பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 15 of 56

மஞ்சள் நிற வாழ்வொன்றின் மர்மக்கதை.

❤️

அந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை.

ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு.

ஆனாலும்..அவ்வப்போது ஏதேனும் நினைவுகள், அல்லது சில பாடல்கள், சில காட்சிகள், நீண்ட தூர பயணங்கள் என வாழ்வின் ரசனைமிக்க மயிலிறகுகள் ஆன்மாவை வருடும் போதெல்லாம் அந்த மஞ்சள் நிற சுடிதார் உயிர் பெற்று விடுகிறது.

பண்டிகைக்கால துணிகள் எடுப்பதற்காக ஜவுளிக் கடைக்குப் போனபோது கலைத்துப்போட்ட பட்ட துணிகளில் ஒரு மஞ்சள் சுடிதாரை மட்டும் உறைந்த பார்வையால் நான் பார்த்துக்கொண்டிருந்தை பார்த்த கடைக்காரப் பெண் புரியாமல் விசித்திரமாக பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

யாருக்கு துணி எடுத்தாலும் நான் மஞ்சள் வண்ணத்தில் துணிகள் எடுப்பது குறித்து வீட்டில் இருப்போர் அனைவருக்கும் ஒரு சலிப்பு ஏற்படுவதுண்டு. “மஞ்சள் என்றால் உனக்கு அப்படி பிடிக்குமா அப்பா..? ” என புரியாமல் கேட்கும் என் மகனிடம் நான் எப்படி விளக்குவேன்…?

ஒரு மஞ்சள் நிற சுடிதாருக்கு பின்னால்..சில சூரிய சந்திரர்களும்,தாள கதியில் ஓடும் ஒரு நீரோடையும்,ஆர்ப்பரித்து கொட்டுகிற அருவியும்,நீலம் பாவித்து கிடக்கிற ஒரு கடலும்..பசுமை பூரித்து கிடக்கிற பச்சை வயலும்..பனி இரவுகளும்.. பவுர்ணமி பொழுதுகளும்..இதையெல்லாம் தாண்டி..இந்த வாழ்க்கை முழுக்க நான் நேசித்து பொத்தி வைத்திருக்கிற நினைவின் பசும் அடுக்குகளும் இருக்கின்றன..என்பதையும்,அதற்கான சாத்தியங்கள் என்னைப்போல பலருக்கும் இருக்கும் என்பதையும்..எப்படி விளக்குவேன்..?

இது.. ஒரு மஞ்சள் நிற சுடிதார்ஒரு புடவை ஆகி, சில காலங்கள் என் வாழ்வாகவும் ஆகி, என்னைக் கடந்து நடக்கின்ற ஒரு தென்றலாகவும் ஆகி,அப்படியே முழுமையாக ஆக்கிரமித்து,என்னை புரட்டி போட்டு விட்டு.. எவ்வித காரணமும் இன்றி ஒரு நிழலை போல கரைந்துப் போன கதை.

????

நினைவோ ஒரு பறவை..

நினைவோ ஒரு பறவை.

♥️

இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது.

களைத்த கண்களுடன் எடுத்துப் பார்க்கையில் அவள் எண்ணிலிருந்து வந்த எந்த எழுத்தும் இல்லாத ஒரு வெற்றுச் செய்தி. இந்த நள்ளிரவில், எதற்காக.. எவ்விதமான எழுத்துக்களோ, வார்த்தைகளோ இல்லாத வெற்றுச் செய்தி என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை தவறி வந்திருக்கலாமோ என யோசித்துப் பார்த்தேன். அது எப்படி திசைமாறி காற்றில் அலைகிற‌ பூ ஒன்று சரியாக என் மடியில் மட்டும் விழுகிறது..?

வேறு வகையில்தான் சிந்திக்க வேண்டும்.இன்னும் அலைபேசியில் என்னை அழிக்காமல் வைத்திருக்கிறானா என ஒரு வேளை.. நம்மை பரிசோதித்து பார்க்கிறாளோ, அல்லது இந்த நள்ளிரவில் உன் நினைவின் பாடலோடு உறங்காமல் விழித்துக் கிடக்கிறேன் என உணர்த்த எண்ணுகிறாளோ என்றெல்லாம் என் மனம் தனக்குத் தானே விசித்திர கோடுகளை வரைந்து பார்த்து வசீகர ஓவியங்களாய் மாற்றத் தொடங்க..ஒரு மாய விளையாட்டு அதுவாகவே நிகழத் தொடங்கியது.

அது வெறும் வெற்றுச் செய்தி. அந்த வெற்றுச் செய்தி‌ அலைபேசியின் ஒளியூட்டப்பட்ட வெண்திரையில் காணும்போது, ஒரு எழுதப்படாத தாளைப் போல இருந்தது. அது ஒருவகையில் வரையப்படாத ஓவியம். நீண்டநாள் விரல்கள் படாது, புழுதியேறி கிடக்கும் பழுப்பேறிய பியானோ ஒன்றின், கருப்பு- வெள்ளை கட்டைகளில் வாசிக்கப்படாமல் உறைந்து கிடக்கும் ஒரு இசைத்துளி.

அது வெறும் ஒரு வெற்றுச் செய்தி என ஏற்றுக் கொள்ளாதே என உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.அந்த நொடியில் தான்..நலம் விசாரித்தல்கள் ,அக்கறையும் அன்பும் நிறைந்து வழிகிற சொற்கள்… என கற்பனையில் என் மனம் அதன் போக்கில் எழுதி பார்த்து ஏகாந்தம் கொள்ள.. தொடங்கியது.ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம் போல..அது ஒரு எழுதப்படாத வசவுவாகக் கூட இருக்கலாம். இனி உன்னை சபிக்க சொற்களே இல்லை என்பதற்கான குறியீட்டு சாட்சியமாக கூட உணர்த்த விரும்பி இருக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வும் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அது ஒரு வெற்றுச் செய்தி.அதை எப்படி எடுத்துக் கொள்வது.. கால நதியின் கோர ஓட்டத்தில் மண்மூடி புதைந்துவிட்ட நினைவின் விதை ஒன்று வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டு இருக்கிற வெளிச்சத்துண்டால் உயிர்பெற்று துளிர்க்க முயல்கிறது என எடுத்துக் கொள்ளலாமா..அல்லது..உறுதியான முறிவொன்றினை வார்த்தைகளின்றி அறிவிக்க வருகிற மௌன மொழி பூசிய இறுதி அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாமா…என்றெல்லாம் யோசித்து குழம்பிய வாறே.. அடைத்துக் கிடந்த என் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான்.. “நினைவோ ஒரு பறவை” என ஒரு பாடல் தூரத்தில் எங்கோ கேட்டது.யாரோ வயதான தள்ளுவண்டிக்காரர் அவரது பண்பலை வானொலியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்தவாறே அமைதியாக ஆளற்ற சாலையில் நியான் விளக்கொளியில் நடந்து செல்ல, எங்கிருந்தோ கசிந்த அந்தப் பாடலின் மர்ம முடிச்சுகளில் இதயம் இடறத் தொடங்கியது.”அதற்காகத்தான் அலைபாய்கிறேன் வந்தேன் தர வந்தேன் நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை…”தள்ளுவண்டியோடு அந்தப் பாடலும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே சென்று காற்றில் கரைந்து மௌனமாக.. மீண்டும் தனிமையின் போர்வை போர்த்தி தன்னை முடக்கிக் கொண்டது அந்த சாலை.

நான் ஏதோ வெறுமையுடன் என் மேசையின் மீதிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அந்த வெற்றுச் செய்தியை எடுத்துப் பார்க்க தொடங்கினேன். அந்த ஒரு நொடியில் தான்..ஒரு நீல நிற சிறு பறவை ஒன்றுஅலைபேசி திரையில் இருந்து கிளம்பி, சிறகடித்தவாறே என் அறைக்குள் சில நொடிகள் சுற்றிசுற்றி பறந்து திறந்திருந்த என் ஜன்னலின் வழியே பறந்து போனது.அதன்பிறகு அலைபேசியை எடுத்துப் பார்க்க ஏனோ அச்சமாக இருந்தது.

♥️

பாடு நிலாவே… தேன் கவிதை..

❤️

எனக்கு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. என் எதிரே அமர்ந்திருந்த சாந்தினி தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமல் அழுதுகொண்டே இருந்தாள். உண்மையில் மானுட இனத்தின் அழுகை தனித்துவமானது. யார் அழுதாலும் அழுகை அவர்களை வயது குறைவானவர்களாக காட்டிவிடுகிறது. அழுகை என்பது சிறுவர்களுக்கான செய்கை என்பது போல ஒரு மனத்தடம் நம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது.துயர் மிகுந்து ஒருவர் அழும் விழிகளில் அவரின் பால்யத்தின் நிழல் படிந்து கொண்டே இருப்பதுதான் வாழ்வின் விசித்திரம்.சாந்தினியும் ஒரு சிறுமியைப் போல மாறி விட்டிருந்தாள்.அழுது அழுது அவளது கண்கள் வீங்கி இருந்தன. என்னோடு அமர்ந்திருந்த குமார் அவளது அழுகையை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருப்பது போல வலிந்து காட்டிக்கொண்டது எனக்கு என்னவோ போல் இருந்தது. “நான் வேண்டுமானால் வெளியே இருக்கட்டுமா.. ? “என்ற எனது தயங்கிய கேள்விக்கு “சும்மா அனத்தாம உட்காருடா..” என உறுதியான குரலில் பதிலளித்தான் குமார்.

குமார் என்னோடு பள்ளியில் படித்தவன். பெங்களூரில் பணிபுரியும் போது மும்பையைச் சேர்ந்த சாந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்டான். ஓரிரு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்கள் என்னவோ காரணத்தினால் பிரிய முடிவு செய்துவிட்டார்கள். குமார் பல காரணங்களை சொன்னான். சாந்தினியிடம் இருந்தது ஒரே ஒரு காரணம் தான். “குமாருக்கு என்னை பிடிக்கவில்லை.”அப்போது ஒரு இளம் வழக்கறிஞராக இருந்த எனது சட்ட ஆலோசனை கேட்கத்தான் இருவரும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். குமாருடன் அவனது பெரியப்பா வந்திருந்தார். நடிகர் வினு சக்கரவர்த்தி போல காட்சி அளித்த அவர் கடுகடுத்த குரலில் “சீக்கிரமாக செல்ல வேண்டும்..” என அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்.சில வருடங்கள் காதலித்து இருந்திருக்கிறார்கள். ஓரிரு வருடம் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பிரிவினை மட்டும் சில நிமிடங்களில் எடுக்கச் சொல்லும் குமாரின் பெரியப்பா எனக்கு மூர்க்கமான மனிதராக தெரிந்தார்.குமார் கிளம்ப தயாரானான். “சரி மாப்பிள்ளை.. நீ மீயூசுவல் டைவர்ஸ் பெட்டிஷன் தயார் செய். நாங்கள் திங்கட்கிழமை வந்து கையெழுத்து போடுகிறோம்..” என்றான். சாந்தினி “சார்.. உங்கள் போன் நம்பர் வேண்டும்.” என கேட்டாள். “அதுதான் எல்லாமே முடிந்துவிட்டதே.. எதற்கு அவனுடைய போன் நம்பர் ‌…” என குமார் அதிர்ந்து பேச.. நான் அமைதியாக எனது விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தேன்.

அன்று இரவே சாந்தினி என்னை அழைத்தாள். போனில் ஒரே அழுகை.யாரோ சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் குமார் இப்படி நடிக்கிறான் என சொல்லி அழுதாள். எனக்கு என்ன சொல்லி தேற்றுவது என்றே புரியவில்லை. எப்போதும் நேசிப்பதற்கு ஓராயிரம் காரணங்கள் தேவையாக இருக்கின்றன. ஆனால் வெறுப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை. நோக்கம் மட்டும் இருந்தால் போதுமானது.”நீங்க சொல்லுங்க சார்..நான் அவசியம் டைவர்ஸ் பெட்டிஷனில் கையெழுத்து போடணுமா..?” என சாந்தினி கேட்டதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. “அது.. உங்க விருப்பங்க. ஆனால் இப்படி வெறுப்பவனோடு இனி எப்படி வாழ்வீர்கள்..?” எனக் கேட்டேன்.சாந்தினி அமைதியாக இருந்தாள். அதன் பிறகு நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட வருகையில் சாந்தினியை பார்த்தேன். தெளிவாகவும் ஏதோ ஒரு சிந்தனையோடும் அவள் இருப்பதாக தோன்றியது. அமைதியாக கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் நீதிமன்றத்திலேயே கதறியழும் பல பெண்களையும், சில ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை என்பது இத்தனை கடினமானதா.. ஒரு நேசிப்பின் முறிவு என்பது ஏறக்குறைய மறுபிறப்பு போல அமைந்துவிடுகிறதே.. என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்த அனுபவங்களால் எனக்குள் திரும்பத் திரும்ப நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் ‌…”எது அதிக இன்பம் தருகிறதோ.. அதுவே அதிகத் துன்பம் தரும்.”

❤️

சில மாதங்களுக்குப் பிறகு சாந்தினி அலைபேசியில் வந்தாள்.நீதிமன்ற வாய்தா தேதி உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஆர்டர் காப்பி எப்போது வாங்கிக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும் என்னோடு பேசுவதாக கூறினாள்.தற்போது தான் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினாள்.நான் விவரங்கள் சொன்னதும் சரியாக அதே நாளில் வந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விவாகரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு சாந்தினியும், குமாரும் பிரிந்து போனார்கள்.நீதிமன்றத்தில் காத்திருந்தபோது சாந்தினி வாக்மேனில் ஏதோ பாடல்களை கேட்டவாறு சற்று துணிவாக அமர்ந்திருந்தது வழக்கமான அந்த நீதிமன்ற சூழலுக்கு பொருந்தாது போல எனக்குத் தோன்றியது.அன்று இரவு மீண்டும் சாந்தினி அழைத்தாள்.

இந்த முறை சற்று தெளிவாக பேசினாள்.”நீங்க சொன்ன பிறகு தான் சார் புரிஞ்சிச்சு. ஏன் பிடிக்காதவங்களோடு வாழணும்.. ? நம்பிக்கையும் அன்பும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை சார்..?”என்றெல்லாம் அவள் பேசிக்கொண்டே போனாள்.”எப்படி குறுகிய காலத்தில் எவ்வாறு மீண்டு வந்து இருக்கிறீர்கள்..?” என கேட்டேன்.”நிறைய ஊர் சுத்தினேன் சார். நிறைய பாட்டு கேட்டேன். குறிப்பா உங்க ஊர் எஸ்பிபி சாங்ஸ். அந்தக் குரல் எப்போதுமே லைட்டா இருக்கும் சார். அதே சமயத்தில் கம்பீரமாகவும் இருக்கும். எவ்வளவு கடினமான பாட்டா இருந்தாலும், எஸ்பிபி அதை அலட்டிக்காம லைட்டா பாடுவார் சார்.அந்தக் குரலே ஒரு மெசேஜ் சார்.எதையும் லைட்டா எடுத்துக்கணும் எனச் சொல்வது போல இருக்கும்.”எனக்கு ஒரே ஆச்சரியம். எஸ்பிபி தமிழ் திரைப்பட பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார் என தெரியும். ஒரு சில ஹிந்தி பாடல்கள் பாடியிருக்கிறார் என அப்போதுகேள்விப்பட்டும் இருந்தேன். ஆனால் ஒரு தீவிரமான எஸ்பிபி ரசிகை தமிழகத்தில் இல்லாமல் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் என என்னால் நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஆனால் சாந்தினி பேசிக்கொண்டே போனாள். “ஹம் ஆப் கே ஹைன் கோன்..படத்தில் எல்லா பாட்டும் எஸ்பிபி தான் பாடி இருப்பார். அதேபோல “ஏக் துஜே கேலியே” படத்தில் எல்லா பாட்டும் எஸ்பிபி தான் பாடியிருப்பார்.

இன்னைக்கு கோர்ட்ல கூட நான் இருந்தபோ “ஹம் ஆப் கே ஹைன் கோன்..” பாட்டை தான் சார் கேட்டுக்கொண்டிருந்தேன் என்றாள் அவள். விவாகரத்து வாங்க வந்திருந்த அவள் கேட்டுக்கொண்டிருந்தது திருமணக் கொண்டாட்டத்தை பற்றிய படமான “ஹம் ஆப் கே ஹைன் கோன்” படத்தின் பாடலை என்பதுதான்‌ சற்று வினோதமாக இருந்தது.

❤️

“எஸ்பிபி” என நம் அனைவராலும் அழைக்கப்பட்ட திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் சுமார் 42 ஆயிரம் திரை இசைப் பாடல்களைப் பாடி இருப்பவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட எஸ்பிபி 1946 ஆம் வருடம் ஜூன் 4 இல் ஆந்திர மாநிலம் கொகேணாட்டம் பேட்டையில் பிறந்தார். இயற்பெயர் ‌ சீறீபதி பண்டிதரதயுல பாலசுப்பிரமணியம். பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த சாந்தி நிலையம்(1969) படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி..”என்று எஸ்பிபி பாடிய பாடல் தான் அவர் பாடிய முதல் பாடல். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றிருக்கும் அவர் 60 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.எஸ்பிபி பாடகரான புதிதில் தமிழ்த் திரை உலகில் டி.எம் சௌந்தரராஜனின் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. அழுத்தம் திருத்தமான தெளிவான உச்சரிப்பிற்கு பேர்போன டிஎம்எஸ் குரலில் இருந்து எஸ்பிபி முற்றிலுமாக வேறுபட்டவர்.மொழி அழகின் வளைவு நெளிவுகளோடு தன் குரலை இழைய விட்டு தன் பாடும் திரையிசைப் பாடலை வேறு வடிவத்திற்கு கடத்தி சென்று எல்லையில்லா பேரின்பத்தை கேட்போருக்கு அளித்தவர் எஸ்பிபி.இவரின் சக பாடகராக திகழ்ந்த ஜேசுதாஸ் கொஞ்சம் கடினத்தன்மை வாய்ந்த குரல் கொண்டவர். ஆனால் எஸ்பிபி ஒரு மெல்லிய கோடு போல எத்தனை கடினமான இசைக் கோர்வை களாக இருந்தாலும் ‌ அதனோடு ஒட்டி இணைந்து பாடுவதில் தேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி என பல இந்திய மொழிகளில் பாடியவர்.எஸ்பிபி தன் வாழும் காலத்தில் இசையமைப்பாளர்களின் பாடகராக திகழ்ந்தார்.தன் குரலால் ஒரு பாடலை எவ்வளவு மேம்படுத்தி தர முடியும் என்கின்ற மேதமை அவரிடம் இயல்பிலேயே இருந்தது.கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் “லட்சுமண்-ஸ்ருதி” சார்பில் கும்பகோணத்தில் நடந்த கச்சேரி ஒன்றினில் எஸ்பிபி அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு நான் தான் சட்ட ஆலோசகராக இருந்தேன். அதனால் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு அவரோடு சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐஸ்கிரீம் உள்ளிட்ட எதையும் மீதம் வைக்காமல் அவர் ‌ சாப்பிட்டு மகிழ்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் குளிர்ச்சியாக சாப்பிடுகிறீர்களே.. உங்கள் குரலுக்கு எதுவும் ஆகாதா..?” எனக் கேட்டேன். “இதுவரை அப்படி ஆனதில்லை. ஏன் அப்படி ஆகவில்லை என நானும் ஆராய்ந்ததில்லை…” என சொல்லிவிட்டு சிரித்தார்.அந்த இசை இரவில் அவர் பாடும் நிலாவே பாடிய போது.. எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான அம்மா கண்கலங்கி நெகிழ்ந்து கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.”இவன் பாடும் போதெல்லாம் அந்த நிலாவே வானத்திலிருந்து இறங்கி வந்து கேட்கும் போல..”உண்மைதான். எஸ்பிபி தன் பாடும் பாடலுக்கு அவ்வளவு நேர்மை செய்யக்கூடிய மனிதராக திகழ்ந்தார். “மலையோரம் வீசும் காற்று..” என அவர் பாடும் போதெல்லாம்‌ நம் காதோரத்தில் மலையோரம் வீசுகிற காற்று தொட்டுத் தீண்டியது. தொலை தூரப் பயணங்களில் காரில் செல்லும் போது மௌன ராகம் படத்தில் வருகிற “மன்றம் வந்த தென்றலுக்கு..”பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாம் பயணம் செய்யும் கார் ஏதோ மிதப்பது போல உணர்வை நாம் அடைந்திருக்கிறோம். அவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் “துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..” என்ற பாடல். இதன் தெலுங்கு வடிவம் மொழி புரியாவிட்டாலும் நமக்கு அது இன்னும் நெருக்கமாக இருக்கும். அதுதான் மூல வடிவம். வெறும் பாடலாக மட்டும் கேட்பு வாய்ப்பாக மட்டும் இல்லாமல் அதை பேரின்ப அனுபவமாக அரை நூற்றாண்டுகாலம் மாற்றியவர் எஸ்பிபி அவர்கள். அமேசானின் “அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட்” நிகழ்வில் கூட நிகழ்கலை கலைஞர் அலெக்ஸ் சொன்னது போல தமிழில் புகழ்பெற்ற “மாசி மாசம் ஆளான பொண்ணு..” என்ற பாடலை தெலுங்கில் எஸ்பிபி குரலில் கேட்டவர்கள் புண்ணியவான்கள்.எங்களது எத்தனையோ இரவுகள் அவரால் தான் முழுமை அடைந்தன‌. எங்களது துயரங்கள், இழப்புகள், பிரிவுகள் என மனித வாழ்வின் இயல்பான வலிகளில் இருந்து மிக்கவராக அவரது குரல் விளங்கியது.உண்மையிலேயே சொல்கிறேன்.எங்கள் தலைமுறையின் ஈடு இணையற்ற பாடகர் அவர்தான்.

❤️

இன்று தொலைக்காட்சித் திரைகளில் எஸ்பிபி மரணமுற்ற செய்தி கேட்ட கேட்டபோது எனக்கு ஏனோ சாந்தினியின் நினைவு வந்தது. அவளது அலைபேசி எண்ணிற்கு முயற்சி செய்தபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.விவாகரத்து நாளின் போது கூட அழாமல் அவளை காப்பாற்றிய எஸ்பிபி இன்று அவளை கலங்கி அழ வைத்திருப்பார் என நான் யோசித்த போது…எஸ்பிபி எதிரே இருந்த தொலைக்காட்சி திரையில் பாடத் தொடங்கினார்.

“போகும் பாதை தூரமே..வாழும் காலம் கொஞ்சமே..ஜீவ சுகம் பெற ராக நதியினில்நீ நீந்தி வா..இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேனே..கேளாய் பூ மனமே..”

❤️

நான் சீமானோடு நிற்கிறேனா..??

மனிதனின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் அவனது மறதி தான் என்கிறார் எமர்சன். எத்தனையோ வலிமிக்க நினைவுகளை, காயங்களை மனித மனம் மறதி என்கின்ற மருந்தினால் காலத்தின் துணைக் கொண்டு ஆற்றுப் படுத்துகிறது. ஆனாலும் சில நினைவுகள் வாழ்நாள் முழுக்க நம்முள் அழிக்கமுடியாத படிமமாய்பதிந்து கிடக்கின்றன.குறிப்பாக அண்ணன் சீமான் பற்றிய நினைவுகள் கடந்த சில நாட்களாக என் நெஞ்சில் அலை மோதிக் கொண்டிருக்கின்றன.

எதனாலும் மறக்கமுடியாத அந்த 2009 இன அழிவு நாட்களும், அந்த நாட்களில் அண்ணன் சீமான் அவர்களின் வகி பாத்திரமும் மறக்கமுடியாத காலத்தால் கடக்க முடியாதவை.உண்மையில் சீமான் தனி மனிதனாகத் தான் வந்தார். அவர்தான் முன்னால் நின்றார்.ஐந்து முறை தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைப்பட்டு, அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, தனது வருமானத்தை இழந்து, எதிர்காலத்தை அழித்து, உதிரமென தன் உடலில் வழிகிற வியர்வையால் அவர் கட்டியெழுப்பிய வலிமையான கோட்டை தான் நாம் தமிழர் கட்சி.இதில் எங்கள் எவருக்கும் பங்கு இல்லை. அவரோடு நாங்கள் நிற்கவில்லை. சொல்லப்போனால் அவர் நின்றிருந்த காலங்களில் நாங்கள் இல்லவே இல்லை. அவர் முன்னால் நின்றார். சிறைப்பட்டார். வதைப்பட்டார். தெருத்தெருவாய் அலைந்து முழங்கித் தீர்த்தார். பிறகுதான் நாங்கள் பின்னால் போய் நின்றோம். அப்போதும் அவர் முன்னால் தான் நின்றார்.இப்போதும் அவர் முன்னால் தான் நின்று கொண்டிருக்கிறார்.

ஏதேதோ ஊர்களில், முகமற்ற, முகவரியற்ற எங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து, தான் அடைந்த வெளிச்சத்தில் எங்களுக்கும் பங்கு கொடுத்து, எங்களை மேடையேற்றி, தன் நேரத்தை எங்களுக்கு தாரைவார்த்து எங்கள் ஒவ்வொருவரையும் அண்ணன்தான் உருவாக்கினார்.என்னைப் புகழ்ந்து பேசாதே. பேச வந்த கருத்தினைத் தெளிவாக பேசு.வாழ்க முழக்கம் போடாதே. தேசியத் தலைவரைப் போற்று.சால்வை அணிவிக்காதே‌. புத்தகங்கள் அளித்து அறிவினை விரிவு செய் என எங்களுக்கு வகுப்பெடுத்த எங்களது ஆசான் அண்ணன் சீமான்.ஐநா மன்றம் வரை எங்களில் பலரை அவர்தான் அனுப்பி வைத்தார். பேச வைத்தார். வெளிச்ச வீதிகளில் எங்களை உலவ வைத்தார். புகழ் மழையில் எங்களை நனைய வைத்தார். அனைத்தும் அவர் எங்களுக்கு அளித்தது.அவருக்கான மேடையில் எங்களுக்கு இடம் அளித்தார். எங்களைப் பேச வைத்து அழகு பார்த்தார். நாங்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது கண்கள் பெருமிதத்தால் ஒளிரும். அது தாய்மைக்கே உரிய பண்பு. எங்களை அவையத்து முந்தி இருக்கச் செய்துவிட்டு, நான் தலைவர்களை உருவாக்க வந்த எளியவன் என தன்னைத்தானே அவர் அறிவித்துக் கொண்டார்.

இப்போது புதிதாக “சீமானோடு நிற்கிறோம்” என்றெல்லாம் முழக்கங்கள் கேட்கின்றன. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும். நாம் சீமானோடு நின்றோமா… அவரைப்போல சிறைப்பட்டு வாழ்வினை இழந்து வதைபட்டோமா..அவரைப்போல் வழக்குகள் வாங்கி நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கிறோமா…உண்மையில் மனசாட்சி என்ற ஒன்று நமக்கு இருந்தால் அது சொல்லும்.நாம் சீமானுடன் நிற்கவில்லை. சீமான் பின்னால் நின்றோம் என.அனைத்து வதைளையும் அவர் வாங்கிக் கொண்டு சிறகுகளால் பொத்தி பாதுகாக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் போல தாய்க்கோழியாய் நம்மை பாதுகாத்த அவரது தாய்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா..நாம் மட்டும்தான் கட்சியில் இருக்கிறோமா..

எங்கோ சுடு பாலைவனத்தில் எண்ணெய்க் கிணற்றில் நின்றுகொண்டு, குளிர் மிகுந்த நாட்டில் நட்ட நடு இரவில் ஒரு விடுதியில் வேலை பார்த்துக்கொண்டு, இன்னும் எங்கெங்கோ தொலைதூர நாடுகளில் அடையாளங்கள் தெரியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டு சொந்த ஊரில் புலிக்கொடி ஏற்றியதை பற்றியும், அண்ணன் சீமானை பற்றியும் பேசிக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையை “ஊடகங்கள்” மூலம் உடைக்க நினைப்பதை நாம் எப்படி ஏற்பது..??நமக்கு என்ன உரிமை இருக்கிறது.. மேடை போட்டு கொடுத்தார்கள். மக்களைத் திரட்டி நிறுத்தினார்கள். அது அனைத்தும் அண்ணன் சீமானுக்காக.. தலைவர் பிரபாகரனுக்காக.நாம் ஏறிப் பேசியதை தவிர , வெளிச்சத்தில் நின்றதை தவிர நாம் செய்த வேலை என்ன..??அமைதியாக ஒரு காலகட்டத்தை கடந்து இருந்தால் அனைத்துமே சரியாகி இருக்குமே.. அதை உணர்ந்து தானே அண்ணன் மௌனமாக இருந்தார். அந்த மௌனத்திற்கு பின்னாலும் அவர் சுமந்த வலிகளை‌ நாம் அறிவோமா..?? எத்தனையோ நாடுகளுக்கு அவர்தானே அனுப்பினார்.. நம்பிக்கைகளோடு நம் தம்பிகளும் வளரட்டும் என நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அனுப்பி வைத்தவர் அண்ணன்தானே..அண்ணனை மிக இழிவுபடுத்தி சுந்தரவள்ளி, சவுக்கு சங்கர் மற்றும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோர் மூலமாக மூன்றாம்தர சொற்களில் வந்த விமர்சனங்களுக்கு, வசவுகளுக்கு மௌனத்தாலும், “மரியாதைக்குரிய” சொற்களாலும் விருதளித்து மகிழ்ந்தவர்கள் யார்..??ஜூனியர் விகடனில் அண்ணனை மிக இழிவுபடுத்தி வந்த அந்த மூன்று பக்க மொட்டை கடிதத்திற்கு நேர்மையோடு நாம் ஆற்றிய எதிர்வினை என்ன..?? அண்ணனையும், அமைப்பையும் நேசிப்பவர்களாக இருந்தால் அண்ணனைப் பற்றி இழிவுபடுத்திய அந்தக்கடிதத்தோடு உடன்படுகிறேன் என்ற வார்த்தைகள் உள்ளே இருந்து வந்திருக்குமா..??கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் புகழுரைகள் நம்மை புகழ்வதை காட்டிலும்,அண்ணனை இழிவுபடுத்துகிறது என்று நாம் சிந்தித்திருந்தால் அவர்களுடன் ‘எனக்கு பிடிச்சிருக்கு’ என இணைந்து நின்று இருப்போமா..கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. சரி.விலகவும் இல்லை. சரி .ஒரு உட்கட்சி உரையாடலாக, நமக்குள் இருக்கிற ஒரு பிரச்சினையை பொது வெளிக்குக் கொண்டு வந்து ஊரறிய செய்வதன் உள்நோக்கம் என்ன..??நமக்கு எத்தனை வாய்ப்புகளை அண்ணன் கொடுத்தார்..?? எத்தனை இரவுகளில் நமக்கு அவர் எத்தனை மொழிகளில் அறிவுறுத்தினார்..??

நமது ஆன்மா நேர்மையானதாக இருந்திருந்தால் இந்த நேரத்தில் நாம் பேசாமல் அமைதியாக இருந்திருப்போம். கடந்திருப்போம்.சொல்லப்போனால் அவைகளே பிரச்சனைகளை தீர்க்கின்ற வழிகளாக கூட அமைந்திருக்கும். உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்ற ஒன்றே இல்லை. ஒன்றே ஒன்று இருக்கிறது. அது “தான்” என்ற எண்ணம். எல்லா நேரத்திலும் நாம் பேசும் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கால ஓட்டத்தின் சில தருணங்களில் நாம் அமைதியாகத்தான் இருக்கவேண்டும். அந்த அமைதி தான் அந்த சூழலுக்கான பதில் என்கிற பக்குவம் அண்ணனிடம் இருந்தது. நம்மிடம் இருந்ததா..??இந்தப் பதிவையும் நான் எழுதுவதற்கு ஒரு வேளை அண்ணன் சீமான் என்னை கண்டிக்கக் கூடும். ஆனாலும் இனிமேலும் பேசாமல் இருப்பது என்னை நானே தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும்.

2011 நாகப்பட்டினம் இளைஞர் பாசறை மேடை எனக்கு நினைவுக்கு வருகிறது. எந்த அடையாளமும் இல்லாத நம்மை முன்னிறுத்தி “இதோ இவர்கள் என் தம்பிகள்” என நம்மை அறிமுகப்படுத்திய அந்தத் தாய்மைக்கு முன்னால் என்றென்றும் பற்றுறுதியோடு நிற்பது ஒன்றும் தவறல்லவே. அது என் பிறப்பின் கடமை. பெருமை.அழைத்துப் பேசி இருக்கலாமே என சிலர் சொல்கிறார்கள். எத்தனை முறை அண்ணன் நம்மிடம் எடுத்துச் சொல்லி இருப்பார்.. ஒவ்வொரு முறையும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோர் அண்ணனை இகழ்ந்து எழுதும் பதிவுகள் குறித்து அந்த நேரத்தில் எழுதப்பட்ட விளக்கம் என்ன..?? அந்தப் பதிவு எழுதியவர்கள் அனைவரும் மறுபுறம் யாரை புகழ்ந்து எழுதினார்கள் என்பது உலகத்திற்குத் தெரிந்ததுதான். அப்படி புகழ்ந்து எழுதும் போதும் கூட என் அண்ணனைப் பற்றி எழுதாதே என்று‌ ஒற்றை வார்த்தை வந்திருக்குமா..??இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இனி பேசி ஒன்றும் இல்லை. அண்ணனும் மனிதர்தானே. நம்மை தம்பிகளாக அவரும் தானே தாய்போல உயிரென நேசித்தார்.. அவருக்கும் மனது இருக்கிறதே.. வலிக்கும் தானே.. எத்தனைதான் அவரும் தாங்குவார்..??அதனால்தான் அவர் அமைதியாகிப் போனார்.

என்னைப் பொறுத்தவரையில் அவரது அந்த அமைதி மிகுந்த மரியாதைக்குரியது. கண்ணியமும், கவனமும் கொண்டது.நான் பெற்ற உயரம், நான் அடைந்த வெளிச்சம் அனைத்தும் அண்ணன் சீமான் தந்தது. அவர்தான் என்னை உருவாக்கினார். அவரைத் தவிர நான் நம்பிக்கை கொள்வது எதுவும் இல்லை.மீண்டும் மீண்டும் என்னை நானே உறுதிப்படுத்திக்கொண்டு,என் ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.நான் ஒருபோதும் அண்ணன் சீமானோடு நிற்கவில்லை.அவர் பின்னால் நிற்கிறேன்.

நாம் தமிழர்.

ஏனெனில் நாங்கள் நாம் தமிழர்..

❤️

நாம் தமிழர் பிள்ளைகள் எல்லோரும் கோபமாகப் பேசுகிறார்கள், சீமான் இளைஞர்களது உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார், நாம் தமிழர் இளைஞர்கள் அரசியலை போர்க்களமாக பார்க்கிறார்கள், மற்ற அமைப்பினரோடு இணைந்து இயங்க மறுக்கிறார்கள், எவருடனும் சேராமல் தனித்து நிற்கிறார்கள், வலைதளங்களில் ஆக்ரோஷமாக எழுதுகிறார்கள்.. என்றெல்லாம் ஏகப்பட்ட விமர்சனங்கள் நம் மீது தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன.11 ஆண்டுகளாக ஊர் ஊராக இரவும் பகலும் அலைந்து திரிந்து ஒரு தேசிய இனத்தின் கனவாக ஒரு அமைப்பையே கட்டியெழுப்பி உறுதியான கோட்டையாக, தன் வாழ்வினையே விலையாகக் கொடுத்த ஒரு அண்ணனும், அவனது எளிய தம்பிகளும் கட்டி எழுப்பியிருக்கிறார்கள் என்றால்.. நம்பிக்கையின் உதிரம் பாய்ச்சப்பட்டு இருக்கிற அந்த இலட்சியக் கோட்டையினை புரளி பேசி, அவதூறு எழுதி, சத்தற்ற பொல்லாங்கு இறுமல்களால் சரித்து விடலாம் என்றால்.. சாத்தியமா என்ன..???நமது அமைப்பில் இருக்கும் சிலருக்கே இதுபோன்ற சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு புன்னகையோடு சில பதில்களை அளிப்போம்.

????

தான் அடிமை என உணர்ந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான விழிப்பும், எழுச்சியும் நீங்களெல்லாம் நினைப்பது போல அவ்வளவு நாகரீகமாகவும்,நாசூக்காகவும் இருக்காது தான்.இதுவரை மொட மொட வெள்ளைச்சட்டைப் போட்டுக் கொண்டு சட்டைப்பையில் கட்சித் தலைவன் படத்தை வைத்துக்கொண்டு பெரிய பெரிய கார்களில் பவனி வந்து, பிளக்ஸ் அடித்து,போஸ்டர் அடித்து வட்டம்,நகரம்,ஒன்றியம் ,கட்டம், சதுரம் என பொறுப்பு வாங்கி பஞ்சாயத்து பண்ணுவதுதான் அரசியல் என்பதை தலைகீழாக மாற்றத் துடிக்கும் படித்த இளைஞனின் அரசியல் அவ்வளவு பரவசமாக இருக்காது தான்..வீழ்ந்த கதையை அறிந்து,. வீழும் நிலையை உணர்ந்து,இனி எழ வேண்டிய நிலை அறிந்து பதவி,பட்டம்,பணம் என எதையும் எதிர்பாராமல் உடல் முழுதும் வியர்வை வழிய வீதி தோறும் அலைந்து எளிய மக்களின் புரட்சியை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்க உழைப்பவர்களின் உழைப்பு அவ்வளவு உவப்பானதாக இருக்காது தான்.உள்ளன்போடு தாய் மண்ணை நேசித்து, உதிரம் வழிய இறந்த உடன் பிறந்தவர்கள் நினைவை சுமந்து, இனம் அழிய உடன் நின்ற துரோகிகளுக்கு இனி எழ முடியாத வீழ்ச்சியை அளித்து, எதிரிகளின் பகை முடிக்க விலை தலையே ஆனாலும் தரத்துடித்து, இனம் அழிந்த வலி ஈந்த கடும் சினத்தையே அரசியல் மூலமாகக் கொண்டு ,மூர்க்கமாக நிற்கும் எங்களின் எழுத்தோ,கருத்தோ,பேச்சோ, மூச்சோ நீங்கள் நினைக்குமளவிற்கு அவ்வளவு மென்மையானதாக இருக்காது தான்.இதுவரை இருந்ததே இனிமேலும் இருக்க வேண்டும்.. அதே துருப்பிடித்த உங்களது தகர தத்துவம்,அதே நீர்த்துப் போன உங்களது வாய்க்கரிசி வாக்குறுதிகள், அதே யாருக்கும் பயன் படாத பட்டுப்போன வசனங்கள்,அதே காலத்தை கடத்தும் உங்களது தவறுகள் இன்னும் இனி வரும் தலைமுறைக்கும் நீடிக்க வேண்டும் என்ற உங்களது ஆத்மார்த்த பிராத்தனைகளுக்கு வெடிகுண்டு வைக்கும் எங்களை உங்களால் சற்றும் சகிக்க முடியாதுதான்..எங்களைப் போன்றே எங்கள் அண்ணன் சீமானும் தானே வளர்ந்து, தானே நிமிர்ந்தவன் தான்.. ஒரு காட்டு மரம் போல.. தன்னிச்சையாக வளர்ந்து நிற்பவன் தான்.. புயல் காற்றே வீசினாலும் வளைய மறுப்பவன்தான்.. வணங்க மறுப்பவன்தான்.. அவனுக்கு சமரசம் இல்லாத போரியியல் பண்பினை அவனுக்கு அவன் அண்ணன் பிரபாகரன் தந்தது. அதை அவன் தன் தம்பிகளுக்கு வழங்கி வருகிறான். மக்கிப்போன உங்கள் அரசியல் தத்துவங்களுக்கு இதையெல்லாம் காண முடியாதுதான்..முடியாது தான்..முடியாது தான்எங்களது உடையும்,எங்களது படையும் உங்களை வெறுப்பேற்றும் தான்..எங்களது அண்ணனின் மொழியும்,எங்களது வழியும் உங்களை உறங்க விடாது தான்..எங்களது தர்க்கமும்,எங்களது தத்துவமும்உங்கள் கோட்டைகளை தகர்க்கும் தான்..ஆமாம் . திட்டமிட்டுதான் நகர்கிறோம்.வன்மம் கொண்டுதான் வளர்கிறோம்.முடிந்தால் எதிருங்கள்.இல்லையேல் நகருங்கள்.எதுவும் முடியவில்லையா..இப்படியே உங்கள் மனதிற்குள்ளாகவேபதறுங்கள்.கதறுங்கள்.ஏனெனில் நாங்கள் வானையே உரசவளரும் சிகரங்கள்.நாம் தமிழர்.

????

துரோகத்தின் வழித்தடங்கள்..

துரோகம் என்பது என்ன…. அது ஒரு வசைச் சொல்லா, கடந்த காலத்தின் அழிக்கமுடியாத காய வடுவா.., யாரோ ஒருவர் நம்மீது மாறாத வலியை சுமத்தி வைத்துவிட்டு பெற்றுக்கொண்ட சாபத்தின் பாடலா.. நம்பி நிற்பவர் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அவர் நிழலில் நின்றுக்கொண்டு நேசித்து நம்பிக்கை செலுத்தும் உடன் இருப்பவர் குத்தும் கத்தியா.. என்றால் இவை அனைத்தும் தான் என சொல்லத் தோன்றுகிறது.வரலாற்றின் பல பக்கங்கள் துரோகத்தின் நிழலால் இருண்டு கிடக்கின்றன. ஏதோ ஒரு ஆதாயம் கருதி இழைக்கப்படும் துரோகம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து விதிக்கப்படும் சாபமாக மாறி துரத்தி வருவதை நாம் காண்கின்றோம்.துரோகத்தை ஆங்கிலத்தில் Betrayal என்று அழைக்கிறார்கள். அதற்கு ஆக்ஸ்போர்டு அகராதி “the action of betraying one’s country, a group, or a person; treachery.” என விளக்கம் தருகிறது. இதுகுறித்து தமிழ் அகரமுதலியில் தேடியபோதுராஜ துரோகம், சாமித் துரோகம், குரு துரோகம், இனத் துரோகம், பிரித்துரோகம் என ஐவகை துரோகங்களை நம்மால் காண முடிகிறது. துரோகம் என்பது ஒருவகை ஏமாற்றுகையின் வடிவத்தைத் தான் கொண்டிருக்கிறது என்றாலும், இது அதைவிட கொடியதான ஒன்றாக விவரிக்கப்படுகிறது.எதையும் மறக்க முடிகிற, கடக்க முடிகிற மனிதனின் ஆன்மா துரோகத்தின் வலியை மட்டும் கடக்கப் படாதபாடு படுகிறது. அது மகத்தான நம்பிக்கையின் மீது விழுந்த இடி. அந்த நம்பிக்கை தகர்வில் இருந்து வெகு சாதாரணமாக மனிதமனம் மீள மறுக்கிறது.சில வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்களிடம் கட்டபொம்மனை காட்டி கொடுத்த புதுக்கோட்டை ஜமீன் எட்டப்பனின் வாரிசுகள் அளித்திருந்த பேட்டி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. இன்னமும் அந்த துரோகத்தின் நிழலில் இருந்து தங்களது சந்ததிகள் தப்ப முடியாத வலியினை அவர்கள் உருக்கமாக தெரிவித்திருந்தார்கள். இன்னமும் தங்களை சொந்தபந்தங்கள் சேர்த்துக் கொள்ளாமல் நிகழ்வுகளில் புறக்கணிக்கிற வேதனையை அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த ஒரு துரோகச் செயல் பல தலைமுறைகளை தாண்டியும் அந்தச் செயலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சந்ததிகளை கூட விடாமல் துரத்தி வருவது என்பது வரலாற்றின் விசித்திரம்.பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் ஜூலியஸ் சீசர் மனித இனத்தின் நாட்காட்டியையே மாற்றியமைத்தவர். அவரால்தான் ரோமன் காலண்டர் மாற்றியமைக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தனது சிலையை நிறுவ சொன்ன சீசர் , நாணயங்களிலும் தன் உருவத்தை பதித்தார். அதற்கு சொன்ன விளக்கம்தான் “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே”.அப்படிப்பட்ட ஜூலியஸ் சீசர் மீது கடுமையான போட்டி, பொறாமைகள் காரணமாக பலருக்கும் பகை ஏற்படுகிறது. கிரேக்கத்தின் உயரிய சபையான செனட் சபையின் கூட்டம் நடக்கும்போது அங்கே இருந்த பல பகைவர்களால் ஜூலியஸ் சீசர் கத்தியால் குத்தப்படுகிறார். தன் மகன் போல நேசித்த புரூட்டஸிடம் ஓடிச்சென்று அவன் காப்பாற்றுவான் என நம்பி நிற்க, அவனும் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியால் சீசரை குத்த அப்போது வலியோடு ஜூலியஸ் சீசர் சொன்ன வார்த்தைதான் “யூ டூ புரூட்டஸ்..”(you too Brutus..?)இதை சீசர் சொன்னாரோ, சொல்லவில்லையோ.. என்று நமக்குத் தெரியாது. ஆனால் சீசரின் வரலாற்றை நாடகமாக படைத்த ஷேக்ஸ்பியர் தனது வசனத்தில் “யூ டூ புரூட்டஸ்..” என்கிற சொல்லாடலை பயன்படுத்தியபோது அது உலகத்திற்கு பொதுவான சொல்லாக மாறியது.சங்க இலக்கியங்களில் துரோகத்தை பற்றிய ஒரு முக்கியமான பாடல் ஒன்று உண்டு . கள்ளூர் என்ற ஊரில் ஒருவனால் காதலிக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவள் ஊரின் அவையிடம் முறையிடுகிறாள். அவளது முறையீட்டை ஏற்றுக்கொண்ட ஊரவை காதலனை விசாரிக்கிறது. இந்தப் பெண்ணை தான் விரும்பவே இல்லை உறுதிப் பாடாக மறுக்கிற காதலனின் மறுப்பு பொய்யென சாட்சிகள் மூலம் உறுதி செய்கிறது. அந்த ஆடவன் குற்றவாளி என சபை அறிவித்து மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கிற மரக்கிளைகளில் அவனை கட்டி வைத்து அவன் தலையில் சாம்பலை கொட்டி தூற்றிப் பேசிய தண்டனையை பின்வரும் பாடல் மூலம் நாம் அறியலாம்.”தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த், திரு நுதல் குறுமகளணி நலம்வவ்விய அறனிலாளன் அறியே னென்ற திறனில் வெஞ்சூளரிகரி கடாஅய், முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறு தலைப்பெய்த ஞான்றை வீறுசாலவையத்து ஆர்ப்பினும் பெரிதே”(அகம் 256)சீவலப்பேரி பாண்டி என்கின்ற திரைப்படம் தென் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஜூனியர் விகடன் இதழில் 1994 ஆம் ஆண்டு செளபா என்றழைக்கப்பட்ட சௌந்தரபாண்டியன் எழுதிய வரலாற்று உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.தன் சாதியை சேர்ந்த உறவுக்காரர்களின் அவதூறுகளை நம்பியும், தன் எதிர்காலம் குறித்து வழங்கப்பட்ட ஆசை வாக்குறுதிகளை நம்பியும் தன் மீது மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்த ‘கிராம முன்சீப்’ பை அவர் எதிர்பார்க்காத நேரத்தில் கொலை செய்து விடுகிறார். பிறகு சிறை வாழ்க்கையில் அவர் வாடும் போது தான் தனக்கு வாக்குறுதி அளித்த பெரிய மனிதர்களின் துரோகங்கள் தெரியவருகிறது. சிறையிலிருந்து தப்பிக்கின்ற பாண்டி தன்னை ஏமாற்றியவர்களை வெட்டி சாய்த்துவிட்டு இறுதியாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுக்க துரோகத்தின் நிழல் சீவலப்பேரி பாண்டியை ஒரு வெறி பிடித்த மிருகம் போல துரத்திக்கொண்டே இருந்தது.எல்லாவற்றையும் தாண்டி துரோகம் ஒரு மாபெரும் குற்றமாக வலியாக ஏன் கருதப்படுகிறது என்றால்.. நாம் நம்பிக்கை கொண்டு நேசிப்பவர்கள் இடத்திலிருந்து துரோகம் பிறக்கிறது. ஒரு வகையான நேசிப்பின் முறிவு போல துரோகத்தின் பாடல் எப்போதும் இருண்மையாகவே இருந்து வருகிறது.தமிழ் திரைப்படங்களில் துரோக உணர்ச்சியை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அதில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் சுப்பிரமணியபுரம் என்கின்ற 2 திரைப்படங்கள் மிக முக்கியமானவை.குறிப்பாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி கணவன் மனைவிக்கு இடையிலான உறவின் ஊடலாக நிகழ்ந்த துரோகத்தை பற்றி விரிவாகப் பேசுகிறது. அதற்கு இணையாக நட்பின் ஊடாக நிகழ்ந்த துரோகத்தைப் பற்றி சுப்பிரமணியபுரம் குறிப்பாக பேசுகிறது. இரண்டிலும் துரோகம் செய்தவர்கள் இறந்து போகிறார்கள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில்கணவனுக்கு துரோகம் செய்த இளம் மனைவி பிற ஆடவன் ஒருவனோடு தான் இருப்பதை நேரடியாக பார்த்துவிட்ட கணவனை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறாள். அதேபோல சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் நண்பர்களுக்கு துரோகம் செய்த ஒருவனை அந்தக் கும்பலில் மிஞ்சி இருக்கிற ஒரு மாற்றுத்திறனாளி ஒருவன் கொலை செய்து பழி தீர்ப்பான்.துரோகம் தான் கொடிய பாவம். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது பைபிள்.கடவுளின் மைந்தனான இயேசுநாதர் மிகப் புனிதமானவர். கருணை மிக்கவர். எளியவர்களை பார்த்தால் இரக்கம் கொள்பவர். ஆனால் அவருடைய நெருங்கிய சீடனான யூதாஸ் அப்படிப்பட்டவன் அல்ல. யூதாஸின் பணத்தாசை இயேசு நாதரை காட்டிக்கொடுக்க வைக்கிறது.கெத்சமனே என்ற இடத்தில் இருந்த தோட்டத்தில் நடந்த இரவு விருந்தில் இயேசு தனது சீடர்களின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது கால்களை கழுவி தூய்மைப்படுத்தி பெருமை செய்கிறார். இயேசுவை கைது செய்ய தேடி வந்த பரிசேயர் என்றழைக்கப்பட்ட காவலர்களிடம் யூதாஸ் இயேசுவை அடையாளம் காட்ட அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறான்.இயேசு அவனைப் பார்த்து கேட்ட இறுதி கேள்வி ” மனுஷ குமாரனை முத்தத்தின் மூலமாக காட்டிக் கொடுக்கிறாய்..?(luk 22:48)யூதாஸ் அளித்த அந்த முத்தம் என்பது இயேசுநாதரின் தாடையோடு தாடை வைத்து விசுவாசத்தின் சின்னமாக அளிக்கப்பட்ட முத்தமாக இருந்தாலும் அதன் உள்நோக்கம் துரோகத்தின் விஷம் நிரம்பியிருந்தது.இயேசு கொடுமைப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்படுவதை காண சகிக்காமல் குற்ற உணர்ச்சியில் யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான் என பைபிள் கூறுகிறது.நேர்மையான எதிரிக்கு என்றுமே வரலாற்றில் ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் துரோகி மட்டும் எக்காலத்திலும் புறக்கணிக்கப்படுகின்றவனாக மாறிவிடுகிறான். இதிகாச நாயகர்களின் எதிரிகளாக இருந்த இராவணன் மற்றும் துரியோதனும் கூட கதாநாயகர்கள்தான். ஆனால் ராமாயணத்தில் விபீஷணன் கதாபாத்திரம் துரோகத்தின் வடிவமாக இன்றளவும் தூற்றப்பட்டு கொண்டிருக்கிறது.மகாபாரதத்தில் துரோணருக்கு கேட்கும் விதமாக தருமன் “அவருடைய மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்டான்”(ஆனால் இறந்தது அஸ்வத்தாமா என்ற ஒரு யானை) என்று உதிர்த்த இரு பொருள் கொள்ளும் விதமான ஒரு பொய் துரோகத்தின் சாயல் உடையது. அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரோணர் மரணம் அடைகிறார். இத்தனைக்கும் துரோணர் தருமனின் ஆசிரியர்.அறத்தின் சாயலாக நின்று கடைசி வரை களத்தில் போராடிய தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற சொல் இருக்கும் வரையில் அதற்கு எதிர்ப்பதமாக துரோகச் சின்னங்களாக “கருணாக்கள்” என்கின்ற பெயர்களும் உச்சரிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கும்.”நேர்மையாக இருந்து விடு.. நிம்மதியாக தூங்கி விடலாம்.”என்கிறது ஆப்பிரிக்க பழங்குடிகளின் பாடல் ஒன்று.அதே பாடலில் விசித்திரமாக ஒரு வரி வருகிறது.துரோகத்திற்கு இமைகள் இல்லை.அப்படி என்றால்.. துரோகம் கொண்ட ஆன்மா விழி மூடி தூங்க முடியாது, என்பதை தான் “இமைகள் இல்லை” என கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள்.இறுதியாக என் துருவனின் “அடர்பச்சை” நூலிலிருந்து துரோகம் பற்றிய சில வரிகள்..”கொஞ்ச நேரம்கரையிலேயேநடந்திருந்தபோதுஉப்புக் காற்றில் அவன் முதுகுவலிக்கத்தொடங்கியது.அத்தனையும் கட்டிப் பிடித்தபடியேகுத்தப்பட்ட தழும்புகள்.”

சீமான் என்றொரு காலம்.

❤️
❤️

ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல்அவன்.எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான்.இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொடுத்த விலை… அவன் தான். தன்னையே விலையாகக் கொடுத்து இந்த இடத்தில் இருக்கிறான்.கடும் உழைப்பினால் அணுஅணுவாய் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு ஒரே சமயத்தில் சிற்பியாகவும், சிற்பமாகவும் அவனேநிற்கிறான்.ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பாக இந்த இடத்தில் அவன் நிற்பான் என கண்டிப்பாக அவனே நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனாலும் உறுதியாக பத்தாண்டுகளாக நின்று கொண்டே இருக்கிறான். எவரிடத்திலும் கூட்டு இல்லை. தனித்து துணிவோடு சமரசம் இல்லாமல் சண்டை போடுகிறான்.பத்தாண்டுகளுக்கு முன்னால் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே பயந்து ஒளிந்த காலம் ஒன்று இருந்தது. அவன்தான் அந்தக் காலத்தை தனி ஒருவனாக மாற்றினான்.பிள்ளையார் ஊர்வலங்கள் நடைபெற்று காவி தேசமாய் போன ஒரு நிலத்தில் அவன் முருகனை முப்பாட்டன் என முழங்கினான். கால வீதியில் புறக்கணிக்கப்பட்ட அந்த முருகனைத்தான் இப்போது பிள்ளையாரை தூக்கி சுமந்த கரங்கள் கூட தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆம்… தூக்கிப் பிடித்தாகத்தான் வேண்டும். அந்த நிலையை அவன் உருவாக்கி விட்டான். தமிழ் பேசினாலே தரக்குறைவு என்று எண்ணி தலைகுனிந்த நிலத்திலே, தமிழ் பேசினால் தான் தலைநிமிர்வு என்று மாற்றினான். ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டார்கள்.. கொன்றுவிட்டார்கள்.. என்று பழித் தூற்றி, குற்ற உணர்வு கொள்ளச் செய்து எங்கள் உறவுகள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டபோது நாங்கள் வாய்மூடி மௌனமாக, கைக்கட்டி, வாய்ப் பொத்தி இருந்த ஒரு காலம் ஒன்று இருந்தது.எங்கள் தலைவன் பிரபாகரன். யார் அந்த ராஜீவ் காந்தி..?? என்று கம்பீரமாக குரலெழுப்பி.. ஆமாம் இப்போது என்ன அதற்கு.. என அவன்தான் முதலாவதாக தலை நிமிர்ந்தான்.இன்று அவனைப் போல் தலைநிமிர்ந்த ஒரு தலைமுறையையே அவன் மிகுந்த திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறான். இனி தமிழ் மொழியைப் பற்றி, தமிழர் வரலாற்றைப் பற்றி, இழிவாகப் பேசினால் தமிழ்நாட்டில் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறான்.மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, என்றெல்லாம் எங்கள் மண் அழிக்கப்படும் போதெல்லாம் அவன் மக்கள் மன்றங்களில் போராட்டமாய் வெடித்தான்.ஐபிஎல் மைதானத்தில் புலிக் கொடி பறந்தது.எம்மை தாக்கிய சிங்களவனுக்கு இந்த நிலத்தில் அடி விழுந்தது. சிறைகள் குறித்தோ, வழக்குகள் குறித்தோ, அச்சப்படாத ஒரு புதிய தலைமுறை பிறந்தது.இத்தனைக்கும் பின்னால் அவன் மட்டுமே காரணமாக இருக்கிறான்.கம்பீரக் குரல் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் “பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியே வா..”என அவன் சீறிய போது.. ஆதி வனத்தில் உறுமும் புலியைக் கண்டோம்.கெஞ்சுவதில்லை பிறர்பால்.. அவர் செய் கேட்டினிற்கும் அஞ்சுவதில்லை. மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை.. எனப் பாவலரேறுத் தமிழை அவன் முழங்கிய போது எதிரே எதிரியாக கூட யாரும் எஞ்சுவதில்லை.எல்லாவித புயல், மழைகளுக்கும் நடுவே எதற்கும் அஞ்சாது , கொட்டும் மழையில் கலையாது கூட்டம் நடத்தி.. அனல் பறக்க செய்தான்.இதுவரை இந்த தமிழர் நிலம் பார்த்திராத மனவுறுதியை அவன்தான் ஒரு வாழ்வியலாக எங்களுக்கு கற்பித்தான்..பொங்கி ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே படகோட்டி பழகியவன் அவன். சாதாரண பத்தாண்டுகள் அல்ல. இதுவரை நடந்த சரித்திரத்தையே புரட்டிப்போட்ட அந்த கிராமத்து எளிய மனிதனின் அசாதாரண சாதனை நாட்கள் அவை..

❤️

இன்று உறுதியில்அவன் ஒரு ராஜகோபுரமாய் நிமிர்ந்து நிற்கிறான்.எப்போதாவது வீசுகின்ற காற்றில், உயர பறக்கின்ற அவதூற்று சருகுகள் கோபுர உச்சியினை தொட்டுவிட முயற்சிக்கின்றன.ஆனால் கோபுரத்தின் சிகரமோ.. நம்பிக்கையின் வானத்தை தான் முத்தமிட்டு கொண்டு நிற்கிறது.ஆம்.சீமான் என்பவன் தனி மனிதனாக இருந்த காலம் முடிந்து போய்விட்டது.அவன் ஒரு காலத்தை உருவாக்கிவிட்டான்.அந்தக் காலமும் அவன் தான்.இனி..களமும் அவன் தான்.புழுதிக் காற்றினால் பூபாளம் பாடும்புதிய விடியல் ஒன்றின் வெளிச்சப் பாய்ச்சலை தடுத்து விட முடியுமா என்ன..???

❤️

அன்பே சுஷாந்த்

அன்பே சுஷாந்த்..கண்ணீரை அடக்க முடியாமல் போன என் விழிகளினூடே நீ ஒரு புன்னகையோடு உறைந்து போன இரவு இது. வாழ்வின் சூட்சமங்களை குறித்து தான் நம் எவ்வளவு அறியாமையோடு இருக்கிறோம்..? யாருமே எதிர்பாராத திருப்பத்தில் ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுகிற எளிய நிகழ்வாக மட்டுமே மரணம் இருக்கிறது என்பதுதான் நம் அறிவெல்லைக்கு அப்பாலான பேரதிர்ச்சி.

ஒரு மலை முகட்டில் தன்னிச்சையாய் பூத்து, எங்கிருந்தோ விசி விடுகிற காற்றின் சிறகுகளால் சற்றே காயப்பட்டு உதிர்கிற பூ உதிர்தலைப் போல சட்டென நிகழ்ந்து விட்டது உன் மரணம்.யோசித்து பார்த்தால் , மரணம் தான் வாழ்வின் நிச்சயமென உணர்கிற இப்புள்ளியில் யாரையும் நேசிக்க முடியாமல் போகிற, இந்த வாழ்வின் சூதாட்டத்தில் சிக்கி உணர்ச்சிகளின் கரங்களால் உருட்டப்படும் பகடைக்காய்களாய் மாறிப்போகிற இவ் வாழ்வுதான் எவ்வளவு வெட்கக்கரமானது…?உன்னுடைய இறுதிப்படமான ” Dil bechara” (hot star) திரைப்படத்தையும் கூட நான் பார்க்க நேர்ந்தது கூட இவ்வாழ்வின் சூட்சம விதிகளுக்கே உரிய எதிர்பாரான்மையின் தரிசனமாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது .

உன் கண்களில் ஒளி இருந்தது சுஷாந்த். அப்படி ஒளியுடைய கண்கள் கொண்ட கலைஞர்கள் அரிதானவர்கள். நீ நடித்திருக்கும் “dil bechara” படத்தின் அசலான “The Fault in Our Stars” படத்தை விட உன் படம் இன்னும் உயிர்ப்புடன் இருக்க உன் மரணம் தான் காரணமாக இருக்கிறது என்பதுதான் வலி மிகுந்த உண்மை.எத்தனையோ முறை காதல் கதைகளை படிக்கிறோம் . திரைப்படங்களாக பார்க்கிறோம். ஒரு ஆணும், பெண்ணும் நேசித்துக் கொள்வதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கலையாக, இலக்கியமாக, கூத்தாக, திரைப்படமாக மானுட விழிகள் சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் அதே காதல் தான். அதே நேசம் தான். அதே கண்ணீர்தான்.ஆனாலும் ஒவ்வொரு முறைப் பார்த்தாலும் காதல் புதிதாகவே தெரிவதற்கு எனக்கு காரணங்கள் புரியவில்லை.மிகச் சில இப்படித்தான். திரைப்படத்தில் உன் காதலியாக நடித்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் அவரவருக்கு ஏதேனும் பிடித்த முகங்கள் தோன்றலாம். எனக்கென்னவோ நான் மட்டுமே அறிந்த ஒரு உள்ளங்கைகளின் மென்மை மட்டுமே நினைவுக்கு வந்தது, அந்த உள்ளங்கைகளில் முகம் புதைத்து நான் கண் மூடிய போது அடைந்த ஆறுதலை தான் நான் இந்த வாழ்வெங்கும் தேடி அலைகிறேன்.மிகச் சாதாரண படம் தான். ஆனால் உன் மினுக்கும் கண்களால் அதை பிரகாசப்படுத்தி இருக்கிறாய் .அந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் நீயே அமர்ந்து உன் நினைவேந்தல் கூட்டத்தை பார்ப்பது போன்ற அந்த காட்சியில் உன் காதலியாக நடித்த அந்த பெண் சொல்வது போல.. புன்னகையால் வாழ்வினை மாற்றும் வல்லமையை நீ கொண்டிருந்தாய் சுஷாந்த்.அந்த திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிகழும் அதே ரசவாதம் எனக்கும் நிகழ்ந்தது,மிகுந்த நெருங்கிய நண்பனாகி விட்டாய்.அட..போடா.. சுஷாந்த்…நீ இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாம்,

நம்மில் யார் யோக்கியன்..?

பட உதவி : ம.செ.பகலவன்

கொரனா காலம் வழங்கியிருக்கிற முதன்மை பரிசு நமக்கு வாய்த்திருக்கிற தனிமை. இந்த தனிமை தான் நமது கடந்த காலத்தை பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.எவ்வளவு சரியாக நடந்து இருக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு தவறாக நடந்து இருக்கிறோம் என்பதுதான் ஆக்கிரமிக்கிறது. உண்மையில் தவறுகளும் மீறல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொள்ள முடிகிறது.

யாரும் பூரணத்துவம் பெற்ற சரியான நபர்கள் என்று இதுவரை பிறக்கவில்லை. உங்களில் எவன் யோக்கியவானோ அவன் எடுத்து முதல் கல்லை அடியுங்கள் என தேவகுமாரன் கேட்டபோது கூட அப்போது தேடப்பட்ட அந்த முதல் கல் இப்போது வரை கிடைக்கவில்லை.எனவேதான் நாம் சரியானவர், நாம் சொல்கின்ற வார்த்தைகள் சரியானது என்றெல்லாம் நமக்கு நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சக மனிதனின் மீது வன்மம் கொண்டு அலைய மனது தயாராகிறது. இந்த தனிமைப்பொழுதில் யார்மீதும் பெரிதாக கோபம் ஏற்படாமல் போவதை என்னுள் நிகழ்ந்திருக்கிற மாற்றம் என உணரத் தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு என்கிற உணர்ச்சி மறந்துபோய்.. எதையும் சகித்து கடக்கும் மனநிலை தான் வசதியாக இருக்கிறது.வெறுப்பும், வன்மமும் உறுத்தலாகவே இருப்பதை தாண்டி உண்மையில் தொடர்ந்து பயணிக்க முடியாத பெரும் சுமையாக மாறி விடுகிறது.இங்கே யாரும் 100% சரியானவர்கள் இல்லை என்பதில் நானும் உள்ளடக்கம் என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்.அப்படி சரியாகவும் இருந்துவிட முடியாது. ஆனால் நான் சொல்வது தான் சரி, நான் தான் சரியானவன் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கும் போதுதான் வெறுப்பின் விதை ஊன்றப் படுகிறது.பலரை நம்மால் பார்க்க முடிகிறது. மனம் முழுக்க வெறுப்பினை சுமந்து, வார்த்தைகள் முழுக்க வன்மம் சுமந்துகொண்டு அலைகிற அவர்களது வெறுப்பின் பயணம் அவர்களையே துளித்துளியாக வீழ்த்திக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

விட்டுக்கொடுத்து போனால்தான் என்ன.. என்ற கேள்விக்கு இங்கு வெறுப்பின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருப்பவர்களிடத்தில் எவ்வித பதிலும் இல்லை. விட்டுக் கொடுத்தவர்கள், மன்னித்தவர்கள் பலமாகி கொண்டே போவதையும், வெறுப்பையும் வன்மத்தையும் சுமப்பவர்கள் சுய வதைக்கு உள்ளாக்கி பலமிழந்து தவிப்பதையும் காணமுடிகிறது.நிகழ்ந்தது தானே என சிந்தித்து கடக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் கடலையும் கடந்துவிடலாம். வெறுப்பை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் நம் வீட்டை கூட தாண்ட முடியாது. அப்படியெல்லாம் வெறுப்பினை சுமந்துகொண்டு இந்த வாழ்வினை கடக்க முடியாது.சமீபத்தில் கூட நம்மை விட்டு பிரிந்த ஒருவர் நம்மைக் குறித்து பேசி வருகிற கருத்துக்கள் பற்றி ஒரு வலையொளித் தளத்தில் பதிலளிக்க என்னை அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அதில் பங்கேற்பது தரக்குறைவு என்பது மட்டுமல்ல, பதிலுக்கு நானும் அந்த வெறுப்பின் போர்வையைப் போர்த்திக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய அவரின் மனநிலைக்கு நானும் மாற வேண்டும். அது ஒருவிதமான தற்கொலை.உண்மையில் வெறுப்போடு அலைபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் தோற்றவர்களாக உணர்ந்திருக்கிறார்கள். ஏதோ இழந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவேதான் தங்களுக்குள் ஊறுகிற வெறுப்பை அடுத்தவர் மீது அள்ளி இறைத்து தங்களை ஆற்றுப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பதில் சொல்ல ஏதுமில்லை. அலட்சியப்படுத்தி நகரத்தான் நிறைய இருக்கிறது. எதையும் எளிமையாக கடக்க கற்று தேர்ச்சி அடைவது தான் உண்மையான ஞானம் என்கிறார்கள். நிதானித்து பார்க்கும் போதுதான் நாம் எல்லாம் இன்னும் கொஞ்சம் கவனமாக சற்றே பக்குவத்தோடு இந்த வாழ்க்கை அணுகி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனிமேலாவது அவ்வாறு வாழ முயற்சி செய்வோம்.ஆதியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்கிற ஒரே பாடம்தான்..”எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.”இந்தப் பதிவு எழுத காரணமான ஒரு பதிவை எழுதிய என் அன்புத் தம்பி Vadivel Geevan க்கு என் உறக்கத்தை பறித்த என் சாபங்களும், என்னை சிந்திக்க வைத்த நன்றிகளும் ஒருசேர போய் சேரட்டும்.

நம்மை வழிநடத்தும் நம் அண்ணனின் சொற்கள்..

விவாதங்களில் பலவகை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எந்த வகை விவாதங்கள் என்றாலும்‌ ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்வதற்கான வழிகளாகவும், பகிர்ந்து கொள்வதற்கான முறைகளாகவும் தான் கடந்த சில ஆண்டுகள் வரை விவாதங்கள் நிகழ்ந்து வந்தன. கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற தமிழ் தேசிய எழுச்சி சமூக வலைதளங்களிலும் பிரதிபலிக்க, ஆட்சியிலும், அதிகாரத்திலும், கருத்து தளத்திலும், அறிவுத் தளத்திலும் அதுவரை “ஒரே அடியாளாக” இருந்த திராவிடக் கருத்தாக்க ஆதரவு கூட்டத்திற்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. கட்டமைத்து வைத்திருக்கிற கனவுக் கோட்டை எங்கிருந்தோ வந்த எளிய இளைஞர்களால் செங்கல் செங்கலாக பெயர்க்கப்படும் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனவே அவர்களிடம் வழக்கமாக இருக்கும் அவர்களுக்கே உரித்தான கலையான அவதூற்று வசவுகள் மூலம் இந்த விவாதங்களை எதிர் கொள்ளத் தொடங்கினார்கள்.திராவிட ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களை “வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மேடைகளாக” மாற்றத் தொடங்கினார்கள். அதற்கு பதில் அளிக்கிறேன் என்று முறையில் சில இளைஞர்களும் இறங்கத் தொடங்க “அறிவார்ந்த பரிமாறல்”என்கிற முறையில் நிகழ்ந்து வந்த விவாதங்கள் வசவுகள் கணக்கு வழக்கின்றி வாரி இறைக்கப்படும் வெறும் கூச்சல்களாக மாறிப்போயின.இப்போதெல்லாம் திட்டமிட்டு விவாதங்கள் சில பல “கணக்குகளோடு” உருவாக்கப்படுகின்றன. நாம் தமிழர் கட்சி பெரியாரைப் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்பதை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஏற்கனவே பலமுறை மிகத்தெளிவாக அழுத்தம் திருத்தமாக விவரித்திருக்கிறார்.ஆயினும் இது போன்ற விவாதங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப் படுவதன் “அரசியலை” முதலில் நாம் கற்றுணர வேண்டியிருக்கிறது. இது நோய் தொற்றுக் காலம். தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்தல், கபசுர குடிநீர் வழங்கல் போன்றவற்றைச் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். இந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக கட்சியில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இணைந்து வருகிறார்கள் என்பதை தகவல் தொழில்நுட்ப பாசறை புள்ளிவிபரங்களோடு வெளியிட்டிருக்கிறது. சாத்தான்குளம் படுகொலைகள் இயல்பான எளிய மனிதர்களையும் பதட்டத்திற்கு உள்ளாகியிருக்கிறது.அதிகாரம் நிகழ்த்தியிருக்கிற இந்த ஆணவ படுகொலைக்கு எதிராக வீதிகளில் இறங்கி தனிமனித இடைவெளி யோடு, முகக் கவசம் உள்ளிட்ட நோய்த்தொற்று கட்டுப்பாட்டோடு நமது இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.இதையெல்லாம் விட்டுவிட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு மக்களோடு இணைந்து களங்களில் நிற்கிற இக்காலகட்டத்தில் பெரியார் பற்றிய விவாதங்கள் திட்டமிட்டு, பல்வேறு கணக்குகளோடு, உருவாக்கப்படும் திசை திருப்பல் களாகவே காணமுடிகிறது. திராவிட கட்சிகள் இன்று மக்களோடு அன்னியப்பட்டு நிற்கின்றன. அதனால் அவர்கள் “கடந்த காலங்களின் பெருமிதங்களை(?)” தூக்கிக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.வெளிச்சங்கள் தேவைப்படுவோருக்கு வேண்டுமானால் இந்த விவாதங்கள் பயன்படலாம்.ஆனால் நமக்கு அப்படி அல்ல. நாம் நிகழ்காலத்தின் மைந்தர்கள். மக்களோடு நிற்பவர்கள். கட்சியின் தத்துவ நிலைப்பாடுகளை கட்சியின் தலைமை அறிவிக்கும். ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறது. இதில் தனிநபர்கள் விவாதித்துக் கொள்ளவோ, சண்டை போட்டுக் கொள்ளவோ ஏதுமில்லை. எனவே நமது உறவுகள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நோய்த்தொற்று காலத்தில், பாதுகாப்பாக இருந்துக்கொண்டு அலைபேசி வாயிலாக அவரவர்களால் முடிந்த அளவிற்கு கட்சி வளர்ச்சிப் பணிகளை தொடர்ச்சியாக எடுத்துச் செல்வோம். சமூக வலைதளங்களில் ஏற்படும் அர்த்தமற்ற கடந்த காலங்கள் குறித்தான விவாதங்கள் கடந்த கால “பெருமிதங்களில்” (?) வாழ்கிற திராவிட ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. இன்னும் நேர்மையாக அண்ணன் சீமான் சொற்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்.. “நல்ல பழங்களைக் கூட நாம் முழுமையாக உண்பதில்லை. தோலை சீவி விதைகளை நீக்கி பிறகுதான் உண்கிறோம்.நம் பலவற்றிலும் முரண்படுகின்ற ஹிட்லர், முசோலினி போன்றவர்களிடம் கூட நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்கிறோம். “பாதை இல்லை என வருத்தப்படாதே.. இறங்கி நட.. அதுவே பாதையாகி விடும்.” என்கிறார் ஹிட்லர். நம் உயிர்த் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் “பாதையை தேடாதே.. உருவாக்கு” என்கிறார்.விவேகானந்தர் போன்ற நமக்கு கருத்து முரண்கள் உள்ள பெரியோர்களிடம் கூட எடுத்துக் கொள்ள வேண்டிய நல்ல கருத்துக்கள் இருக்கின்றன.எல்லா மனிதர்களிடமும் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை தவிர்ப்பதுதான் அறிவுடைமை. அது ஐயா பெரியார் அவர்களுக்கும் பொருந்தும். இதைப் புரிந்துகொள்ளாமல் தேவையற்ற விவாதங்களில் நம்மை சிக்க வைத்துக்கொள்ளக்கூடாது. “நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நல்ல புத்தகங்களை வாசிக்க, நல்ல திரைப்படங்களை தேடி தேடி கண்டு தரிசிக்க, எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள கவிதை, கட்டுரை போன்றவற்றை எழுதப் பழக இந்த ஓய்வு காலத்தை பயன்படுத்துவோம். உடலை உறுதி செய்ய உடற்பயிற்சி என்பதை வாழ்நாள் பழக்கமாக்க முயற்சி செய்வோம். மன உளைச்சல்கள், தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுத்தும் எல்லாவற்றிலும் இருந்து தள்ளி நிற்போம்.இதனடியில் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பாசறை கருத்தரங்கில் அண்ணன் சீமான் அவர்கள் ஐயா பெரியார் குறித்த தனது நிலைப்பாட்டினை தெளிவாக அறிவித்த உரையின் எழுத்து வடிவம் இருக்கிறது. இத்தோடு முடிப்போம்.. இதனையும் கடப்போம்.******தகவல் தொழில்நுட்பப் பாசறை கூட்டத்தில் அண்ணன் பேசியது! ( நன்றி: தமிழினியாள்.)பெரியாரை எதிர்க்கிறோமா?நம்மை பெரியாருக்கு எதிரியாகக் கட்டமைக்கிறார்கள். திராவிடக் கட்சிகளும், ஆட்சிகளும் இம்மண்ணுக்கு விளைவித்த வஞ்சகங்களையும், துரோகங்களையும் பேசுவதால் நம்மைப் பெரியாருக்கு எதிரியாக மடைமாற்றுகிறார்கள். தகப்பன் என்பவன் பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்பவன் இரத்தவனாக இருக்க வேண்டும். எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. எனது வலி உணராதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது. இது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவு. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு, உரிமைக்கு, மேம்பாட்டுக்குப் போராடிய அத்தனைப் பேரையும் நமது வழிகாட்டியாக ஏற்கிறோம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஏங்கல்ஸ், இங்கர்சால், சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, புத்தன், பூலே, மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட யாவரையும் நமது பெருமைக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அதனைப் போலவே, அறிவாசான் அம்பேத்கரையும், ஐயா பெரியாரையும் பெருமைக்கும், வணக்கத்துக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அண்ணல் அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆனால், நமது தாத்தா அயோத்திதாசப்பண்டிதரையும், தாத்தா இரட்டைமலை சீனிவாசனையுமே தலைவராக ஏற்கிறோம். மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்போம். ஆனால், நமது இனத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தையும், சிங்காரவேலரையும், நல்லக்கண்ணுவையுமே தலைவராக ஏற்போம். சேகுவேராவை நான் கொண்டாடுகிறேன். பிடல் காஸ்ட்ரோவைப் புகழ்ந்துப்போற்றுகிறேன். ஆனால், தலைவர் பிரபாகரன்தான் எனக்குத் தலைவர். ஆகவே, ஐயா பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாகவும் கருதவில்லை; தமிழ்த்தேசியத்தின் தலைவராக ஏற்கவுமில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.கற்றதைப் பற்ற வையுங்கள்!**********************************எது நல்லதோ அதனை எடுத்துக் கொள்வதும், எது அல்லதோ அதனைத் தவிர்த்துவிடுவதும்தான் அறிவு. இணையத்தில் நாம் எழுதுகிறபோது மிகுந்த கண்ணியத்தோடும், கவனத்தோடும் கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும். நாம் பிரபாகரன் எனும் மனிதப்புனிதரை தலைவராக ஏற்றிருக்கிறோம். நாம் கண்ணியக்குறைவாகப் பதிவு செய்தால் அவரின் பெயரைச் சொல்வதற்கே தகுதியற்றவர்களாகிவிடுவோம். நான் எனது தம்பிகளை சரியாக வழிநடத்தவில்லை என்றாகிவிடும். ஐயா வலம்புரிஜான் அவர்கள் கூறியது போல, “நமது எழுத்துக்கள் எடைக்குப் போடுவது போல இருக்கக்கூடாது. எடை போடக்கூடியதாக இருக்க வேண்டும்”. தேவையில்லாதவற்றை ஒருபோதும் எழுதாதீர்கள்! தவிர்த்துவிடுங்கள். அறிவிற்சிறந்த பிள்ளைகள் உங்களது அறிவும், ஆற்றலும் இனமேம்பாட்டுக்கும், மீட்சிக்குமே பயன்பட வேண்டும். ஆபிரகாம் லிங்கன் தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதுகிறபோது, “குற்றங்குறை சொல்வோரைப் புறந்தள்ளக் கற்றுக்கொடுங்கள்” என்று கூறுகிறார். அதனைத்தான் நானும் எனது தம்பிகளுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். தேவையற்றவற்றைப் புறந்தள்ளுங்கள். நற்செய்திகளையும், உயர்ந்த நெறிகளையுமே பதிவிடுங்கள். நல்லதொரு கவிதையைப் படித்தால் அதனைப் பதிவிடுங்கள். தினமும் ஒரு குறளைப் பதிவிடுங்கள். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் பதிவிடுங்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் பாக்களைப் பதிவிடுங்கள். ஆகப்பெரும் அறிஞர்கள் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றதைப் பற்ற வையுங்கள். தீயவற்றைத் தீயிடுங்கள். இணையத்தை நாம் தமிழர் வசமாக்குங்கள். இதுதான் சமூக வலைத்தளங்களில் நமது செயல்பாடாக இருக்க வேண்டும்-அண்ணன் சீமான்.எனவே திட்டமிட்டு கட்டமைக்கப்படும் விவாத வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் நம் கவனத்தை செலுத்துவோம்.

Page 15 of 56

Powered by WordPress & Theme by Anders Norén