பசுமையேறிய வனத்தினைப் பார்த்து எதையோ தேட , அல்லது தங்களை ஏதோ ஒன்றில் தொலைக்க, என்னுடன் வந்தவர்கள் வனமேறிப் போனார்கள்.
நானோ துவண்ட கால்களோடு நான் தனிமையின் குறுங்கத்தியால் ஆழக் குத்தப்பட்டு கைவிடப்பட்டத் தனியன்.
எவரோ செதுக்கி விட்டு கைவிட்டுப் போன குறைச் சிற்பம் போல என் முன்னால் ஒரு ஆதிமலை ஒன்று அமர்ந்திருந்தது.
இருவரும் பார்த்துக்கொண்ட போது எங்களைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை.
தனிமையின் மெல்லிய நூலிழை ஒரு சிலந்தி வலை போல எங்களிடை படர, விசித்திர காலத்தின் விந்தைப் புள்ளியில் நாங்கள் நெருங்கத் தொடங்கினோம்.
எங்கிருந்தோ வந்த இளங்குருவி ஒன்று ஆதிமலை மடிப்பில் ஒய்யாரமாய் அமர, கர்வமாய் என்னை பார்த்தது மலை.
சில நொடிகளில் சீண்டிய காற்றின் சிறகால் அமர்ந்திருந்த குருவியும் பறந்து போக, கைவிடப்பட்ட ஒரு புராதன கோவில் போல மலை இருள் அடைந்தது.
பல கோடி ஆண்டுகளாய் ஒரே இடத்தில் தனிமையின் நிழல் போர்த்தி மௌனத்தின் வலி சுமந்து உறைந்திருக்கும் ஆதிமலை அடிவாரத்தின் பாறையை ஏதோ ஒன்று நினைத்து ஆறுதலாய் வருடத் தொடங்கினேன்.
ஒரு ஆட்டால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் படைக்கு நான் அஞ்சவில்லை, ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆடுகளின் படைக்கு நான் அஞ்சுகிறேன்.
–மாவீரன் அலெக்சாண்டர்.
ஏனெனில் அந்த ஒற்றைச் சிங்கம் எளிய ஆடுகளை தன் போலவே மாற்றும் வலிமை கொண்டது. அப்படித்தான் ஆடுகளாய் திராவிட- தேசிய அரசியல் /திரைக் கவர்ச்சி/ சாதி /மத அடிமை என அறிவிலிகளாய் திரிந்த ஒரு தொன்ம இனத்தின் ஆட்டுக் கூட்டத்தை புலிக் கூட்டமாக மாற்றிய ஒரு சிங்கத்தின் வாழ்வில் இருந்து சாட்சியாய் நான் வாழ்ந்து பார்த்த சில சம்பவங்கள்.
** அந்த இரவும் அந்தப் பயணமும் மிக நீண்டவை. ஏறக்குறைய தமிழ்நாட்டின் குறுக்கே நாங்கள் கடந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு விடுதியில் இடம் கிடைத்தவுடன் எல்லோரும் உச்சகட்ட களைப்பில் உறங்க சென்றோம். பின்னிரவில் ஏதோ ஒரு விழிப்பில் விழித்து பார்த்த போது… அருகே இருந்த அண்ணன் ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.
“என்ன அண்ணா.. தூங்கலையா..?” என கேட்டேன்.
“நான் தூங்கிட்டா யார் படிக்கிறது..?” என கேட்டார். பிறகு அவரே “நீ தூங்கு . உனக்கும் சேர்த்து அண்ணன் படிக்கிறேன்.!” என மெலிதாக சிரித்துக் கொண்டே சொன்னார்.
உண்மையில் நாங்கள் அன்று தூங்கிக் கொண்டுதான் இருந்தோம். அண்ணன் எங்களுக்கும் சேர்த்து படித்துக் கொண்டிருந்தார். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறார்.
மறுநாள் கூட்டத்தில் மழை பெய்தது. மழையைத் தாண்டி தமிழ் தான் வலிமையாக கொட்டி தீர்த்தது என கண்டோர்/ நனைந்தோர் சொன்னார்கள்.
** ஏழு தமிழர் சிறையில் இருந்த காலம் அது. மூவர் தூக்கு கயிற்றுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கிற்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை. அதற்கான எல்லா பணிகளையும் முன்நின்று செய்தவர் அண்ணன். எங்களை எல்லாம் ஆளுக்கு ஒரு பணி கொடுத்து இரவு பகல் பாராது அவர்தான் இயக்கிக் கொண்டிருந்தார். அந்தக் கடைசி பத்து இரவுகளும் அவர் தூங்கவில்லை என்பதை உடன் இருந்த நாங்கள் அனைவரும் அறிவோம்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தூக்கிற்கு தடை போட்டு தீர்மானம். எல்லா தலைவர்களும் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தார்கள். தான்தான் முயற்சி செய்தேன் என்றும் தன்னுடைய இயக்கம்தான் போராடியது என்று அவரவர் அந்த வெற்றியை தன்னுடைய வெற்றியாக பதிவு செய்து கொண்டிருந்த வேளையில்…
அண்ணன் தம்பிகளோடு தனியே நடந்து வந்து கொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஓடிச்சென்று அவரிடம் கருத்து கேட்டார்கள். அவருக்கு கண்கள் கலங்கி இருந்தன. மற்ற தலைவர்களைப் போல இல்லாமல் அவர் தன்னுடைய கட்சியை, தான் அந்த வழக்கிற்காக செய்து கொண்டிருந்த பணிகளை பற்றி எல்லாம் பதிவு செய்யாமல்.. அந்த நொடியில் தூக்கு மேடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த முருகன் சாந்தன் பேரறிவாளன் என்கிற மூன்று தம்பிகளின் அண்ணனாக அவர் மாறிப் போனார்.
” என் தம்பிகளின் தூக்கு கயிறு அறுக்க உதவிய அனைவருக்கும் நன்றி. தங்கை செங்கொடியின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. அங்கையர்கண்ணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தங்கைகள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு செல்கிறேன்.” என சொல்லிவிட்டு கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டே அவர் அங்கிருந்து கடந்து சென்றார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில்.. “அண்ணா..! இந்த வழக்கிற்காக நாம் எவ்வளவோ செய்து இருக்கிறோம்.. ஏன் அதை ஊடகங்களிடம் நீங்கள் வெளிப்படுத்தவில்லை..? ” என சற்றே குமறுலுடன் நான் கேட்க… என்னை உற்றுப் பார்த்தவாறு அவர் சொன்னார். ” மற்றவர்களுக்கு அது அரசியல். எனக்கு உயிர் வாதை. என் தம்பிகள் தூக்குக்கயிருக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது என் கட்சிக்காகவோ என் எதிர்காலத்திற்காகவோ நான் பேச முடியாது. தம்பிகளை இழக்க முடியாத ஒரு அண்ணனாக மட்டும் தான் என்னால் சிந்திக்க முடியும்..” என்றார். இதுதான் அவர்.
** தங்கை அனிதா நீட் என்ற கொடுமையால் கொலை செய்யப்பட்டு விட்டாள். அவளது உடலுக்கு முன்னால் அண்ணன் சீமான் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அண்ணன் திருமாவளவன் அங்கு வந்தார். கூட்டம் அதிகமாக அண்ணன் சீமான், அண்ணன் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தில் அமர வைக்கப்பட்டார்கள். அப்போது தங்கை அனிதாவின் மரணத்தை மிக எளிதாக கடக்க முடியாது, இதை முன் வைத்து நீட்டிற்கான போராட்டத்தை நாம் கூர்மைப்படுத்துவோம் என அண்ணன் சீமான் விசிக தலைவர் திருமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணன் திருமாவிடம் காவல்துறை தொடர்ச்சியாக நிர்பந்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது. இப்போது உடல் அடக்கத்தை பார்ப்போம், பிறகு போராட்டத்தை முன்னெடுப்போம் என சொன்னதில் அண்ணன் சீமானுக்கு மாற்று கருத்து இருந்தது. இல்லை அண்ணா.. நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமென சீமான் அண்ணன் மீண்டும் வலியுறுத்த, அதற்குள் திமுக தலைவர்கள் வரத் தொடங்க, இறுதி ஊர்வலம் வலுக்கட்டாயமாக தொடங்கப்பட்டது.
நாங்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்த பொழுதில்.. முன்னிருக்கையில் உள்ளம் முழுக்க கொந்தளிப்போடு கண்கலங்க அமர்ந்திருந்த அவர் “படிக்கணும்னு நினைச்ச தங்கச்சி செத்துட்டா.கோர்ட்டு அரசியல் என எல்லோரும் சேர்ந்து கொன்னுட்டாங்க. எதுவுமே இல்லாத இந்த ஊர்ல பிறந்து படிச்சி யாரும் வாங்க முடியாத மதிப்பெண் வாங்கிய பிறகும் கூட அவ மருத்துவராக முடியாம சாகுறானா , நாமெல்லாம் வெறும் பிணம் தாண்டா. பாழப்போன இந்த நிலத்துல எதுவும் முளைக்காதுடா..” என ஆற்றாமையால் கொந்தளித்தார்.
பிறகு ஆழமாக யோசித்து விட்டு “நமக்கு அதிகாரம் என்று ஒன்று கிடைக்கும் காலத்தில்.. இந்த நீட்டு போன்ற அநீதிகளை ஒழித்து, கல்வியையும் மருத்துவத்தையும் முழுமையாக இலவசமாக மாற்றி, தங்கை அனிதா பெயரில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட வேண்டும்..” என்றார். அதில் நம்ம வீட்டுப் பிள்ளைங்க எல்லோரும் படிக்க வேண்டும்.” என்றும் சொன்னார்.
அவரது கனவுகள் விரிந்து கொண்டே போயின. அந்த மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும், மக்களுக்கு எப்படிப்பட்ட உலகத் தரம் கொண்ட மருத்துவம் வழங்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லிக் கொண்டே வர விடியத் தொடங்கியிருந்தது.
அப்போதும் அவர் படிக்க முடியாமல் இறந்து போன ஒரு தங்கையின் அண்ணனாகதான் பரிதவித்துக் கொண்டிருந்தார். எல்லா சூழ்நிலைகளிலும் அவரிடம் தாய்மை போல சுரப்பது ” அண்ணன்” என்கிற பேரன்பின் அதியுச்ச உணர்வெழுச்சிதான்.
எல்லாவற்றையும் இழந்து கடைசியில் உயிரையும் இழக்க துணிகிற ஒரு கூட்டத்திற்கு, “அண்ணன்” என்கின்ற அவரை விட்டால் அழுவதற்கு கூட நாதியில்லை.
இலட்சிய வேட்கை நிறைந்த அவரது கனவுகள் வற்றா ஊற்றை போன்றவை. ஒவ்வொரு நொடியும் அலையடித்துக் கொண்டிருக்கும் கடல் போல அவரது முயற்சிகள் மீண்டும் மீண்டும் தமிழரின் இதயக்கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கின்றன.
நூற்றாண்டுக் கண்ட பிழைப்புவாத திராவிடத்தை , இப்போதுதான் தளிர்கொண்டு தழைக்கும் தமிழ்த் தேசியம் கொண்டு அவர் வீழ்த்தத்தான் போகிறார். திராவிடத்தை பற்றி சிந்திக்கும் எவரும் இனி தமிழ் தேசியத்தைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது என்கிற நிலையை ஏற்படுத்திய அதி மனிதன் அண்ணன் சீமான் மட்டுமே.
அவர் காலத்திலேயே அவர் வெல்வார். அந்தக் காலத்தையும் அவரே உருவாக்குவார். ஏனெனில் காலமும் அவர்தான்.களமும் அவர்தான்.
அவர் நிழல் பிடித்துப் பின் தொடர்வது மட்டுமே நம் கடமை. அதுவே பெருமை.
எம் தமிழினத்து ஒற்றை மன்னன் காட்டிய என் அண்ணன் சீமான் அவர்களுக்கு.. மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
விஜய் அரசியலுக்கு வருவதாக சொன்ன போது அவரை வாழ்த்தி தம்பி என அழைத்து மகிழ்ந்தவர் அண்ணன் சீமான். பல்வேறு சமயங்களில் அவருக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் விஜய்க்காக குரல் கொடுத்து நின்றவர் அண்ணன் சீமான். அது அவரது பேரன்பு.
ஆனால் தனது முதல் கொள்கைப் பிரகடன மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் கொள்கைக் குழப்பம் செய்ய ஆரம்பித்தபோது அண்ணன் சீமானின் நிலைப்பாடு மாறத் தொடங்குகிறது. சம்பந்தமே இல்லாமல் அண்ணன் சீமானை சீண்டி வார்த்தைகள் விட்டது விஜய் தான். தன் மீது அன்பு கொண்டு நிற்பவரை பொது மேடையில் தேவையில்லாமல் பேசி எதிரியாக்கிக் கொண்டவர் விஜய்தான்.கூட்டம் கூடிய ஒரே காரணத்தால் நிதானம் தவறி விஜய் செய்த வரலாற்றுப் பிழை அது. பறக்கும் விமானத்தை பார்க்க கூட பத்து லட்சம் மக்கள் கூடிய ஊர் இது. கூட்டத்திற்காக கொள்கையை மாற்றி குழப்பம் செய்யும்போது அது எதிர்க்கப்படத்தான் செய்யும்.
ஒருவரின் கொள்கை நிலைப்பாடுகள் தான் எதிரியா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
எதிரிக் கட்சியாக இருந்த போதும் சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எதிர்த்து கிளம்பிய வட இந்தியா அரசியல் தலைவர்களுக்கு எதிராக தம்பி உதயநிதி பேசியது தவறில்லை என அண்ணன் சீமான் ஆதரவுக் குரல் கொடுத்தார். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் கன்னடர்களால் அவமானப்படுத்தப்பட்ட போது அதை எதிர்த்து முதல் கண்டன குரல் தமிழ்நாட்டில் எழுப்பியதும் அண்ணன் சீமான் தான்.
இதற்கு முன்பாக பெரியார் சிலையை அவமானப்படுத்திய போதும், இடிப்பேன் என எச்.ராஜா பேசிய போதும் அதைக் கடுமையாக எதிர்த்துப் பேசியது அண்ணன் சீமான் தான்.
அதேபோல ஆளுநர் ரவி தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு மாநில அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்து கண்டனம் தெரிவித்ததும் ஆளுநர் வீட்டை பூட்டு போட்டு முடக்க வேண்டும் என தெரிவித்ததும் அண்ணன் சீமான் தான்.
அண்ணன் சீமான் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்.கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்தே ஆதரவும் / எதிர்ப்பும். நபர்கள் சார்ந்து அல்ல. அதனால்தான் அண்ணன் சீமானால் விஜய் அன்று ஆதரிக்கப்பட்டார். இன்று எதிர்க்கப்படுகிறார்.
கடந்த 14 வருடங்களாக “தமிழ்த் தேசியம்” என்கிற மண்ணின் மைந்தர்களுக்கான அரசியல் கருத்துருவை வெகுசனமாக்கி, அதை வீதிக்கு வீதி தனது வீரிய முழக்கங்களால் எடுத்துச் சென்று சேர்த்து, இனம் அழிந்தபோது, நம் உரிமைகள் களவாடப்பட்ட போது, திராவிடம் செய்த துரோகங்களை தமிழகம் எங்கும் ஆயிரக்கணக்கான கூட்டங்களில், ஆயிரக்கணக்கான மணி நேரங்களில், தன் அடி வயிற்றுக் குரலில் இருந்து பேசி , இந்த மண்ணுக்கான ஒரு மாற்று அரசியலை உருவாக்கி, திராவிடத்திற்கு எதிரான ஒன்றாக நிலை நிறுத்தும் போது, “மாற்று அரசியல்” என்பதெல்லாம் பொய் எனவும், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று எனவும் விஜய் குழப்படி வேலை செய்யும் போது அதை அண்ணன் சீமான் வேடிக்கை பார்த்துக்கொண்டு ஆதரித்தால் தான் தவறு.
அதில் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் பெற்ற தாய் தந்தையாக கூட இருந்தாலும் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை.இங்கே யார் மீதும் தனிப்பட்ட முரண் இல்லை.
ஆனால் எங்களிடம் நாங்கள் அழிந்த கதை ஒன்று ரத்தமும் சதையுமாக இருக்கிறது. எங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கள் கண் முன்பாக திராவிடத்தாலும், இந்தியத்தாலும் வீழ்த்தப்பட்ட வரலாறு எங்களுக்குள் வலித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது கனிம வளங்கள், எங்களது உரிமைகள், என அனைத்தையும் எடுத்துக் கொடுத்து விற்கிற மோசடித்தனத்தை திராவிடமும் இந்தியமும் கூட்டு சேர்ந்து செய்யும் போது இந்த மண்ணில் பிறந்தவர்களாகிய நாங்கள் அதை எதிர்த்து நிற்க வேண்டியதை எங்களது பிறப்பின் கடமையாக நாங்கள் கருதுகிறோம்.
அதை திசை மாற்ற எவர் வந்தாலும் சரிதான். அவர்கள் எங்களுக்கு பகைதான்.எனவேதான் “தமிழ்த் தேசியம்” என்பதை பிழைப்பு வாத திராவிடத்திற்கு எதிராகவும், சுரண்டல் முதலாளித்துவ இந்தியத்திற்கு எதிராகவும் நாங்கள் முன்வைக்கிறோம். எம் தத்துவத்தை யார் பலவீனப்படுத்தவோ அல்லது வீழ்த்தவோ முயன்றாலும் அவர்கள் எங்கள் எதிரிகள் தான்.
எம் தத்துவத்தை எதிர்த்து அல்லது குழப்பி வீழ்த்த யார் வந்தாலும் சரிதான். எதிர்க்கத்தான் செய்வோம். வலிமையாக அடிக்கத்தான் செய்வோம். அது வலிக்கத்தான் செய்யும்.
வாழ்வில் உன் நினைவின் இசையற்ற பெரு அமைதி, உள்ளுக்குள் கேட்க சகிக்காத காட்டுக் கூச்சல்.
❤️
சொல்லி விட்டு போ என்றேன்.
சொல்ல என்ன இருக்கிறது என சொல்லாமல் போய்விட்டாய்.
சொல்லாமல் சொன்னவை தான் சொல்லியவைகளைவிட சொல்லிக் கொண்டிருக்கின்றன.
❤️
விடிந்ததும் ஒரு கதவு திறந்திருந்தது. காற்றடித்துதான் திறந்திருக்கும் என நினைத்துக் கொள்வதுதான் எனக்கு நானே காட்டிக்கொள்ளும் கடைசிக் கருணை.
❤️
கடைசியாக போகும் போது ‘தேடாதே’ என எழுதி வைத்துப் போய் இருக்கலாம்.
என்னைப் பற்றி அவ்வளவு புரிந்து இருக்கிறது உனக்கு என்பதுதான் நான் அடைந்த உச்சத்துயரம்.
❤️
இறுதியாய் அனுப்பிய செய்தியை அழித்துவிட்டாய்.
அலைபேசியின் கதவுகளை மூடிவிட்டாய்.
மின்னஞ்சல் பெட்டியை அடைத்துவிட்டாய்.
எல்லாம் சரி.
உள்ளுக்குள் ஆழ குத்தப்பட்ட குறுங்கத்தியாய் குமையும் இந்த இரவுகளை எங்கே புதைப்பாய்..?
பொன் அந்தி தனிமையில் மென் காற்றாய் உன் தோள் உரசும் இந்த நினைவுகளை எந்த வெறுப்பின் வெந்நீரால் அளிப்பாய்…??
❤️
எல்லாவித தர்க்கங்களுக்கும் அப்பால்..
உனது பிரிவை என்னால் தாங்கிக் கொள்ள முடிகிறது என்றால்..
நான் இறந்து விட்டேன் என்றே பொருள்.
🟥
*
இத்துடன் இணைக்கப்பட்ட ரூமியின் கவிதை வரிகளோடு நிறைவுப் பெற்று நம் கண்களை நனைக்கும் Rockstar 2011 -ல் வெளிவந்த புகழ் பெற்ற இந்தித் திரைப்படம். புகழ்பெற்ற இயக்குனர் இமிதியாஸ் அலி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு மகத்தான இசை கலைஞனின் வாழ்வில் ஆறாத ரணமாகவும், சுய அழிவாகவும் மாறிப்போன நிறைவேறா காதலின் துயரத்தைப் பற்றி பேசுகிறது.
சூஃபி ஞானியாக அறியப்படும் ஜலாலுதீன் ரூமி ஒரு பாரசீக கவிஞர். படிக்க மிக எளிதானதாக தோன்றும் இவரது வரிகள் மிக மிக ஆழமான பொருள் கொண்டவை. தமிழில் “தாகம் கொண்ட மீனொன்று” என்.சத்தியமூர்த்தியின் அசாத்திய மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது. படித்து பரவசம் அடைந்து அனுபவிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் அது.
சிலப்பதிகாரத்தில் “வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப” என்ற வரிகள் உள்ளன. இதில் ‘ஊழ்வினை’ என்பது என்றோ செய்த பாவம் அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவம் என்பதான பொருளில் பொருத்தலாம்.
உண்மையில் எதனாலும் நிறைவடையாத கொந்தளிப்புடன் , இயல்பான மானுட அலைவரிசைகளில் பொருந்தாத துயர் வலியோடும் உலாவரும் ராக்ஸ்டார் கதை நாயகன் ‘ஊழ் வினை’ துரத்த வாழ்தல் வேண்டி அலைகிறான். ஏறக்குறைய மரணத்திற்கு நிகரான அலைகழிப்பு அது. இசை மேதை ஏ ஆர் ரகுமானின் அதி உன்னதமான மேற்கத்திய/ இந்திய கஸல் இசை கோர்ப்போடு வெளியாகி உள்ள இந்தப் படத்தின் பாடல் வரிகள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய துயர் கவிதை மலர்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் நிறைவேறா காதலின் உன்மத்த வெறியில் “இந்தப் போரும் இந்த ரத்தமும் எல்லாம் அவளுக்காக தான் அவளை மறக்கத்தான்..” என்ற பொருளில் கதறி தீர்ப்பதைத்தான் ராக்ஸ்டார் திரைப்படமும் வழிமொழிகிறது.
ரன்பீர் கபீரின் விழிகள் விசேடமானவை. எப்போதும் துயர் நிரம்பிய ஒரு ஏக்கத்தோடு அலைபாய்ந்து கொண்டே இருக்கும் அந்த விழிகள் கலைச் செழுமை கொண்டவை.
திராவிடன் என்பது ஒரு இனம் இல்லை. அதற்கென பொதுவான மொழி இல்லை. வரையறுக்கப்பட்ட நிலம் இல்லை. பொதுவான பொருளாதார வாழ்க்கை இல்லை. திராவிடன் எல்லோரும் ஓரினம் என சொல்ல தமிழ்நாட்டைத் தவிர பிற ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் யாரும் இல்லை..
எனவே தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் திராவிடம் என்றால்… அது அநீதி தானே..
எங்கள் அடையாளத்தை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்.. தமிழர்கள் நாங்கள் திராவிடர்கள் என்று எங்களை ஏன் இனம் மாற்றிக் கொள்ள வேண்டும்…??
திராவிடம் என்பது தமிழ்ச் சொல் அல்ல.
திராவிடம் எங்களை இந்துக்கள் என்கிறது. தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்லர்.
திராவிடம் ஆரியர்களை கோவிலுக்குள் வைத்து விட்டு எங்களை கோவிலுக்கு போகாதே என்கிறது.
தமிழர்கள் நாங்களோ “கோவில் கட்டியதும் நாங்கள்தான்.. உள்ளே இருக்கும் சாமியும் எங்களுடையது தான்..” என்கிறோம்.
திராவிடம் தமிழ் மொழியின் தொன்மத்தை மறுக்கிறது. எங்களது கீழடி ஆதிச்சநல்லூர் போன்ற பண்பாட்டு விழுமியங்களை திராவிட பண்பாடு என மாற்றி எங்கள் அடையாளங்களை எங்களிடமிருந்து திருடுகிறது.
மற்ற திராவிட மொழிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் திராவிடம் செல்லுபடியாகாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமையாக திராவிடம் நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் எங்கள் மீது நடத்தப்படும் பண்பாட்டு தாக்குதலாக, வரலாற்றுப் படையெடுப்பாக கருதி முழுமூச்சாக எதிர்க்கிறோம்.
இதில் ஒளிவு மறைவிற்கு ஒன்றும் இல்லை. அதற்காகவே “நாம் தமிழர்” என்ற பெயரில் நாங்கள் அரசியல் களத்திற்கு வந்தோம்.
இனி எம் மண்ணின் பூர்வ குடிமக்கள் “நாங்கள் தமிழர்கள்- திராவிடர்கள் அல்லர்” என எழுச்சிக் கொள்வதை எந்த திராவிட சதியாலும் வீழ்த்தி விட முடியாது.
கம்பீரமாக தலைநிமிர்ந்து சொல்வேன்.
நான் தமிழன். பிறப்பாலும் இனத்தாலும் நான் தமிழன். திராவிடன் அல்ல.
என் நாடு தமிழ்நாடு. திராவிட நாடு அல்ல.
என் தாய்மொழி தமிழ். என் இனம் தமிழினம்.
தமிழ் இனம் என்பது ஒரு தேசிய இனம்.
மொழியால், நிலத்தால், பொதுவான பண்பாட்டினால், பொதுவான பொருளாதார அமைப்பால், வரலாற்றின் போக்கில் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டுள்ள ‘ஓரினம்’ என்கிற உளவியலால்..
நாங்கள் தமிழர்கள்.
ஒருபோதும் நாங்கள் திராவிடர்கள் அல்லர்.
திராவிடம் என்பது பூர்வகுடிகளான தமிழர்களாகிய எங்கள் மீது நடத்தப்பட்ட வலுக்கட்டாயத் திணிப்பு. பொய்மையான வரலாற்று திரிபு. எம் மண்ணை பிறமொழியாளர்கள் ஆள்வதற்கும் , எம்மை சுரண்டுவதற்குமான குரூர சதி.
ஆரியத்திற்கு எதிரான தமிழர்களின் போரில் ஆரியத்திற்கு ஆதரவான திசைத்திருப்பல்தான் திராவிடம்.
திராவிடத்தை அதன் அடையாளத்தை இம் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் நாங்கள் மறுக்கிறோம் . வலிமையாக உறுதியாக எதிர்க்கிறோம்.
அண்ணன் சீமானுடன் நிற்பதும், அவரது நகர்வுகளை கவனிப்பதும், அவ்வளவு சுவாரசியமாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் அறிவாலய அடிமைகளையும்,ரூ 200 உபீஸ்களையும் அவர் கதற விடுவதை காணும் போது.. “இதற்குத்தானே காத்திருந்தோம் பாலகுமாரா..” என்பது போல பார்க்க அவ்வளவு பரவசமாக இருக்கிறது.
யாராவது நாம் தமிழர் கட்சியில் இருந்து நீங்கி விட மாட்டார்களா என அறிவாலய அடிமை ஊடகங்கள் அலைவதை காணும் போது.. ‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷ் தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை காட்டுவதற்காக எதிரி அணியிடம் வேண்டுமென்று அவுட்டாகி வெளியே செல்லும்போது ஒரு ‘கெத்து’ காண்பிப்பாரே.. அதுபோல. நேற்று கூட எங்களது விக்கிரவாண்டி வேட்பாளர் தங்கை அபிநயா காமெடிக்காக ஒரு பதிவை போட அவசர அவசரமாக அதை பிளாஷ் நியூஸ் ஆக போட்டு ஊடகங்கள் “பல்பு” வாங்கிய கதையை பார்க்கும் போது.. ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் எங்களது உயரம் எங்களுக்கே தெரிந்தது.
ஒவ்வொரு பதிவிலும் வந்து தாறுமாறாக மன நோயாளிகள் போல திட்டிக் கொண்டிருக்கும் திராவிடத் திருவாளர்களின் பல உண்மை /போலி ஐடிகளின் பரிதாப நிலையை பார்க்கும் போது.. ஒருவேளை சோறை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத நிலைக்கு அவர்களை ஆக்கி வைத்திருக்கும் அண்ணன் சீமான்தான், அந்தப் பரிதாப ஜீவன்களை தான் நினைத்தது போல் எல்லாம் “இயக்கிக்” கொண்டிருக்கிறார் என நினைக்கும் போது கொஞ்சம் திமிராக இருக்கிறது.
ஒரு ஆளுங்கட்சியின் ஐடி விங் தன் முழு நேரப் பணியாக எங்கள் ஆடியோக்களை வெளியிடுவது, எங்களை உளவு பார்ப்பது,எங்களில் யார் கட்சிக்குள் இருக்கிறார்/ வெளியே போகிறார் என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டே இருப்பது என 24×7 ஒரே பணிக்குள் அவர்களை ஆழ்த்தி வைக்கிற அண்ணன் சீமானின் ஆளுமை ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் சில “ஐடி”கள் எங்களுக்காகவே உழைத்து, எங்களுக்காக / எங்களை பிரதானப்படுத்தி கதை எழுதி, ஆடியோக்களை ஒட்டு கேட்டு, அதை ஒட்டி பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிட்டு, கட்டுரை வரைந்து,மாடாய் உழைத்து, ஓடாக தேய்ந்தவை. மக்கள் எங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பதிவு மேல் பதிவாக போட்டு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்ற அவர்கள்தான் நாங்கள் மறக்கக்கூடாத “நித்தியானந்தாக்கள்”.
வெகு நாட்களுக்கு முன், ஏறக்குறைய கட்சித் தொடங்கிய காலக்கட்டத்தில் அண்ணன் சீமான் சொன்னார் . இதுவரை “கருணாநிதி வாழ்க..!, கருணாநிதி ஒழிக..!” என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல். இனி “சீமான் வாழ்க..! சீமான் ஒழிக..! என்பதுதான் இனி வரும் அரசியல்..” என்றார். இப்போது எக்ஸ்/ முகநூல் தளத்தை பார்க்கும் போது அதை அவர் அடைந்து விட்டார்.
அவர் திட்டமிட்டு ஒவ்வொரு நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அறிவாலய அடிமைகளுக்கான வேலைத் திட்டம் வழங்குவதற்காக பயன்படுத்துகிறார். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் போதுமானது. மற்றதை திராவிட திருவாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இவ்வளவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு என எந்த ஊடகமும் இல்லை. இப்போதெல்லாம் நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் ஊடகங்களே இல்லை. கொஞ்சம் youtube பக்கங்களை பாருங்கள்.tumbnail ல் அண்ணன் சீமான் படம் இருந்தால் அந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு பரப்பப்படுகிறது. அங்கும் அவர்தான் பார்வையாளர்களை ஈர்க்கும் பெரும் சக்தி. இது எங்களால் மட்டும் நிகழ்ந்த அதிசயம் அல்ல. இதில் பெருமளவிற்கு எங்களது “நெஞ்சிற்கினிய எதிரிகளான” அறிவாலய அடிமைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அண்ணன் இன்று சாம்சங் தொழிலாளர்களை சந்திப்பார். அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திப்பார். போகிற போக்கில் நாலே நாலு கேள்வி.அவ்வளவுதான்.உடனே உபீஸ் எல்லாம் கதறிக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
நாம் என்ன பேச வேண்டும் என்பதை நம் எதிரி தீர்மானிப்பது எத்தகைய பலவீனமான நிலை..?? அதைத்தான் பரிதாபத்திற்குரிய திராவிடத் திருவாளர்கள் தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்த் தேசியம் என்றால் யாருக்கும் தெரியாது. திராவிடர் தான் தமிழர் என நினைத்துக் கொண்டு நான் உட்பட பலரும் அலைந்த காலகட்டம் அது.
அதுவெல்லாம் இல்லை என்று நூற்றாண்டுகளாய் கட்டப்பட்ட திராவிடக் கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டே அண்ணன் கம்பீரமாக நிற்கிறான் பார்…
அதற்காகவே நாங்கள் அண்ணன் சீமானுடன் நிற்கிறோம்.
இதில் முக்கியமானது என்னவென்றால்..எங்களோடு, எங்களை விளம்பரப்படுத்த, எங்களுக்காக உழைக்க , தினந்தோறும் பதிவு பதிவாய் போட்டு ஊடகமில்லாத எங்களை பரப்பி விட எங்களுக்கு எதிரே நிற்பதாக நினைத்துக் கொண்டு ஒரு கூட்டம் ‘அப்பாவியாக’ நிற்கிறதே…
நான் தனியன். வீட்டின் ஒரே மகன். பெரும்பாலும் அப்படியே வளர்ந்தேன். உடன்பிறந்த சகோதரிகள் என யாரும் இல்லாத, சொல்லப்போனால் என் அம்மா, மனைவி தவிர பெண்களே இல்லாத உலகம்.எனக்கும் இரண்டு மகன்கள் பிறக்க என் அப்பா /எனது மகன்கள் / எனது, அவர்களது நண்பர்கள் என என் வீடு ஒரு “பாய்ஸ் ஹாஸ்டல்” தான்.
எல்லா உறவுகளையும் பார்த்த எனக்கு உயிருக்குயிராய் உண்மையாய் நேசிக்கும் நேர்மையான சகோதரி என்று யாரும் இல்லை. பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்த எனக்கு , எல்லோருக்கும் அக்கா தங்கை என இருக்க, அவரவர்களுக்கு நியாயம் கேட்க சண்டை போட உடன்பிறந்த பெண்கள் இருக்க, எனக்கு மட்டும் அம்மாவைத் தவிர யாரும் இல்லை. தங்கை என்பது என்னை பொருத்தவரை ஒரு கனவு. தவிப்பு/ தாகம் என தங்கைகளுக்காக தவம் இருந்த அண்ணன் நான்.
நாம் தமிழர் கட்சிக்கு வந்த பிறகு அண்ணன் சீமானால் ஊருக்கு ஊர் நிறைய சொந்தங்கள்.குறிப்பாக சகோதரிகள்.அதில் மிக முக்கியமானவள் என் தங்கை சுனந்தா. உடன் பிறந்தவள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள்தான் சுத்த இலக்கணம். எதுவாகினும் என்னிடம் அவள் சொல்லிவிட வேண்டும். எனக்கும்தான்.
அழைக்கும்போதெல்லாம் அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல, உடனே எடுத்து விடுவாள்.
” அண்ணா.. பாப்பாவோடு பாக்ஸிங் கோச்சிங் கிளாஸில் இருக்கிறேன்.. ஒரு ஐந்து நிமிடம் கழித்து எடுக்கவா..” என கேட்பாள்.
சரியாக ஐந்து நிமிடம் என்றால் ஐந்து நிமிடம் தான் . அலைபேசி ஒளிரும். அதன் பிறகு அலைபேசியை நான் மீண்டும் வைக்கும்போது என் முகத்தில் சிறிய புன்னகை, மனநிறைவு, குழப்பங்கள் தீர்ந்த தெளிவு போன்ற உணர்வலைகள்.
என் தங்கை சுனந்தா போன்ற ஆளுமைகள் நாம் தமிழர் கட்சியின் மகத்தான பலம். 24 மணி நேரமும் இணையத் திரைக்கு முன்னால் அமர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநாட்டிட அவர்கள் அளிக்கின்ற உன்னதமான உயரிய உழைப்பு, இதுவெல்லாம் அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற நமக்கு தெரியாது.
அதுவும் சுனந்தா ஆழமான புத்தக வாசிப்பாளர் வேறு. அவள் புத்தகங்களைப் பற்றி எழுதுகிற உணர்ச்சியும் அறிவும் ஒருங்கே இணைகிற பதிவுகளுக்கு நாங்கள் பலரும் உயர்விருப்பாளர்கள்.
எவ்வளவோ விமர்சனங்கள். அதை சுனந்தா போகிற போக்கில் Deal செய்வது அசாத்தியமானது. இணையமே கொதித்து அவளை வறுத்தெடுக்க தயாராகி நிற்கும்போது, இவள் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துவிட்டு உருகி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பாள். எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அவள் தீர்மானிப்பதை உற்றுநோக்கி கவனிப்பது அலாதியானது. அதுவும் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை அவள் எடுத்துக் கொள்ளும் தூரம் நம்மில் பலரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். சிறிய விமர்சனம் வந்தாலும் வானமே விழுந்து விட்டது போல கதறும் நம்மில் பலருக்கு மத்தியில், எதிரியை கம்பீரமாக பார்த்து “இவ்வளவுதான் நீயா..?” என அலட்சியப்படுத்தும் போது அவன் உள்ளுக்குள்ளே இறந்து இருப்பான்.
அதுதான் சுனந்தா. அவளுக்குள்ளாக எத்தனையோ வலிகள். பிரச்சனைகள். ஏமாற்றங்கள். அதுவெல்லாம் ஒரு நொடிதான். அடுத்த நொடியில் அவள் அவள் அண்ணன் சீமான் போல உடற்பயிற்சி கூடத்தில் இருப்பாள். வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்துவிட்டு ஒரு நான்கு பதிவுகள் போட்டு எதிரிகளை போகிற போக்கில் சம்பவம் செய்யும் தருணத்தில் விக்ரம் படத்தில் வருவது போல அவள் “அண்ணன் சீமான் படையின் முதன்மை ஏஜெண்ட் சுனந்தா எண் #1” என நம் மனத்திரையில் தோன்றும்.
சுனந்தா போன்ற அறிவார்ந்த வசீகரத்துடன் இயங்கும் பெண்ணாலும், தன்னலமற்ற உறவுகளாலும் தான் எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாத நாம் தமிழர் கட்சி சமூக வலைதளங்களில் சாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவள் எங்களுடைய பெருமை.
அவள் வாழ, நான் வாழ்வேன்.
உள்ளம் நிறைந்து நெகிழ்வுடன் என் தங்கையை வாழ்த்துவேன்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை தலைவர் என் உயிர்த் தங்கை Sunandha Thamaraiselvan அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி வேலை சம்பந்தமாக கும்பகோணத்தில் புறவழிச் சாலைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது..காரை நிறுத்திவிட்டு அலைபேசியில் யாரிடமோ நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிரே வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் என்னை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. நானும் அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே என்றுதான் எனக்கு நினைவில்லை. அவர் தயங்கிவாறே அருகே வந்து “செந்தில் தானே நீங்க.. ? “எனக் கேட்டார். “மன்னார்குடி தானே..?” மறுபடியும் கேட்க என்றும் கேட்க, ஆமாம் என நான் தலையசைத்தேன். “என்னை தெரியலையா.. நான் தான்பா ராஜா” என்றார். ராஜா என்றால், நான் குழம்பிக் கொண்டிருந்த போது.. “அதான்பா மன்னார்குடி ஹவுசிங் யூனிட் ராஜா, ராக்கெட் ராஜா.. ” என சொன்னபோது நான் அப்படியே அதிர்ச்சியோடு வண்டியை விட்டு வெளியே வந்து விட்டேன்.
ஏனென்றால் ‘ராக்கெட் ராஜா’ எனது பதின் பருவத்து ஹீரோ. எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் GCC ( Gavaskar cricket club) என்ற ஒரு அணி இருந்தது. அண்ணன் ஸ்டீபன் தான் கேப்டன். அதில் அண்ணன் ராக்கெட் ராஜா வேகப்பந்துவீச்சாளர். கூடுதலாக கபில்தேவ் போல பேட்ஸ்மேன்.
இன்னும் எனக்கு நினைவிருக்கிறது அவர் வேகமாக ஓடிவந்து பந்தை வீசும் போது, பந்து சீறிப் பாய்கையில் .. உண்மையிலேயே அது ராக்கெட் தான்.
அண்ணன் ராக்கெட் ராஜாவும், அண்ணன் காவுக்கனியும் எங்கள் GCC அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். முதல் இரண்டு ஓவர்கள் வீசும் போதே எதிரணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை வந்த வேகத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் குடியிருந்த B-6 பிளாக்கிற்கு பின்னால் இருக்கின்ற மிகப்பெரிய வயல்வெளி கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
மன்னார்குடியில் “பூவா” என்ற ஒரு அண்ணன் இருந்தார். அவர்தான் நடக்கின்ற கிரிக்கெட் போட்டியின் வர்ணையாளர். சுவாரசியமாக வர்ணனை செய்வார். ” ஹவுசிங் யூனிட் முனையை நோக்கி இதோ ராக்கெட் வருகிறது..” என்று பூவா அறிவிக்கும் போது ராஜா அண்ணன் பௌலிங் போட தயாராகி நிற்பார். நாங்கள் எல்லாம் பெரிய சத்தம் போட்டு ஆர்ப்பரிப்போம். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
எங்களைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது வாழ்வியலின் ஒரு அங்கம். நான் ஒரு நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் கூட,GCC அணி என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. குறிப்பாக அண்ணன்கள் ஸ்டீபன், ராஜா போன்றோரெல்லாம் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வந்த என்னை அழைத்து எனக்கு சுழற் பந்துவீச்சு கற்றுக் கொடுத்ததெல்லாம் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. என் எதிர் பிளாக்கில் இருந்த விஜயகுமார் என்ற விஜி அண்ணன் தான் எங்கள் அணியின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு, என் நண்பர்கள் ராம்நாத், பாலு, சதனுக்கு கேட்ச் பிராக்டிக்ஸ் அளிப்பார். உடல் குறையை காட்டி என்னை எப்போதும் அவர்கள் ஒதுக்கியதே இல்லை.
என்னால் ஓட முடியாது எனத் தெரிந்து நடக்கும் பயிற்சி ஆட்டங்களில் என்னையும் சேர்த்துக்கொண்டு என்னை ஸ்லீப்பில் விஜி அண்ணன் நிற்க வைப்பார். அப்போது நான் நடப்பதற்கு இடது காலில் பித்தளையிலான காலிஃபர் அணிந்திருப்பேன். நான் நடக்க முடியாதவன் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்ததே இல்லை. ஏனெனில் அந்த அண்ணன்மார்கள் என்னை பறக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த உலகம் எவ்வளவு கருணையானது , வாழ்வின் பல தருணங்களில் என்னை காயப்படாமல் காப்பாற்றி இருக்கிறது என நெகிழ்வுடன் கருதி இன்றளவும் நான் நன்றியோடு இருப்பது எங்கள் GCC அணி அண்ணன்களை நினைத்துதான்.
ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை போல எங்கள் GCC அணிக்கு ஒரு பாரம்பரியம் உண்டு . பெரும்பாலும் எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்தவர்கள் தான் அதில் இடம்பெற முடியும். சில அபூர்வமான பிளையர்கள் வெளியே வந்தும் எங்கள் அணியில் விளையாடினார்கள்.
ஒருமுறை மன்னார்குடி நகரத்தின் உயரிய அணிக்கும், எங்களது GCC அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியின் போது, முன்னணி வீரர்கள் எல்லோரும் அவுட் ஆகி வெளியேறிய பிறகு, விக்கெட் கீப்பரான அண்ணன் விஜியும், பேட்ஸ்மேன் ஆன அண்ணன் ராக்கெட் ராஜாவும் களத்தில் இருந்தார்கள். கடைசி மூன்று பந்துகள். ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி. அண்ணன் விஜி விக்கெட் கீப்பர் என்பதால் தொடர்ந்து சிரமப்பட்டு கொண்டிருந்தார். எதிரணியின் வேகப்பந்துவீச்சாளர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கும்போது, இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் எல்லாம் அழ ஆரம்பித்து விட்டேன். அருகில் நின்ற அணியின் கேப்டன் ஸ்டீபன் அண்ணன் ” விளையாட்டுல யாரு ஜெயிச்சா என்னடா.. நல்லா விளையாடுறவங்க ஜெயிப்பாங்க.. விடு. எப்போதும் நாமே ஜெயிக்கணும்னு நினைக்காதே..” எனச் சொல்லி என்னை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறார். அருகில் என் நண்பர்கள் ராம்நாத், சதன், பாலு, செந்தில் , மாரிமுத்து என பலரும் கண்கலங்கி அமர்ந்திருக்கிறார்கள். கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் அடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் அண்ணன் விஜி திணற நாங்கள் எல்லாம் “விஜிண்ணே.. ஒரே ஒரு ரன் அடி” என்று கத்தியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அதேபோல் மூன்றாவது பந்தில் அண்ணன் விஜி ஒரு ரன் எடுத்துக் கொண்டு ஓட, மறுபுறம் வந்த ராக்கெட் ராஜா அண்ணன் தன் அக்மார்க் ஸ்டைலில் ஸ்கொயர் கட்டில் ஒரு நான்கு அடித்து போட்டியில் வென்றது மறக்க முடியாத நினைவு.
……
1983 கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பை வென்ற பிறகு கிரிக்கெட் என்ற விளையாட்டு இந்திய பெருநிலத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்தது. எண்பதுகளில் ட்ரான்சிஸ்டர் ரேடியோக்கள் மூலமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்கிற ஒரு புதிய தலைமுறை உருவானது. கொஞ்சம் சிரமமான ஆங்கிலம் தான். ஆனாலும் கண்டிப்பாக உற்றுக் கேட்டால் 4, 6, அவுட் போன்றவற்றை புரிந்து கொள்ளலாம். பொங்கல் விழாவின்போது பெரும்பாலும் சென்னை சேப்பாக்கத்தில் ஏதோ ஒரு நாட்டோடு இந்திய அணி கிரிக்கெட்டில் மோதும். அப்போதெல்லாம் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகள் தான். சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது மட்டும் தமிழில் வர்ணனை கேட்கலாம். “வாலாஜா சாலை முனையில் இருந்து கபில்தேவ் பந்து வீச வருகிறார்..” என தொடங்கும் போது இன்பத் தேன் வந்து நம் காதுகளில் சத்தியமாக பாயும். பிறகு தொலைக்காட்சிகள் வந்து எல்லாம் மாறிப்போனது.
எண்பதுகளின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லா தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடக்கூடிய அணிகள் இருந்தன. அப்படித்தான் எங்களது GCC அணியும் மன்னார்குடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தோன்றியது. அதன் வெற்றிக்கு அங்கே குடியிருந்த ஒவ்வொரு குடும்பமும் வேண்டுவார்கள். என் அம்மா மற்றும் எதிர் வீட்டில் இருந்த திலகவதி அத்தை, அதேபோல் எதிர்பிளாக்கில் இருந்த லதா அக்கா எல்லோரும் மாடியில் நின்று மேட்ச் பார்ப்பார்கள். இங்கே அணி வெற்றி பெறும் போதெல்லாம் அவர்கள் மாடியில் இருந்து கைத்தட்டி ஆர்ப்பரிப்பது எல்லாம் ஒரு கனவு காட்சி போல இருக்கின்றன.
….
சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த “லப்பர் பந்து” பார்த்தேன். அதில் வருகின்ற “கெத்து” தினேஷ் எனக்கு பல ஹவுசிங் யூனிட் அண்ணன்களை நினைவூட்டினார். இசைஞானி இசையில்” நீ பொட்டு வைத்த தங்க குடம்..” எனப் பாட்டு ஒலிக்கும் போது தினேஷ் நடந்து வருகிற அந்தக் காட்சி எங்கள் தலைமுறையில் நாங்கள் அடிக்கடி எங்கள் கண்களால் பார்த்து சிலிர்த்த காட்சி. உண்மையில் எங்கள் அண்ணன்கள் கெத்து தினேஷ் போலத்தான் கதாநாயகர்களாக இருந்தார்கள். நாங்கள் எல்லாம் அவர்களது ரசிகர்கள்.
எங்கள் நிலங்களான மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட “களவாணி” திரைப்படம் மிக முக்கியமான பண்பாட்டு வாழ்வியல் ஆவணம். அதற்குப் பிறகு “லப்பர் பந்து” போல தமிழ் நிலத்தின் மிக முக்கியமான “விளையாட்டு” என்கிற ஒரு பண்பாட்டுக் கூறினை எடுத்துக்கொண்டு இவ்வளவு சுவாரசியமாக அடையாளப்படுத்திய திரைப்படம் வேறு எதுவும் இல்லை.
எளிய மனிதர்களில் மின்னக்கூடிய விளையாட்டு வீரர்கள் அந்தப் பகுதியில் கதாநாயகர்களாக இருந்தார்கள் என்பதை “லப்பர் பந்து” ஆவணப்படுத்தி இருக்கிறது. அவர்களால் Pad கட்ட முடியாது. ஒழுங்கான ஆடைகள் இருக்காது. ஆனால் அடிக்கிற அடி ஒவ்வொன்றும் இடிதான்.
குறிப்பாக கதாநாயகியாக வருகிற கெத்து தினேஷ் மனைவி கதாபாத்திரம் மிக நுட்பமாக வரையப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு மனைவியை தாயாக நேசிக்கின்ற குணம் பெருகுவதை பலரும் உணர்கிறார்கள். ஊரில் கதாநாயகனாக இருந்தாலும், வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளாக அவன் அன்பின் அடிமை. குறிப்பாக இந்த திரைப்படத்தில் “மாமியார் -மருமகள்” இடையிலான உறவு இவ்வளவு அழகாக கலாபூர்வமாக வேறு எந்த திரைப்படத்திலும் இதுவரை காட்டப்பட்டதில்லை. அதேபோல் எப்போதும் முட்டித்திரியும் “மாமனார்-மருமகன்” உறவும் அவ்வாறுதான்.ரசனையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
படம் சாதி அரசியலுக்கான அனைத்தையும் கொண்டிருந்தாலும், எதையும் போதிக்காமல் வாழ்வின் ஓட்டத்தோடு சாதி மறுப்பியலை உளவியலாக மாற்றுகிற வித்தையை ஒரு கவிதை போல நிகழ்த்தி இருக்கிறது. உண்மையில் திரைமொழியின் அழகு இதுதான்.
திரைப்படம் என்பது ஒரு காட்சி மொழி ஊடகம். அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லை. மாறாக கலையம்ச காட்சிகளின் மூலமாக கதாபாத்திரங்கள் ஊடாக கதையை நிகழ்வாக மாற்றி சொல்வது என்பது பல பிரம்மாண்ட திரைப்படங்களில் தவறும் சவால்.
ஆனால் “லப்பர் பந்து” இதை அனாசியமாக தூக்கி போடுகிறது. ஒரு எளிய கதையின் மூலம் , எத்தனை திரை மொழி அடுக்குகளையும் (Screen Play layers) சுவாரசியமாக உருவாக்க முடியும் என்பதற்கு சமீபத்திய வெற்றிகரமான உதாரணம் “லப்பர் பந்து”. படத்தில் ஒரு காட்சி கூட தேவையற்ற காட்சி இல்லை. Editor வித்தைக்காரர். ஒளிப்பதிவும் அப்படித்தான். ஒரு திரில்லர் படம் போல ஒவ்வொரு காட்சியிலும் இருக்கை நுனியில் நம்மை அமர வைத்து அட்டகாசம் செய்து விடுகிறார்கள். இதற்கு நடுவில் சாதி மறுப்பு /பெண்ணியம்/அரசியல் என அனைத்தையும் போகிற போக்கில் சொல்லி அதற்கான தீர்வுகளையும் சொல்லி, ஆனால் எதையும் போதிக்காமல், நதியோட்டம் போல இயல்பாக கடத்துகிறார்கள்.இசை ஷான் ரோல்டன். அளவான அழகான எளிய இசை. அதுதான் சமீப காலங்களில் இல்லாதது.
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கெத்து தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிகா என்பவரின் நடிப்பு. மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் கதாநாயகனை துரத்திக் கொண்டு ஓடும் வழமை கதாநாயகி அல்ல அவர். அவர் மலையாளத்தில் நடித்த “சதுரம்” என்கின்ற ஒரு சுமாரான திரைப்படத்தை ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன். அதையும், இதையும் ஒப்பிட்டால் இது அசுரப் பாய்ச்சல். ஏறக்குறைய பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் வருவது போல இதில் சுவாசிகா வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. அன்பு பாசம் நெகிழ்ச்சி காதல் கோபம் தாய்மை கண்டிப்பு என அனைத்தையும் கலந்து கட்டி பிரித்து மேய்ந்து இருக்கிறார் சுவாசிகா.
அட்டக்கத்தி தினேஷ் என்கின்ற ஒரு அற்புதனை “கெத்து தினேசாக” “லப்பர் பந்து” மாற்றிவிட்டது. இதுவரை அவரது வாழ்க்கையில் திறக்காத பல கதவுகள் இனி திசையெல்லாம் திறக்க கூடும். அதேபோல் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா என யாரும் ஒரு சிறிய தவறை கூட செய்யாமல் முழுமையான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எனக்கெல்லாம் லப்பர் பந்து பார்த்துவிட்டு இரவு தூங்க முடியவில்லை . காதெல்லாம் பூவா அண்ணன் கமெண்ட்ரி பண்ணுவது போல எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. ஸ்டீபன் அண்ணன் பேட்டிங் செய்வது போலவும், ராஜா அண்ணன் ரன்னர் அப் நிற்பது போலவும் பலவிதமான காட்சிகள் நினைவில் தோன்றி கொண்டே இருந்தன.
எங்கள் தலைமுறையில் “என்றும் அன்புடன்” என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் “துள்ளித் திரிந்ததொரு காலம்” என்ற கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் உண்டு. அதன் பல்லவி இப்படி வரும்.
“அன்னை மடி தனில் சில நாள், அதை விடுத்தொரு சில நாள் திண்ணை வெளியினில் சில நாள், உண்ண வழியின்றி சில நாள், நட்பின் அரட்டைகள் சில நாள்,”
…. என நீளும் அந்தப் பல்லவி,
“ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள்.. பூங்கொடியே …!”
என இவ்வாறு முடியும்.
கால ஓட்டத்தைப் பற்றி ஒருவித வலியோடு “வேறு என்ன செய்ய முடியும்..” என்பதான பெருமூச்சுதான் அந்தப் பாடல்.
அது போல நம் வாழ்வும் ஏதேதோ புரியாத நம்பிக்கைகளோடு கொண்டே இருக்கிறது. நாமும் பெருமூச்சோடு அதன் ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அசாத்திய அந்த ஓட்டத்தில் எங்கோ காயம் பட்டு நாம் கலங்கி நிற்கும் போதெல்லாம், இளைப்பாறுதல் தருவது கடந்த கால நினைவுகளே..!
நம் நினைவோடையில் கடந்த காலம் ஒரு செம்பருத்தி மலராக மிதந்து கொண்டிருக்கிறது. அதைவிட அழகான மலர் உலகில் வேறு உண்டா என்ன..?!
படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நினைவோடையின் செம்பருத்தி பூ ஒன்றினை தருகிறது “லப்பர் பந்து.”
அதற்காகவே படத்தை இயக்கிய தமிழரசனுக்கு பரவசத்தோடு தரலாம் பேரன்பின் பூங்கொத்து.