் பலவற்றை முன் இருந்த காங்கிரஸ் கேரளா மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டன. அதை நாங்கள் செய்து முடிப்போம். சோசலிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைப்பை கோருகிறோம்.
We are being elected ‘Not as Representative of Party but as Representative of People’”
அதேபோல் முதன் முதலாக 1959 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 ஐ பயன்படுத்தி கலைத்த முதல் ஆட்சியும் இ எம் எஸ் ஆட்சி தான். அதற்கான எந்த காரணத்தையும் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டு 1959 இ எம் எஸ் ஆட்சியை கலைத்த ஜவர்கலால் நேரு அவர்களுக்கு எழுபதாவது பிறந்த நாள் வருகிறது. தனது 50 வது பிறந்த ஆண்டில் இருந்த இ எம் எஸ் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட நேருவிற்கான சிறப்பு பிறந்தநாள் மலரில் நேரு எப்படிப்பட்ட தவிர்க்க முடியாத மனிதன் என்பதற்கான காரணங்களை அடுக்கி ஒரு அட்டகாசமான கட்டுரையை எழுதி வெளியிட்டு இருந்தார்.
மீண்டும் 1969 ஆம் ஆண்டு மீண்டும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்த போது அப்போது கட்சிப் பணிக்கு திரும்பி இருந்த இ எம் எஸ் கடும் முயற்சிகளை செய்து நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து உபரி நிலங்களை பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்து சாதனை படைத்தார்.
தன் வாழ்நாள் முழுக்க எளிய மக்களுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த இ எம் எஸ் மிகச்சிறந்த கட்டுரையாளர். பிரண்ட்லைன் இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் அரசியல் ரீதியிலும் தர்க்க ரீதியிலும் மிக மிக முக்கியமானவை. 70 ஆண்டுகளை தாண்டிய அரசியல் பயணத்தை முடித்து தனது 89 வது வயதில் 1998 மார்ச் 20 அன்று மறைந்த இ எம் எஸ் இறந்தபோது அப்போது கேரள முதலமைச்சர் ஆக இருந்த ஈ கே நாயனார் தனது ஈடு இணையற்ற தோழருக்கு “லால் சலாம் இ எம் எஸ்” என்று தழுதழுத்தவாறு கொள்கை வணக்கம் செலுத்திய செய்தி அப்போது எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது.
மலையாள இலக்கிய உலகில் இலக்கிய விமர்சனம் என்கின்ற புதிய வகைமையை உருவாக்கி மலையாள இலக்கிய உலகின் செழுமையை வடிவமைத்தவர். மாற்றுக் கருத்திற்கு கடுமையாக மதிப்பளிப்பவர். ஒருமுறை அருந்ததிராய் எழுதிய “சின்னஞ்சிறு விஷயங்களின் கடவுள்” (God of Small things -தமிழில் காலச்சுவடு வெளியீடு) என்கின்ற நாவலில் இ எம் எஸ் அவர்களை ஒரு ஹோட்டல் முதலாளி போல உருவகம் செய்ததற்கு கேரளா முழுக்க கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போது எதிர்ப்பினை கடுமையாக கண்டித்து அந்த மாற்றுக் கருத்தினை மதித்து ஏற்றவர். அவர் பிறந்த நம்பூதிரி சமூகத்தில் அணிவிக்கப்பட்ட பூணூலை அறுத்து சமபந்தி உணவு அருந்தி சாதியால் விலக்கம் செய்யப்பட்ட இ எம் எஸ் எதற்காக சொந்த சாதியிலேயே மணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனமும் அதற்கு அவர் அளித்த பதிலும் மிக முக்கியமானவை. நம்பூதிரி சாதியில் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். மற்றவர்கள் நாயர் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் தன் சாதிக்கு எதிரான ஒரு கலகத்தை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நான்காவதாக பிறந்த இஎம்எஸ் தன் மனைவியான ஆர்யாவை மணந்தார் என்கிற விளக்கம் ஜெயமோகன் போன்றவர்களால் வைக்கப்பட்டாலும் இ எம் எஸ் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட விதம் அவரை தனித்துவமாக காட்டுகிறது.
தமிழகத்தை பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடந்த 2008 முதல் 2010 வரையிலான காலத்தில் தனது தொப்புள் கொடி உறவுகள் சிங்கள பேரினவாதத்தால் கொலை செய்யப்படும் அவலத்தை தாங்க முடியாமல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மக்களை கூட்டி பேசினார் என்பதற்காக மூன்று முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழாக கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தார். தற்போது நடக்கின்ற “திராவிட மாடல்”(?) ஆட்சியில் கூட
ஆட்சியை விமர்சித்து யூட்யூப் வீடியோ வெளியிட்டார் என்ற காரணத்திற்காக தம்பி சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எதிர்த்து விமர்சனம் செய்கிறார் என்ற காரணத்திற்காக சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
அதேபோல இ எம் எஸ். அவரது “வேதங்களின் நாடு” என்கின்ற நூல் இடதுசாரி ஆதரவாளர்களாலேயே கடுமையாக எதிர்க்கப்பட்ட நூல். அதேபோல “மார்க்ஸ் பார்வையில் இந்தியா” என்கின்ற நூலும். “இந்திய வரலாறு” என்கின்ற நூலும் காந்தி பற்றிய விமர்சன நூலான “மகாத்மாவும் அவரது இசமும்” என்கிற நூலும் மிக மிக முக்கியமானவை. இவை தமிழிலும் கிடைக்கின்றன. தன் இறுதி சடங்கில் கூட அரசு மரியாதையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத இ எம் எஸ் எளிமை தமிழ்நாட்டில் கனவிலும் கூட நினைக்க முடியாது.
ஆனால் இங்கே
எந்த ஆய்வுகளும், அறிவு ரீதியான தர்க்கங்களும் இல்லாத, பெரும்பாலும் பிற நூல்களைத் தழுவி அல்லது உரை எழுதி சாமர்த்தியமான வார்த்தை விளையாட்டுக்கள் நிரம்பி வழியும் படைப்புகளை தந்த கருணாநிதிக்கு பேனாச்சிலை. கடற்கரை சமாதி. நூலகப் பெயர். அதேபோலத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையிலான வகையறாக்கள். இவர்கள் ஆண்ட தமிழ்நாட்டிற்கு அதே பக்கத்து மாநிலத்தில் தான் இ எம் எஸ் போன்ற அதிமனிதனும் ஆண்டு இருக்கிறார் என யோசிக்கும் போது தமிழர்கள் எத்தகைய சாபம் பெற்றார்கள் என்பதை உணர முடிகிறது.
மூத்த இடதுசாரி தலைவரான ஜோதி பாசு இந்திய நாட்டின் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அதற்கான அனுமதி தர மறுத்து விட்டது. தமிழகத்திற்கு மூப்பனாருக்கு கிடைத்த வாய்ப்பை கருணாநிதி தடுத்தது போல. அதை ஒரு வரலாற்றுக் குற்றமாக வரையறுத்த ஜோதிபாசு இந்திய பெரு நிலத்தில் மிக நீண்ட காலம் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்தவர். ஒருவேளை ஜோதிபாசு இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்று இருந்தால் மோடி போன்ற கொடுமைகளை இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அனுபவிக்காமல் கடந்திருப்பார்கள். முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை இ எம் எஸ் எடுத்தது கடுமையான நமது எதிர்ப்பிற்குரியன, தனியே எழுதப்பட வேண்டிய கட்டுரை செய்திகளை கொண்டன என்றாலும் இந்திய அரசியல் வரலாற்றில் இ எம் எஸ் ஒரு சகாப்தம் தான்.
இ எம் எஸ் ஜோதிபாசு போன்ற பெரும் தலைவர்கள் இல்லாத இடதுசாரிகள் ஒரு வலுவற்ற படையாக காட்சியளித்தாலும் இன்னமும் இந்த நாட்டில் தொழிற்சங்கங்கள் ஊடாக எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிற முக்கிய அமைப்புகளாக இருக்கின்றன. ஆனால் ஒரு அரசியல் அமைப்பாக இடதுசாரிகள் தங்களது அரசியல் பிழைகள் காரணமாக வலிமை குறைந்து வருவது முதலாளித்துவத்தை வலதுசாரிகளை வலுப்படுத்துகிற இடதுசாரிகள் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கின்ற குற்றம் என்றே கருதலாம்.
குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை திமுக விடமிருந்து கம்யூனிஸ்டுகள் பெற்றார்கள் என்கிற செய்தியை எந்த கட்சியில் இருந்தாலும் சமூகத்தை நேசிக்கும் எவராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. அது ஒரு கையறு நிலை போல கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது போல உணர்வு.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற இந்த 8 ஆண்டுகளில் இந்திய சூழலும் உலக சூழலும் நிறைய மாறி இருக்கின்றன. கடுமையான தோல்விகளுக்குப் பிறகு இடதுசாரிகள் அது குறித்தான ஆய்வுகளை செய்து மீள் எழும்புதலுக்கான தயாரிப்புகளை செய்கிறார்களா என்று செய்திகள் இல்லாத நிலையில், உலகமயமாக்கல், இந்துத்துவம், நாட்டின் பன்மைத் தன்மைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்து, ஜனநாயக மாண்புகளை அழிக்கும் வேலைகள் என வலதுசாரி அமைப்பான பாஜக தனது நீண்ட கால திட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் தான் இஎம்எஸ் போன்ற வசீகரமான ஒரு இடதுசாரி தலைவர் நாட்டிற்கு தேவைப்படுகிறார். நம் தமிழகத்திற்கு ஒரே ஒரு நல்ல கண்ணு மட்டும் தான். அவரையும் பாஜக சிபி ராதாகிருஷ்ணனிடம் திமுக தோற்கடித்துவிட்டு, அவருக்கே ஒரு கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக படம் காட்டியதும், அதை வாங்க மறுத்து, அந்தத் தொகையையும் அவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கியதும், நல்லகண்ணு என்கின்ற ஒரு தமிழர் இன்னும் இங்கே இடதுசாரியாக எஞ்சி இருக்கிறார் என்கின்ற ஆறுதலை
இ எம் எஸ் நினைவலைகள் ஊடாக நமக்கு அளிக்கின்றன.
உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்.
1. அறியப்படாத இஎம்எஸ்.
2. இ எம் எஸ் நம்பூதிரி பாட்-ஆர்.பட்டாபிராமன்
3. இ எம் எஸ்-என் குணசேகரன்.
4. இ எம் எஸ்- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரண்ட் லைன் கட்டுரைகள்.
5. இ எம் எஸ் பற்றிய உரையாடல்கள் ஜெயமோகன்.
All reactions:
33Shankar Chockalingam, தமிழம் செந்தில்நாதன் and 31 others
மறுமொழி இடவும்